மழைக்காலப் பாடல்கள்

இந்தவருடத்து மழை
என்னைக் கவிதைகள்
எழுதவைத்துவிட்டது
நன்றி மழைக்கு---
05/12/2015
மங்குனிப்புலவனின் கங்கணக் கவிதை
==============================
யாயு மாயும் நீயே ஆகினை
நானும் நீயே நமதும் நீயே
தீயும் நீயே தீர்ப்பும் நீயே
நீயும் நீயே நின்னெதிர் சதியும்நீயே
பேயும் நீயே பேய்களின் கதியும்நீயே
கையும்நீ கையின் கலையும் நீ
காலம்நீ காலன் விலையும் நீ
பொய்யும்நீ பொய்யின் மெய்யும் நீ
பொய்யும் வழுவும் நீயே தாயே!
ஆணவம் கன்மம் மாயை யென்றோர்
ஆழ்மனச் சொற்கள் ஆழி சூழ்ந்திட
பேணவர் பெண்மதி பொன்மதி யாகி
புகுந்து மறைந்து போதலும் நீயே
பொங்கலும் கங்குலும் பூத வுடலும்
மங்கலும் மமதையும் தாயே நீயே
சங்கும் நீ சங்கறுத்த சடங்கும்நீ
மங்கும் புகழின் மங்காச் சுடரொளி
மங்கள கீதமும் மதுவின் போதையும்
தீரா வியாதியும் தினமும் நீயே
ஆற்று மணலும் சேற்று நீரும்
ஆடி யடங்கலும் அனைத்தும் நீயே
எண்ணு மெழுத்து மறியும் கூடம்
எண்ணிப் பெற்றாய் எல்லாம் நீயே.
பொன்னோ பொருளோ போதைப் புகழோ
நின்னைக் கடந்து நின்றே செல்லும்
அதுவும் இதுவும் எதுவெனக் கேட்கின்
உதுவும் விதுவும் உரிமை நின்னதே.
எதுவும் அறியா கோழைச் சிறுமதி
கூட்டம் களையக் கிளம்பிடு தாயே
அப்பனில்லா அருளே சரணம்
அம்மையே அம்மையே நீயே சரணம்.
===================================
04/12/ 2015
சிங்கி - சிங்கி உரையாடல்
=========================
”பகலை இரவென்றால் பகல் குளிர்ந்து போகாது;
இயற்கை வழி மாறாது இன்னுமொரு சேதியுண்டு
பெய்யு மழையம்மா இங்கே பெய்யு மழையம்மா
பேயா மழையொன்னு இங்கே பெய்யு மழையம்மா”.
ஏடெடுத்துப் பாடிவந்தாள்
எங்களூர்க் குறத்தி
”ஊசிபோல மின்னி மின்னி ஊர் செழிக்கப் பெய்த மழை
நல்ல மழையாகாமல் நாடழிக்க நினைத்தது ஏன் .
எதிர்க்கேள்வி கேட்டு இடைமறித்தான் சிங்கன்.
மனிதரைக் கடவுளென்றார் மாமனிதர் நீயென்றார்
ராத்திரியைப் பகலென்பார் பகலொளியை இரவென்றார்.
மாதமும்மாரி பொழியதென்று மந்திரிகள் சொல்லி வந்தார்.
சொல்லிவந்த மந்திரிகள் தந்திரிகள் ஆன கதை
அடைமழையில் வெளுத்ததடா சிங்கா..
அதை நீ அறியாயோ சிங்கா..
அதை நான் மறந்தேனே அளந்து தந்த மதுவால
குடித்த மதுக்குடியில் குடிமறந்து போனேன்.
குடிகெடுத்த மதுவைக் கூண்டில் வைத்துப்பூட்டடி
சிங்கி - உன்கொண்டைக் கூட்டில் வைத்துப்பூட்டடி.
மனுசியுன்னைக் கடவுளென்று மாய்மாலம் செய்வேன்
மாயக்குதிரை பூட்டியதேர் நகர்வலமும் தருவேன்
கண்ணாடிக் கோட்டைக்குள் கணகாலம் வைப்பேன்
விண்ணதிர வந்தமழை வினைமுடித்த பின்பு
வீதிவலம் வருவோம்; விரசம்கொண்டு திரிவோம்..
சிங்கி- வீதிவலம் வருவோம்
விரசம்கொண்டு திரிவோம்..
நாடு காடாகுமென்றும் காடு நாடாகுமென்றும்
ஏடுகளில் எழுதியதை ஏன் மறந்தாய் சிங்கா..
காடழித்து நாடாக்கி நிதிக்குவியல் சேர்த்து
நரியைப் பரியாக்கிச் சோம்பல்தனை முறித்து
நாடாண்ட மந்திரிகள் பழைய கதையல்ல.
புதுக்கதையு மதுதான் புத்தம்புதுக் கதையுமதுதான்.
சிங்கன் சொன்னதற்குச்
சிங்கி பதிலுரைத்தாள்
நாடு காடானாலும் காடு நாடானாலும்
நல்ல மழை மாறாது; நானிலத்தோர் அறிக.
அவ்வை சொன்ன வாக்கு
அதையும் சொல்லி முடிப்பேன்
”நாடாகொன்றோ ! காடாகொன்றொ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே.”
ஆடவர் என்றது அரசுவென அறிக.
========================================
நன்றி; குறவஞ்சிக் கவிஞன் திரிகூடராசப்பன்
04/12/2015
சென்னைக்காக
---------------------------
'பத்திரமாக இருக்கிறேன்'
எனச்சொல்லும் பட்டியலில்
எண்ணிக்கை
கூடிக்கொண்டே இருக்கிறது.
'பேஸ்புக்கி'ற்கும் 
'வாட்ஸ்-அப்பி'ற்க்கும் நன்றி.
அந்தரவெளியில் அலையும்
பெயர்களில் மட்டும் இல்லை
சென்னை.
சேரிக் குடிசைகளிலும்
மீனவப் பாக்கங்களிலும்
கூவத்தின் கரையிலும்
அடித்துப் புரளும்
அடையாற்றின் மருங்கிலும்
ஏரிக்கரைத் திட்டங்களில்
ஏமாந்த கூட்டமென
தரையில் கால்பாவாத்
தேவரீரெனத் திரிவதிலும்
இருக்கிறது சென்னை.
நிலமாக இருந்த கதை
நீராக ஆனதென
நிச்சயம் ஆகாது.
நானும் இருக்கிறேன் நனைந்த படி.
நதியுமிருக்கிறது ஓடியபடி.
இருந்தோம் இருக்கிறோம் இருப்போம்
========================================== 
29/11/2015/ இது மழையைத்தவற வேறென்ன?
-------------------------------------------------------
வெப்பம் அதிகமானது தெரிந்தது.
என்றாலும் சாளரங்களைத்
திறக்கவில்லை.
செய்தி அலைவரிசைகளையும் நிறுத்திவிட்டு
இளையராஜாவோடு பேசிக்கொண்டிருந்தேன்
எப்படிப்பெயரிடுவது -
முடிவுசெய்யாமல் தவிப்பது புரிந்தது.
காற்று.. காற்றைத் தவிர வேறென்ன?
என்று பெயரிட்டுச் சொன்னதைப்
புரிந்துகொள்ள எனக்குத் தான் நேரமில்லை.
வேறுவழியில்லை.
சாளரங்களைத் திறந்தே
ஆகவேண்டும்.
நான் கடல், நான் ஆறு, நான் நதி, நான் ஓடை,
நான் அருவியெனத் தட்டும்போது
இழுத்துமூடி இருப்பது எப்படி?
மழை இது மழையைத் தவிர வேறென்ன?
-----------------------------------------------------------
23/11/2015/
மழை.. மாமழை.
======================
மாலையில் திரண்டு கருத்தமேகம் 
இருட்டானபோது இடியாய்க் கேட்டது 
தூரத்து இடிமுழக்கம் மின்னலாய்ச்
சாளரம் தட்டிப்பாடியது.
காளியாட்டத்தின் கர்ஜனை.
இன்றிரவும் மழையோடும்
மழையின் இசையோடும்
நாளை இன்னுமொரு நாளாகட்டும்

21/11/2015
மழைநாளின் நினைவுகள்
===============================
அறைகள், வீடுகள், தெருக்கள்
எல்லாம் சொற்கள்தான்.
சொற்கள் சொற்களாகவே இருந்தன.
சேரிகளும் ஊர்களும் கிராமங்களாயின
புரங்களும் பட்டிகளும் பாக்கங்களும்
கிராமங்கள் நகர்ந்து நகரங்களாயின
நகரங்களுக்குள்ளும்
நகர்கள், காலனிகள்,பாளையங்கள்
அவென்யூக்கள், கார்டன்கள், வில்லாக்கள்.
பழக்கப்பட்ட சொற்கள்;
பழகும் சொற்கள்
பழக்கமாகும் சொற்கள்
நினைவுகளை நகர்த்திப்
பதிவுகளாகவும் படங்களாகவும்
கடந்த காலத்தின் அலைவுகளோடு..
நடுப்பகலுக்குப்பின் திரண்ட
மேகங்களின் நிழலில்
வீதிகள் நகர்ந்துகொண்டிருந்தன.
தட்டான்பூச்சிகளின் தவிப்பு
ஈழமின்னல் மலையாள மின்னல்
இணைந்துகொண்டன
மாலையில் தூறிச்சென்ற
காற்று திரும்பவில்லை.
விதைத்துப் போட்ட
நட்சத்திரங்களுக்கும் பயம்
திரும்பி வந்தன பெருங்காற்றும் பேரிடியும்
தண்ணீர், வெள்ளம் நகரும் சொற்கள்
அருவி, ஓடை, நதி, ஆறு பாயும் சொற்கள்
கிணறு, குளம், கண்மாய், ஏரி தேங்கிய சொற்கள்
கடல், பெருங்கடல், சமுத்திரம், மகாசமுத்திரம்
நீர் புனிதம் என்றதும் நீர் தீட்டு என்றதும்
சுத்தம் செய்தோர் அழுக்கானவரானதும்
குப்பை கொட்டியோர் புனிதர்களானதும்
நீரின் பிழையன்று; நதியின் பிழையன்று
மழைநீர் புனிதமுமன்று; தீட்டுமன்று
மழை, மழையாகவே இருக்கிறது.
கோடுகள் அழிக்கும் மழை
வேற்றுமை விரட்டும் மழை
வித்தியாசம் துறக்கும் மழை
மழை போற்றுதும் மழை போற்றுதும்
மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்.
ஆதியில் இருந்தன வார்த்தைகள்
அர்த்தங்களும் அனர்த்தனங்களும்..
வந்தன; வருகின்றன..
சொற்கள் சொற்களாகவே இருக்கின்றன
மழையும் சொல்லாகவே இருக்கிறது
[முன் யாமம் தொடங்கி எற்பாடு வரை பெய்த மழைக்கு நன்றி]

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

இவை ஒரு நகரத்தின் கவிதைகள்