February 11, 2015

கடைசி வாய்ப்பைத் தெரிந்தே தவறவிட்டேன்.தமிழ்மொழியைச் செம்மொழியாக்கிடும் முயற்சிக்குப் பத்தாண்டுகள் நிறைவடைந்து விட்டது. செம்மொழித் தமிழுக்கான நிறுவனம் தொடங்கப்பட்டும் 8 ஆண்டுகள் முடிந்துவிட்டன. எட்டாண்டுகளாகவே அதற்கெனத் தனியாக நியமிக்கப்பட வேண்டிய தலைமை நிர்வாகி - இயக்குநர் - பதவி நிரப்பப்படாமலேயே இருக்கிறது. இந்தப் பதவிக்கு நான் ஏற்கெனவே இரண்டுமுறை விண்ணப்பம் செய்தேன். இரண்டு முறையும் எனது பெயர் பரிசீலனை செய்யப்பட்டதா என்பதை நானறியேன். அப்படிப் பரிசீலனை செய்யப்படாமல் போவதற்கு விதிப்படியும் நடைமுறைகளின்படியும் சிலபல காரணங்கள் இருந்திருக்கலாம். அதனால் நேர்காணலுக்கு அழைக்கப்படவில்லை.

 2004 இல் இந்திய நாடாளுமன்றத்தில் கோரிக்கை ஏற்கப்பட்டது. 2006இல் கர்நாடக மாநிலத்தின் மைசூரின் மானச கங்கோத்ரியில் இயங்கும் இந்திய மொழிகளுக்கான மைய நிறுவனத்தில் செம்மொழித் தமிழுக்கான உயராய்வு மையம் நிறுவப்பட்டது. அந்நிறுவனம் இந்திய மொழிகள் ஒவ்வொன்றின் கடந்த காலத்தையும், நிகழ்கால இருப்பையும் ஆய்வு செய்யும் நிறுவனம். அத்தோடு அம்மொழிகளில் ஒன்றைக் கற்றுக் கொள்ள விரும்பும் மற்றவர்களுக்குக் கற்பிக்கும் உலகம் தழுவிய மொழியியல் கோட்பாடுகள் மற்றும் வழிமுறைகளில் கற்பிக்கும் வேலைகளையும் செய்யக்கூடிய நிறுவனமும்கூட. மொழி வரலாறு, மொழியின் கட்டமைப்பு, மொழித்தொடர்பின் இயல்புகள் என மொழிசார்ந்த புலமையில் ஆழம்கொண்ட வல்லுநர்கள் அந்நிறுவனத்தில் இருப்பார்கள்; அவர்களுக்கு இலக்கியப்புலமை என்பது முக்கியமல்ல. அப்படியான இந்தியமொழிகளுக்கான மைய நிறுவனத்தில் பணியாற்றியவர்களே, செம்மொழித் தமிழ் ஆய்வுகளையும், ஆய்வு தொடர்பான நிகழ்வுகளையும் தொடக்கத்தில் ஒருங்கிணைத்தனர். தொடக்கநிலையில் அப்படித்தான் செய்ய முடியும். மைசூரிலிருந்து 2008 இல் செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் என்ற பெயர் மாற்றத்தோடு சென்னைக்கு வந்தது. வரும்போது அதற்கெனத் தேர்வுசெய்யப்பட வேண்டிய இயக்குநரைத் தேர்வு செய்திருக்கலாம். ஆனால், மைசூரிலிருந்து பேரா க. ராமசாமி அவர்கள் இயக்குநர் பொறுப்போடு சென்னைக்கும் வந்தார். 

வந்தவர் ஓய்வு வயது நெருங்கும்வரை பொறுப்பதிகாரியாகத் தொடர்ந்தார். பின்னர் ஓய்வு காரணமாக அவரைத் தனியதிகாரிக்கிக் கொண்டு இந்திய அரசின் ரயில்வே அமைச்சக அதிகாரி திரு மோகன் அவர்கள் இயக்குநர் பொறுப்பில் நியமனம் செய்யப்பட்டார். அப்போது சென்னைக் கடற்கரையில் பொதுப்பணித்துறைக் கட்டடத்தில் செயல்பட்ட நிறுவனம், பெரும்பாக்கத்தில் தனக்கேயான இடத்தை அடையாளப்படுத்தி அதற்கான கட்டடங்களைக் கட்டும் பணியைத் தொடங்கியது. தொடங்கி 5 ஆண்டுகள் ஆகியும் வளாகச் சுற்றுச் சுவர்கூட முடியவில்லை. திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி முடிந்தபின் அ இ அதிமுக ஆட்சி வந்தபோது அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பதவியிலும், பதிவாளர் பொறுப்பிலும் இருந்த முனைவர் பூமா அவர்கள் இயக்குநர் பொறுப்பில் இருந்து வருகிறார். மைய அரசின் நேரடி நிதியுதவியில் செயல்படும் நிறுவனமாக இருந்தபோதும் மாநில அரசின் கவனமும் அதில் இருந்ததால் இரண்டு முறையும் நிர்வாகத்தின் தலைமையதிகாரியாக இருக்க வேண்டிய இயக்குநர் பதவி நிரப்பப்படாமலேயே நின்றுபோனது. இப்போது மூன்றாவது மூன்றாவது தடவையும் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. இதுதான் எனக்குக் கடைசி வாய்ப்பு. எனக்கும் 56 வயது ஆகப்போகிறது. இனியொரு வாய்ப்பு வந்தால் விண்ணப்பிக்க முடியாது. 

விண்ணப்பங்கள் கோரித் தரப்பட்டுள்ள விளம்பரத்தில் கேட்கப்பட்டுள்ள அடிப்படைத் தகுதிகள் எல்லாம் இருக்கின்றன. கூடுதல் தகுதிகளும் இருக்கின்றன. இப்போது பணியில் இருக்கும்  தமிழ்ப் பேராசிரியர்களில் அதிக அனுபவங்கள் கொண்ட பேராசிரியராக இருக்கிறேன். இந்திய அரசால் போலந்து நாட்டு வார்சா பல்கலைக்கழகத்துக்கு தமிழ் இருக்கைப் பேராசிரியராக அனுப்பப்பட்டு இரண்டு ஆண்டுகள் பணியாற்றியதோடு, கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் இந்தியவியல் துறையின் பேராசிரியர்களைச் சந்தித்துவிட்டு வந்திருக்கிறேன். செவ்வியல் இலக்கியங்களையெல்லாம் திரும்பவும் படித்துக் கட்டுரைகள் எழுதிப் புத்தகங்கள் வெளியிட்டுக் கூடுதல் தகுதிகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன். செம்மொழி நிறுவனத்தின் ஆதரவில் ஒரு கருத்தரங்கு, ஒரு பயிரலரங்கினை நடத்தியிருக்கிறேன் அதன் உதவியில் நடைபெற்ற 40 கருத்தரங்கு/பயிலரங்குகளில் துறை வல்லுநராகப் பங்கேற்றிருக்கிறேன். செவ்வியல் கவிதைகள் தொடங்கி நாடகங்கள், புனைகதைகள்,  இலக்கியத்திறனாய்வு, அரங்கியல், ஊடகங்களும் வெகுமக்கள் பண்பாடும், திரைப்படங்கள் எனப் பலவற்றையும் குறித்து எழுதிக்கொண்டு வருகிறேன்; பேசிக்கொண்டிருக்கிறேன். மொழிசார்ந்த, இலக்கியம்சார்ந்த அமைப்புகளின் -குழுக்களில் இடம்பெற்ற அனுபவங்களும் இருக்கின்றன. இப்போது பல்கலைக் கழகங்களில் பணியாற்றுக் கொண்டிருக்கும் பேராசிரியர்களுள் அ.ராமசாமி தமிழ் இலக்கியம் சார்ந்த உயர்நிர்வாகப் பதவிகளுக்குப் பொருத்தமானவர் என நண்பர்களும் எதிரிகளும்கூட நினைக்கிறார்கள். எனக்கும்கூட அந்த நம்பிக்கை உருவாகித் தான் இருக்கிறது. என்றாலும் நான் செம்மொழி நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பான இயக்குநர் பதவிக்குப் விண்ணப்பிக்கவில்லை.

இப்படி நினைப்பதற்கான காரணங்களாகத் தேர்வுக்குழு, உயர்நிலைப் பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கும் முறை, அதற்குள் செயல்படும் விருப்பு வெறுப்புகள், தேர்வுக்குழுவை நெருக்கடி செய்யும் அரசியல் தொடர்புகள், பணம், சாதீய நெருக்கடிகள் எல்லாம் எப்போதும் இருக்கின்றன; இப்போதும் இருக்கவே செய்கின்றன. இவைகளையெல்லாம் தாண்டி இப்போது கூடுதல் காரணங்களும் உருவாகியிருக்கின்றன எனத் தோன்றுகிறது. இக்காரணங்கள் எனக்கான காரணங்கள் மட்டுமல்ல. இந்தியாவில் தன்னுடைய துறைசார்ந்த அறிவோடு, அதன் வளர்ச்சியை உலகப்பரப்பில் கொண்டு சேர்க்க வேண்டும் ; நவீனத்துவப் பார்வையோடு அடையாளங்களை உருவாக்கிட வேண்டும் என நினைப்பவர்கள் அனைவருக்கும் அவர்கள் மனதில் உருவாகும் காரணங்கள்- அச்சங்கொள்ளும் காரணங்கள் - என்று சொல்ல விரும்புகிறேன்.

2014 தேர்தலில் மைய அரசில் ஏற்பட்டுள்ள மாற்றம் அதன் முதன்மைக் காரணமாக இருக்கிறது. அந்த மாற்றத்தில் தேவைக்கதிகமான எண்ணிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்களோடு பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததை முக்கிய காரணமாக இருக்கிறது. ஆட்சி மாற்றம் எப்போதும் கொள்கை மாற்றங்களை உருவாக்கும் என்பதை உணராதவல்லன் நான். ஆனால் கொள்கை மாற்றம் இந்த அளவுக்கு வெளிப்படையாகவும், உருவாக்கப்பட்ட நிறுவனங்கள், கருத்தியல்கள், நம்பிக்கைகள் வாழ்க்கை முறை என அனைத்தையும் தலைகீழாக மாற்றிக் கவிழ்த்துப் போடும் என நினைக்கவில்லை. அத்தோடு இந்த அரசு முன்வைக்கும் கொள்கை மாற்றம் இரட்டைத் தன்மையோடு இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.  இந்த இரட்டை நிலையால் இந்தத் தேசத்துக்கு - தேசத்து மனிதர்களுக்கு நல்லன விளையும் என்ற நம்பிக்கை ஏற்படும் என்பதற்குப் பதிலாக அல்லன பல விளையும் என்று தோன்றுவதால் சொல்லாமல் தவிர்ப்பது குற்றவுணர்வை உண்டாக்கும் என்பதால் சொல்லிவிடத் துடிக்கிறேன்.

ஓரடி முன்னால் ஐந்தடி பின்னால்

மக்களின் வாழ்வியலின் அடிப்படைத்தேவைகளுக்கான பொருளாதார உற்பத்தி, அதற்கான சாதனங்கள், உற்பத்தியைப் பங்கிடுதல், அதற்கான அடிக்கட்டுமான அமைப்புகளை உருவாக்குதல், நிதித்தேவையைப் பெருதல், மறுசுழற்சிக்குட்படுத்தல் போன்ற பொருளாதாரக் கொள்கையில் மாற்றங்கள் எதையும் இந்த அரசு புதிதாகச் செய்யவில்லை. ஏற்கெனவே இருந்த காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு பின்பற்றிய, அரசு நிர்வாகத்தை மையப்படுத்தாத - உள்ளூர் மற்றும் உலகளாவிய தனியார் முதலாளியத்தின் கையில் பொறுப்பை ஒப்படைக்கும் பொருளியல் கோட்பாடுகளையே சரியானது என நம்புகிறது; பின்பற்றுகிறது. ஜனநாயகத்தைப் பின்பற்றும் பல நாடுகளும் இடதுசாரி அரசுகள் எனக் கருதப்பெற்ற அரசுகளும்கூட  பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடுகளில் வளர்ச்சிக்கு வாய்ப்பில்லை எனக்கருதி தனியாரின் பங்கேற்போடு கூடிய பொருளியல் கொள்கைகளுக்கு நகர்ந்து கொண்டிருக்கின்றன. இந்திய அரசியலில்  மன்மோகன்சிங்கின் வருகையோடு நாமும் நுழைந்துவிட்டோம். நுழைந்து கால் நூற்றாண்டு ஆகப்போகிறது. அதை மாற்றிவிடச் சிந்திக்கும் எந்த யோசனையும் இதுவரை இந்த அரசும் கொள்கை வகுப்பாளர்களும் முன் வைக்கவில்லை. 

உண்மையில் எல்லா நிலைகளிலும் இந்தியத்தனத்தை முன்மொழியும் கொள்கைகளைப் பின்பற்றுவார்கள் என எதிர்பார்த்த பாரதீய ஜனதா கட்சியும், அதற்கான கொள்கையுருவாக்கத்தைச் செய்யும் சித்தாந்திகளும் பொருளியல் நடவடிக்கைகளில் இந்தியத்தனத்தைத் தேடாமல் மேற்கத்தியத்தனத்திற்கு வரவேற்பு அளிக்கின்றனர். காங்கிரஸ் கட்சியை மையமாகக் கொண்ட ஆட்சி செய்ததைவிடத் தீவிரமாகப் பின்பற்றுகின்றனர். பொருளியல் நடைமுறையிலும் இந்தியத்தனத்திற்குள் நுழைய விரும்பினால், அவர்கள் விரும்பாத - காந்தியைக் கற்க வேண்டும். அவர் முன் வைத்த பொருளியல் நடமுறைகளுக்குள் - தர்மகர்த்தா முறைக்குள் நுழைய வேண்டும். பெருந்தொழில்களுக்கு - பெருநகரங்களுக்கு - பேரங்காடிகளுக்கு மாற்றாக சிறுகுறு தொழில்களுக்கு- சிற்றூர் வாழ்க்கைக்கு, சிறுவணிகம், சிறுவிவசாயத்திற்கு மாற வேண்டும். காந்தியைக் கொன்றவர்களைக் கொண்டாடும் கூட்டம்  அவரது கொள்கைகளைக் கொண்டாடும்; பின்பற்றும் என நிச்சயம் எதிர்பார்க்க முடியாது.
குறிப்பிட்ட காலகட்டத்தின் பொருளியல் நடவடிக்கைகளில் மேற்கத்திய நடைமுறைகளை நோக்கிப் பெரும்பாய்ச்சல் நடத்தும் ஒரு அரசு நிர்வாகம்,  சமூகம், குடும்பம் மற்றும் சமூக விழுமியங்களில் அதற்கு எதிரான நடைமுறைகளை - தனிமனித அடையாளங்களுக்கு முதன்மை அளித்து அவர்களுக்கு உரிமையை வழங்கிக் கடமையை வலியுறுத்துவதற்கு மாற்றாக -  நவீன வாழ்க்கைக்கு மாற்றாகப் பாரம்பரிய அடையாளம், பாரம்பரிய அமைப்பு, பாரம்பரியப் பண்பாடு, பாரம்பரியக் கல்விமுறை எனப் பின்னோக்கித் திரும்ப முயல்வது நடைமுறை சாத்தியமா? எனக் கேட்டுக் கொள்வதோடு, இப்படித் திரும்புவதற்கான தேவை என்ன? என்றும் கேட்டுக்கொள்ள வேண்டும். அதற்கான பதிலைப் பிறிதொரு கட்டுரையில் விவாதிக்கலாம். இப்போது திரும்பவும் செம்மொழி நிறுவனத்திற்கு வரலாம். 

செம்மொழி இயக்குநர் பதவிக்கு விண்ணப்பிக்காமல் ஒதுங்கி நிற்கும் எனது சொந்தக் கதைக்கு வருகிறேன். செம்மொழி நிறுவனம் மைய அரசின் மனிதவளத்துறை அமைச்சகத்தின் கலை-பண்பாட்டுப் பிரிவின் கீழ் நிதியுதவி பெற்று அதன் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு நிறுவனம். இந்திய அளவிலான இந்தியத் தொழில் நுட்பக் கல்விநிறுவனம், இந்தியப் பொருளியல் நிறுவனம், இந்திய அறிவியல் கழகம், இந்திய மொழிகள் நிறுவனம் போலப் போதுமான நிதித்தேவையை அரசிடமிருந்து பெற்று இயங்கிக் கொண்டிருக்கும் பொருள்வரவற்ற செலவு நிறுவனங்கள். அவையே உயர்நிலையிலான இந்தியக் கொள்கைகளை வகுப்பதில் முக்கியப்பங்காற்றுபவை. இவைகள் அனைத்தும் இதுவரை முழுமையான தன்னாட்சி நிறுவனங்களாக அவைகளுக்கு நடைமுறைகளை அதன் தன்னாட்சி அமைப்புகளின் வழி உருவாக்கிக் கொண்டு இயங்கிவருகின்றன. அவற்றின் நடைமுறைகளில் பெரும்பாலானவை -உலகு தழுவிய மேற்கத்தியக் கல்வி நிறுவனங்களின் ஆய்வு முறையியல்களோடும், கருத்தியல்களோடும், கருத்தியல் நம்பிக்கைகளோடும் இயைபு கொண்டவை. வரலாறு, தத்துவம், பண்பாடு, இலக்கியம், மொழி என்பனவற்றை அறிவியல் பார்வையோடு விவாதிக்கும் முறைமைகள் அவை. 
 இனி, இந்தியாவில் அதே வழியில் - அப்படியே- செயல்பட முடியுமா? என்ற சந்தேகம் உண்டாகி இருக்கிறது. அப்படிச் செயல்பட முடியாது என்பதைக் குறிப்பால் உணர்த்தும் வெளிப்பாடுகள் தோன்ற ஆரம்பித்துவிட்டன. அரசின், அமைச்சகத்தின் தலையீடுகளும், வழிகாட்டும் முறைகளும் தீவிரமாக இருக்கும் என்றே காட்டுகின்றன அந்தக் குறிப்புகள். அதிகம் பேசாத - ஆனால் கொண்ட கொள்கையில் உறுதிகொண்ட அமைச்சரின் கீழ் இயங்கும் மனிதவளத்துறை இந்த அரசு முன்னிறுத்தப் போகும் இந்தியத்தனம் நிரம்பிய வாழ்க்கை முறைக்கு அடுத்த தலைமுறையைத் திரும்பிவிடும் நோக்கத்தைக் கொண்டதாக இருக்கிறது. அதற்காக இந்தியாவின் சாதிமுறையைக்கூடக் கொண்டாடத் தயங்காது என்றே தோன்றுகிறது. மொழியின் - கலைகளின் தோற்றத்தை இறைவனோடு இணைத்துப் பேசும் புராணிகக் கதைகளைப் பாடங்களாகவும், படிப்புக்குரிய தரவுகளாகவும் வலியுறுத்துவதிலிருந்து பின்வாங்காது என்பதும் புலப்படுகிறது. எல்லாவற்றையும் புராணிக - வேத மரபோடு இணைத்துப் பேசும் போக்கைக் கைவிடாது என்பது உறுதியாகத் தெரிகிறது. இந்த நிலையில் தான் நான் என்னை நினைத்துப் பார்க்கிறேன்; எனது இயலாமையை - பொருத்தமின்மையை உணர்கிறேன்.

மொழி, கலை, இலக்கியம், பண்பாடு, விமரிசனம், மனிதன், விடுதலை என அடிப்படையான புள்ளிகளை நான் கற்றுக் கொண்ட நூல்களும், முறைகளும் வேறானவை. ஐரோப்பிய அறிவொளிக்காலத்தின் விளைவான நவீனத்துவத்தின் மீதான நம்பிக்கையோடும், அதனை இந்தியாவிற்குள் அனுமதித்து இந்திய சமூகத்தை அறிவு நிரம்பிய சமூகமாக மாற்ற நினைத்த பண்டித ஜவஹர்லால் நேருவின் அணுகுமுறையால் உருவாக்கப்பெற்ற கல்விக் கொள்கைகளால் உருவானவன்; உருவாக்கப்பெற்றவன். அத்தோடு தமிழின் இலக்கிய வரலாறும், மொழிவரலாறும், இலக்கிய வகைமைவரலாறும் இந்தியத்தனம் என்னும் பொதுமைக்குள் அடங்காது என நம்புபவன். தமிழுக்கான தனி அடையாளங்களும் அமைப்பும் இருக்கின்றன என உணர்ந்தவன். சமஸ்கிருத மொழிக்குடும்பமும், திராவிட மொழிக்குடும்பமும் என இருவேறு மொழிக்குடும்பங்கள் இந்தியாவில் வளமான அமைப்புகளோடு வளர்ந்தவை என்ற பார்வையில் உடன்பாடு கொண்டவன். மொழி பற்றியும் இலக்கியம் பற்றியும் எனது இந்த நம்பிக்கைகளும் கொள்கைகளும் இந்த அரசின் வழிகாட்டுதல்களுக்கு மாறானதாகவே இருக்கும் என்பதை எனது உள்ளுணர்வு உணர்ந்துவிட்டது. 

ஒருவேளை நடைமுறையில் இருக்கும் எல்லாத் தடைகளையும் தாண்டி செம்மொழி நிறுவனம் போன்ற உயராய்வு நிறுவனத்தின் தலைமைப்பொறுப்புக்குத் தேர்வு செய்யப்பெற்றாலும் எனது பதவிக்காலம் முழுவதும் அங்கு பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கும் எனச் சொல்ல முடியாது. இதுவரை நான் படித்து உருவாக்கிக் கொண்ட மொழி மற்றும் இலக்கியக் கொள்கைகளைக் கைவிட்டுவிட்டு அரசின் வழிகாட்டுதலைச் சிரமேற்கொண்டு வேலைசெய்யும் ஓர் அதிகாரியாகப் பதவி வகிக்க முடியும் என்று நம்பிருந்தால் விண்ணப்பித்திருக்கலாம்; நேர்காணலுக்கும் அழைக்கப் பட்டிருக்கலாம். ஒருவேளை தேர்வும் செய்யப்படலாம். ஆனால் தொடர்ந்து அங்கு வேலை செய்ய முடியாமல் தவிப்பு ஏற்பட்டிருக்கும். அந்தத் தவிப்பு வேண்டாமென்ற முடிவோடு, இந்தக் கடைசி வாய்ப்பை அறிந்தே தவிர்த்துவிட்டேன். இந்தப் புரிதலை அளித்த நவீனத்துவ மனநிலைக்கு நன்றி.1 comment :

Selvaraju Naganathan said...

sir.neenga nalla captain enru en kanavar adikkadi solvar.donot worry.kidakkiradhu kidaikama irukkathu
.