July 28, 2014

திருமணம் என்னும் நிக்காஹ்: தமிழ்ச் சினிமாவின் பொதுப் போக்கிலிருந்து ஒரு விலகல்


காதல் பற்றிப் பேசாத ஒரு தமிழ்ச்சினிமா ஆண்டில் ஒன்றிரண்டு கூட வருவதில்லை.  ‘இவர்களின் காதல் எப்படிப்பட்டது தெரியுமா?’ என்றொரு கேள்வியைக் கேட்டுக் கொண்டு கதையை விரிக்கிறார்கள் நமது தமிழ்ப்பட இயக்குநர்கள். அப்படி விரிக்கும் தொண்ணூறு சதவீதக் கதைகள் நமது சங்கக் கவிதைகளின் விரித்தி உரைகள் தான்.
நெருக்கிப்பிடித்துக் கேட்டால்  அவர்களில் பலர் அந்தக் கவிதைகளை வாசித்திருக்க மாட்டார்கள். அந்தக் கவிதைகளின் பின்னணியாக இருந்த முதல் பொருட்களையும் (நிலமும் பொழுதும்) கருப்பொருட்களையும் (காட்சிப் பின்னணிகள்) அறிந்திருக்க மாட்டார்கள். அப்படியான வாழ்க்கை வாழ்ந்திருக்க மாட்டார்கள்; பார்த்திருக்கவும் மாட்டார்கள்; கேள்விப்பட்டிருக்கக் கூட மாட்டார்கள். ஆனால் அக்கவிதையின் உரிப்பொருட்களை (உணர்வுகள்) ஒவ்வொருவரும் அறிவார்கள்.

இந்த உணர்வுகள் பண்டைத் தமிழ் மனிதனின் உணர்வுகள் மட்டுமல்ல; நிகழ்காலத் தமிழர்களுக்குள்ளும்- உலகமனிதர்கள் ஒவ்வொருவருக்குள்ளும்- இருக்கும் உணர்வு என்ற  நம்பிக்கை தமிழ்ச் சினிமா இயக்குநர்களிடம் அசைக்க முடியாத ஒன்றாக இருக்கிறது. அந்த நம்பிக்கை தவறு எனச் சொல்ல முடியாது. ஆனால் அந்த ஒரேயொரு உணர்வு மட்டும்தான் இருக்கிறது என நினைப்பதுதான் தவறானது. அந்த ஒற்றை உணர்வின் மீது கொண்ட அபார நம்பிக்கையின் விளைவாகவே தங்களுக்குத் தெரிந்த ஒரு காதல் ஜோடியின் காதல் கதையைச் சொல்லத் தொடங்குகிறார்கள். “ ஒரு இளைஞன் - ஒரு யுவதி அவர்கள் தற்செயலாகச் சந்திக்க நேர்ந்தது; அந்தச் சந்திப்பில் ஏற்பட்ட ஆபத்திலிருந்து அந்தப் பெண்ணை அவன் காப்பாற்றினான்; காப்பாற்றிய பெண்ணுக்கு இன்னும் பல ஆபத்துகள் வரலாம்; ஏனென்றால் அவள் பேரழகி. அந்தப் பேரழகிக்கு ஆபத்துகள் அடுத்தவர்களிடமிருந்து வருவதற்கு முன்பு நாமே காதலித்துக் கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று திட்டமிடுவதாகக் கதையை நகர்த்துகிறார்கள். நகரும்போது ஆண் அல்லது பெண் என்ற இருவரில் ஒருவருக்குப் பின்னால் இருக்கும் ரகசிய அல்லது விளையாட்டுத்தனமான முந்தைய வாழ்க்கையின் ரகசியத்தை முடிச்சாக்கித் திரைக்கதையாக்குகிறார்கள்.  அந்த முடிச்சை அவிழ்ப்பதாக நிகழ்ச்சிகளை அடுக்கிக்காட்டிக் காதல் வெற்றியடைவதாகப் படத்தை முடிக்கிறார்கள்.  

ரகசியம், முடிச்சவிழ்ப்பு என்பதில் வித்தியாசங்கள் உருவாக்க உருவாக்கப் புதிய புதிய காதல் கதைகள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. இந்தப் போக்கைத் தமிழ்ச் சினிமாவைப் பற்றி எழுதுபவர்கள் இரண்டு வார்த்தைகளின் உச்சரிப்பால் கடந்து கொண்டிருக்கிறார்கள்.  தீவிர விமரிசனம் எழுதுபவராக நினைப்பவர், இதனைத்  ‘தமிழ்ச் சினிமாவின் மந்தைப் போக்கு’ எனச் சொல்கிறார்கள். எந்தக் கேள்விகளுமற்று தமிழ்ச்சினிமாக்களை ஆதரிக்கும் பெரும்பத்திரிகைக்காரர்கள்   ‘இயக்குநரின் புத்திசாலித்தனம்’  எனப்பாராட்டுகிறார்கள்.

நான் எழுதும் இந்த விமரிசனக் குறிப்பை எப்படி வேண்டுமானாலும் வகைப்படுத்திக் கொள்ளட்டும். நான் அதைப் பொருட்படுத்தப்போவதில்லை. காரணம் திருமணம் என்னும் நிக்காஹ் - படத்தின் இயக்குநர் அனிஸை நான் புத்திசாலித்தனமான இயக்குநர் எனச் சொல்ல விரும்புகிறேன். அவர் விரித்துள்ள கதையும் சங்கக் கவிதைகளில் ஒன்றான குறுந்தொகையின் விரித்தியுரைதான். திரும்பத் திரும்ப நினைவில் வரும் அந்தக் கவிதையின் வரிகளைக் கொஞ்சம் வாசித்துப் பாருங்கள் 5 வரிக்கவிதைதான். ( சினிமாவைச் சொல்லியாவது ஒரு குறுந்தொகைக் கவிதையை வாசிக்க வைக்கலாம்)
யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ் வழி அறிதும்?
செம் புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.
எழுதியவர் பெயர் எதுவென்று தெரியாததால் செம்புலப் பெயல் நீரார் எனப் பெயர் சூட்டப்பட்டவரின் இந்தக் கவிதையைத் தான் அனிஸ் தனது சினிமாவுக்கான கதையாக மாற்றிச் சொல்லியிருக்கிறார். ஒவ்வொருவரியும் திரும்பத் திரும்பச் சொல்லப்படும் வரிகள்.

ஆயிஷா என்ற தன் தோழியின் பெயரில் எடுக்கப் பெற்ற முன்பதிவுச் சீட்டில் பயணம் செய்து அலுவலக வேலையை முடிக்கச் செல்லும் விஷ்ணுப்ரியா என்ற அக்கிரகாரத்து இளம் பெண்ணும், வீட்டில் நடக்கும் திருமண ஏற்பாடுகளில் முடிவு சொல்லாமல் தப்பித்து அவசர அவசரமாகக் கோவைக்குக் கிளம்பி, முன்பதிவு ரயில் டிக்கெட்டுகளை வாங்கி விற்கும் வியாபாரியின் உதவியோடு அபுபக்கர் என்ற இளைஞரின் பெயரில் பயணம் செய்யும் ராகவன் என்ற வெங்கடராகவாச்சாரியும் என்னும் அக்கிரகாரத்து இளம்பையனும், ரயில் பெட்டிக்குள் சந்தித்துக் கொண்டதும், ஆபத்துக்கு ள்ளானதும், உதவி செய்ததும் உள்ளம் பறிகொடுப்பதும், உண்மையைச் சொல்ல முடியாமல் தவிப்பதும், உரிமையாக்கிக் கொள்ள நினைப்பதும் தான் திருமணம் என்னும் நிக்காஹ் என்னும் சினிமாவின் கதை. இந்தக் கதையும் தமிழ்ச் சினிமாவின் மந்தையின் ஆடு தானே? இதில் என்ன புத்திசாலித்தனம் இருக்கிறது எனக் கேட்கலாம்.

கதை மட்டுமல்ல; கதை சொன்ன முறை, காட்சிகளை வெட்டி ஒட்டிய முறை, தேவைக்கதிகமான பாடல் காட்சிகள்,  இடம் பெற்றாக வேண்டும் என வைத்த சண்டைக் காட்சிகள், விலகலோடு கூடிய பின்னணி இசை, நுட்பம் காட்டாத நடிப்பு எனப் பலவிதமான குறைகள் இருந்தபோதும்(பெரும்பாலான சினிமாக்களில் இருக்கும் இவற்றைக் குறைகள் என்று சுட்டிக் காட்டுவதில்லை நமது பத்திரிகைகள்) அனிஸின் “திருமணம் என்னும் நிக்காஹ்” ஒரேயொரு அம்சத்தில் வித்தியாசத்தைக் கொண்டிருக்கிறது. காதலைப் போற்றிக் கொண்டாடாமல் விவாதிக்கத் தூண்டியிருப்பதுதான் அந்த அம்சம்.(காதலை முழுமையாகக் கொண்டாடாமல் விவாதித்த இன்னொரு படம் மணிரத்னத்தின் அலைபாயுதே. அதுபற்றித் தனியாகப் பேச வேண்டும்)

தற்செயலாகக் காதலில் விழுபவர்கள் நிரந்தரக் காதலாக மாற்றத்துடிக்கும் ஏற்பாடான திருமணம் என்னும் நிக்காஹ் என்கிற நிகழ்வு சுலபமான ஒன்றுதானா? என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டு விவாதத்தில் இறங்கியிருக்கிறது அனிஸின் படம். காதலுக்குக் கண்ணில்லை என்ற அபத்த வாக்கியத்தின் யதார்த்தத்தை மறுதலித்து காதலுக்குக் கண் மட்டுமல்ல; ஐம்புலன்களின் இணைவான அறிவும் வேண்டும்; அடுத்தடுத்து நிகழப்போகும் தடைகளை எதிர்கொள்ளும் மனமும் போராட்ட வாழ்க்கையும் வேண்டும் எனத் தீர்மானித்து அடுத்தவரின் வாழ்க்கை முறையை- பண்பாட்டை- இறை நம்பிக்கையை- கலை ஈடுபாட்டை- அறிந்து கொள்ள விரும்பி நுழைகிறார்கள். எல்லாப் பொறுப்பையும் ஆணுக்குரியதாக நினைக்கும் இந்தியப்பெண்களின் பிரதிநிதியாகவே இருக்கும் விஷ்ணுப் பிரியா தன்  தோழியின் வழியாக இசுலாமிய வாழ்க்கை முறையைக் கொஞ்சமாகத் தெரிந்துகொள்ள முயல்கிறாள். ஆனால் அபுபக்கராக மாறிய ராகவாச்சாரியோ முழுமையாக இறங்கி இசுலாமிய வெளிக்குள் - குடும்பத்திற்குள் ஒரு பொய்யின் மூலம் நுழைகிறான். இப்படி இருவரையும் மாறிப் புகச் செய்து இசுலாமிய வாழ்க்கை முறையைப் பொதுசமூகம் எனக் கருதிக் கொள்ளும் பெரும்பான்மை மதத்தினரின் முன் விரிந்துள்ளார் இயக்குநர் அனிஸ். 

இந்த நுழைவுதான் அனிஸின் படத்தின் முக்கியமான வேறுபாடு. இதுவரை தமிழ்ச் சினிமா சித்திரித்து வந்த இசுலாமிய அடையாளங்களுக்கு மாறாக அதன் இயல்பான அடையாளங்களை -நம்பிக்கைகளை- சிறுபான்மையினராக இந்த நாட்டில் வாழ நேர்ந்துள்ளதில் இருக்கும் நெருக்கடிகளை விரிவாகப் பேசவில்லை என்றாலும், தன்னை ஒரு உள்ளிருப்பவனாக (Insider) நிறுத்திக் கொண்டு சொல்லியிருக்கிறார். இதற்குமுன்பும் இசுலாமிய இயக்குநர்கள் தமிழ்ச் சினிமாவில் இருந்திருக்கிறார்கள். அவர்கள் எப்போதும் தங்களுடைய தன்னிலையைக் காட்டிக் கொள்ளாத படங்களையே தந்திருக்கிறார்கள். அதிலிருந்து விலகித் தனது இசுலாமியத் தன்னிலையை உள்வாங்கிப் படம் தந்துள்ள அனிஸ் பாராட்டப்பட வேண்டியவர். அவரது படத்தை ஒவ்வொருவரும் பார்க்க வேண்டியது நம் கடமை. ரத்தம் தெறிக்கும் சண்டைக்காட்சியில் தொடங்கி, ஏன் இந்தச் சண்டையும் ரத்தமும் என்பதாகக் கதை சொல்லும் இயக்குநர், திருமணம் என்னும் நிக்காஹ் பரபரப்பான சினிமாகவாக எடுக்காமல், நிதானமான தொடக்கம், இயல்பான சந்திப்பு, பொய்யாகப் பெயர் சூட்டிக் காதலர்களானதால் ஏற்படும் சந்தோசம் மற்றும் அச்சம், எதிர்ப்பு தெரிவிக்கும் குடும்பத்தினரின் ஏற்பும் கொண்டாட்டமும், தயக்கத்துடன் திருமணம், திருமணம் நிக்காஹ்ஹாக அமையாமல் போனதால் ஏற்படும் துக்கம், இசுலாமிய அடையாளத்தோடு கூடிய ஆணை - பெண்ணை நாடிய மனத்தின் ஏக்கம், தவிப்பு எனக் காட்சிகளை அமைத்திருந்தால் இந்தப் படம் ஒரு சர்வதேசப் படமாக ஆகியிருக்கும். அதற்கான முழுமையான தர்க்கம் இதற்குள் இருக்கிறது. ஆனால் ஜெய் மாதிரியான நடிகர்களிடம் இந்தவைகையான நிதானத்தை - நிதானமான நடிப்பை எதிர்பார்க்க முடியாது. நாயகியாக நடித்துள்ள நஸ்ரியாவிடமும் ஓர்மையான பாத்திர உள்வாங்கல் இல்லை. தொடர்பற்ற வெளிப்பாடுகளைக் கொண்ட நடிப்பால் இருவரும் மையப் பாத்திரங்களோடு பொருந்திப் போகாமல் விலகி விலகிச் செல்கிறார்கள். பின்னணி இசையும் தேவையில்லாமல் வரும் பாடல் காட்சிகளும் தமிழ்ச் சினிமாவின் வெற்றிச் சூத்திரம் எனக் கருதும் போக்கினால் படம் தனது தரத்தை இழந்து நிற்கிறது.

உலகமயம் பொருளாதாரத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. காதலும் அதனோடு இணைந்து கொள்ளத் துடிக்கிறது. ஆனால் திருமணங்களும் நிக்காஹ்களும் தனக்கான வெளிக்குள், தனக்கான அடையாளத்தோடு தான் இருக்கின்றன; இருக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகின்றன. அமேரிக்காவின் கலிபோர்னியாவில் பச்சை அட்டையோடு இருக்கும் கும்பகோணத்து அய்யங்கார்களும் திருநெல்வேலிச் சைவ வேளாளர்களும் திருமணத்தையே நாடுகிறார்கள். அரேபிய மணல்பரப்பில் வியர்வை சிந்தும் இசுலாமியர்கள் கடையநல்லூரிலும் ஏர்வாடியிலும் தான் நிக்காஹ் நடக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். 

இன்று உலகம் முழுக்க அடையாள அரசியல் மேலெழும்பி, மனத்தின் விருப்பமே காதல், காதலின் விருப்பமே கல்யாணம் என்ற நீண்ட கால நம்பிக்கையைத் தகர்த்துக் கொண்டிருக்கிறது. கத்தோலிக்கப் பெண்ணொருத்தி, ப்ராட்டெஸ்டெண்ட் ஆணைக் காதலித்துக் கல்யாணம் செய்து கொண்டு வாழ்க்கையைத் தொடர முடியாமல் தவிப்பது நிகழ்கால உண்மை. இஸ்ரேலிய யூதர்களோடு அமெரிக்கக் கிறிஸ்தவர்கள் அரசியல் ரீதியாக மட்டுமே இணைந்துகொள்வார்கள். பண்பாட்டு அடையாளத்தில் விலகி நிற்பதே விரும்பப்படுகிறது. இந்தப் பின்னணியில் சர்வதேச அடையாளத்தையும் விவாதத்தையும் முன்னெடுக்கக் கூடிய சினிமாவை மயிரிழையில் தவறவிட்டுள்ளார். என்றாலும் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும்; விவாதிக்க வேண்டும்.No comments :