February 12, 2013

செல்லப்பாவின் ஆசிர்வாதம் கிடைக்காத சிவசங்கரி1985 ஆம் ஆண்டு என்பது ஞாபகத்தில் இருக்கிறது. ஆனால் மாதம் நினைவில் இல்லை. சிவசங்கரி படைப்புகள் குறித்த மூன்று நாள் கருத்தரங்க ஏற்பாட்டின் பரபரப்பில் இருந்த மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியல் துறையின் வாசலை நோக்கி அவர் வந்து கொண்டிருந்தார். அதே கசங்கிய அழுக்கேறிய வேட்டி, தொளதொளப்பான சட்டைக்குள் ஒல்லியான உருவம்.. எனக்கு அவரைத் தெரியும். அதற்கு முன்பு அவரை இரண்டு தடவை பார்த்திருக்கிறேன். ஆம். பார்த்திருக்கிறேன்; சந்தித்ததில்லை.
உருவமும் முகமும் நன்றாகப் பதிந்துள்ளது சி.சுசெல்லப்பாவே தான். நான் பார்த்திருக்கிறேன் என்றாலும் என்னைப் பார்த்தது அவருக்கு ஞாபகத்தில் இருக்குமா என்று தெரியவில்லை. அவருக்குத் துறையிலிருந்து அழைப்பிதழ் போயிருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை ’படைப்பாளிகள் கருத்தரங்கம்’ என்பதற்கான முகவரிக் கோப்பில் இருப்பவர்களுக்கெல்லாம் கடிதங்கள் போயிருக்க வாய்ப்பும் உண்டு. அரசு நிர்வாகத்தில் வகைப்பாடுகள் முக்கியம். ஒவ்வொரு வகைக்கும் ஒவ்வொரு பார்வையாளர்கள் எனப் பகுத்துப் படம் காட்டுவதுதான் அதன் இயல்பு. பொதுவான பார்வையாளர்கள் அந்நிறுவனத்தின் பணியாளர்கள். இங்கே மாணவர்கள். அவர்கள் கட்டாயம் பங்கேற்றாக வேண்டும். வராவிட்டால் தண்டனைகள் கிடைக்கக் கூடும்.
முறையாக அனுப்பப் பட்டஅழைப்பிதழ் கிடைத்தாலும் வரக்கூடிய ஆள் கிடையாதே சி.சு. செல்லப்பா. ! அப்புறம் எப்படி? ந.பிச்சமூர்த்தி, மௌனி, அகிலன், நீல. பத்மநாபன். நா.பார்த்தசாரதி, மு.வரதராசன் வரிசையில் சிவசங்கரி வரைக்கும் வந்து விட்டீர்களா? எனத் திட்டுவதற்கு வருகிறாரோ என்று பதற்றமாக இருந்தது. மதுரைப் பல்கலைக்கழகத்தில் இக்கால இலக்கியம் பற்றிய ஆய்வுகளையும் படிப்புகளையும் ஆரம்பித்து வைத்துக் கருத்தரங்குகளையும் நடத்தியவர் முத்துச் சண்முகன் என அழைக்கப்பட்ட சண்முகம் பிள்ளை. அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி கற்பித்ததோடு மொழியியல் பாடத்தையும் கற்றுத் திரும்பிய அவர் துறைத் தலைவராக இருந்த காலத்தில் தான் சி.கனகசபாபதி, தி.சு.நடராசன் போன்றவர்கள் துறையின் ஆசிரியர்களாகத் தேர்வு செய்யப்பட்டார்கள். அகிலன் படைப்புகள் பற்றி ஆய்வு செய்த சு.வேங்கடராமனும், பாவைக்கூத்து பற்றி ஆய்வு செய்த மு.ராமசுவாமியையும் துறையின் ஆசிரியர்களாக ஆக்கி துறையின் வெளியை அகலப்படுத்தியிருந்தார். நிகழ்காலத்தில் எழுதிக் கொண்டிருக்கும் ஒரு படைப்பாளியின் படைப்புகளை விரிவாகப் பேசும் கருத்தரங்குகளை நடத்திக் கட்டுரைக் கோவைகளை அச்சிட்டு வெளியிடும் பணியையும் செய்தவர் அவர் தான். அதல்லாமல் நாட்டுப் புற இலக்கியங்களைத் தொகுப்பது, பதிப்பிப்பது, ஆய்வு செய்வது என்பதான பணிகளையும் பல்கலைக்கழக ஆய்வுப் பணிகளுள் ஒன்றாக ஆக்கியவரும் அவர் தான். அவர் துறையின் தலைவராக இருந்த காலத்தில் இக்கால இலக்கியப் படைப்பாளிகள் துறைக்கு வருவதும் மாணாக்கர்களோடு உரையாடுவதும் சிக்கல் இல்லாமல் இருந்ததாகச் சொல்வார்கள். நான் மாணவனாகச் சேர்ந்த போது அவர் ஓய்வு பெற்று விட்டார். அவரைத் தொடர்ந்து தமிழண்ணல் என்ற பெயரில் அறியப்பெற்ற இராம. பெரியகருப்பன் துறையின் தலைவராக ஆகியிருந்தார். படைப்பாளிகளோடு மாணாக்கர்கள் கொண்டிருந்த உறவும் அறுபட்டுப் போயிருந்தது.
 அறுபட்ட கயிறைத் திரும்பக் கட்டித் தொடர்ச்சியை ஏற்படுத்தத் துறையில் எந்த முயற்சியும் எடுக்காத போது புதிய துணைவேந்தராகப் பொறுப்பேற்ற டாக்டர் எஸ்.கே., அதை நினைவூட்டியதோடு நிறுத்தியிருந்தால் அவர் தமிழுக்கும் தமிழ்த் துறைக்கும் உதவி செய்த துணைவேந்தராக, மதுரைப் பல்கலைக்கழக தமிழியல் துறை வரலாற்றில் எழுதப் பட்டிருப்பார். சிவசங்கரியை அழைக்க வேண்டும் எனச் சொன்னதன் வழியாக அவருக்கு இலக்கியத்துறையின் மீதான ஆர்வமோ இந்திய / உலக இலக்கியப் பார்வையோ இல்லை. உள்ளூர் பண்பாட்டு அரசியல் பார்வை கூடக் கிடையாது.  சிவசங்கரி என்ற நபர் மீது ஏதோ ஒரு காரணம் பற்றிக் கரிசனமான பார்வை இருந்தது என்பதை வெளிப்படுத்திக் கொண்டு ஒதுங்கிக் கொண்டார். அந்தக் கதை தனிக்கதை இங்கே வேண்டாம்.  
சி.சு.செல்லப்பா, சிவசங்கரி படைப்புகள் பற்றிய கருத்தரங்கிற்கு வரவில்லை; எங்கள் துறையில் பேராசிரியராக இருக்கும் அவரது நண்பர் சி.கனகசபாபதியைப் பார்க்கவே வருகிறார் என்பது அவருக்கு வணக்கம் சொன்னவுடனேயே தெரிந்து விட்டது. பக்கத்தில் போய் வணக்கம் சொன்ன என்னிடம் சி.க(னகசபாபதி). இருக்காரா? என்று கேட்டார். இருக்கிறார்; வாருங்கள் போகலாம் என அழைத்துச் சென்றேன். போகும்போது மதுரை மேலக்கோபுர வீதியில் முதல் முதலாக அவரைப் பார்த்ததை நினைவுபடுத்தினேன். வணக்கத்தை ஏற்றுக் கொண்டாலும் என்னைப் பார்த்தது அவருக்கு நினைவில் இல்லை. அவரை அப்போது பார்க்க மட்டுமே செய்தேன். சந்திக்கவில்லை. முதல் தடவை மட்டுமல்ல இரண்டாவது முறையும் அவரை ரயில் நிலையத்தில்.பார்க்க மட்டுமே செய்தேன்
முதல் தடவை பார்த்த போது  அமெரிக்கன் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்தேன். அப்போது பல்கலைக் கழகத்தில் இரண்டாமாண்டு முதுகலை படித்துக் கொண்டிருந்தேன். அவரையும் அவரது எழுத்துப் பத்திரிகையையும் பற்றித் தெரியும். ஆனால் அவரது எழுத்துகளை வாசித்திருக்கவில்லை.  இரண்டாவது தடவை பார்த்த போது பல்கலைக்கழகத்தில் முதுகலை படித்துக் கொண்டிருந்தேன். அவரது ஜீவனாம்சம் பாடமாகவே இருந்தது. வாடிவாசலையும் வாசித்திருந்தேன். இரண்டு தொகுதி சிறுகதைகளையும் கூட வாசித்திருந்தேன். நாவல்கள் தந்த கவனக் குவிப்பை அவரது சிறுகதைகள் தரவில்லை.  ரயில் நிலைய வாசலில் அவை பற்றி பேசிக் கொள்ளும் வாய்ப்பு அங்கு உருவாகவில்லை. அந்த இரண்டு நாட்களும் எனக்கு நினைவில் இருக்கிறது; அவருக்கு நினைவில் இருக்கும் என நினைப்பது சரியில்லை தான்.  
மேலக்கோபுர வாசலில் சந்தித்த போது கொஞ்சம் பேசினேன் என்பதால் தான் அதை நினைவூட்டினேன். மதுரைக் காரர்களுக்கு மதுரையின் மற்ற வீதிகளை விட டவுன் ஹால் ரோட் என்று அழைக்கப்பட்ட வீதி மீது கொஞ்சம் கூடுதல் பற்று இருக்க வாய்ப்பு உண்டு. மாலை நேரங்களில் எதிரில் வருபவரை உரசிக் கொள்ளாமல் விலக முடியாது என நினைக்கும் அளவுக்கும் கூட்டம் நகர்ந்து கொண்டிருக்கும் வீதி. மிகக் குறுகலான வீதி என்றாலும் ரோட்டோரக் கடைகளின் வரிசையைத் தாண்டித் தான் பெரிய கடைகளுக்குள் செல்ல முடியும். மற்றவர்களைப் போலவே எனக்கும் டவுன் ஹால் ரோட்டின் பல நினைவுச் சின்னங்கள் இருக்கின்றன.  டவுன்ஹால் ரோட்டின் முடிவில் தொடங்கும் மேலக்கோபுர வாசலில் தான் சி.செல்லப்பாவை முதன் முதலில் பார்த்தேன் என்றால் அதன் தொடக்கத்தில் இருக்கும் காலேஜ் ஹவுஸ் வாசலில் தான் ஜி.நாகராஜனைப் பார்த்தேன். 80 களில் மதுரையின் அடையாளமாக இருந்த வளாகம்  காலேஜ் ஹவுஸ் விடுதி வளாகம்.. கல்யாண விருந்து போல பெருங்கூட்டம் அமர்ந்து சாப்பிடக்கூடைய உணவு விடுதி அங்குண்டு. குறிப்பிட்ட தொகைக்கான சீட்டை வாங்கி விட்டால் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்ற வசதிக்காகவே கூட்டம் அலைமோதும். காலையில் சாப்பிடாமல் வயிறைக் காயப்போட்டு விட்டு மதிய உணவுக்கு காலேஜ் ஹவுஸ் போகும் மதுரை ஆசாமிகள் பலருண்டு. உள்ளேயே புத்தகக்  கடை, வாகன நிறுத்தம், செருப்புக் கடை, துணிக்கடை என அந்தக் காலத்திலேயே ஒரு பெரும் வணிக வளாகமாக இருந்தது. வாடகைக்கார்கள் இருபுறமும் சாலையில் நிற்கும். அங்கே கருத்தரங்கம் நடத்தும் மேடை வசதி கொண்ட கூடமும் உண்டு. கி.ராஜநாராயணனின் மணிவிழா அங்கு தான் நடந்தது.
 காலேஜ் ஹவுஸில் இருந்த கூட்ட அரங்கில் நடந்த கருத்தரங்குக்குப் பின் இலக்கியவாதிகளும் இலக்கியவாசகர்களுமாக வெளியே வந்து கொண்டிருந்தார்கள். நானும் அவர்களில் ஒருவனாக வந்து கொண்டிருந்தேன். எனக்கு முன்னால் தொ.மு.சி.ரகுநாதனோடு கலை இலக்கியப் பெருமன்றத்தைச் சேர்ந்த பலரும் உரசிக் கொண்டே நடந்து கொண்டிருந்தனர். கிழிந்து தொங்கும் வெள்ளை ஜிப்பாவோடு நின்ற அந்த மனிதரைப் பலரும் நின்று பார்த்து விட்டு விலகிச் சென்றார்கள். நின்று பார்ப்பது ஏன் என முதலில் தெரியவில்லை. கடந்து சென்றவர்கள் பிறகு அவரைக் காட்டிப் பேசியதும் எனக்குப் புரியவில்லை. அவரும் ஒருவரைக் கூட கையைப் பிடித்து நிறுத்தவில்லை. ஆனால் அவரைப் பார்க்காமலேயே -யாருடனோ பேசிக் கொண்டு- கடந்து போன தொ.மு.சி. ரகுநாதனை மட்டும் பின்னால் இருந்து தட்டித் திரும்பச் செய்தார் அந்த மனிதர். திரும்பிப் பார்த்த தொ.மு.சி. அதிர்ச்சிக்குக் கொஞ்சம் அதிர்ச்சி. கலக்கத்தோடு அந்த மனிதரைக் கையைப் பிடித்துக் கொண்டார். ரகுநாதன். ரகுநாதன்  என்று அந்த மனிதர் சொல்லும் அதே நேரத்தில் இவரும் ”நாகராஜன்” என்று சொல்லி அணைத்துக் கொண்டனர். இருவர் கண்களிலிருந்தும் கண்ணீர் வருவதற்கான எத்தணிப்பு தெரிந்தது. வார்த்தைகள் எதுவும் வரவில்லை. வணக்கம் சொல்கிறாரா? போய்ட்டு வா என்று சொல்கிறாரா? என்று புரியாத வகையில் கையைத் தூக்கிக் காண்பித்து விட்டுக் கையைத் தொங்கவிட்டுக் கொண்டார். அதன் அர்த்தம் புரிந்த ரகுநாதன் பையிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுத்தார். எவ்வளவு என்று இவரும் பார்த்துக் கொடுக்கவில்லை; அவரும் பார்த்து வாங்கவில்லை. ஜி. நாகராஜன் பற்றிக் கேள்விப் பட்டிருந்த பலவற்றை ஏற்றுக் கொள்ளாமல் இருந்த எனக்கு, என் கண் முன்னே நிகழ்ந்த அந்தக் காட்சி “கேள்விப்பட்டதெல்லாம் உண்மை” என உணர்த்தின.  அவரை மதுரையின் இலக்கிய அடையாளமாகப் பலரும் சொன்ன பிறகு ஜி.நாகராஜனை வாசிக்கத் தொடங்கினேன். ஜி. நாகராஜனின் மதுரை பகல் நேரத்து மதுரை அல்ல; இரவு நேரத்து மதுரை. கவியும் இருளும் விலகும் இருளுமாக அவரது கதைகளில் மதுரையின் தெருக்கள் தான் எழுதப்பெற்றிருக்கின்றன. நாசுக்கான மதுரை வீடுகள் ஒன்று கூட அவரது கதைகளில் எழுதப் படவில்லை. அப்படியான வீடுகள் மதுரையில் அந்தக் காலத்தில் இருந்ததில்லையோ என்னவோ. இன்றும் கூட மதுரை இருளும் நிழலுமாகவே நகர்ந்து கொண்டிருக்கிறது என்றே தோன்றும். சி.சு. செல்லப்பாவைப் பற்றிச் சொல்ல வந்த நான் ஜி.நாகராஜனைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
 டவுன் ஹால் சாலையில் நுழைந்தவுடன் எனக்குப் பாரதி புத்தகப் பண்ணை கண்ணில் படுவது போல அதன் முடிவில்  வலது கைப்பக்கம் திரும்பி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் மேற்குக் கோபுரத்தை பார்த்துத் திரும்பினால் எனக்கு முதலில் தெரிவது நியூசெஞ்சுரி புத்தக நிலையம் தான். வழுவழுப்பான தாள்களில் மாஸ்கோ பதிப்பக வெளியீடுகளை வாங்கி வைத்துக் கொள்வதற்காக அந்தக் கடைக்கு அடிக்கடி போவதுண்டு. அப்படிப் போன ஒருநாள் தான் செல்லப்பாவைப் பார்த்தேன். சி.கனகசபாபதியுடன் துணிப்பையைக் கக்கத்தில் இடுக்கியபடி அதன் வாசலில் நின்றிருந்தார்.
 நியூசெஞ்சுரி புத்தகக் கடையிலிருந்து வெளியில் வந்த என்னைத் தோளில் கை வைத்து அழுத்தி நிறுத்தி இவரைத் தெரியுமா? என்று கேட்டார் சி.க., ’ தெரியாது’ என்றேன்.. “இவர் தான் செல்லப்பா; வாடிவாசல்  செல்லப்பா” என்று அறிமுகம் செய்தார். ”எழுத்து செல்லப்பா தானே” என்றேன். நான் வாடிவாசலையோ, அவரது கதைகளையோ அப்போது படித்திருக்க வில்லை. என்றாலும் எழுத்து ஆசிரியர் செல்லப்பாவை எனக்கு அறிமுகம் உண்டு. நின்று திரும்பிய அந்த மனிதரை அப்போது முழுவதும் பார்த்தேன். அழுக்கேறிய வேட்டியும் கதர்ச் சட்டையுமாக இருந்தார். ஒல்லியான அந்த உடம்புக்கு இவ்வளவு பெரிய சட்டை எதுக்கு என்று கேட்கத் தோன்றியது. முகமும் கூட அழுக்காகத்தான் இருந்தது. ”எழுத்துப் பத்திரிகையைப் பார்த்திருக்கீங்களா?” என்று கேட்டார். கேட்டதில் கொஞ்சம் ஆர்வம் இருந்திருக்க வேண்டும்.”இல்லை; தீபம் பத்திரிகையில் வல்லிக்கண்ணன் எழுதும் தொடரில், புதுக்கவிதைக்கு எழுத்து பத்திரிகையின் பங்களிப்பு பற்றி  எழுதியதை வாசித்திருக்கிறேன்” என்றேன். ”எழுத்துவோடு நேரடித் தொடர்பு இல்லாதவனோடு என்ன பேச்சு” என்று நினைத்தாரோ என்னவோ அதற்கு மேல் அவர் என்னிடம் பேசவில்லை. அவர்கள் இருவரோடும் சேர்ந்து நானும் செண்ட்ரல் சினிமா அரங்கைத் தாண்டி இருக்கும் மீனாட்சி புத்தகநிலையம் நோக்கிக் கூடவே தான் போனேன். மீனாட்சி புத்தக நிலையத்திலிருந்த அதன் உரிமையாளர் செல்லப்பன் அவர்களை வரவேற்ற விதத்தைக் கண்டு நான் ஒதுங்கி நின்றிருந்தேன். கொஞ்ச நேரம் கழித்துச் சொல்லிக் கொள்ளாமல் வெளியேறி விட்டேன். ஒற்றை வாக்கியம் மட்டுமே பேசிய செல்லப்பாவை முதன் முதலில் டவுன்ஹால் ரோட்டில் பார்த்ததைச் சந்திப்பு எனச் சொல்ல மனம் விரும்பவில்லை. அவர் அதை நினைவில் வைத்திருப்பார் என நினைக்கவுமில்லை
 முதல் இரண்டு தடவைகளையும் சி.சு. செல்லப்பாவைப் பார்த்தேன் எனக் குறிப்பிடவே விரும்புகிறேன் என்றால்  மூன்றாவது தடவை நிகழ்ந்ததை நிச்சயம் சந்திப்பு எனக் குறிப்பிடவே விரும்புகிறேன். இப்போதும் அவர் சி,கனகசபாபதியைப் பார்க்கத்தான் வந்திருந்தார். அதே அழுக்கேறிய வேட்டி; சட்டை. கூடுதல் சுருக்கங்கள் கொண்ட முகம், வாராத தலைமுடி. கையில் ஒரு பச்சை வண்ணத் துணிப்பை. அதை வைத்துக் கண்ணை மறைத்தபடி வந்தார். பையில் கணமாக எதுவும் இல்லை. புத்தகங்கள் இல்லாமல் வரும் செல்லப்பாவை நான் எதிர்பார்க்கவில்லை. புத்தகக் கட்டுகளோடு அலைவார் எனப் படித்திருந்ததால் கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. நிழலுக்குள் வந்த பிறகுதான் கண்ணில் எதோ கோளாறு; வெயில் கூச்சத்தை மறைக்கத் துணிகட்டித் தொங்க விட்டிருக்கிறார் என்பது தெரிந்தது. பேரா. சி.கனகசபாபதி இருக்கும் அறைக்கு அழைத்துப் போய் விட்டுவிட்டுப் பக்கத்தில் நின்றேன். ” ஒக்காருங்க ராமசாமி; துறையிலெ இன்னக்கி என்ன நடக்கப் போகுதுன்னு இவருட்ட சொல்லுங்க. என்றார் சி.க.
சிவசங்கரியின் படைப்புகள் பற்றி மூன்று நாள் கருத்தரங்கம் நடக்க இருக்கிறது. இன்று தான் அதன் தொடக்கவிழா என்றும் சொல்லி விட்டு நீங்களும் வரவேண்டும் என்றேன். ” எல்லாம் அரசியல் தான்; இது திராவிட அரசியல் இல்ல; தேசிய அரசியல்” என்று சொல்லிவிட்டு சி.க. சிரித்தார். செல்லப்பா சிரிக்கவில்லை. பேசினால் கண்ணில் வலி அதிகமாகும் என நினைத்துப் பேசாமல் இருக்கிறாரோ எனக் கருதினேன். ”நீங்கள்லாம் என்ன பண்ணிக்கிட்டிருக்கீங்க. எல்லாம் அரசியல்லு சொன்னா போதுமா. ஒங்க எதிர்ப்பெக் காட்ட வேண்டியதுதானே. கோபமாகச் சி.க.வைப் பார்த்துச் சொன்னார்.என் பக்கம் திரும்பினார். அந்தப் பார்வையில் இருந்த கோபம் எனக்கும் சேர்த்துத் தான் என்று தோன்றியது, என்னை ஏன் இந்த எழவுக்கெல்லாம் கூப்பிடுறீங்க என்று சொல்லி விட்டு ஜன்னல் பக்கம் திரும்பிக் கொண்டார். சி.க.வுக்கு அவரை எப்படிச் சமாதானப் படுத்துவது எனத் தெரிந்திருந்தது. பத்துப் பதினைந்து நிமிடத்தில் கோபமெல்லாம் காணாமல் போய்விட்டது. காலையில் தொடக்கவிழாவில் கலந்து கொண்டு விட்டு உடனே அவரோடு கிளம்பி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு வருவதாக அவர் சொன்னவுடன் சமாதானம் அடைந்ததோடு தொடக்கவிழா நடக்கும் இடத்துக்கும் வரச் சம்மதித்தார்.
தொடக்க விழா நடக்கும் அரங்குக்கு வாகன ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அரை கிலோ மீட்டர் தூரம். நடந்தே போகலாம் என்று சொல்லி விட்டார் சி.சு. செல்லப்பா. இடையில் ஒரு காபி குடித்து விட்டு நடந்தால் தொடக்க விழா நேரத்துக்குப் போய் விடலாம் என்பதால் நடந்தே போனோம். போகும் வழியெல்லாம் அவரது சாவித்திரியைப் பற்றிப் பேசிக் கொண்டே போனேன். ஜீவனாம்சம் நாவலில் வரும் சாவித்திரியைப் பற்றிக் கற்பனையாகச் சில காட்சிகள் என்னிடத்தில் இருந்தது. அக்கிரகாரத்தில் இருந்து கிளம்பிச் செல்லும் இந்தி டீச்சர் சாயலில் தான் சாவித்திரி என்னிடம் இப்போதும் இருந்து கொண்டிருக்கிறாள் என்பதை அவரிடம் சொல்லவில்லை. கணவன் இல்லாத இந்தி டீச்சர் சாவித்திரியைப் போலக் கட்டுபெட்டியானவர் இல்லையென்றாலும் அவரது நடை, சிரிப்பு, இழுத்து வைத்துப் பேசும் பாங்கு போன்றன ஒத்துப் போய்க் கொண்டிருந்தது. இத்தனைக்கும் எனக்கு அவர் இந்தி சொல்லித் தரவில்லை. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் தொடர்ச்சியாகப் பள்ளிகளிலிருந்து இந்தி வெளியேறிய போது இந்தி டீச்சரும் அவரது அண்ணன் இருந்த மதுரைக்கே போய்விட்டார் என்பது மட்டும் நினைவில் இருக்கிறது.
மேடையில் சிவசங்கரி, துணைவேந்தர், துறைத்தலைவர் என மேடையேற வேண்டியவர்கள் வருவதற்கு முன்பே அரங்குக்குள் நுழைந்து விட்டோம். ஏறத்தாழ நடுவரிசை அது. அதிலிருந்து வலது புறமாக நகர்ந்தால் நேராக இருக்கும் வாசல் வழியாக வெளியேற முடியும் என்பதால் அந்த வரிசையை நான் தேர்ந்தெடுத்திருந்தேன். நடந்து வரும்போதே முழுக் கூட்டத்திலும் இருக்க முடியவில்லை என்றால் நான் வெளியே வந்து விடுவேன் என்று அவர் சொல்லியிருந்ததால் தான் அந்த இடத்தைத் தேர்வு செய்தேன். உட்கார்ந்த பின்னும் நானும் அவரும் பேசிக் கொண்டிருந்தோம். சி.க. இடையிடையே ஒற்றைச் சொல்லில் எதோ சொல்லி விட்டு மேடையைக் கவனித்துக் கொண்டிருந்தார். துறையின் வேலைகளில் தனது பங்கு எதுவும் இல்லை என்று யாராவது சொல்லி விடுவார்களோ என்ற பதற்றம் அவரிடத்தில் இருந்தது. எனக்கு அந்தப் பதற்றம் இல்லை. துறையின் தலைவருக்கும் ஆசிரியர்களுக்கும் என்னைப் பற்றி இருந்த அபிப்பிராயமும் எனக்குத் தெரியும். துறையின் போக்கோடு ஒத்துப் போகாத ஆய்வாளர்களில் ஒருவன் என்ற அபிப்பிராயம் என்னைப் பற்றி இருப்பதை ஒவ்வொரு நிகழ்விலும் உறுதிப் படுத்துவதில் கவனமாக இருப்பேன். சி.சு.செல்லப்பாவை அழைத்துக் கொண்டு வந்து நடுவரிசையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பதைக் கூட விலகல் போக்காகத் தான் நினைப்பார்கள் என்பதும் தெரியும். நினைப்பவர்கள் நினைக்கட்டும் என்ற தெனாவட்டும் கூடவே இருக்கும்.
மேடையில் எல்லோரும் ஏறிவிட்டார்கள். பளபளக்கும் சேலையில் சிவப்புச் சாயம் பூசிய உதடுகளின் மேல் கைகளைக் குவித்து வணக்கம் சொல்லிப் பார்வையாளர்களை நோக்கிச் சிரித்தார் சிவசங்கரி. பக்கத்தில் துறைத்தலைவர் தமிழண்ணல் மகிழ்ச்சியோடு நின்று பார்த்தார். எல்லோரும் நின்றிருந்தார்கள். செல்லப்பாவுக்குத் துணையாக நானும் உட்கார்ந்து குனிந்து பேசிக் கொண்டிருந்தோம்.  துறைத்தலைவர் கைகாட்ட அனைவரும் உட்கார்ந்த போது சி.சு.செல்லப்பாவைப் பார்த்து விட்டார் சிவசங்கரி. தன்னுடைய இருக்கையில் அமரப் போனவர்  உட்காரவே இல்லை. மேடையை விட்டு இறங்கி நாங்கள் இருந்த வரிசைக்குள் நுழைந்து விட்டார். மொத்தக் கூட்டமும் அவரோடு சேர்ந்து எங்கள் மீது குவிந்தது. வந்தவர் அவரது காலைத் தொட்டு வணங்குவது போலப் பாவனை செய்து விட்டு, “பெரியவா.. உங்க ஆசீர்வாதம் வேணும்” என்று சொல்லி நின்றார். நின்றவரை செல்லப்பா நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை. எழுந்திருக்கவுமில்லை. “ யார் பெரியவா? நீங்கள் தான் இப்போ பெரியவா? ஒங்களுக்கெதுக்கு என்னோட ஆசிர்வாதம்? என்று சொல்லி விட்டுக் கிளம்பத் தயாரானார். சி.க. தான் தடுத்து நிறுத்தி அமரச் செய்தார். ஆசீர்வாதம் கிடைக்காத வருத்தத்தை மறைக்க முடியாதபடி சிவசங்கரி மேடையேறிக் கைகுட்டையால் முகத்தைத் துடைத்து கொண்டார்.

1 comment :

s.swaminathan said...

we will never understand chellappa.anyway thanks for your writings on c.s. s.swaminathan