June 06, 2012

கூட்டம்.. கூட்டம்.. கூட்டம்… கூட்டம் காட்டக் கூட்டம்.. கூட்டம்.. கூட்டம்; சாதிவாரிக் கணக்கெடுப்பை முன் வைத்து.தமிழகம் முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு இன்று தொடங்கியது. நாடு முழுவதும் சமூக, பொருளாதார மற்றும் ஜாதி வாரியாக மக்கள்தொகை கணக்கெடுக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் இன்று கணக்கெடுப்பு பணி தொடங்கியது. இதில் ஈடுபடும் வருவாய் துறை அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இன்று முதல், வீடு வீடாக சென்று மக்களின் சமூக, பொருளாதார, ஜாதிவாரியாக தகவல்கள் பதிவு செய்து வருகின்றனர்.
ஒவ்வொரு வீட்டுக்கும் 2 ஊழியர்கள் வருவார்கள். ஒருவர் ஒரு படிவத்தில் விவரங்களை எழுதிக் கொள்வார். இன்னொருவர் லேப் டாப்பில் பதிவு செய்வார். பின்னர் ஒப்புகை சீட்டு வழங்கப்படும். குடும்பத் தலைவரின் கையெழுத்தையும் இன்னொரு ஒப்புகை சீட்டில் கணக்கெடுப்பாளர்கள் பெற்று கொள்வார்கள். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள் என 4 வகையாகப் பிரித்து இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. மக்களின் பொருளாதார நிலை எப்படி உள்ளது. எந்த மாதிரியான வீடுகளில் வசிக்கின்றனர். வேலை, வருமானம், ஜாதி, கல்வி, மாற்றுத் திறனாளி உள்ள வீடு மற்றும் வீடு இல்லாதவர்களின் எண்ணிக்கையை அறிதல், எதிர்கால வளர்ச்சி திட்டங்களைத் தீட்ட இந்தப் புள்ளி விவரங்களைப் பயன்படுத்துதல் ஆகியவற்றுக்காக இக்கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது.
இந்தச் செய்தியை ஏப்ரல் மாதக் கடைசி வாரத்தில் தினசரிகளில் வாசித்த போது சில விளம்பரங்களையும், செய்திக் குறிப்புகளையும் வாசித்திருக்கலாம். சிலவற்றை இங்கே வாசிக்கத் தருகிறேன். பிரமிடு வடிவ இந்திய சாதிக் கட்டமைப்பில் உச்சாணிக் கூம்பில் இருப்பதாக நம்பும் பிராமண அமைப்பு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பை:  முதலில் வாசிக்கலாம்.
ஜாதி வாரி கணக்கெடுப்பில் "பிராமணர் ஜாதி' என மட்டுமே குறிப்பிடவேண்டும் என தமிழ்நாடு பிராமணர் சங்கம் (பதிவு) வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு பிராமண சங்கம் (பதிவு) மாநில பொதுச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய, மாநில அரசின் சார்பில் கடந்த ஏப்.23ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடந்து வருகிறது. இந்த கணக்கெடுப்பில் நம் சமுதாய மக்கள் அனைவரும் தவறாமல் பங்கெடுத்துக் கொண்டு "பிராமணர் ஜாதி' என மட்டுமே குறிப்பிடவேண்டும். நமது உட்பிரிவுகளை கூறி குழப்பவேண்டாம். வெளியூர் மற்றும் வெளிநாட்டில் இருக்கும் மகன்,மகள் மற்றும் உறவினர்களின் விபரத்தைக் கூறி கணக்கெடுப்பில் சேர்ப்பதற்கு முயற்சிகள் எடுக்க வேண்டும்.
பிராமணர்களிடையே உட்பிரிவுகளும், வேறுபாடுகளும் இருக்கின்றன என்பதை ஒத்துக் கொண்டு,அதைக் காட்டிக் கொள்ள வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கிறது அந்த அறிக்கை. இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் எந்தச் சலுகையும் கிடைக்கப்போவதில்லை என்றாலும் இப்படியொரு வேண்டுகோளை முன் வைத்துள்ளார் பிராமண சங்கச் செயலாளர். அவரின் நோக்கம் என்னவாக இருக்கும் என்ற கேள்வியை எழுப்பி விடை தேடுவதற்கு முன்பு இன்னும் சில அறிக்கை வாசகங்களையும் பார்க்கலாம்.
தமிழ்நாடு அருந்ததியர் மக்கள் நல சங்க தலைவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. கணக்கெடுக்க வரும் அதிகாரிகளிடம் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த சக்கிலியர், ஆதி ஆந்திரர், தோட்டி, மதகா, பகடை ஆகிய உட்பிரிவுகளை ஒன்றாக இணைத்து ஒரே இனமாக அருந்ததியர் என்றே கூற வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து குக்கிராமங்களிலும் உள்ள மேற்கண்ட பிரிவை சேர்ந்த அனைவரும் அருந்ததியர் என பதிய வேண்டும். அப்போதுதான் மக்கள் தொகை இடஒதுக்கீடு அடிப்படையில் அருந்ததியர்களுக்கு அனைத்து வசதிகளும் கிடைக்கும்
கூம்பு வடிவச்சாதிக் கட்டமைப்பின் அழுத்தம் முழுவதையும் தாங்கும்படி தூண்டப்படும் அருந்ததியர் சாதி அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையைப் போலவே எல்லா அறிக்கைகளும் உட்பிரிவுகளைத் தவிர்க்கச் சொல்லி வேண்டுகோள் விடுக்கின்றன.  .
இந்தியா முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடந்து வருகிறது. இதில் தேவேந்திரர்கள் தங்களின் உட்பிரிவுகளான காலாடி, குடும்பன், மூப்பன், பண்ணாடி, வாய்காரர், கடையர், வாதியார் என்பதற்கு பதிலாக ஒரே இனமாக தேவேந்திர குலத்தான் என்று பதிவு செய்யுமாறு மள்ளர் நாடு சமூக நல நிறுவன தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜாதிவாரி கணக்கெடுப்பில் தேவேந்திர குலத்தான் என அதிகாரிகள் பதிவு செய்ய மறுப்பதை எதிர்த்து புகார் கொடுத்துள்ளதாகவும், எனவே தேவேந்திர குலத்தான் என்று பதிவு செய்ய வேண்டுமே தவிர ஆதிதிராவிடர், தாழ்த்தப்பட்டோர் எஸ்.சி. என பதிவு செய்யக் கூடாது என்றும்  அந்த அறிக்கை கூறுகிறது. 
உட்பிரிவுகளை மறுதலித்து ஒற்றை அடையாளத்துடன் -பெருங்கூட்டமாகக் காட்ட நினைக்கும் இந்த அறிக்கை முக்கியமான வேறுபாடொன்றையும் கொண்டிருக்கிறது. வேறு சில கூட்டங்களை ஒன்றிணைத்து இன்னும் பெரிதான கூட்டமாகக் காட்டும் வாய்ப்பு இருந்த போதும் அதில் சேர்ந்து கொள்ள மறுக்கும் நோக்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறது. இதே போல் உட்பிரிவுகளை மறுதலித்துப் பெருங்கூட்டமாகக் காட்டும் நோக்கம் கொண்ட இன்னொரு அறிக்கை கொஞ்சம் விரிவானது. நடைமுறைச் சிக்கல்களை எதிர்கொண்டதின் விளைவால் வெளியிடப்பட்ட அறிக்கை அது:
 ஜாதிவாரி கணக்கெடுப்பு பதிவின் போது தேவர் என்று பொதுமக்கள் சொன்னாலும் அதை அலுவலர்கள் பதிவு செய்ய மறுத்து அப்படி ஒரு ஜாதியே இல்லை என்று சொல்லி பதிவு செய்ய மறுப்பதாக பல இடங்களில் இருந்து புகார் வருகிறது. இது மிகவும் வருந்தத்தக்கது. தேவர் இனம் என 1994-ம் ஆண்டே முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சியின் போது தமிழக அரசு சார்பில் அரசாணை பிறப்பிக்கப்பட்டும் இன்னும் அதை கணக்கெடுப்பு அதிகாரிகள் நடைமுறைபடுத்தாதது வியப்பாக உள்ளது. கணக்கெடுப்பு ஊழியர்கள் பலரும் தேவர் இனத்தில் உள்ள உட்பிரிவுகளை மட்டும் பதிவு செய்வதால் எதிர்கால சந்ததிகளின் கல்வி, வேலை வாய்ப்பு, போன்ற சலுகைகளில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே தமிழகத்தில் வாழும் முக்குலத்தோர் இன மக்கள் மறவர் தேவர், கள்ளர், தேவர், அகமுடையார் தேவர் இன மக்களை தேவர் சமுதாயம் என்று கம்ப்யூட்டரில் பதிவு செய்திருக்கிறார்களா, என்பதை ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்து கையெழுத்திடவேண்டும். சென்னை போன்ற புறநகர்களில் கணக்கெடுப்பு அலுவலர்கள் வீடுகளுக்கு மே முதல் தேதி முதல் சென்று பதிவு செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.   கோடை மாத பள்ளி விடுமுறைக்காக பலரும் தங்கள் சொந்த ஊருக்கு விடுமுறையில் சுற்றுலா சென்றுள்ளனர். எனவே பல வீடுகளில் ஆள் இல்லாமல் இருப்பார்கள். அவர்களும் இதில் முழுமையாக சேர மாற்று ஏற்பாடு திட்டத்தை வகுத்து, பட்டியலில் தேவர் சமுதாயத்தை சேர்க்க வேண்டும். வாக்காளர் அட்டை பெயர் பதிவு செய்வதில் பின்பற்றிய நடைமுறையை இதில் பின்பற்ற வேண்டும்.
இந்தியச் சமூகத்தின் அடிப்படையே சாதியக் கட்டுமானத்தில் தான் இருக்கிறது என்பதை இந்துச் சமயத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளவர்கள் மட்டுமே ஏற்றுக் கொண்டுள்ளனர் எனப் பொதுவான கருத்து நிலவுகிறது. ஆனால் இந்தியாவில் கிறித்துவமும் இசுலாமும் கூட அத்தகைய நம்பிக்கையோடுதான் இயங்குகின்றன, இந்தியத் துயரத்தின் வெறுக்கத்தக்க ஒடுக்குமுறையைக் கிறித்துவ சமயம் முன்னொட்டு மாற்றத்தோடு ஏற்றுக் கொண்டுள்ளது. சாதிகளைத் தொலைப்பதற்கான வழியாகக் கருதப்பட்ட மதமாற்றம் திரும்பவும் அத்தனை சுமைகளோடும் திரும்பச் சேர்ந்து கொண்டிருப்பதுதான் நிகழ்கால உண்மை. சாதிகளின் பெயரோடு “கிறித்துவ” என்ற முன்னொட்டைச் சேர்த்துக் கொண்டு இந்து மதத்தின் எல்லாச் சிக்கல்களோடும் தவித்துக் கொண்டிருக்கிறது இந்து வெள்ளாளர் கிறித்தவ வெள்ளாளராக மாறி விட்டாலும் வெள்ளாளர் வீட்டில் தான் கொடுக்கல் வாங்கல் செய்கிறார். கிறித்தவ நாடாராக மாறியவருக்கு இந்து நாடார் வீட்டுப் பெண்ணைத் தரத் தயக்கம் எதுவும் இல்லை. இஸ்லாமோ, இந்துச் சாதிப் பெயர்களைத் தவிர்த்து விட்டு அதற்கேயுரிய சாதிப் பிரிவுகளோடும் ஏற்றத் தாழ்வுகளோடும் தான் இருக்கிறது என்பதை இப்போது வரும் அறிக்கை மூலம் தான் அறிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை. என்றாலும் அவர்களே ஒத்துக் கொண்டு வெளியிட்டுள்ள  அறிக்கை கூடுதல் ஆதாரம் தானே.
பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் சமூகம் மாநில அளவிலும் மத்திய அளவிலும் இடஒதுக்கீட்டின் அளவு அதிகரிக்க வேண்டும் என்று போராடி வரும் இச்சூழலில் இந்தச் சாதிவாரி கணக்கெடுப்பை பெரும் கவனத்துடனும் விழிப்புணர்வுடனும் அணுக வேண்டும். முஸ்லிம்களை பொறுத்த வரையில் மதம் என்ற கேள்விக்கு இஸ்லாம் என்று குறிப்பிடுவதே சரியானது.முஸ்லிம் என்று பதிவு செய்ய அனுமதிக்கக்கூடாது. இஸ்லாத்தில் ஜாதிய பிரிவுகள் இல்லையென்றாலும் முஸ்லிம்களின் பல்வேறு பிரிவினரின் சமூக நிலையை அடிப்படையாக கொண்டு தமிழகத்தில் லெப்பை, (தமிழ்-உருது பேசக்கூடிய ராவுத்தர், மரைக்காயர்உள்பட) தக்னி, தூதே குலா, மாப்பிள்ளா, அன்சர், ஷேக், சையத் என ஏழுபிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர். இதில், முதல் நான்கும் தேசிய அளவில் மத்திய அரசின் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில்  இடம் பெற்றுள்ளன. எனவே, தமிழகத்தில்  கணக்கெடுப்பாளர்களிடம்  சாதி என்ற கேள்விக்கு  லெப்பை,தக்னிதூதேகுலா, மாப்பிள்ளா ஆகிய நான்கில் ஒன்றை இடம்பெறச்செய்தால் மட்டுமே மத்திய-மாநில அரசுகளின் இடஒதுக்கீட்டுச் சலுகையைப் பெறமுடியும்.
ராவுத்தர், மரைக்காயர் உள்ளிட்டோர் லெப்பை என்ற பிரிவின் கீழ்வருவதால் லெப்பை என்றே குறிப்பிடவும். குடும்ப வருமானம் என்பது மிகமுக்கியமானதாகும். மாத வருமானத்தைக் கொண்டு ஆண்டு வருமானம் கணிக்கப்படும். எனவே மாதத்திற்கு 2 ஆயிரம் ரூபாய் குறையாமலும், ஆண்டிற்கு 24 ஆயிரம்  ரூபாய் குறையாமலும் குறிப்பிட வேண்டும். முஸ்லிம்கள் அனைவரும் கண்காணிப்புடன் செயல்பட்டு எந்தவொரு முஸ்லிம் பெயரும் விடுபடாமல் பதிவு செய்வதில் முழுக்கவனம் செலுத்தவேண்டியது மிகவும் இன்றியமையாத கடமையாகும் எ‌‌ன்று அந்த அறிக்கை கேட்டுக் கொள்கிறது.
உண்மையில் சாதிவாரி கணக்கெடுப்பு பெருங் கூட்டத்தில் சின்னச் சின்னச் சாதிக்குழுக்கள் காணாமல் போய்விடும் ஆபத்தைத் தவிர்த்து ஒவ்வொரு சாதியும், அதற்குரிய மக்கள் தொகை விகிதாச்சாரப்படி இட ஒதுக்கீட்டின் பலனைப் பெற வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் சாதியமைப்புகள் விடும் அறிக்கைகளோ அதற்கு எதிரான நிலைபாட்டுடன் வெளி வருகின்றன. சின்ன அடையாளங்களைக் குழைத்துப் பேரடையாளத்தை உருவாக்கிட முனைகின்றன. அப்படிச் செய்வதன் காரணங்கள் என்னவாக இருக்கக்கூடும்?
இந்திய சாதிகள் குலமுறைகளைக் கணக்கிட்டு அகமண முறையினைப் பின்பற்றுவதன் மூலமும் தனித்தனி அடையாளங்களைப் பேணிக் கொண்டிருக்கின்றன என்பது நடைமுறை யதார்த்தம். அதனை வலியுறுத்துவதற்காக சாதிச்சங்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்பதும் கண்கூடு. ஆனால் இந்திய ஜனநாயகமும் அது தரும் இட ஒதுக்கீடும் சாதிச் சங்கங்களை நேரெதிர்த் திசையில் சிந்திக்கத் தூண்டி விட்டுள்ளது. அப்படிச் சிந்திப்பதால் சாதிகள் இல்லாத சமத்துவத்துவ சமுதாயத்தை நோக்கி நகரும் நல்வினைகள் ஏற்படப் போகிறது என்று யாரும் நினைத்து விட வேண்டியதில்லை. சமத்துவ சமூகத்தை அமைக்கும் நோக்கத்தோடு ஒத்துப் போகும் பணிகள் எந்தச் சாதிச் சங்கங்களுக்கும், சாதியக் கட்சிகளுக்கும் உவப்பானவை அல்ல என்பதைக் கடந்த காலமும் நிகழ்காலமும் காட்டிக் கொண்டிருக்கின்றன. ஒடுக்குதலை முதன்மை வினையாகக் கொண்ட சாதி வேறுபாடுகளை ஒடுக்கும் சாதிகள் விட்டுத் தரத் தயாராக இல்லை. அதற்குப் பதிலாகத் தங்களின் இருப்பை – எண்ணிக்கைக் கணக்கை – தனது கூட்டத்தின் வலிமையை அதிகமாகக் காட்டி அரசியல் லாபம் பெறும் உத்தியாகவே ஒற்றை அடையாளத்தில் இணைவதை முன் வைக்கின்றன.
இந்திய சமூக அமைப்புக்கு முற்றிலும் மாறுபட்ட அமைப்பைக் கொண்ட ஐரோப்பியர்கள் இந்தியாவுக்கு வந்து ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றி அதன் செல்வ வளத்தைச் சூறையாடிச் சென்ற கதையோடு, இந்திய சமூகத்தை மாற்ற நினைத்த கதையையும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். குறிப்பாகப் பிரிட்டானிய ஆட்சியாளர்கள் இந்தியக் கச்சாப் பொருள்களை இங்கிலாந்துக்குக் கொண்டு போய் உபயோகப் பொருளாக மாற்றி உலகச் சந்தைக்குக் கொண்டு போனது போலத் திரும்பவும் இந்தியச் சந்தைக்கும் கொண்டு வந்தார்கள். நம்மூர்ப் பருத்தி மான்செஸ்டருக்குப் போய்விட்டுத் திரும்பவும் வந்து பேண்ட், சட்டைகளாக மாறி நாகரிகப்படுத்தியது இந்தப் பரிவர்த்தனையின் தன்மை பொருட்களோடு நின்று போகவில்லை; மனிதர்களிடத்திலும் அப்படியே நடந்தது என்பது எனது கருத்து. ஆங்கிலேயக் கல்வி இந்தியர்களிடம் வடிவ மாற்றத்தைக் கொண்டு வந்ததே ஒழிய உள்ளடக்க மாற்றத்தை –குணமாற்றத்தை- ஏற்படுத்தும் வேலையைச் செய்யவே இல்லை. சாதிய இந்தியர்களாகவே இங்கிலாந்துப் பல்கலைக்கழகங்களில் படித்தவர்களும் ஊர் திரும்பினார்கள்: இந்தியப் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி கற்றவர்களும் இந்தியா முழுக்க அலைந்தார்கள்; அலைகிறார்கள்.
இந்திய சமூகத்தில் குணமாற்றத்தைக் கொண்டுவரும் வேலை அவ்வளவு சுலபமான பணி அல்ல என்பதை உணர்ந்து கொண்ட ஆங்கிலேயர்கள், பிறப்பை அடிப்படையாகக் கொண்ட சாதி அமைப்பைக் கொஞ்சம் அசைத்துப் பார்த்துச் சலுகைகள் வழங்கி மேலே தூக்கி விடும் நிர்வாகப் பிரிவுகளாக ஆக்கிப் பார்த்தார்கள். அப்படி உருவாக்கிய அடுக்குகளே இப்போதும் உள்ள பட்டியல்கள். பொதுப் போட்டியில் அனைவரும் இடம் பெறலாம் என அனுமதித்து விட்டு பிற்பட்ட சாதியினர் என ஒரு பட்டியலையும், தாழ்த்தப்பட்ட சாதிகள் என ஒரு பட்டியலையும், மலைவாழ் குழுக்கள் என இன்னொரு பட்டியலையும் உருவாக்கிச் சிறப்புச் சலுகைகளை அளித்தது பிறப்பு அடிப்படை சார்ந்து அல்ல; நிர்வாகக் கணக்கெடுப்பின் அடிப்படையில். சுதந்திர இந்தியாவில் இந்தப்பட்டியல்கள் அப்படியே ஏற்றுக் கொள்ளப்பட்டன என்றாலும் பல்வேறு மாற்றங்களுக்கும் ஆட்பட்டன. பொதுப் பட்டியலில் இருந்து பல சாதிகள் பிற்பட்டோர் பட்டியலுக்குள் நுழைக்கப்பட்டது சிறிய மாற்றம் என்றால் இதரப் பிற்பட்டோர் அல்லது மிகவும் பிற்பட்டோர் என்ற புதுப் பிரிவை உருவாக்கியதை பெரிய மாற்றம் என்று சொல்ல வேண்டும். இந்த மாற்றத்தின் பின்னணியில் இந்திய ஜனநாயகத்தில் நடந்த அதிகார மாற்றம் முக்கியக் காரணியாக இருந்தது. 1960 களுக்குப் பின் எழுச்சி பெற்ற மாநிலக் கட்சிகளும், 1990 களுக்குப் பின் அவை மைய ஆட்சியில் வகித்த பங்களிப்பும் எனக் காரணங்களை அடுக்கலாம்.
இந்தப் போக்கு ஜனநாயகத்திற்கு ஏற்படுத்தப் போகும் பின் விளைவுகள் நன்மைகளை மட்டுமே அளிக்கக் கூடியனவாக இருக்கப் போவதில்லை. பேரளவு தீமைகளை உருவாக்கப் போகிறது. பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பின் தங்கிய கூட்டத்தினரை மேம்படுத்துவதற்கான இடைக்கால ஏற்பாடே இட ஒதுக்கீடு. அது அளிக்கப்பட்ட  தொடக்க நிலையிலேயே கால வரையறைக்குட்பட்டதாக இருந்தது என்பதை நாம் மறந்து விடக்கூடாது. ஆனால் ஜனநாயகக் குடியரசாகப் பட்டம் சூட்டிக் கொண்டு 60 ஆண்டுகள் முடிந்த பின்னும் இட ஒதுக்கீடு சர்வரோக நிவாரணியாகப் பார்க்கப்படும் சூழலையே நமது தேசம் கண்டிருக்கிறது. அதன் அளவைக் குறைக்கும் வாய்ப்புகளைத் தேடாமல், விரிவுபடுத்தும் காரணங்களையே தேடிக் கொண்டிருக்கிறோம். அப்படித் தேடிக் கண்டு பிடித்துள்ள சாதிவாரிக் கணக்கெடுப்பு ஜனநாயகத்திற்கு ஏற்படுத்தப்போகும் பலனை பேராபத்து நிறைந்தது எனச் சொல்ல வேண்டுமே ஒழிய  உய்யும் வழி எனச் சொல்ல முடியாது.
ஒவ்வொரு சாதியும் தங்களைப் பெரிய எண்ணிக்கை கொண்ட சாதி என்பதாகக் காட்டிக் கொள்ளவே உட்சாதிப் பிரிவுகளைத் தவிர்த்துப் பெருங்கூட்டம் எனக் காட்ட முனைகின்றன. இதன் மூலம் அவை அடையப்போவது உரிமைகள் சார்ந்த பங்காக இருக்காது. அதற்கு மாறாக சாதிச் சங்கங்களை அரசியல் இயக்கமாக மாற்றிக் காட்டி அரசியல் லாபம் பெற முடியும். அதை நோக்கியே சாதி அமைப்புகளை நடத்திக் கொண்டிருப்பவர்கள் அறிக்கைகளை விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  
சட்டத்தின் பாதுகாப்பு வழி தன்னை உணரச் செய்யும் தன்மை உடையது ஐரோப்பிய ஜனநாயகம். உரிமைகளையும் கடமை களையும் ஜனநாயக அரசு இருக்கிறது என்பதின் வழியேயும், அதில் தனது பங்கு தனது மனிதனாகவே முக்கியத்துவம் வாய்ந்தது என உணர்த்துவதன் மூலமுமே அவன் பெற்று விட முடியும்.  ஆனால் இந்திய ஜனநாயகமோ தனிமனிதனை எப்போதும் தனிமனிதனாகவே ஏற்றுக் கொள்வதில்லை. அவனை ஒரு கூட்டத்தின் உறுப்பினன் என்பதின் வழியாகவே உணர வைக்கிறது. அந்தக் கூட்டம் அவன் செய்யும் வேலை காரணமாகப் பங்கேற்கும் நிறுவன அடையாளத்தால் கிடைக்காது என்றாகி விட்டது. அந்நிறுவனத்தில் அவனைக்காப்பாற்றும் என்ற நம்பிக்கையோடு ஏற்படுத்தப் பட்ட தொழிற்சங்கங்களும் அந்த நம்பிக்கையை ஏற்படுத்தத் தவறிக் கொண்டிருக்கின்றன .  தான் குடியிருக்கும் ஊர் சார்ந்த கூட்டம் என்பதும் காணாமல் போய்விட்டது. எப்போதும் பாதுகாப்புத் தரும் நிரந்தர அமைப்பாக சாதியமைப்பே இருக்கிறது. பிறப்பின் அடிப்படையில் ஒன்றிணையும் வாய்ப்பை வலிமையுடன் திரும்பக் கொண்டு வரப் போகும் சாதிவாரிக் கணக்கெடுப்பு வரமல்ல; பெருஞ்சாபம். 

 நன்றி: அம்ருதா, ஜூன்,2012

2 comments :

தமிழ் அமுதன் said...

1.பெரும்பான்மை ஜாதியினருக்கு அரசியல் கட்சிகள் கொடுக்கும் அங்கீகாரங்கள்..!
2. தேர்தல் காலங்களில் 10,15 ஓட்டுகள் உள்ள குடும்பத்துக்கு கூட கட்சியினர் கொடுக்கும் முக்கியத்துவம்..!


வன்பாக்கம் விஜயராகவன் said...

"சாதிவாரிக் கணக்கெடுப்பு வரமல்ல; பெருஞ்சாபம்."

இந்திய பாலிஸி கன்ஸிஸ்டெண்டாக இல்லை. ஜாதிகளை ஒழிக்க வேண்டும் என்றால், ஜாதிக்கணிப்பே நடத்தக்கூடாது, மனிதனின்(மனுஷியும் சேர்ந்து) சமத்துவத்தை குறைக்கும் எந்த சமுதாய செயல்களையும் (ஜாதி, இனம், பால், தாய்மொழி, பிறப்பு) கடுமையாக எதிர் பதில் கொடுத்து தடுக்க வேண்டும்.

அதற்கு ஒரு உதாரணமாக பிரான்சை சொல்லலாம். பிரெஞ்சு அரசியல் பொதுப் புரிந்தல்படி, பிரெஞ்சு அரசு அங்கங்கள் இனம் என்பதை கண்டு கொள்ளாது, ஏனெனில் ஒருவர் இனம் என்பதை அபிஷியலாக கண்டு கொண்டால், அது எல்லாவித இன வாதங்களுக்க்கும், இன பேதங்களுக்கும் , இன அடிப்படை டிஸ்க்ரிமினேஷங்களுக்கும் இடம் கொடுக்கும். அதனால் பிரெஞ்சு அரசாங்கம், அரசியலை பொறுத்த வரை, எல்லா பிரெஞ்சு குடிமகன்களும் ஒரே தளம்தான், அதனால் அங்கு நடக்கும் ஜனத்தொகை கணக்கெடுப்பில் ’உங்கள் இனம்’ என்ற கேள்வியே இல்லை. அரசாங்கத்தை பொறுத்தவரை எந்த பிரெஞ்சு குடிமகனுக்கும் இனம் இல்லை.வேலைகளிலும், கல்வியிலும், மற்ற பொது இடங்களிலும் உங்கள் இனம் என்ன என்று கேட்பது நீதிக்கு புறம்பானது

அது கன்ஸிஸ்டெண்ட் கொள்கை.

அதற்கு நேர் மாறாக , கடந்த 90 வருடங்களாக தமிழகத்தில் அரசியலும், பொது மக்கள் பணத்தில் நடக்கும் நிருவனங்களும் ஜாதி என்ற அடிப்படையில் கலவி, வேலை, வேலை முனேற்றம் இவற்றை தீர்மானம் செய்கிறன. இது ஜாதி பிரிவினைகளை அதிகரிப்பது உத்தரவாதம் ; அதை நாம் பார்க்கிறோம் ஒவ்வொரு சந்தர்பத்திலும்.

மண்டல் கமிஷன் அறிவிப்பு ஜாதிவாரியான ஒதுக்கல்களை சிபாரிசு செய்தது, அதற்க்கு ஜாதி அடிப்படை 1920ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு; ஏனெனெஇல் அதன்பிறகு ஜாதிவாரி கணக்கெடுப்பு செய்யப்படவில்லை.அதனால் இன்றும் 100 வருடம் முன் இருந்த ஜாதி நிலவரம் படிதான் அரசு கொள்கைகள் எடுக்கப்படுகிரன.இட ஒதுகீடுகள் ஜாதி அடைப்படையில்தான் இருக்கப்போவது என்றால், இன்றைக்கு நிலவும் ஜாதி எண்ணிக்கைகளையும், ஜாதி உறவுகளையும் அப்டேட் செய்வது பகுத்தறிவான செயல்தான்.

ஜாதி அடிப்படை ஒதுகீடுகள் ஜாதியை அல்லது ஜாதி வேறுபாடுகளை அழிக்கப்போகிறன என்பது மடமை; அந்த செயலீட்டில் 100 வருட தரவுகளை பயன்படுத்துவது, இன்னும் மடமை. இந்த கணக்கீடு இரண்டாவது மடமையையாவது களைக்கும்.


விஜயராகவன்