August 04, 2011

குதிரை முட்டை:பார்வையாளர்களின் தரவேற்றுமையை அழிக்கும் நாடகம்மேற்கத்திய நிகழ்த்துக்கலைகளின் தயாரிப்பு மற்றும் நிகழ்த்து முறைகளுக்கும், இந்திய நிகழ்த்துக் கலைகளின் தயாரிப்பு மற்றும் நிகழ்த்து முறைகளுக்கும் இடையே வேறுபாடுகள் இருப்பதைப் பலர் எழுதியுள்ளனர்; பேசியுள்ளனர்; விளக்கியும் காட்டியுள்ளனர். அத்தகைய வேறுபாடுகள் பார்க்கும் முறையிலும் பார்வையாளர்களாக இருந்து ரசிக்கும் முறையிலும் கூட இருக்கின்றன என்றே தோன்றுகின்றது. நிகழ்த்துக்கலைகளின் இந்தியப் பார்வையாளர்கள் புதியன பார்த்து திகைப்பவர்களோ, அதன் வழிக் கிடைக்கும் அனுபவம் அல்லது சிந்தனை சார்ந்து குழப்பிக் கொள்பவர்களோ அல்ல.
நன்கு அறிமுகமானவற்றை மறுபடியும் மறுபடியும் பார்த்துப் பாராட்டுவதும், ஒப்பிட்டுப் பேசுவதும் தான் இந்தியப் பார்வையாளர்களின் பொது மன அமைப்பு. இந்தக் கூறுகள் செவ்வியல் கலைகளான நடனம், நாடகம், இசைக்கச்சேரி முதலான நிகழ்த்துக்கலைகளுக்கு மட்டுமல்ல, நாட்டார்கலைகளான ஆட்டம், பாட்டம், கூத்து ஆகியனவற்றிற்கும் கூடப் பொருந்துவதாகவே இருக்கின்றன. ஒவ்வொரு கோடை காலத் திருவிழாக்களிலும் கூத்தைப் பார்த்து ரசிக்கும் மனத்தின் மாற்று வடிவம் தான் ஒவ்வொரு மார்கழி மாதக் கச்சேரியிலும் செவ்வியல் இசைக்கோலங்களைத் திரும்பத் திரும்பக் கேட்டு ரசித்துக் கொண்டிருக்கிறது.
தனக்குத் தெரிந்த புராண, இதிகாச, வரலாற்றுக் கதைகளைப் பார்த்து ரசித்த பார்வையாளர்களிடம் முற்றிலும் புதிதான- கதையம்சம் குறைவான- பாத்திரங்களின் அல்லது கருத்தியலின் முரண்பாட்டை மேடை நிகழ்வாக ஆக்கிய நவீன நாடகங்கள் நிராகரிக்கப்பட்ட பின்னணியில் இந்தியப் பார்வையாளர்களின் தொல்மன அமைப்பு தீவிரமாகச் செயல்பட்டது என்பதை இப்போது உணர முடிகிறது. 1980 -களிலும், 90-களின் தொடக்க ஆண்டுகளிலும் மேடை யேற்றப்பட்ட நவீன நாடகங்களின் இயக்குநர்கள், அரங்கிற்குள் நுழையும் பார்வையாளர்களுக்கு எதையும் முன் கூட்டியே சொல்லி விடக் கூடாது என்பதில் மிக உறுதியாக இருந்தார்கள் என்பதை நான் அறிவேன். மேடையேற்றப்படும் நாடகங்களைப் பற்றிய சிற்றேடுகளில் கூட வெளிப்படையாக எதையும் சொல்லி விடாமல், புரிந்து கொள்ளக்கூடாது என்ற நோக்கம் கொண்ட பூடக வாக்கியங்களில் தான் இயக்குநர் குறிப்புகள் இருந்தன என்பதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. ஆனால் 2000-க்குப் பின் நாடகங்களை இயக்கித் திரளான பார்வையாளர்களிடம் எடுத்துச் செல்லும் சண்முகராஜாவிடம் அந்தச் சிக்கல் குறைவாக இருக்கிறது என்பதைக் குறிப்பிட்டுச் சொல்லத் தோன்றுகிறது. நவீன நாடகங்களின் பார்வையாளர்கள் சந்தித்த மனச்சிக்கலைப் புரிந்து கொண்ட இயக்குநராகத் தனது நாடகங்களைத் தயாரிக்கும் பாணியை அவரது மேடையேற்றங்களில் பார்க்க முடிகிறது.
தேசிய நாடகப்பள்ளியில் மூன்றாண்டுகள் நாடகப்படிப்பை முடித்துவிட்டு தமிழ்ச் சினிமாவில் வில்லன் நடிகராக அறியப்பட்ட நிலையிலும் தொடர்ந்து நாடகங்களை இயக்குவதிலும், தேசிய அளவில் செயல்படும் அமைப்புகளிலிருந்து நிதியுதவியைப் பெற்று நாடகப்பட்டறைகளை ஒருங்கிணைப்பதிலும், நாடகவிழாக்களை ஏற்பாடு செய்வதிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருபவர் சண்முகராஜா. 2002 முதல் அவரது ஒருங்கிணைப்பின் கீழ் செயல்படும் மதுரை நிகழ் நாடக மையம் தயாரித்த பல நாடகங்களையும் நான் ஒன்றுக்கு மேற்பட்ட தடவை பார்த்திருக்கிறேன். அவர் இயக்கிய மனைவியர் பள்ளி, பொறுக்கி, திருப்பிக் கொடு, சிப்பி ஜுங் முதலான நாடகங்கள் எல்லாம் மூலத் தமிழ் நாடகங்கள் அல்ல. ஐரோப்பிய மொழிகளில் எழுதப்பட்ட நாடகங்களின் தழுவல் நாடகங்கள் தான். ஆனால் அவை தயாரிப்புப் பிரதிகளாக ஆக்கப்பட்ட போது பார்வையாளர்களை நிகழ்விலிருந்து விலக்கி வைக்கும் கூறுகள் நுழைந்துவிடாமல் கவனமாக இந்தியமயமாக்கப்பட்டிருந்தன; இந்த அம்சமே அவரை மற்ற நாடகக்காரர்களிடமிருந்து தனித்து அடையாளப்படுத்துவதாக நினைக்கிறேன். கடைசியாக அவர் தயாரித்துள்ள குதிரை முட்டை நாடகத்தில் பார்வையாளர்களை உள்ளிழுக்கும் தன்மை நூறு சதவீதம் இருந்ததை உணர முடிந்தது.
வீரமாமுனிவர் எழுதிய பரமார்த்த குருவும் அவரது சீடர்களும் என்ற தமிழின் முதல் உரைநடைத் தொன்மம் தான் குதிரை முட்டை நாடகக் கதை. குரு, மடம், சீடர்களைத் தேடுதல், அடிபணியும் சீடர்கள், தலைமைக்குக் கட்டுப்பட்டுப் பணி செய்தல் என்ற சொற்களின் பின்னால் நிகழ்கால அதிகார அரசியல் மற்றும் பல்வேறு நிறுவனங்களின் கட்டி தட்டிய இறுக்கம் ஆகியவற்றைப் பேசும் சொல்லாடல்களை உருவாக்க முடியும். அதன் வழியாகப் சமகாலப் பொருத்தங்களும் மறுவிளக்கமும் கொண்ட நாடகப் பிரதியாக ஆக்கிக் காட்ட வாய்ப்புள்ள அந்தப் பிரதியைச் சண்முகராஜாவும் அவரோடு சேர்ந்து பிரதியுருவாக்கத்தில் பங்கேற்ற அனீஸும் அதிகம் சிதைக்கவில்லை. முதலில் தான் நடத்திய பட்டறைத் தயாரிப்புக்கான பிரதியாக மாற்றிய  வீரமாமுனிவரின் கதையை அதே வரிசை மாறாமல் நிகழ்ச்சிகளாக மாற்றி முழுவடிவம் தந்துள்ளனர்.
ஒரு நாடக இயக்குநர் பிரதியைத் தேர்வு செய்த பின் முழுமையும் நம்புவது தயாரிப்புப் பிரதியைத் தான். தனது நடிகர்களின் நடிப்புப் பயிற்சி, உடன் பணியாற்றும் பின்னரங்கக் கலைஞர்களின் செயல்பாடுகளுக்கு வாய்ப்பளிக்கும் விதம் ஆகியவற்றை முடிவு செய்து கொண்டு ஒத்திகைகள் நடத்தி மேடையேற்றும்போதே அந்நாடகம் வெற்றி பெறும். குதிரை முட்டை நாடகம், நவீன நடிப்புப் பயிற்சி, மேடைப்பொருட்களைப் பயன்படுத்துதல், இந்தியப் பார்வையாளர்களுக்கேற்ப எடுத்துக் கூறுதல் என்ற கூறுகளில் அதிகக் கவனம் செலுத்தியிருக்கிறது. மரபான இந்திய அரங்கியல் கூற்றுமுறையில் நாடக வடிவத்தை உருவாக்கியுள்ள சண்முகராஜா, பின்னணி இசை மற்றும் பாடலின் வழி நாடகத்தின் நேர்கோட்டுத் தன்மையை உறுதி செய்துள்ளார். அவர் அளித்துள்ள நடிப்புப் பயிற்சியின் விளைவாக நடிகர்களின் அசாத்தியமான உடல் மொழியும், லாவகமான குரல் மாற்றங்களும் ஒவ்வொரு காட்சியிலும் பார்வையாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய நிகழ்த்துக் கலை அனுபவத்தைத் தந்து கொண்டே இருக்கின்றன. அதிலும் குருவாக நடித்த நெய்தல் கிருஷ்ணனின் உடல்வாகும், அதன் அசைவுகளும், நிலைநிற்றலும் சேர்ந்து கற்பனையிலிருந்த பரமார்த்த குருவை நிகழ்காலத்துக்கு நகர்த்திக் கொண்டு வந்து சேர்த்து விட்டது. தனியொரு நடிகராக அந்த நாடகத்தைத் தூக்கி நிறுத்தும் ஆற்றல் அவருக்குள் இருந்ததைக் கண்டு முன்னால் நாடகக்காரனான எனக்குப்  பொறாமையாகக் கூட இருந்தது.
நாடகத்தின் சில நிகழ்வுகளைப் பாவைக்கூத்தின் வழியாகக் காட்சிப் படுத்தும் போது எந்தவித உறுத்தலும் இல்லாமல் கச்சிதமாகப் பொருந்திப் போனது என்பதையும் சுட்டிக் காட்ட வேண்டும். அதே நேரத்தில் காட்சி மாற்றங்களின் போதும், வெற்று மேடையாக அரங்கம் இருக்கும் போதும் வர வேண்டிய பின்னணி இசை உருவாக்கப்படவில்லையோ என்று தோன்றுகிறது. அந்த இடைவெளிகள் பார்வையாளர்களைத் திசை திருப்பிவிடும் அளவிற்கு இருப்பதைச் சரி செய்ய வேண்டும். ஒளியமைப்பின் வழியாகவும் கூட காட்சி நிகழ்வின் காட்சி இன்பத்தை இன்னும் கூட்ட முடியும் என்றே தோன்றியது. 
குதிரை முட்டை நாடகம் இதற்கு முன்பும் பல தடவை மேடையேற்றம் கண்டு பல தரப்பட்ட பார்வையாளர்களைச் சந்தித்திருக்கிறது. புதுடெல்லியில் நடந்த தேசிய நாடகப்பள்ளியின் நாடகவிழாவிற்காக முழுமையான நாடகமாகத் தயாரிக்கப்பட்ட அந்நாடகம் நாகர்கோவிலில் மேடையேற்றிய போது 42 மேடையேற்றம் என்றார் சண்முகராஜன். எல்லா இடங்களிலும் 500-க்கும் குறையாத பார்வையாளர்கள் முன்னால் தான் நிகழ்த்தப்பட்டதாகவும் அவர் சொன்னார். மேடை ஏறிய எல்லா இடங்களிலும் நாடக நிகழ்வு பார்வையாளர்களுக்கு என்ன வகையான களிப்பு மனநிலையைத் தந்ததோ அதே உணர்வை நாகர்கோவிலில் சுரா-80 இல் கலந்து கொண்ட ’தரமான பார்வையாளர்’களிடமும் உருவாக்கியது என்றும் சொன்னார். சுரா என்ற இலக்கிய ஆளுமையின் பல தளங்களையும் அறிந்த சிந்தனைபூர்வமான பார்வையாளர்களின் தனித்துவ அடையாளத்தை அழித்துப் பொதுநிலைப் பட்ட பார்வையாளர்களின் கொண்டாட்ட மனநிலைக்குக் கொண்டு வந்த குதிரை முட்டையைத் தமிழ் நாடகத் தயாரிப்புக்களில் முக்கியமான ஒன்று எனச் சொல்வதில் தயக்கம் எதுவுமில்லை.
பின்குறிப்பு:
·                      சுந்தரராமசாமியின் 80 வது பிறந்த நாளையொட்டிக் காலச்சுவடு அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்த மூன்று நாள் நிகழ்வின் ஒரு பகுதியாகச் சண்முக ராஜாவின் குதிரை முட்டை நாடகம் அரங்கேற்றப்பட்டது. அந்த மூன்று நாள் நிகழ்வில் இது ஒன்று தான் சுராவின் படைப்புலகத்திற்கும், அவரது கவனங்களுக்கும் அப்பாற்பட்ட ஒன்று. சுராவின் கவிதைகள், கதைகள் நேரடியாக இசைப் பின்னணியோடு வாசிக்கப்பட்டன; கூத்துப் பட்டறை அவரது அக்கரைச் சீமையிலே மற்றும் பிரசாதம் கதைகளை நாடகங்கள் என்று சொல்லி நிகழ்த்திக் காட்டியது. ஆனால் கதை வாசிப்பு என்பதைத் தாண்டி எந்த அனுபவத்தையும் தரவில்லை. அதே போல் பரிக்‌ஷா குழுவினர் சுரா எழுதிய யந்திரத்துடைப்பான் நாடகத்தையும் நான் நாடகமாக ஆக்கிய பல்லக்குத் தூக்கிகள் பிரதியையும் அதற்கான அரங்கக் கூறுகள் எதுவுமில்லாமல் மேடையேற்றினர். மேடையேற்றும் தரும் அனுபவம் கிடைக்காத நிலையிலும் சுந்தரராமசாமியின் படைப்புகள் என்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்தப் பார்வையாளர்கள் அமைதி காத்தார்கள். அவற்றையெல்லாம் விடச் சுந்தரராமசாமியின் நவீனத்துவ கவிதைகளைக் கர்னாடக இசை ஆலாபனைகளுக்குள் அடைத்துக் காட்டிய போது எனது ஆச்சரியம் கவிதைகள் சார்ந்து எழவில்லை. கர்னாடக இசையின் தாத்பரியம் சார்ந்து எழுந்தது.

·                      பார்வையாளர்களின் தரம் அழிக்கப்பட வேண்டுமா? உருவாக்கப்பட வேண்டுமா? என்றும், தனித்துவத்தை உருவாக்கிப் பேணும் நவீனத்துவ நிலைக்கு எதிராக இருக்கும் குதிரை முட்டை நாடகத்தை நல்லதொரு நாடகம் எனப் பாராட்டுவது சரியா? எனவும் கேள்வி எழுப்பி விவாதிக்க யாராவது முன் வந்தால் மகிழ்ச்சியோடு விவாதிக்கலாம். 
நன்றி : காலச்சுவடு/ஆகஸ்டு,2011

No comments :