March 02, 2008

சுஜாதா - நினைவுகளில் நிற்பார்

மாணவர்களுக்கு உரைநடைகளின் மாதிரிகளைக் காட்டுவதற்காகப் பலரின் உரைநடைகளைத் தொகுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு சில பெயர்களைக் குறித்து வைத்துத் தேடிக் கொண்டிருந்தேன். அந்தப் பெயர்ப்பட்டியலில் சுஜாதாவின் பெயரும் இருந்ததால் அவரது கட்டுரைக்காகப் பழைய கணையாழியின் கடைசிப் பக்கங்களைத் தேடிக் கொண்டிருந்த போது அந்தக் குறுஞ்செய்தி வந்தது. அப்போது இரவு பதினோரு மணிக்கு மேல் இருக்கும். எனது கைபேசியின் திரையில் தெரிந்த அந்தச் செய்தி எழுத்தாளர் சுஜாதா இறந்து விட்டார் என்று காட்டியது. அதைப் பார்த்த பின்பு எனது தேடல் நின்று போய்விட்டது.
பேச்சு நடை சார்ந்த உரைநடைக்காகப் பெரியார் ஈ.வே. ராமசாமி தொடங்கி, வ.ராமசாமி என அழைக்கப்பட்ட வ.ரா. பாரதியார், புதுமைப்பித்தன், ரா.பி. சேதுப் பிள்ளை, மு.வரதராசன், மறைமலை அடிகள், சி.என். அண்ணாதுரை, கண்ணதாசன், ஜெயகாந்தன், பிரபஞ்சன், என நீளும் வரிசையில் சுஜாதாவைக் கட்டாயம் வைக்க வேண்டும் என்பதை யாரும் ஒத்துக் கொள்ளவே செய்வார்கள். அவரது முந்நூறுக்கு மேற்பட்ட சிறுகதைகளையும், ஐம்பது அறுபது தொடர்கதைகளையும் தமிழ் வாசகப் பரப்பு சலிக்காமல் வாசித்தது என்றால் முக்கியமான காரணம் அவரது சுவாரசியமான மொழி நடை தான். காட்சிச் சித்திரிப்பானாலும் சரி, பாத்திர வருணனையானாலும் சரி சுருக்கமாகவும், வேறு ஒருவர் சொல்லி விட முடியாத வாக்கிய அமைப்புடனும் சொல்லி விடக்கூடியவர் சுஜாதா.
ல்லூரிப் படிப்பு தொடங்கிய காலகட்டத் திலிருந்தே சுஜாதாவின் மொழி நடைக்காக அவரது கதைகளை வாசித்து வந்தவன் நான். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது தினசரியும் கண் முன்னே நிகழும் அவலத்தை அவரது நகரம் கதையை வாசித்தவுடன் புரிந்து கொண்டவன் நான். அதற்குப் பின் அந்த ஆஸ்பத்திரியின் பேருந்து நிறுத்தத்தில் நின்று மாணவிகளைச் சைட் அடித்த வழக்கத்தை நிறுத்தினேன் என்று கூடச் சொல்லலாம். மதுரைப் பெரிய ஆஸ்பத்திரியைக் களனாக் கொண்ட நகரம் கதை, அங்கு மனித உயிர்களும் மனித உறவுகளும், விசிறியடிக்கப்படும் வேகத்தை வேகமான மொழி நடை மூலம் நிகழ்த்திக் காட்டிய அற்புதமான கதை.
அக்கதையை வாசித்த பின்பு தான் அருகில் இருந்த அரசு மருத்துவ மனையின் உள்ளே புகுந்து ஒவ்வொரு வார்டு வார்டாகப் பார்த்துக் கொண்டே வந்தேன். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த இளைஞனிடம் இத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் ஆற்றல் அந்தக் கதைக்கு இருக்கிறதா என்று கேட்டால் இல்லை என்று தான் இன்றைய விமரிசன மனம் சொல்லும். ஆனால் அன்று அந்தக் கதை என்னுள் ஏற்படுத்திய பாதிப்பு உண்மை என்பதும் உண்மை தான்.
விகடன், குமுதம், சாவி, குங்குமம் எனப் பிரபலமான இதழ்களில் எழுதிய கதைகளிலிருந்து முற்றிலும் மாறு பட்ட எழுத்தைக் கணையாழியில் அவர் எழுதி வந்த போது வாசித்து ஆச்சரியம் அடைந்திருக்கிறேன். கணையாழியின் கடைசிப் பக்கங்களில் அவர் எழுதிய குறிப்புகள், பலதாரமானவை; பலவிதமானவை. கிண்டலும் கேலியும் நிறைந்த தொனியில் எழுதிக் கொண்டு போகும் அதே நேரத்தில் போகிற போக்கில் தீவிரமான ஒரு கேள்வியையும் எழுப்பி விட்டுப் போகும் தன்மையும் அதில் இருக்கும். அவரது நாவல்களை முழுமையாக வாசித்ததில்லை. கனவுத் தொழிற்சாலை, கரையெல்லாம் செண்பகப்பூ, குருபிரசாத்தின் கடைசி தினம் போன்ற சில தொடர்களை முழுமையாக வாசித்திருக்கிறேன். கண்ணில் பட்ட சிறுகதைகளை அவ்வப்போது வாசிதத்துண்டு.
அவற்றையெல்லாம் விட அவரது எழுத்துக்களில் அதிகம் பிடித்தவை நாடகங்கள் தான். அவரது சின்ன நாடகங்களில் கூட ஆழமான ஒரு பிரச்சினை விவாதிக்கப் பட்டிருக்கும். நாடகக் கலைஞர் பூர்ணம் விசுவநாதன் மேடை ஏற்றிய அந்தப் பிரதிகளை நான் நூலாக வாசித்திருக்கிறேன். மேடை ஏறிய அந்நாடகங்களில் சிலவற்றைப் பத்துப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னால், தூரதர்சன் ஒளிபரப்பியதாக நினைவில் இருக்கிறது.அவரது ஊஞ்சல் என்ற நாடகம் தமிழில் எழுதப் பட்ட நாடகங்களுள் முக்கியமான நாடகம் என்று உறுதியாகச் சொல்லலாம். நடுத்தர வர்க்கப் பிராமணக்குடும்பப் பின்னணியில் எழுதப் பட்ட ஊஞ்சல் நாடகம் துன்பியல் நாடக வடிவத்திற்கு எடுத்துக் காட்டாகச் சொல்லத் தக்க நாடகம். அதே போல் நரேந்திரனின் கொலை வழக்கு போன்றனவும் கூட வாசிப்பு அனுபவத்திலேயே மேடை அனுபவத்தை உண்டாக்கக் கூடியனவாக இருந்தன.
அவரது நாடக எழுத்துத்தான் அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பை எனக்கு ஏற்படுத்தித் தந்தது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் பாரிசிலிருந்து பீட்டர் புரூக் என்ற நாடக இயக்குநர் இந்தியாவிற்கு வந்தார். இந்தியாவின் மிகப் பெரும் கதைச் சுரங்கமான மகாபாரதத்தைப் பத்து மணி நேர நாடக நிகழ்வாகத் தயாரித்து பிரான்சில் மேடை ஏற்றிய அவர் இந்திய நகரங்களில் அதன் மேடை நிகழ்வின் பகுதிகளையும், ஒளிப்பட வடிவத்தையும் காட்டுவதற்காக வந்திருந்தார். இந்திய அரசின் நாடகத்துறை அமைப்பான சங்கீத நாடக அகாடமி அவரது குழுவை அழைத்து வந்து டெல்லி, பம்பாய், கல்கத்தா, சண்டிகர், பெங்களூர் முதலான நகரங்களில் மேடை ஏற்றத்திற்கு ஏற்பாடு செய்தது. அத்தோடு இந்தியாவின் நாடகக்காரர்களையும் அழைத்து அந்நாடகத்தைப் பார்க்கச் செய்ததோடு பீட்டர் புருக்குடன் உரையாடல் செய்யவும் ஏற்பாடு செய்தது.
தமிழ் நாட்டிலிருந்து யார் யாரை அழைக்கலாம் என்று முடிவு செய்யும் பொறுப்பு நான் பணியாற்றிக் கொண்டிருந்த பாண்டிச்சேரிப் பல்கலைக்கழக நாடகத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது அதன் தலைவராக இந்திரா பார்த்தசாரதி இருந்தார். இந்திரா பார்த்தசாரதியும் சுஜாதாவும் நெருங்கிய நண்பர்கள் என்ற போதும் அவரை அழைக்க வேண்டும் எனப் பார்த்தசாரதி நினைக்கவில்லை. ஒருவேளை சுஜாதாவின் நாடகங்கள் அவருக்கு உவப்பானதாக இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் எனக்கு உவப்பானதாக இருந்தது. கட்டாயம் சுஜாதாவை அழைக்க வேண்டும் என வாதாடினேன். சுஜாதா பெங்களூரில் தான் இருக்கிறார்; அழைக்காமலேயே வருவார் என்பது மற்றவர்களின் வாதமாக இருந்தது. என்னுடைய வாதமோ அவரது பெயர் தமிழ் நாட்டின் நாடகக்காரர்கள் வரிசையில் இருக்க வேண்டும் என்பதாக இருந்தது.
நாடகம் எழுத வேண்டும் என்று முயற்சி செய்திருந்த சுந்தரராமசாமியையும் அழைக்க வேண்டும் என வாதாடினேன். எனது வாதம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அவர்கள் இருவரும் வந்தார்கள். ஆனால் ஆச்சரியம் அவர்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ளவே இல்லை. சுந்தரராமசாமியுடன் பல நாடகக்காரர்கள் பேசினார்கள். ஒருவர் கூடச் சுஜாதாவுடன் பேசவில்லை. சிறுபத்திரிகை சார்ந்த ஒளிவட்டத்தைச் சுமந்து திரிந்த நவீன நாடகக்காரர்கள் அவரைக் கண்டு விலகிச் சென்றது அவருக்கு ஆச்சரியமாக இருந்திருக்காது. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நான் மட்டும் அவருடன் பேசிக்கொண்டிருந்தேன். தமிழ் நாட்டில் நடக்கும் நாடக முயற்சிகள் பற்றி நான் பேசுவதை இடையீடில்லாமல் கேட்டுக் கொண்டிருந்தார்.
அவர் சென்னைக்கு வந்த பின்பு சில தடவை சந்தித்ததுண்டு. விரிவாகப் பேசும் வாய்ப்புக் கிடைத்ததில்லை. சங்கர், மணிரத்னம் போன்ற திரைப்பட இயக்குநர்களுடன் சேர்ந்து அவர் பணியாற்றிய திரைப்படங்களைப் பற்றிக் கடுமையான விமரிசனங்களை நான் எழுதிய போது அவற்றிற்கான பதிலைப் பத்திரிகைகளிலும் இணையத்தளங்களிலும் எழுதினார். இந்தியன், ஆய்த எழுத்து, சிவாஜி போன்ற படங்களின் வெற்றியில் சுஜாதாவின் பங்கு காத்திரமானது. தொடர்ந்து வணிக சினிமாவிற்குத் தீனி போடும் அறிவு ஜீவியாக அவர் பயன்படுத்தப் பட்டார் என்பதே இப்போதும் என்னுடைய கருத்து.
இலக்கியத்தில் அவரது மொழிநடைக்காக நினைக்கப் படுவார் என்பது போலவே கணிணிப் பயன்பாட்டைத் தமிழர்களிடையே தொடர்ந்து வலியுறுத்தியதற்காகவும் நினைக்கப்படுவார். இவற்றையெல்லாம் தாண்டி இந்திய ஜனநாயகத்திற்கு அவரது பங்களிப்பான எந்திரவாக்குப் பெட்டிக்காக இந்தியத் தேர்தல் வரலாறு எப்போதும் அவரை நினைவில் கொள்ளும்.

No comments :