March 29, 2016

நளாயினிகள்: மாதிரிகளை முன்மொழிதலும் கட்டுடைத்தலும்


கலை இலக்கியங்கள், சமூகமாற்றத்தில் வினையாற்றுவதில்லை என்பதை மறுப்பவர்கள், தாங்கள் எழுதும் பிரதிகளில் முன்மாதிரிகளை உருவாக்குவதில்லை. ஆனால் சமூகத்தின் இருப்பில் அதற்கு முந்திய கலை, இலக்கியப்பிரதிகள் வினையாற்றின என்ற உண்மையைப் புரிந்துகொண்டவர்கள் அப்படி விலகிச் செல்வதில்லை.  இருப்பைத் தக்கவைக்கக்கூடிய பிரசாரத்தைக் கலை இலக்கியங்கள் செய்தன என்பதைச் சொல்வதோடு, புதுவகை மனிதர்களை உருவாக்க நினைக்கும்போது ஏற்கெனவே வைக்கப்பெற்ற முன்மாதிரிகளை மறுவிசாரணைக்கும் உட்படுத்துவார்கள். அதனைச் செய்வது விமரிசனத்தின் வேலை. என்றாலும் எழுத்தாளர்களும் தங்களின் பனுவலாக்கத்தின் மூலம் கட்டுடைப்புச் செய்து புதுவகைப்பிரதிகளை உருவாக்கவும் செய்துள்ளனர்.


இந்தியச் சமூகம் பெண்களுக்கான இயங்குவெளியாகக் குடும்பத்தை நிலைநிறுத்தியிருக்கிறது. குடும்பவெளிக்குள் அவள் ஆற்றவேண்டிய பணிகளைச் செய்தாலே போதும் என வலியுறுத்துவதற்காகப் புதுவகைப்பனுவல்களை உருவாக்குவதோடு, பழைய பனுவல்களிலிருந்து மாதிரிகளை முன்வைத்தும் வருகிறது. அப்படியான முன்வைப்புகளில் இடம்பெறும் பாத்திரங்களில் ஒன்று நளாயினி. தமயந்தி என்ற உண்மைப் பெயரைத் தொலைத்துக் கணவனின் பெயராலேயே அறியப்படும் புராணக் கதாபாத்திரம் அது. 
புராணக்கதாபாத்திரங்களை நினைவூட்டும் பாத்திர உருவாக்கத்தின்மூலம், இருப்பைத் தக்கவைக்கமுடியும். ஆனால் புராணக்கதாபாத்திரத்தை உள்நுழைந்து விமரிசித்துக் கட்டுடைத்துக் காட்டுவதன்மூலம் அக்கதாபாத்திரம் மூலம் உருவாக்கப்படும் கருத்தியலுக்குள் பொதிந்துகிடக்கும் எதிர்மறைக்கூற்றை- ஒடுக்குமுறையைத் தன்மையை வெளிப்படுத்தலாம். நளாயினி என்ற புராணக்கதாபாத்திரத்தை நினைவூட்டிய ஒரு கதையையும், விசாரணைக்குட்படுத்திய ஒரு கதையையும் இங்கே தெரிந்துகொள்ளலாம். அவை அச்சிடப்பெற்ற நூல்களிலிருந்து அவை எழுதப்பெற்ற ஆண்டு எது என அறியமுடியவில்லை. ஆனால் இரண்டும் ஒரே காலகட்டத்துக் கதைகளாகவே இருக்கக்கூடும்.
இரண்டு கதைகளுக்கும் இருக்கும் முக்கியமான ஒற்றுமை தலைப்பு. மு. கருணாநிதி எழுதிய கதையின் தலைப்பு நளாயினி. விந்தனின் கதைத்தலைப்பு மிஸ் நளாயினி 1950. இரண்டு கதைகளும் தலைப்பில் நளாயினி என்ற புராணக்கதாபாத்திரத்தை நினைவூட்டியுள்ளன, என்றாலும் அவளை முன்வைத்த விதத்தில் வேறுபாட்டைக் கொண்டிருக்கின்றன. முதலில் விந்தனின் மிஸ் நளாயினியின் முடிவுப்பகுதியை வாசிக்கலாம்:
“நம்பிக்கை துரோகம் செய்த அந்த நயவஞ்சகனுக்கா இப்படிப் பரிந்து பேசுகிறாய்? உங்களுடைய இஷ்டம் அதுவானால் அதை நான் அக்ஷேபிக்கவில்லை! என்றார் அவர்.
அவ்வளவுதான்; ஒருவாரத்துக்கு இரண்டு வாரங்கள் முன்னதாகவே எல்லோரும் கோடைக்கானலுக்குப் போய்ச் சேர்ந்தவர்கள்
“நீங்கள் எங்கே வராமல் இருந்துவிடப் போகிறீர்களோ நான் பயந்துகொண்டிருந்தேன். நல்லவேளை வந்துவிட்டீர்கள்!” என்று கூறி அவர்களை வரவேற்று உபசரித்தார் ரங்கநாதம்.
கல்யாணத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளெல்லாம் பிரமாதமாக நடந்துகொண்டிருந்தன. ராஜகோபாலன் ‘ராஜா’ மாதிரியே இருந்தான். அங்குமிங்குமாக அவன் நடமாடுவதைப் பார்க்கும் போதெல்லாம் உஷாவை ஏதோ ஒன்று என்னவோ செய்வது போல இருந்தது!
மறுநாள் காலை கல்யாணம். அதற்கு முதல் நாள் மாலை உஷாவிடம் வந்து, “நளாயினியின் புனர்ஜன்மம் நீதான்” என்றான் ராஜகோபாலன்.
அவள் பதில் சொல்லவில்லை
“வேறொரு பெண்ணை நான் கல்யாணம் செய்துகொள்ளப் போகிறேன் என்று தெரிந்தும், நீ என்னுடைய கல்யாணத்திற்கு வந்திருக்கிறாயே, அதுவே போதும், உன்னை நான் கல்யாணம் செய்துகொள்ள” என்றான் அவன்.
அவள் தலை கவிழ்ந்தது; அதைத் தொடர்ந்து ஒரு சொட்டுக் கண்ணீர் கீழே விழுந்து தெறித்தது.
“அழாதே, அசடே! நாளைக்கு நான் மாலையிடப் போகும் மாதரசி நீதான்” என்றான் அவன்.
அவ்வளவுதான்; அவள் எழுந்து அவசர அவசரமாகக் கண்களைத் துடைத்துவிட்டுக்கொண்டு அவனை அண்ணாந்து பார்த்தாள். அப்போது படபடவென்று அடித்துக்கொண்ட அவளது இமைகள் “ இது நிஜந்தானா, இது நிஜந்தானா?” என்று கணத்துக்கு கணம் அவனைக் கேட்பது போல் இருந்தது!
“ ஆமாம், உஷா அவ்வளவும் சோதனை! ராதை கல்யாணப் பத்திரிகையோடு சரி, நீதான் இத்தனை நாளும் நான் தேடிக்கொண்டு இருந்த மிஸ் நளாயினி 1950!” என்றான் அவன்.
அவள் முகம் மலர்ந்தது.
( விந்தன் கதைகள்,தொகுதி 2/ கலைஞன் பதிப்பகம்/2000)
இந்த முடிவுக்கு முன்னால் கதை நிகழ்வுகளாக விந்தன் அடுக்கியிருப்பவை நம்பத்தகுந்தவையாக இல்லையென்றாலும், புனைவு என்ற அளவில் ஏற்கவே வேண்டும். இருவரும் -ராஜகோபாலனும் உஷாவும் நண்பர்களின் பிள்ளைகள். ஒருவரையொருவர் நன்கறிந்தவர்கள்; நண்பர்கள். ஆனால் காதலர்களா? என்று உறுதிசெய்யாத நிலை. அந்த நேரத்தில் ராஜகோபாலனுக்குத் திருமணம் என்றும், அந்தத் திருமணத்திற்குக் குடும்பத்தோடு உஷாவும், அவளது குடும்பத்தினரும் வரவேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்படுகிறது. உஷாவின் குடும்பத்தினரும் உஷாவும் முதலில் அதிருப்தியை வெளிப்படுத்தினாலும், பின்னர் தெளிவுடன் அந்தத் திருமணத்திற்குச் செல்லத்தயாராகிறார்கள். ‘ஒரு ஆணின் விருப்பப்படி தனது மனைவியைத் தேர்ந்தெடுக்கிறான்; அதில் வருத்தப்பட என்ன இருக்கிறது’ என்ற புரிதல் வெளிப்படுகிறது. இந்தப் புரிதல் ஒருவிதத்தில் நவீனத்துவத்தன்மை கொண்ட - தனிமனித சுதந்திரத்தை ஒத்துக்கொண்ட ஒரு பெண்ணின் மனநிலை. இதற்காக ஒரு ஆடவன் அந்தப் பெண்ணை விரும்பலாம். அப்படியான தன்மையோடு கதையை நகர்த்தும் விந்தனின் நோக்கம் கதைமுடிவில் திசைமாறிப்போகிறது.
தனக்கு மனைவியாக வரக்கூடியவளைச் சோதனைசெய்து தேர்ந்தெடுக்கும் உரிமை ஆணுக்கு இருக்கிறது; ஆணுக்காகத் தனது விருப்பங்களை விட்டுக் கொடுக்கும் பெண்ணையே ஆண் தேர்ந்தெடுப்பான்; அதைக் கேள்வி கேட்காமல் அந்தப் பெண்ணும் ஏற்றுக்கொள்வாள் எனக் காட்டுவது நவீனத்தன்மையல்ல. மரபான நளாயினியை - தனது விருப்பங்களைத் தள்ளிவைத்துவிட்டுக் கணவனைக் கூடையில் தூக்கிக்கொண்டு தாசிவீட்டில் போய் இறக்கிய நளாயினிகளை- தேர்ந்தெடுக்கும் உரிமையை முன்னிறுத்தும் தன்மை.
விந்தனின் மிஸ் நளாயினி 1950 முன்வைக்கும் முன்மாதிரியல்ல மு.கருணாநிதி முன்னிறுத்தும் நளாயினி. தனது தோழிகளோடு நடத்தும் இந்த உரையாடலே அவள் எப்படிப்பட்டவள் என்பதைக் காட்டக்கூடியது.
” இதயா! உண்மையாகச் சொல்! நான் பத்தினியா! எப்படி?
“ஆமாம்! குஷ்டரோகம் பிடித்த கணவனைத் தாசி வீட்டுக்கு அனுப்பியிருக்கிறாயே”
“கிண்டல் செய்யாதே.. இதயா! குஷ்டரோகம் பிடித்தவனோடு கூடிக்கிடக்க எனக்கு விருப்பமில்லை. அவனோ என்னை ஆசையோடு அழைக்கிறான். அணைக்கவோ என் கை நடுங்குகிறது. ஆகவேதான் அவனைத் தாசி வீட்டுக்கு அனுப்பினேன். என் அழகுக்கு ஆபத்து வராமல் அவன் ஆவல் தீர்ந்தால் சரியென்று எண்ணினேன். இந்தத் தந்திரம் உனக்குத் தெரியாதா.. இதயா!”
“நானறியாதது ஒன்றுண்டா நளாயினி! ஆனாலும் உலகா நம்பியிருக்கிறாள். உன் பதிபக்தியை! குஷ்டரோகியைத் தாசிவீட்டுக்குத் தலையிலே தூக்கிக் கொண்டு போனதைப் பெரிய பதிபக்தி” என உலகா எண்ணுகிறாள்.
“ தலையில் தூக்கிக்கொண்டு போனேன் என்கிறாயே நீயும். திருத்திக்கொள்.! கூடையில் வைத்துத் தலையில் தூக்கிக்கொண்டு போனேன். குஷ்டரோகியைக் கையால் தொட்டுத் தலையில் தூக்கிப்போக எனக்கென்ன பைத்தியமா? அதெல்லாம் ஜாக்கிரதையாகக் கடையில் வைத்துத்தான் கொண்டுபோனேன்”
(மு.கருணாநிதி, நளாயினி- இரா.பிரேமா. பெண் மையச் சிறுகதைகள், சாகித்திய அகாதெமி)
மு.கருணாநிதியின் நளாயினி தன்னை உணர்ந்தவள். “தான் அறியாமல், ஒரு ஆடவனிடம் மாட்டிக் கொண்டேன்;அதிலிருந்து தப்பிக்க வேண்டும்” அந்தத் தப்பித்தலைத் தனது புத்திசாலித்தனத்தாலேயே வென்றெடுக்க நினைப்பவள்”  தன்னை உணர்ந்த ஒரு பாத்திரமாகப் புராண காலத்து நளாயினியை முன்வைக்கத் தூண்டுவது வெறும் எழுத்து மனநிலை என்று சொல்லமுடியாது. எழுத்து, கலை போன்றவற்றின் சமூகப்பாத்திரத்தை நன்கு உணர்ந்த ஒருவரின் சிந்தனைதான் இப்படியான முன்வைப்பை - கட்டுடைப்பைச் செய்யும். திராவிட இயக்க எழுத்தாளர்கள் தங்களின் அரசியல் பார்வையோடு புராணக் கதாபாத்திரங்கள் பலவற்றைக் கட்டுடைத்துக் காட்டினார்கள். அந்த நோக்கம் முதன்மையாக அமைந்ததால், அவர்களின் கதைகளும் கவிதைகளும் புத்திசாலித்தனமான வெளிப்பாடுகளாக மட்டுமே இருந்தன. அந்தப் புத்திசாலித்தனம், சமூகமாற்றத்தை முன்வைக்கும் புத்திசாலித்தனம்.


No comments :