February 06, 2011

எல்லை கடக்கும் உரிமைகள்


திலகவதியைச் சிறப்பாசிரியராகவும், அவரது புதல்வர் பிரபுதிலக்கை ஆசிரியராகவும் கொண்டு வெளிவரும் மாத இதழ் அம்ருதா. நான்கு ஆண்டுகளைக் கடந்து ஐந்தாவது ஆண்டில் நுழைந்துள்ள அம்ருதாவில் எனது நீண்ட நேர்காணல் முன்பு ஒருமுறை வெளி வந்துள்ளது. அதில்லாமல் அம்ருதாவில் நாடகம், திரைப்பட விமரிசனம், சில கட்டுரைகள் என அவ்வப்போது எழுதியுள்ளேன். இந்த மாதம் தொடங்கி , கும்மியடி.. கூடி நின்று கும்மியடி என்ற தலைப்பில் பத்தித் தொடராகக் கட்டுரைகளை எழுதப்போகிறேன். எல்லை கடக்கும் உரிமைகள் என நான் தலைப்பிட்ட அந்தக்கட்டுரை படைப்பாளிகள் அரசியல்வாதியாகலாமா? என இன்னொரு தலைப்புடன் அட்டைப்படக்கட்டுரையாக இந்த மாதம் (2011, பிப்ரவரி) அச்சாகியுள்ளது. இந்தியாவில் அலை வீசிக் கொண்டிருக்கும் ஸ்பெக்ட்ரம் ஊழலை மையப்படுத்திய கட்டுரை என்றாலும் நேரடி அரசியல் கட்டுரை அல்ல. நேரடியாக அரசியல் கட்டுரைகள் எழுதும் அளவுக்குத் தைரியமும் அரசியல் ஞானமும் எனக்கு இல்லை. ஆனால் பரபரப்பான பேரரசியல் போலவே இலக்கியம், கலை, பண்பாடு, படைப்பாளி, அதற்குள் செயல்படும் அறம் சார் கேள்விகளுக்குள் செயல்படும் நுண் அரசியல் பற்றி எழுதும் தைரியமும், ஞானமும் எனக்கு இருப்பதாக நினைத்துக் கொண்டு எழுதப் போகிறேன். அம்ருதா இதழைக் கடைகளில் வாங்கிப் படிக்க முடிபவர்கள் அச்சிலேயே வாசியுங்கள். அந்தப் பாக்கியமும் அனுகூலங்களும் இல்லாதவர்களுக்காக கட்டுரை அச்சாகி ஒருவாரம் கழித்து இங்கே பதிவேற்றம் செய்யப்படும்.  இனி முதல் கும்மி…

எல்லை கடக்கும் உரிமைகள்                
===========================

 
ஆ.ராசா மீது குற்றம் சாட்ட எந்த முகாந்திரமும் இல்லை” “ நீதி தேவர்களாகும் ஊடகக் காரர்கள்ஒன்று குற்றம் சாட்டும் வாக்கியம்;இன்னொன்று தீர்ப்பு வழங்கும் வாக்கியம்.   பத்ரி சேஷாத்ரிஎழுதியதை இமையம் வெளியிட்டுள்ளார். பத்ரி சேஷாத்ரியின் இணையமுகவரியின் வழியாகப்பதிவிறக்கம் செய்யப்பட்டு அவரின் அனுமதியுடன் வெளியிடப் பட்டுள்ளது. விலை.ரூ.10/-
  2 ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம்  வழங்குவதில் 1.76 லட்சம்  கோடிகள் இந்தியஅரசுக்கு  இழப்பு ஏற்பட்டிருக்கக் கூடும் என்ற தணிக்கைக் குழுவின்குறிப்பை மறைத்து விட்டு, இவ்வளவு பெரிய தொகையை ஆ.ராசா ஊழல் செய்துவிட்டார் என்பது போல இந்தியாவின் அச்சு ஊடகங்களும், காட்சி ஊடகங்களும்ஊதிப் பெருக்கும் பின்னணியில் , “ஆ.ராசாவின் மீது குற்றம் சாட்ட எந்தமுகாந்திரமும் இல்லைஎன்பதற்கான வாதங்களை முன் வைக்கும் பத்ரி சேஷாத்ரி,இராசாவை ஆதரிக்கவில்லை என்று சொல்லிவிட்டே தனது வாதங்களை வைத்துள்ளார்.
 
கிழக்குப் பதிப்பகத்தின் உரிமையாளராகவும், உலகமயம், தனியார் மயம்,தாராளமயம்  போன்ற வார்த்தைகளைக் கெட்ட  வார்த்தைகளாகக் கருதும் மனோபாவத்திற்கெதிராக, அதன் சாதக, பாதகங்களை நிதானமாக விவாதிக்கக்கூடியவராகவும், தகவல் தொழில் நுட்பம் சார்ந்த கட்டுரைகளைத் தமிழில்
எழுதுபவராகவும், நவீனத் தமிழ் இலக்கியத்தோடும், அவற்றை வெளியிடும்பத்திரிகைகளோடும் தொடர்பில் இருப்பவராகவும் அறியப்படுபவர் பத்ரிசேஷாத்ரி. மூன்று வருடங்களுக்கு முன்னால், தொலைக்காட்சி அலைவரிசைகள் பற்றியும், குறிப்பாக அவற்றில் வரும் தொடர்கள் பற்றியும் நான் எழுதிய
கட்டுரைகளை இலக்கியவாதிகள் பலரும் கிண்டல் அடித்த போது, அவர் மட்டுமே
தனது இணைய தளத்தில் நேர்மறையாக விமரிசனம் எழுதியிருந்தார். வலதுசாரிப்புத்திசாலிகளுக்கு உள்ள நிதானமும், எள்ளலும் அவருக்கு வசமான ஒன்று.
 தொழில்  முதலாளிகளுக்கிடையே நடந்த  போட்டியின் விளைவாக அம்பலமான 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு  முறைகேட்டை வட இந்திய முதலாளிகளின் வசம் இருக்கும் ஆங்கிலத் தொலைக்காட்சி ஊடகங்கள் ஊதிப்  பெருக்குகின்றன.  தமிழ்நாட்டில் பிராமண முதலாளிகள் வசம் இருக்கும் தினமணி, ஜூனியர் விகடன்,
துக்ளக், காலச்சுவடு போன்ற பத்திரிகைகள் வழி மொழிந்து பேசுகின்றன. சுப்ரமணிய சுவாமி, சோ.ராமசாமி, ஞாநி போன்ற பார்ப்பண அறிவாளிகளும் முன்னணியில் நின்று தாக்குதல் தொடுக்கின்றனர். இதற்கான காரணங்கள் மிக எளிமையானவை. பார்ப்பணரல்லாதார் தலைமையில் இயங்கும் தி.மு.க.வின் ஆட்சியை இறக்கி விட்டு, பார்ப்பண ஆதரவுத் தலைமையில் இயங்கும் ஆட்சியைக் கொண்டுவர முயல்கின்றன என்பதுதான். இந்த அடிப்படையில் தான் 2ஜி அலைக்கற்றை பற்றிய
பேச்சுகளையும், விமரிசனங்களையும், எதிர்வினைகளையும் திமுக எதிர்கொள்கிறது.
 அரசியல் தளத்திலும், பண்பாட்டுத்  தளத்திலும் தனது தவறுகளால் ஏற்படும் பிரச்சினைகளைத் திசை திருப்பவும், தன்னுடைய உயிர்த்தலத்தில் பலமான அடிகிடைக்கக் கூடும் எனக் கருதும்போதும் சாதிய முரண்பாட்டை முன்னிறுத்தி வாதங்களை அடுக்குவது திராவிட முன்னேற்றக் கழகத்தின்
சாதுர்யங்களில் ஒன்று. பார்ப்பணர் x பார்ப்பணரல்லாதார் என்ற கூரான முரண்பாடு முனை மழுங்கிச் சில பத்தாண்டுகள் கடந்து போய்விட்டன என்பதை அது எப்போதும் பொருட்படுத்துவது இல்லை; இப்போதும் பொருட் படுத்தவில்லை.   
 2ஜி  அலைக்கற்றை என்னும் பெருவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுக் காணாமல் போய் விடுவோமோ என்ற பயத்தில் தவிக்கும் திமுக எதாவது ஒரு துடுப்பு கிடைத்தால் பயன்படுத்தவே செய்யும். அவர்களுக்குக் கிடைத்துள்ள ஒரு துடுப்பே பத்ரியின் வாதங்கள். 2ஜி அலைக்கற்றை தொடர்பாகப் பத்ரி வைக்கும் வாதங்கள் கட்சி அரசியல் என்னும் எல்லைகளைத் தாண்டி, தமிழ் நாட்டிற்கான வாதங்களாக மட்டும் இல்லாமல், ஒட்டு மொத்த இந்தியர்களின் சாதாரண மனிதர்களின்- கோணத்தில் இருந்து வைக்கப்படும் வாதங்களாக இருக்கின்றன. அத்தோடு திமுகவைப் பொறுத்த வரையில் அவர் தனது எதிரி முகாமில் இருக்க வேண்டியவர். அப்படிப்பட்டவர் எழுப்பும் விவாதங்களைப் பயன்படுத்தாமல் விட்டு விடுமா என்ன?
 ஒரு தொலைபேசி உரையாடலில் ஒரு  பக்க முனையைப் பற்றி மட்டுமே  இந்த ஊடகங்கள் பேசுவது ஏன்?  கனிமொழியோ, ராசாவோ, நீரா ராடியாவிடம் பேசினார்கள் என்பது உண்மையாக இருக்கட்டும். அவர் அளித்த உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில் ஆ.ராசாவுக்கு தகவல் தொழில்நுட்பத்துறையை அவரால் வாங்கித் தர முடிகிறது என்றால் உண்மையில் நீரா ராடியாவின் சொல்லுக்குக்
கட்டுப்பட்டுச் செயல்பட்டு இயங்கிய தொலைபேசியின் அடுத்த முனையில் இருந்தவர் யார்? நமது அரசியல் சட்ட நடைமுறைகளின் படி, பெருமுதலாளிகளின் முகவரான நீராராடியாவின் வேண்டுகோளை ஏற்று ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு குறிப்பிட்ட துறை வழங்கப்பட்டது என்றால், வழங்கியவர்கள் தானே பெரியகுற்றவாளிகள். அவர்களை விமரிசனம் செய்யாமல் எங்களுக்கு இந்தப் பதவியை வாங்கித் தர முடியுமா என கேட்டவர்களை குற்றவாளிக்கூண்டில் நிறுத்துவது எவ்வகைப் பத்திரிகை அறம்?
பத்ரி சேஷாத்ரியின் கட்டுரையை  ஒரு சிற்றேடாக இமையம்வெளியிட்டுள்ளார்.   தனது கட்சியின் பிம்பத்திற்கு ஏற்பட்ட கறையைக் கழுவ நமது அரசியல் கட்சிகளின் தொண்டர்கள் எல்லாவற்றையும் பயன்படுத்தவேசெய்வர். பத்ரியின் கட்டுரையை இமையம் அப்படி நினைத்தே வெளியிட்டுள்ளார் எனப் புரிந்து கொண்டேன். எழுத்தாளர் இமையம் என நானறிந்த அண்ணாமலைகரை வேட்டிய திமுகக்காரர். நாவலாசிரியராக- சிறுகதையாசிரியராக நுட்பமான தளத்தில் இயங்கும் இமையம், அரசியல் தளத்தில் திராவிட முன்னேற்றக்கழகத்தின் தீவிர ஆதரவாளராகவும் எப்படி இயங்குகிறார் என்பதைப் பல தடவை எனக்கு நானே கேட்டுக் கொண்டுள்ளேன். அவரது நாவல்கள் உருவாக்கிக் காட்டும் உலகத்தைக் கண்டு பிரமித்தபோதும்,  ஒவ்வொரு சிறுகதைகளை வாசித்து முடிக்கும்போதும் இந்தக் கேள்வி எனக்குள் தோன்றும்; திமுகவின் இலக்கியக்கொள்கையோ, அரசியல் பார்வையோ அவரது எழுத்தில் எங்கும் வெளிப்பட்டதே இல்லை. ஆனால் நடப்பில் அவர் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர் தான். அப்படியான இரட்டைநிலையை அவர் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளார் என்பது ஆச்சரியம்தான். இமையம்  வெளியிட்டுள்ள அச்சிறுவெளியீட்டைப் படித்தபின் அதை, ‘எழுத்தாளர் இமையம்வெளியிடவில்லை, ‘திமுகத் தொண்டர் இமையம்வெளியிட்டுள்ளார் என மனசு சொல்லியது.   எனது மனம் ஏற்படுத்திக் கொண்டசமாதானத்தை ஏற்கவிடாமல், அடுத்தடுத்து வந்த சில தொலைபேசி அழைப்புகள் தொந்தரவு செய்தன.   இமையம் என்னும் படைப்பாளியின் முதன்மையான வாசகனாகவும், அவரது படைப்புகளை விமரிசன ரீதியாக அணுகிய விமரிசகனாகவும் நான் இருப்பதால், அவரது நண்பர்களில் ஒருவராக அறியப்பட்டிருக்கிறேன். அந்த உரிமையில் அவர்கள் என்னிடம் கேட்கிறார்கள் என்று அதற்கும் ஒரு சமாதானத்தை நானே உருவாக்கிக் கொண்டேன். கேட்டவர்களில் ஒருவர் காலச்சுவடு, உயிர்மைபோன்ற இலக்கிய முதன்மைப் பத்திரிகைகளில் மட்டும் எழுதுபவர். இன்னொருவர் இடதுசாரிக் கலை இலக்கிய அமைப்புகளிலும், தமிழ்த்தேசிய அமைப்புகள் நடத்தும் கூட்டங்களிலும் ஆர்வத்தோடு பங்கெடுப்பவர். எப்போதாவது அவற்றில் சில குறிப்புகளை எழுதுபவர் கூட. அந்தத் தொலைபேசிப் பேச்சுக்கள் எழுப்பிய சாராம்சமான வினாக்கள், “எழுத்தாளர் இமையம் இதைச் செய்யலாமா?”” என்பது தான்.
  இந்தியாவில் ஊழலின் பிம்பமாக அமைச்சர் ஆ.ராசா முன் நிறுத்தப் பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் அவர் ஊழல் செய்யவில்லை என்றவாதத்தை முன்னிறுத்தும் ஒருகட்டுரையை வெளியிடு வதும், அதற்கு ஆதரவான கருத்தை உருவாக்குவதும் ஒரு எழுத்தாளரின் வேலையா? என்பதுதான் அந்தக் கேள்விகளின்
பின்னால் இருக்கும் ஆதங்கம்.  இந்தக் கேள்வி எழுத்தாளர் இமையத்திடம் மட்டுமே கேட்கப்பட்ட கேள்வி அல்ல. காலங்காலமாகப் பலபேரிடம் கேட்கப்பட்ட கேள்வி. எழுத்தாளர்கள் அவரவர்கள் காலத்தில் இயங்கும் அரசியல் இயக்கங்களின் உறுப்பினர்களாக இருப்பதும், அவற்றின் கொள்கைகளுக்காக எழுதுவதும், பேசுவதும் ஏற்புடையதுதானா?
 அண்மையில் நடந்து முடிந்த முள்ளிவாய்க்கால் கொடூரத்தின் போது தனது கரிசனத்தைச் சொல்லாத படைப்பாளிகள் அடைந்த குற்ற உணர்வை அவர்கள் ஒவ்வொருவரின் மனத்தைக் கேட்டால் சொல்லும். அதே நேரத்தில் ஒரு கவிதையைஎழுதி வாசித்து விட்டோ, ஆவேசமான ஒரு கூட்டத்தில் பார்வையாளனாகக் கலந்துகொண்டோ சிலர் அடைந்த பெருமிதத்தையும் நாம் அறிவோம். முள்ளி வாய்க்கால் என்றில்லை. மனித குலம் தழுவிய அரசியல் நிகழ்வுகளால் ஏற்படும் துயரமோ,எழுச்சியோ அதன் மீது படைப்பாளியின் கருத்து எதிர்பார்க்கப் படுகிறது;வலியுறுத்தப்படுகிறது. ஆகாவென்றெழுந்தது பார் யுகப்புரட்சி; மாகாளி பராசக்தி கடைக்கண் வைத்தாள் என்று பாரதி சொன்ன கருத்து பெருமிதத்தின் விளைவு தானே? ஏதோ ஒருவிதத்தில் பங்கேற்பையோ, புறக்கணிப்பையோ சொல்லிவிட்டுச் செய் என படைப்பாளிகளை இந்தச் சமூகம் வலியுறுத்துகிறது.

  2
ஜி  அலைக்கற்றையால் தனிநபர்கள்  பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை விடத் தான் ஏற்றுக் கொண்ட தலைமையும், அது வழி நடத்தும் இயக்கமும்பாதிக்கப்பட்டிருக்கிறது என நம்பும் ஒரு நபர் தனது பங்களிப்பைச் செய்வதைஎப்படிக் கேள்விக்குள்ளாக்க முடியும்? அந்த நபர் காத்திரமான படைப்பாளியாக
இருக்கும் நிலையில் அப்படிச் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று சொல்ல முடியுமா? அப்படிச் செய்வதால் அவரது படைப்பாளி என்ற தகுதி பறி போய்விடும் வாய்ப்பு இருக்கிறது என்பதை ஏற்க முடியுமா?
     
கலை இலக்கியப் பெருமன்றம், தமிழ்நாடு  முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள்  சங்கம் போன்றன தமிழ்நாட்டில்  இயங்கும் இடதுசாரிக் கட்சிகளின் கலை இலக்கிய அமைப்புகள். அவற்றிலும் படைப்பாளிகளும், அறிவாளிகளும் தீவிரமாக இயங்கவே செய்கிறார்கள். ஆனால் இவர்கள் தாங்கள் இயங்கும்
கட்சிகள் எடுக்கும் கூட்டணி நிலைபாட்டிற்கு எதிராக எப்போதாவது கருத்துக்களை முன் வைத்ததில்லையே ஏன்? கருத்துக்கள் கூறாதது மட்டுமல்ல;கட்சியின் கட்டளையை ஏற்று- கூட்டணி தர்மத்திற்காகத் தேர்தல் பணிகளை ஆற்றுவதையும் கடமையாகக் கொள்கிறார்களே? அவர்களுக்கு மட்டும் கலைஞர்கள்,
படைப்பாளிகள், எழுத்தாளர்கள், அறிவுஜீவிகள் என்ற எல்லைகள் கிடையாதா?அவர்கள் மட்டும் அந்த எல்லையைக் கடக்கலாமா? அந்த உரிமையை அவர்களே எப்படி எடுத்துக் கொள்கிறார்கள்? அப்போதெல்லாம் யாரும் கேள்விகள் கேட்காமல் இருப்பது எப்படி?     கலை இலக்கியத்திற்காக தனது வாழ்நாள் முழுவதும் வாதாடிய சுந்தரராமசாமி  தொடங்கிய காலச்சுவடு, கலை இலக்கிய எல்லைகளை விட்டுவிட்டு
கடந்த ஓராண்டாக அலைக்கற்றை விவகாரம் வந்தவுடன் முழுமையான அரசியல் பத்திரிகை என்ற இன்னொரு எல்லைக்குள் நுழைந்து விட்டது. அது மட்டும்எல்லையை மீறலாமா? அதில் எழுதும் படைப்பாளிகள் யாரும் ஏன் இப்படி எல்லைமீறுகிறீர்கள் என்று கேட்காதது ஏன்? உயிர்மை, உயிரெழுத்து, அம்ருதா என
எல்லா இலக்கிய பத்திரிகைகளின் ஆசிரியர்களும் தங்களின் தலையங்கங்களைக்கூர்மையான அரசியல்  தளத்திலிருந்தே எழுதுகிறார்களே.? அவர்கள் எல்லாம் எல்லையை கடக்கலாம் என்றால், தன்னை திமுகக்காரன் எனக் காட்டிக் கொண்ட எழுத்தாளர் இமையம் மட்டும் ஏன் அந்த எல்லையைக் கடக்கக் கூடாது.
அரசியல் சார்ந்த ஒரு நிகழ்வு  குறித்து எதிர்மறையாகக்  கருத்துக் கூறவும், பங்கேற்கவும் ஓர் இலக்கியவாதிக்கு உரிமை இருக்கிறது என்றால்,அதை ஆதரித்துப் பேசவும், வினையாற்றவும் இன்னொரு படைப்பாளிக்கு உரிமை இல்லாமல் எப்படிப் போகும்?  இமையத்தின்  கட்சி செயல்பாட்டிற்கும்  அவரது இலக்கிய செயல்பாட்டிற்கும்  இதுவரை எந்தச் சிக்கலும்  நேர்ந்ததில்லை. ஏனென்றால் இரண்டையும் தனித்தனியாக வைத்திருக்கிறார். அப்படி வைத்திருப்பது தொடரும் வரை அவ்வாறு நேராது என்றே நம்பலாம்

3 comments :

gnani said...

என்னை நீங்கள் பார்ப்பனர் ஆட்சியை நிறுவ விரும்பும் பார்ப்பன அறிவாளிகள் பட்டியலில் சேர்த்திருப்பது மிகுந்த வருத்தம் தருகிறது. வேறு யாரும் இப்படி எழுதினால் நான் பொருட்படுத்துவதே இல்லை. என்னை நன்கு அறிந்த அ.ராமசாமி இப்படி எழுதுவது வேதனையாக இருக்கிறது. நான் அறிவாளிதான். ஆனால் பார்ப்பனன் இல்லை. பார்ப்பன ஆட்சியை நிறுவும் நோக்கம் எதுவும் எனக்கு இல்லை. நேர்மையான, சமத்துவ ஜனநாயக வாழ்க்கை முறையையே நான் எப்போதும் ஆதரித்து வந்திருக்கிறேன். நன்றி

i criticize periyar said...

இமையம் பற்றி எழுதி நீங்களும் உங்கள் சார்புகளை தெளிவாக்கிவிட்டீர்கள்.விமர்சிப்பவர்கள் மன்மோகன் சிங் அரசையும் சேர்த்தே விமர்சிக்கிறார்கள்.சு.சாமி, பிர்சாந்த பூஷண் வழக்கு அரசின் முடிவுகளை எதிர்த்து போடப்பட்டது.அது முறைகேடு குறித்த வழக்கு, அதில் யாரும் ராசா குற்றவாளி, அரசில் உள்ள பிறர் புனிதர் என்று பிரித்து வழக்குப் போடவில்லை.அ.ராசாமியை விட இமையம் பரவாயில்லை, திமுக் தொணடர் என்று நேரடியாக சொல்லிக்கொள்கிறார்.அ.ராமசாமி லாபியிஸ்ட்களின் பி.ஆர்.ஒ போல் எழுதுகிறார்.

thamizhan said...

பார்ப்பனர் ஆட்சிக்காக சில பார்ப்பன பத்திரிகைகள் ....என்ற வார்த்தைகள் முற்றிலும் தவறு.சோ,சுப்ரமன்யச்வாமி ஆகியோர் ஜெயலலிதாவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர கருணாநிதியுடன் சேர்ந்து பிரச்சாரம் செய்தது மட்டுமல்லாமல் மூப்பனார்,சிதம்பரம்,ரஜனி ஆகியோரையும் கருணாநிதியின் தலைமையில் இருந்த கூட்டணிக்கு கொண்டு வர பாடு பட்டிருக்கிரார்கள்.உங்கள் எழுத்து கருணாநிதி பாணியில் இருப்பது தெளிவாக தெரிகிறது.