October 12, 2010

மந்திரங்களும் தந்திரங்களும் எந்திரன்களும்


இன்றைய வாழ்நிலையில் எந்தவொரு தேசத்திற்கும் ஜனநாயகம் என்னும் அரசியல் கட்டமைப்பே ஆகக் குறைவான தீங்குகளைத் தரக்கூடிய வடிவம் என அரசியல் சிந்தனையாளர்கள் முன் மொழிகிறார்கள். இன்னும் பலர் மனித குலம் கடந்து வந்துள்ள பல்வேறு கருத்தியல்களில் ஆகச் சிறந்தது ஜனநாயகம் என்னும் கருத்தியலே என வாதிடுவதும் கூட உண்டு. அந்த முன்மொழிவுகளுக்கும் வாதங்களுக்கும் மாற்றான முன்மொழிவையோ,
வாதத்தையோ முன் வைத்துப் பேசி,அதைவிடச் சிறந்தது இது எனச் சொல்ல இன்னொரு அரசியல் வடிவம் இல்லை என்ற நிலையில் ஜனநாயகத்தை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறுவழியும் இல்லை.

ஜனநாயகம் –மக்களை மையப்படுத்தும் தத்துவம் எனப் பெயரிலேயே மிகப் பெரிய பாவனையைக் கொண்டிருப்பதோடு, மக்கள் அனைவரையும் சம நிலையில் வைத்துப் பார்க்கும் ஓர் அரசியல் தத்துவம் என்பதாகவும் தன்னை முன்னிறுத்துகிறது. ஆனால் இது வெறும் தோற்றம் மட்டுமே. உண்மையில் ஜனநாயகம் என்பது ஒரு பெரும்பான்மை வாதம் தான். பெரும்பான்மையின் அதிகாரத்தை- ஆதிக்கத்தை- சிறுபான்மையின் மீது திணிக்கும் வல்லமையை மறைமுகமாகக் கொண்டது. பெரும்பான்மையின் ஆதிக்கத்தை வன்முறையாகத் திணிக்கிறது என்பதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் திணிப்பது ஜனநாயகத்தின் தந்திரங்களில் ஒன்று. சில நேரங் களில் பெரும்பான்மையான மக்களுக்காகச் சிந்திப்பதாகச் சொல்லும் மேன்மக்களின் தந்திரங்களில் சிக்குண்டு சிறுபான்மை மேட்டுக்குடியின் நலனுக்காகப் பேசவும் வினைகள் புரியவும் தன்னைத் தயார்படுத்திக் கொள்ளும் ஆபத்தும் கொண்டது ஜனநாயகம்.

ஜனநாயகத்தின் இத்தகைய தந்திரங்களையும் பாவனைகளையும் பாமர மனிதர்கள் அறியாமல் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்றால், படித்தவர்கள் அறிந்தே ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஜனநாயகத்தில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு தனிநபர் ஒருவரையும் பொறுப்பாக்க முடியாது; அது ஒரு கூட்டுப்பொறுப்பு கொண்ட முடிவு என்பதெல்லாம் வெறும் காட்சிப்பிழை என்பதைப் புரிந்து கொள்ள நுணுக்கமாக ஆய்வுப்பார்வையோ, தீர்க்கமான சிந்தனைகளோ தேவையில்லை . ஆட்சியமைப்பு, நிர்வாகம், அதிகாரம் செலுத்துதல் என்பதில் ஜனநாயகம் வரமா? சாபமா? எனத் தனித்தனியே விவாதிப்பதற்குப் பதிலாக, அந்தக் கருத்தியல் எல்லாத் துறைகளையும் ஆக்கிரமித்துப் பாழ்படுத்தும் ஆபத்துடன் பரவி வருகிறது என்பதைப் புரிந்து கொள்ளத் தொடங்க வேண்டிய நெருக்கடியில் இருக்கிறோம்.

இப்படியொரு கருத்தை முன் வைத்தவுடன் பாசிசத்திற்கும் சர்வாதிகாரத்திற்கும் ஆதரவான கருத்து என்றும், சொன்னவருக்கு ஜனநாயக விரோதி என்ற பட்டமும் கிடைக்கும் வாய்ப்பு உண்டு என்றாலும், சொல்லித்தான் ஆக வேண்டியுள்ளது. உதாரணத்திற்கு மனிதர்களின் ஓய்வுப்பொழுதும் அதைப் பயன்படுத்துவதும் ஜனநாயக யுகத்தில் எப்படிப் பட்டதாக ஆகியிருக்கிறது என்பதை எடுத்துக் கொள்வோம்.

இருபதாம் நூற்றாண்டின் கடைசி ஐம்பதாண்டுகளில் இந்தியர்களின் முதன்மைப் பொழுதுபோக்கு வெளியாக, அரையிருள் கவிழ்ந்த திரைப் பட அரங்குகள் மாறின என்பதை நாமறிவோம். அதற்கு முன்பு இந்தியர்களின் பொழுது போக்குக்குக் காரணிகளாக இருந்த ஆட்டங்கள்,பாட்டுகள், கூத்துகள் என எல்லாம் அவர்களின் வாழிடங்களை நோக்கி வந்து கொண்டிருந்தன.அவையும் தனி மனிதனின் விருப்பம் சார்ந்து தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்பைத் தராமல் ஒரு கிராமம் அல்லது ஒரு சமூகக் குழுவின் பண்பாட்டுக் கூறுகளான சடங்குகள்,விழாக்கள், கொண்டாட்டங்கள் போன்றவற்றின் பகுதிகளாக இருந்தன. இவற்றிற்கு மாறாக மனிதனின் புலன்களை திரைநோக்கித் திருப்பிக் கொண்டு அதில் அசைந்த பிம்பங்களால் இந்திய மனிதர்களின் தன்னிலையை உருவாக்கிய திரைப்பட அரங்குகள் அவர்களைத் தனது இருப்பிடம் நோக்கி வரவழைத்தன.

மனிதர்கள் ஒவ்வொருவரிடமும் இருக்கும் பணத்திற்கேற்ப ஒவ்வொரு நாளும் பங்கேற்கும் வாய்ப்பை வழங்கின திரைப்பட அரங்குகள் . அதன் ஆதிக்கமும் இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் முழுமையாக ஆட்டம் கண்டு விட்டது. கடந்த பத்தாண்டுகளில் இந்தியர்களின் பொழுது போக்கு மையம் திரைப்பட அரங்குகளிலிருந்து அவரவர் வீடுகளின் முன்னறைகளுக்கு நகர்ந்து விட்டது. தனித்தனி அறைகள் எனப் பிரித்துச் சொல்ல முடியாத கிராமத்துக் குடிசைகளிலும் நகரத்து விளிம்புநிலைச் சேரிகளிலும்கூட அரசாங்கம் தரும் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு முக்கியமான இடத்தைத் தந்து விட்டுத் தங்களின் ஓய்வுப் பொழுதுகளை அதன் முன்னாள் கழித்துக் கொண்டிருக்கிறார்கள் மக்கள்.

தன்வசம் இருந்த பெரும்பான்மைப் பார்வையாளத் திரளைத் தொலைக் காட்சி ஊடகத்திடம் தந்துவிட்டுத் திணறும் திரையரங்குகளும் தொலைக் காட்சிகளும் ஒன்றோடொன்று போட்டியில் இருக்கும் ஊடகங்கள் போலத் தோன்றினானலும் ஒன்றிலிருந்து இன்னொன்றைப் பிரிக்க முடியாது என்பதும் உண்மை. முதல் நாள் அரைத்த மாவில் இட்டிலி அவிப்பதும், தோசை வார்ப்பதும் அடுத்த நாள் நடக்கின்றன. மூன்றாவது நாள் அவித்த இட்டியை உப்புமாவாகக் கிளறுவதும் சாத்தியம் என்பதைச் சமையல் தெரிந்த ஆண்களும் பெண்களும் அறிவார்கள். நமது தொலைக்காட்சி ஊடகங்கள், அப்படித்தான் பயன்படுத்துகின்றன. முழுமையாகத் திரைப் படங்களை பயன்படுத்திக் கொள்ளும் போது இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றிலேயே முதன் முதலாக என்ற வசனத்துடன் முன் வைப்பதும், பின்னர் காமெடிகள், பாடல்கள், காட்சிக் கோர்வைகள் எனத் துண்டு துண்டாக அந்தப் படங்களைப் பயன்படுத்திக் கொள்வதும் தொடர்ந்து நடக்கின்றன . திரைப்படத்துறைக்கும் , தொலைக்காட்சி ஊடகத்திற்கும் நிகழ்ச்சிகள் சார்ந்த கொடுக்கல் வாங்கல் மட்டுமே இருக்கிறது என்பதாக நினைக்கவேண்டியதில்லை. இரண்டுக்குமான தொழில் நுட்பக் கூறுகளும் கருவிகளும் கூட வேறுவேறல்ல.

அதே நேரத்தில் பார்வையாளர்களைச் சென்றடைவதிலும், தன்வசப் படுத்து வதிலும் குறிப்பான வேறுபாடுகளைக் கொண்டிருக்கின்றன தொலைக் காட்சியும் திரைப்படங்களும். இதற்காக இவை பின்பற்றும் உத்திகளும் கூட வேறுவேறானவைதான். மூத்த ஊடக வடிவம் என்ற வகையில் அச்சு ஊடகம் எப்போதும் பிற ஊடகங்கள் மீது ஆதிக்கம் செலுத்தவும் ஆலோசனை சொல்லவும் முயல்வது போல, திரைப்பட ஊடகம் தொலைக் காட்சி ஊடகத்தின் மீது ஆதிக்கமும் செலுத்துகிறது; அதனைத் தனது பரவலுக்காகப் பயன்படுத்திக் கொள்ளவும் செய்கிறது.

அண்மையில் வெளிவந்துள்ள எந்திரன் எல்லாவகையான ஊடகங் களையும், உத்திகளையும் பயன்படுத்திப் பார்வையாளர்களைச் சென்று சேர்வதில் வெற்றி அடைந்து கொண்டிருக்கிறது. அப்படியான வெற்றிக்கு எல்லாவகை ஊடகங்களையும் தன் வசம் வைத்திருக்கும் நிறுவனமே எந்திரனைத் தயாரித்தது என்பது முக்கியமான காரணம் தான் என்றாலும் ஊடகங்களின் விதிகளும் அங்கே செயல்பட்டுள்ளன என்பதை மறுத்து விட முடியாது. அச்சு ஊடகம் மற்றும் காட்சி ஊடகங்களைக் கையில் வைத்திருக்கும் எந்திரன் படத்தயாரிப்பு நிறுவனம், தங்களின் ஆகக் கூடுதல் முதலீட்டில் தயாரிக்கப் பட்ட எந்திரன் என்னும் பண்டத்தை விற்பனை செய்யத் தங்கள் வசம் உள்ள அனைத்தையும் பயன்படுத்துவது ஆச்சரியம் ஊட்டும் ஒன்றல்ல. அதே நேரத்தில் அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்றொரு தொல்மொழி இருப்பதை அவர்கள் அறியாத வர்களோ என்னும் அளவிற்குப் பயன்படுத்துகிறார்கள்.

சன் தொலைக்காட்சிக் குழுமமும் அவர்கள் வசம் இருக்கும் குங்குமம், தமிழ் முரசு போன்ற அச்சு ஊடகங்களும் பின்பற்றும் விளம்பர உத்திகள் எல்லாம் எந்திரனைப் பார்வையாளர்களிடம் கொண்டு போய்ச் சேர்ப்பதற்குப் பயன்படுமே ஒழிய, பார்வையாளர்களைத் தன் வசப்படுத்தும் முயற்சியில் வெற்றி அடையும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் எதுவும் இல்லை. எந்திரனைத் தயாரித்து அரங்குகளில் வெளியிட்டுள்ள அதன் தயாரிப்பாளர்களுக்கு அந்த நோக்கம் இல்லை என்றாலும் திரைப்படம் என்னும் வடிவத்திற்கு அந்த நோக்கம் தேவையில்லாத ஒன்று என்று சொல்லிவிட முடியாது. திரைப்படக் கலையின் அழிவை அதற்குள் செயல் படும் படைப்பாக்கக் கலைஞர்களாலும், தொழில்நுட்பக் கலைஞர்களாலும், அதன் உண்மையான பார்வையாளர் களாலும் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?.

விஞ்ஞானி வசீகரன் உருவாக்கிய சிட்டி என்ற எந்திரனே வசீகரனின் கனவையும் காதலையும் கபளீகரம் செய்யும் காரணியாக ஆவது போலத் திரைப்படம் என்னும் பெயரில் வந்துள்ள எந்திரன் என்னும் படமே, திரைப் படக் கலைக்கும் தொழிலுக்கும் எதிரியாக நிற்கிறது என்பதைச் சுட்டிக் காட்ட வேண்டியது திரைப்படத்துறைக்குச் செய்யும் பங்களிப்பாகும்.

கலையின் விதிகள் என்றவுடன் நல்லவர்களால் சமூகத்தை நிரப்பும் கலையின் தீவிரத் தன்மையைப் பற்றிச் சொல்வதாக நினைக்க வேண்டியதில்லை. பரப்பியல்வாத நோக்கம் கொண்ட பொழுதுபோக்குக் கலையின் நோக்கமும் விதிகளும் கூட எந்திரனில் இல்லை என்பதே சுட்டிக் காட்டப்பட வேண்டிய முக்கியக் கூறு. பொழுதுபோக்குக் கலை களின் விதிகளில் முதன்மையானது அக்கலை, இருப்பில் இருக்கும் நேரத்தில் – நிகழ்ந்து கொண்டிருக்கும் போது - உள்ள பொழுதைப் போக்கு வதற்கு உதவுகிறது என்பதுதான். உடல் ரீதியாகவோ, மனரீதியாகவோ களைப்பில் இருக்கும் ஒருவருக்கு, குறைந்த விலையில் கிடைக்கும் பாக்கெட் நாவல் குறைந்தது ஒரு மணிநேர வாசிப்பின்பத்தை வழங்கும். அதற்குத் தேவையான திருப்பங்களையும், காட்சிச் சித்திரிப்புகளையும், உணர்வூட்டுதலையும் கொண்டதாக இருக்கும் ; இருக்க வேண்டும் என்பதே அதன் பயன்பாடு. அதே போல திரும்பத்திரும்ப எடுக்கப்படும் சாகசக் கதாநாயகர்களை முன்னிறுத்தும் மசாலாத் திரைப்படங்களும் அவை நிகழ்ந்து கொண்டிருக்கும் இரண்டரை அல்லது மூன்று மணி நேரத்தில் பார்வையாளனுக்கு காட்சி இன்பத்தின் மூலம் பார்வையாளனை வேறு இடத்திற்கு அழைத்துச் சென்று உணர்வூட்டலையும், உற்சாகப் படுத்து தலையும் செய்கின்றன. அதற்கான உத்தரவாதங்களை உறுதி செய்யும் எழுத்துக்களையும் திரைப்படங்களையும் தான் திரள் மக்கள் தொடர்ந்து நாடிச் செல்கிறார்கள். அந்த உத்தரவாதம் இல்லையென்றால் உடனடியாக நிராகரிக்கவும் செய்வார்கள். இந்த நோக்கமாவது எந்திரனில் முழுமையாக இருக்கிறதா? என்றால், இல்லை என்பதே கிடைக்கும் பதில்.

பொழுதுபோக்குக் கலை அதனைச் சாத்தியமாக்கத் தீவிரக் கலையின் கூறுகள் சிலவற்றைப் போலியாக நகல் செய்யும்.தொடர்ந்து முன் வைக்கப்படும் சாத்தியமற்ற இலட்சியங்களையும், உண்மையில் மனிதர்களிடம் வெளிப்படாத அப்பழுக்கற்ற உணர்ச்சி வெளியீடுகளையும் தனதாக்கிக் கொண்டு அவற்றை ஊதிப் பெருக்கிக் காட்டிப் பார்வையாளனைத் தன்வசப்படுத்திக் கொள்ளும். அப்படி வசப்பட்டவர் களைக் கடைசி வரை அழைத்துச் செல்லும். வாசித்து முடித்த பின்பு அல்லது பார்த்த முடித்த பின்பு அதன் வசப்பட்டிருந்த வாசகர்கள் அல்லது பார்வையாளர்கள் அதிலிருந்து விடுபட்டு விடுவார்கள். அதே நேரத்தில் திரும்பத் திரும்பப் பொழுது போக்குக் கதைகளையும் படங்களையும் தனதாக்கிக் கொள்ளும் போது நிஜமான வாழ்க்கை தரும் சிக்கல்களை எதிர்கொள்ள முடியாமல் திணறுவார்கள் என்பது ஊடகவியல் ஆய்வுகள் சொல்லும் ஆய்வு முடிவுகள். நடப்பு வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களின் போது அவர்கள் வாசித்த எழுத்தோ, பார்த்த படமோ எந்த விதத்திலும் உதவாமல் ஒதுங்கிக் கொள்ளும். ஏனென்றால் அவற்றின் பயன்மதிப்பு அவை நிகழும் காலத்தோடு முடிந்து போகிறது.

தீவிரமான இலக்கியமோ, நாடகமோ, திரைப்படமோ அப்படி ஒதுங்கு வதில்லை.தற்குப் பதிலாக அவர்களைப் போன்ற ஒருத்தரை உருவாக்கிக் காட்டுவதன் மூலமோ, அவர்களுக்கு மாற்றான பாத்திரங்களைப் படைத்துக் காட்டுவதன் மூலமோ, வாசகர்களை அல்லது பார்வையார்களைப் படைப்பில் இடம்பெற்றுள்ள மனிதர்களோடு உரசிப் பார்த்துக் கொள்ளும் படி தூண்டிக் கொண்டே இருக்கின்றன. இந்தத்தூண்டுதல் காரணமாகத் தீவிர கலைப் படைப்புகள் மனதிற்குள் தங்கிக் கொள்கின்றன.

இப்படியான தீவிரக்கலையின் நோக்கமும் இன்றி, பொழுது போக்குக் கலையின் விதிகளும் இன்றி எந்திரன் வியாபார நோக்கத்தை மட்டுமே முதன்மையாக்கிக் கொண்டு வந்திருக்கிறது. வியாபாரத்திலும் கூட முறைப்படியான வியாபார உத்திகளைப் பின்பற்றாமல் தடாலடியான வியாபார உத்திகளுடன் வந்திருக்கிறது. மோசமான காய்கறிகளை விற்கும் ஒருவன், தனது கடைக்கு அருகில் தன்னிடமுள்ள காய்கறிகளை விடத் தரமான காய்கறிகள் உள்ள கடைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளும் தந்திரத்தை மேற்கொள்வான். அதே போல, கெட்டுப் போகும் பொருட்களை உடனடியாக விற்றுத் தீர்த்துவிடுவதில் வேகம் காட்டுவதும் வியாபாரத்தில் இருக்கும் தந்திரங்களில் ஒன்றுதான். தந்திரங்கள் கொண்ட மோசமான கடைக்காரனைப்போல, அதிகப் படியான எண்ணிக்கையில் திரையரங்கு களைக் கைப்பற்றி வெளியிடப்பட்டிருக்கிறது. பார்வையாளர்களின் தேர்வுகளுக்கு வாய்ப்பளிக்காமல் – அவ்வுரிமையைத் தடை செய்து- இது ஒன்று தான் இருக்கிறது என்பது போன்ற தோற்றத்தை உண்டாக்கி இருக்கிகிறது.

சந்தைப்படுத்துதலில் தான் வியாபாரத் தந்திரங்களையும், நெறிகளைப் பின் பற்றாத விளம்பர உத்திகளையும் கொண்டிருக்கிறது என்றில்லை படத்தின் காட்சிகளும் கூடத் தந்திரக் காட்சிகளாலேயே நிரப்பப் பட்டிருக்கின்றன. திரைப்பட அரங்கில் இருக்கும் பார்வையாளர்கள், மந்திர தந்திரக்காட்சி நடக்கும் அரங்கில் இருப்பதான எண்ணத்துடன் இருக்கும் படி காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன என்பது முக்கியமாகச் சுட்டிக்காட்ட வேண்டிய ஒன்று. மந்திர தந்திரக் காட்சிகளின் பார்வையாளர்கள் ஒவ்வொரு காட்சி நடக்கும் போதும், இது எப்படி நடக்கிறது? என்ற கேள்விக்குள் தள்ளப் படுவார்கள். அதற்கான விடையைத் தேடுவதற்குள் அடுத்த காட்சியும், அதற்கான கேள்வியும் அவர்கள் முன் வந்து நின்றுவிடும். கடைசி வரை கேள்விகள் மட்டுமே மிஞ்சும். பதில்கள் எதுவும் கிடைக்காது. எந்திரனைப் பார்த்துவிட்டு வருபவர்களும் அப்படித்தான் வெளியே வந்து ‘நன்றாக இருக்கிறது’ என்று சொல்கிறார்கள். பார்த்தவர்கள் எல்லோருமே நன்றாக இருக்கிறது என்றே சொல்கிறார்கள் என்பதும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றுதான். அப்படிச் சொல்பவர்களிடம் எது நன்றாக இருக்கிறது என்று கேட்டால் பதில் சொல்லத் தயங்குவார்கள்; அல்லது பின்வாங்குவார்கள் என்பதும் உண்மை.

ஒரு பெண்ணை நல்ல குணம் கொண்ட ஒருவனும், தீய குணம் கொண்ட இன்னொருவனும் காதலிக்க இறுதியில் நல்லவனுக்கு அவள் சொந்தமாகும் ஆயிரத்துச் சொச்சம் தடவை சொல்லப்பட்ட முக்கோணக் காதல் கதை தான் என்பதை ஒத்துக் கொள்ளவே செய்வார்கள். தன்னை அழிக்க வரும் நாயகனைப் பாம்பாகவும், பேயாகவும், விலங்குகளாகவும் மாறிப் பயமுறுத்தும் விட்டலாச்சார்யா படங்களின் தந்திரக் காட்சிகளிலிருந்து எந்திரன் எப்படி மாறுபட்ட படம் எனக் கேட்டால், இது முழுக்க முழுக்க கணினித் தொழில் நுட்பத்தின் சாதனை எனச் சொல்வார்கள். இந்தப் படம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கேட்டால், இதற்கு முன்பு இது போன்ற லாபத்தை உண்டாக்கித் தந்த படம் இல்லை என்ற சாதனையே ஒரு தாக்கம் தானே எனப் பதில் சொல்வார்கள். இவையெல்லாம் பார்வையாளன் சார்ந்தன அல்ல என்பதை நாம் உணர வேண்டும்.

பெரும்பான்மையானவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் எனச் சொல்லிக் கொண்டு அவர்களுக்கு எதிரான சட்டங்களைச் செயல்படுத்தும் ஜனநாயக அரசு போலவே, பெரும்பான்மையானவர்களால் விரும்பப்படும் இந்தத் திரைப்படமும், பார்வையாளர்களுக்கு எதிரான படம் தான். ஆம். பெரும்பான்மையானவர்கள் சொல்வதானாலேயே எந்திரன் நல்ல சினிமா ஆகி விடாது.

1 comment :

Kutty mani said...

IK KATURAI MOOLAM KULMPIYA RASIKARHALUKUM , ENTHIRANUKUM SARIYAANA SAVUKADI