January 13, 2012

வெளியிலிருந்த பார்த்த ஆச்சரியம்: வண்ணநிலவனின் கடல்புரத்தில்



தமிழ்ச் சிறுகதை தோன்றிய பத்தாண்டுகளிலேயே நவீன சிறுகதையாக மாறி விட்டது. ஆனால் தமிழ் நாவல் தன்னை நவீனமாக்கிக் கொள்ள எடுத்துக் கொண்ட காலம் முக்கால் நூற்றாண்டு என்பது நாவல்  வரலாற்றில் சொல்லப்பட வேண்டிய உண்மை. தொடர் நிகழ்வுகளை அடுக்கி நீண்ட வரலாற்றைச் சொல்ல உரைநடையை வெளிப்பாட்டுக் கருவியாக  மாற்றிக் கொண்ட போதிலும், காவியபாணியும் புராணிகத் தன்மையும், கதை சொல்லலில் கைவிடப் படாமல் தான் இருந்தன. சிறுகதை இலக்கியம் நவீன சிறுகதையாக மாறியதைப் பார்த்தே நாவல் இலக்கியம் நவீன நாவலாக மாறியது என்று கூடச் சொல்லலாம்.

நவீனப் புனைகதை இலக்கிய உருவாக்கம் என்பது உலகமொழிகள் பலவற்றிலும் யதார்த்தவாத வெளிப்பாட்டு முறையின் தோற்றத்தோடு தொடர்பு கொண்டிருந்தது. இதற்குத் தமிழும் விதிவிலக்கில்லை.1960-களில் எழுதப்பட்ட நாவல்கள் முழுமையாகப் படர்க்கையில் கதைசொல்லும் முறையைச் சாத்தியமாக்குவதற்கு முன்பு வரை வேதநாயகம் பிள்ளையின் பிரதாப முதலியார் சரித்திரம் உருவாக்கித் தந்த புராணிகத் தன்மை கொண்ட சரித்திரங்களும், வடுவூரார், ரங்கராஜுலு போன்றவர்களால் எழுதிக் காட்டிய துப்பறியும் கதைகளும் தன்மைக் கூற்றிலும், முன்னிலைக் கூற்றிலுமே நிகழ்ச்சிகளை வரிசைப்படுத்திக் கொண்டிருந்தன. யதார்த்தவாத வெளிப்பாட்டு முறைதான் நவீனத் தமிழ் நாவலை உருவாக்கித் தந்தது. படர்க்கைக் கதை சொல்லல் என்னும் கூ.ற்று முறையைத் தனதாக்கிக் கொண்டு காவியத்தன்மையையும் புராணிக மாயங்களையும் விலக்கி தமிழ் நாவல் நவீனத்தன்மையை அடைந்த போது கதைசொல்லி தொலைந்து போவது அல்லது கடவுளின் இடத்திற்குப் பயணமாவது என்னும் மாயம் நடந்துவிடும். அந்த மாயத்தை முழுமையாக வாசிக்க விரும்பும் ஒருவருக்கு நான் பரிந்துரை செய்யும் தமிழ் நாவல் வண்ண நிலவனின் கடல்புரத்தில்.
கடல்புரத்தில் நாவலை எழுதியதன் மூலம் வண்ணநிலவன் தமிழ் வாசகர்களுக்குப் படிக்கத் தர நினைத்த உலகம் அதுவரை தமிழில் பதிவு செய்யப்படாமல் இருந்த மீனவக் கிராம வெளியும்  மீனவ வாழ்க்கையும் என்பதை அந்நாவலை வாசிக்கும் ஒருவர் சுலபமாகக் கண்டு பிடித்து விடலாம். கிராம வெளியும், அதன் வாழ்க்கை முறையையும் சொல்வது நாவல் இலக்கிய நோக்கமாக ஆக முடியாது. குறிப்பிட்ட வெளியில் குறிப்பிட்ட காலகட்டத்தில் வாழ நேரும் மனிதர்கள் தாங்கள் சந்திக்கும் புதுவகை நெருக்கடிகளை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதைக் காட்டுவதும், அதற்கு அவர்களின் பாரம்பரியமான வாழ்க்கை முறையும் மன அமைப்பும் எவ்வாறு உதவுகின்றன அல்லது முரண்படுகின்றன எனப் பேசுவதும் தான் நவீன நாவல் இலக்கியத்தின் நோக்கமாக இருக்க முடியும்.
வண்ணநிலவனின் கடல்புரத்தில் முழுமையான கிராம வாழ்க்கையை எழுதிக் காட்ட ஒற்றைக் குடும்பத்தை மட்டுமே தேர்வு செய்துள்ளது. அந்தக் குடும்பத்தின் இரண்டு வருட கால நிகழ்வுகளை மட்டுமே எழுதிக் காட்டியுள்ளது என்பது கவனிக்க வேண்டிய ஒன்று. பாரம்பரியமான மீனவத் தொழிலைக் கைவிடச் சொல்லும் படித்த புதிய தலைமுறை வாரிசோடு முரண்படும் தகப்பன் குரூஸ் மிக்கேல் - மகன் செபஸ்தியான் முரண்பாட்டை முதல் நிகழ்வாக்கித் தொடங்கும் கடல் புரத்தில் நாவல், அக்குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினர்களின் அந்தரங்க வாழ்க்கையில் இருக்கும் ரகசியங்களுக்குள் மெல்ல மெல்ல நுழைந்து வாசகர்களை உடன் அழைத்துச் செல்கிறது. வல்லத்தை விற்றுவிட்டு தன்னோடு வந்து தங்கி விடச் சொல்லும் செபஸ்தியானின் விருப்பத்தை ஏற்றுக் கொள்ளாத மிக்கேலின் மகள் பிலோமி, மிக்கேலுக்குப் பிடிக்காத லாஞ்சிக்காரர் ஒருவனின் மகனான சாமிதாஸைக் காதலிக்கிறாள். லாஞ்சுக்குச் சொந்தக்காரனானதால் வல்லத்துக்குச் சொந்தக்காரனின் மகளான பிலோமியைக் கல்யாணம் செய்ய சாமிதாஸின் அப்பச்சி சம்மதிக்க மாட்டார் என்பதை அறிந்திருந்த போதும் பிலோமி அவனைக் காதலிக்கிறாள்; தனது உடலை அவளுக்குத் தருகிறாள்.
சாமிதாஸைத் தனது மகள் காதலிக்கிறாள் என்பதை மிக்கேலும் அவரது மனைவி மரியம்மையும் அறிந்திருந்தாலும் பெரிதாகக் கண்டிப்பதில்லை. இந்த வயதில் ஒரு பெண், ஒரு ஆணைக் காதலிப்பது தவிர்க்க முடியாத ஒன்று என்பதுபோலக் கண்டும் காணாமலே இருக்கிறார்கள். அதைக் கண்டும் காணாமல் இருப்பதை கூடப் புரிந்து கொள்ளலாம். மகனோடு போகாமல் இந்தக் கிராமத்திலேயே கிடப்பேன் எனப் பிடிவாதம் செய்யும் தனது போக்கு தேவையற்றது என வாதிடும் மிக்கேலின் மனைவி மரியம்மைக்கு அந்த ஊரில் இருக்கும் வாத்தியோடு நீண்ட காலமாக நட்பு இருக்கிறது என்பதும், அந்த நட்புக்குக் கிராமம் தந்துள்ள அர்த்தம் கள்ளத்தொடர்பு என்பதும் தெரிந்த பின்பும் மிக்கேல் அவளைப் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை என்பதுதான் ஆச்சரியம். வல்லத்தை நம்பி வாழும் தனது வாழ்க்கையும், தன் மனைவியும் தன் மகளும் தனது கட்டுப்பாட்டுக்குள் இல்லை என்பதை அறியும் ஒவ்வொரு கணமும் மிக்கேலுக்குச் செய்வதற்கு எதுவும் தெரிவதில்லை. குடித்து விட்டு விட்டுக்கு வெளியில் கிடக்கும் கயிற்றுக் கட்டிலில் கிடப்பது தான் அவனுக்குத் தெரிந்த ஒரே வழி.
காதலித்தவர்களைக் கல்யாணம் செய்துதான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லையோ என்னும் அளவுக்கு அவர்களின் ஏற்பு மனநிலை இருக்கிரது. மிக்கேலின் மகன் செபஸ்தியானே தான் காதலித்த ரஞ்சியைக் கல்யாணம் செய்து கொள்ளாமல், கொஞ்சம் பணத்தோடு வந்தாள் என்பதற்காக இன்னொருத்தியை மணந்து பக்கத்திலுள்ள சிறுநகரத்தில் வாத்தியாக இருக்கிறான். அவனும் கூட ரஞ்சியை மறக்கவில்லை; ரஞ்சியும் அவளை மறந்து விடவில்லை. சொந்தக் கிராமத்திற்கு வரும் போது பெண்கள் என்றால் பழையநினைவுகளில் திளைக்கவும் ஆண்களென்றால் கொஞ்சம் குடித்து மறக்கவும் செய்கிறார்கள். எதற்காகவும் யாரையும் வெறுக்காத அன்புக்குச் சொந்தக்காரர்களாக இருக்கும் அந்தக் கிராமத்து மனிதர்களின் வாழ்க்கையில் லாஞ்சு எனும் எந்திரப் படகின் வரவின் ஏற்படுத்திய முரண் தான் அன்புக்கு முரணான பகையைக் கொண்டு வருகிறது. பாரம்பரிய நம்பிக்கைகளை ஏற்றுக் கொள்ளாமல், ஊர்க்கட்டுப்பாட்டை மீறிக் கிறிஸ்துமஸ் நாளன்று மீன் பிடிக்கச் செல்ல முயல்வதும், வல்லத்துக்காரர்களை மதிக்காமல் இரண்டாம் தர மனிதர்களாகப் பார்க்கும் பார்வையும், அதனால் ஏற்படும் முரண்பாடும் மனிதர்களிடம் அன்பைத் தொலைக்கச் செய்து கொலைவெறியைக் கொண்டு வந்து சேர்த்து விடுகிறது.
மிக்கேலின் வல்லத்தை அடைய வேண்டும் என்பதற்காகவே தனது நோஞ்சான் மனைவி கேதரினை விரட்டி விட்டு பிலோமியை இரண்டாம் தாரமாக்க நினைத்த ஐசக், லாஞ்சிக்காரன் ரோசாரியோவைக் கொலை செய்ததும், அவன் செய்த குற்றம் நிருபிக்கப் படாத பின்னும் பைத்தியக்காரனாக அலைந்ததும் காரணம் புரியாத புதிர். கொண்டாட்ட நாளில் மகிழ்ச்சியோடு உண்டும் குடித்தும் இருந்த மரியம்மை தீடீரென்று இறந்து போனதும், அதனைத் தொடர்ந்து பிலோமி நோயுற்றுப் படுக்கையில் விழுந்ததும், மனைவியை இழந்த மிக்கேல் சொந்தக் கிராமத்தை விட்டுச் செல்லச் சம்மதித்து வல்லத்தையும், வீட்டையும் விற்கத் தயாரானதும் காரணங்களற்ற புதிர்நிகழ்வுகளாகவே நகர்கின்றன. மிக்கேலிடம் கையாளாக இருந்து வல்லம் ஓட்டக் கற்றுக் கொண்ட சிலுவையடியானே, மிக்கேலுக்கு நினைவு தப்பி விட்டது தெரிந்து முழுப் பணமும் கொடுத்து வல்லத்தை வாங்கியதாக ஏமாற்றுவான் எனப் பிலோமி நினைக்கவே இல்லை என்பதும் இன்னொரு புதிர் தான்.
தன்னைத் திருமணம் செய்து கொள்வான் என நினைத்த சாமிதாஸ் இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்யும் நிச்சய நாளுக்குத் தயாராகி விட்டான் என்பது கூட அவளுக்கு வாழ்க்கையின் மீது வெறுப்பை உருவாக்கி விடவில்லை.தன் தாய் உயிருடன் இருந்தவரை தனது வெறுப்புக்குரியவராக இருந்த வாத்தி, நோயிலிருந்து மீண்ட பிலோமிக்கு ஆறுதலாக மாறி ஆச்சரியத்தைத் தருகிகிறார். பிலோமி – வாத்தி உறவைக் கூட அந்தக் கிராமம் வேறு அர்த்தத்தோடு தான் பார்க்கிறது. தங்கள் குடும்பத்துப் பெண்ணொருத்தி இப்படித் தனித்து விடப்பட்டு விட்டாள் என்ற குற்றவுணர்வில் அவளது அக்காவும் அண்ணனும் கொஞ்சம் பணம் அனுப்புகிறார்கள். அதை மறுக்காமல் ஏற்றுக்கொள்ளூம் பிலோமிக்குத் தோழி ரஞ்சியின் நட்பும் வாத்தியின் ஆறுதலான உறவும் வாழ்க்கைக்குப் புதிய அர்த்தங்களைத் தரப் போதுமாக இருக்கின்றன. சாமிதாஸ் தனது இயலாமையைச் சொல்லி என்னை மன்னிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்வதோடு, நடக்கப்போகும் தனது கல்யாணத்தில் கலந்து கொள்ள வேண்டும் எனக் கேட்கும் போது வருகிறேன் எனச் சொல்லித் தனது அன்பை பெருக்கிக் காட்டி நிற்கிறாள்.
எதிர்பார்ப்புகளற்ற வாழ்க்கை பாரம்பரியமான ஒரு கடல்புரக் கிராமத்தின் அடிநாதமாக இருந்ததது என்பதையும், அதற்குள் லாபத்தைக் குறி வைத்து மீன் பிடிக்கும் லாஞ்சுகள் வந்தபோது ஊர்க்கட்டுப்பாடுகளைத் துச்சமாக மதிக்கும் மனப்பான்மையும், குரூரமும் போட்டியும் நிரம்பிய முரண்பாடும் வந்து சேர்ந்தன என்பதை மிக்கேல் குடும்பத்தின் கதைவழியே சொல்லும் வண்ணநிலவனின் எழுத்து முறையை யதார்த்த எழுத்தின் உச்சம் எனச் சொல்லலாம். வண்ணநிலவன் கடல்புரத்தில் எனப் பெயரிட்டு மீனவக் கிராமத்தை மையப்படுத்தி எழுப்பிக் காட்டும் முரணும், அதன் வழியே கிராமிய வாழ்வின் அடிப்படைக் குணமான எதிர்பார்ப்புகளற்ற வாழ்க்கையின் மீது செலுத்தப் பட்ட தாக்குதலும்,1960 களின் இந்தியக் கிராமங்களின் பொதுச் சித்திரம். மீனவ வாழ்க்கைக்குப் பதிலாக விவசாய வாழ்க்கை சார்ந்த சிதைவும் கிராமத்தை விட்டு நகரங்களுக்கு இடம் பெயர நேரும் சித்திரங்களும் பரவலான எழுத்தாகத் தமிழில் மட்டுமல்லாது இந்திய மொழிகள் பலவற்றிலும் பதிவாக்கப்பட்டுள்ளன. 
கடல்புரத்தில் நாவலை வாசித்து முடித்தபின், நாவலின் முதன்மை நோக்கம் எதுவாக இருக்கும் எனக் கேட்கும் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய பதில்கள் இரண்டு. கடலையும் கடற்கரையையும் வாழ்விடமாகக் கொண்ட மீனவக் கிராமம் ஒன்றில் வாழும் ஒரு குடும்பத்தின் கதையைச் சொல்லும் நோக்கம் முதலாவது.  இரண்டாவதாக நோக்கமாக,   கடற்கரைக்  கிராமங்களில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் நடந்த தொழில் முறை சார்ந்த மாற்றத்தின் விளைவுகள் ஏற்படுத்திய முரண்பாடுகள் எப்படி அடிப்படை மாற்றங்களுக்குள் நகர்த்திக் கடலோரக் கிராம வாழ்க்கையைச் சிதைத்தன என்பதைச் சொல்வதைச் சொல்லலாம். இந்நாவலின் மையப்பாத்திரமாகக் குரூஸ் மிக்கேலைக் கருதும்போது இத்தகைய சித்திரங்களும் முடிவுகளும் தோன்றுவதைத் தவிர்க்க முடியாது. ஆனால் குருஸ் மிக்கேல் இந்த நாவலின் மையப்பாத்திரமாக இருக்க முடியாது என்பதுதான் சரியான பார்வையாக இருக்க முடியும்.
தொடக்கத்தில் கடல்புர வாழ்க்கையை விட்டுவிட்டு மகன் செபஸ்தியானோடு வர மாட்டேன் என்று பிடிவாதம் பிடிப்பவனாக மிக்கேல் இருந்தாலும், தனது வாழ்க்கையின் எதிர்பாராத நிகழ்வுகளுக்கு முகம் கொடுக்க முடியாமல் தடுமாறிச் சொந்த வீட்டையும், வல்லத்தையும் திருச்செந்தூர் பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து விட்டுக் கிளம்பத் தயாராகிறார் மிக்கேல். ஆனால் மிக்கேலின் சின்னப் பெண் பிலோமியோ அதைவிடவும் சிக்கலான வாழ்க்கை முடிச்சுகளை எதிர்கொண்ட போதிலும் அந்தக் கிராமத்தின் அடிநாதமான அன்புவழியை வழங்கும் ஒரு கடல் தேவதையாகக் கடற்கரையில் வாழ்ந்து விடும் முடிவோடு இருக்கிறாள். தன் உடலைத் தந்தபோது சுகம் கண்ட காதலன் தன்னைக் கல்யாணம் செய்து கொள்ளாமல் கைவிட்ட போதிலும் அவனுக்கும் அன்பைத் தரும் பக்குவமும், எதையும் ஏற்றுக் கொள்ளும் நிதானமும் பிலோமியிடமே தங்கி நிற்கிறது. அந்த வகையில் அவளே இந்நாவலின் மையப்பாத்திரம் எனக் கருதத் தக்கவள். அவளையும் அவளது வாழ்க்கைத் தத்துவத்தையும் வாசகர்களுக்குத் தருவதன் மூலம் வண்ணநிலவன் தான் கண்டுணர்ந்த ஆச்சரியம் ஒன்றை அவர்களிடத்தில் கடத்திவிடப் பார்க்கிறார் என்பதையே இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
பெண்ணின் உடலை மையப்படுத்திக் கற்பு எனவும், காதலித்தவனையே அடைவது எனக் காலகாலத்துக்கும் தன்னை வருத்திக் கொள்வதும், குற்றவுணர்வுக்குள் தங்களைச் சிதைத்துக் கொள்வதும் நடுத்தர வர்க்க வாழ்க்கையில் இருக்கும் ஒரு போலித்தனமே ஒழிய, இந்தியக் கிராம வாழ்க்கையில் இருந்த ஒன்று அல்ல என்பதைச் சொல்லியுள்ளார். நடந்தவைகளை நடந்தவைகளாகக் கருதிக் கொண்டு நடக்கப் போகின்றவைகளுக்குத் தங்களைத் தயார் படுத்திக் கொள்வதில் தான் கிராமிய வாழ்வின் அடிநாதமான குணம் இருக்கிறது எனச் சொல்ல விரும்பிய வண்ணநிலவன் அதன் குறியீடாகவே பிலோமியைப் படைத்துக் காட்டுகிறார் என்பதை உணர வேண்டியுள்ளது. 
தனது எழுத்துகளின் மூலம் தன்னை இத்தகைய எழுத்தாளர் என்னும் முத்திரையை உருவாக்கிக் கொள்ளவே பலரும் விரும்புபவர். ஆனால் வண்ணநிலவன் அத்தகைய அடையாளத்திற்குள் தன்னைத் தக்க வைக்க நினைக்காதவர் என்பதை அவரது சிறுகதைகளையும் நாவல்களையும் வாசிக்கும் ஒருவர் சுலபமாகக் கண்டு பிடித்து விட முடியும். அவரது பிறப்பிடம் திருநெல்வேலி மாவட்டம் என்ற போதிலும் அவரது மொழியையோ கதைகளையோ திருநெல்வேலி மாவட்ட வட்டார மொழியில் எழுதப்பட்ட கதைகள் எனச் சுருக்கி விட முடியாது.  நீண்ட காலம் வாழ நேர்ந்த சென்னை என்னும் பெருநகரத்துப் பிரச்சினைகளை எழுதியவர் என்றும் வகைப்படுத்தி விட முடியாது. தனது சொந்த வாழ்க்கைக்கு முற்றிலும் அந்நியமான கதைக்களனையும் மனிதர்களையும் தேர்வு செய்து எழுதுவதால் கள ஆய்வு செய்து எழுதும் எழுத்துக்காரர் எனவும் வகைப்படுத்தி விட முடியாது. எப்போதும் நிகழ்காலத்தையே எழுதிக் காட்டும் கதைகளுக்கு அவர் தேர்வு செய்யும் வெளிகளும் பாத்திரங்களும் புதிது புதிதானவர்களாகவே இருந்திருக்கிறார்கள். அவரது எழுத்து அடையாளம் எனச் சொல்ல வேண்டுமென்றால் தான் எழுதும் எதையும் வெளியிலிருந்து பார்ப்பதோடு அந்நிகழ்வில் பங்கேற்றுவிடாத தன்னிலையைக் கொண்டவர் என்று வேண்டுமானால் சொல்லலாம். அவரது கதைக்குள் இருக்கும் எல்லாரும் அவரல்ல; அவர்களை அவர்களாக இருக்கும்படி எழுதிக் காட்டியவர் என்பதுதான் வண்ணநிலவனின் அடையாளம். இந்த அம்சத்தை அவரது கடல் புரத்தில் என்னும் முதல் நாவலிலேயே காண முடிகிறது. 

நன்றி: குமுதம் தீராநதி/ ஜனவரி 2012

2 comments :

சித்திரவீதிக்காரன் said...

வண்ணநிலவன் கடல்புரத்தில் குறித்த அருமையான பகிர்வு. அந்நாவலை நான் சென்ற ஆண்டுதான் படித்தேன். எனக்கு மிகவும் பிடித்த தமிழ்நாவல்களுள் கடல்புரத்திற்கு தனியிடம் உண்டு. அன்புவழிக்கு இந்நாவல் நம்மைக் கொண்டு சேர்க்கிறது. வண்ணநிலவனின் எழுத்துகள் குறித்த தங்களது கருத்துகள் அருமை. பகிர்விற்கு நன்றி.

வடகரை ரவிச்சந்திரன் said...

மிக நல்ல விமர்சனம்! நன்றி!