மே நாள் - மாணவப்பருவ நினைவுக்குறிப்பு

முதுகலை படித்தபோது இதழியல்,ஒப்பீட்டிலக்கியம், நாடகவியல், நாட்டுப்புறவியல் என நான்கு விருப்பப்பாடங்கள் இருந்தன. அதில் எனது விருப்பப்பாடம் இதழியல். அப்போது மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் இதழியல் பாடத்திற்கென இளம் விரிவுரையாளராகத் தமிழ்- இதழியலில் முனைவர் பட்டம் செய்திருந்த அ.சாந்தா அவர்கள் இருந்தார். மிகுந்த ஆர்வத்துடனும் ஈடுபாட்டுடனும் வழி நடத்துவார். எனக்கு ஓராண்டுகளுக்கு முன்னால் அதே விருப்பப்பாடத்தைத் தேர்வுசெய்த முன்னோடிகள் ஆர்.பாலகிருஷ்ணன், ந.முருகேசபாண்டியன் . அவர்களே இந்தப் பாடத்தை விரும்பிப் படித்து என்னைத் திருப்பி விட்டவர்கள். இந்தியக் குடிமையியல் பணித்தேர்வை ஆர்.பாலகிருஷ்ணனுக்கு அறிமுகம் செய்து வெற்றிபெற்றவராக்கியதே அந்த இதழியல் விருப்பப்பாடம் தான். நான்கு பருவத்தில் மூன்று தாள்கள் உண்டு. கடைசிப்பருவத்தில் செய்முறைப் பயிற்சிகளே அதிகம் இருக்கும்.

1. இதழ்வெளியீடு
2. நிழற்படங்களை உருவாக்குவது
3. பத்திரிகை நிறுவனத்தில் 15 நாட்கள் பயிற்சிவகுப்புகள்

மூன்றுவகைப் பயிற்சிகளும் வேலை வாய்ப்போடு தொடர்புடையன. ஆனால் நான் இதழியலில் தொடர்ந்து போகவில்லை. வேலையும் தேடவில்லை. முனைவர் பட்டத்திற்குத் தலைப்பு தேர்வு செய்தபோது திறனாய்வின் பக்கம் திரும்பிவிட்டேன். மூன்றிலும் கிடைத்த பயிற்சி அனுபவங்களைச் சொல்லி விட்டுக் கடைசியாக மே தின அனுபவத்தைச் சொல்வேன்.
*
பல்கலைக்கழக வளாகச் செய்திகளைத் திரட்டி 'செய்திக்களஞ்சியம்' என்றொரு இதழை - தினசரி வடிவில் கொண்டுவரவேண்டும். அதில் ஒவ்வொருவரும் செய்தி சேகரிப்பு, செய்தியாக எழுதுவது, கட்டுரையாக்குவது, தலையங்கம் எழுதுவது எனப் பயிற்சி பெறவேண்டும். பங்கெடுக்க வேண்டும். செய்திக்களஞ்சியத்தில் எழுதிய கட்டுரைக்காகவும் தலையங்கத்திற்காகவும் துறைத்தலைவர் தொடங்கி துணைவேந்தர் வரை சந்திக்க வேண்டியிருந்தது. கவனத்துடன் எழுத வேண்டும் என்று எச்சரிக்கை தந்தார்கள் பேராசிரியர்கள் தமிழண்ணலும் வ.சுப.மாணிக்கமும். முன்னவர் துறைத்தலைவர்; பின்னவர் துணைவேந்தர். மொழிச்செப்பம் இல்லை என்று சுட்டிக்காட்டினார்கள் துறை ஆசிரியர்கள். எல்லா விமரிசனங்களும் கண்டிப்பும் பாடங்களே என்று கடந்திருக்கிறோம்.
*
அது கறுப்பு-வெள்ளை பிலிம்ரோல் காலம். காமிராவில் பிலிம் போடுவது தொடங்கி, கோணம், தூரம், வெளிச்சம், நிழல் எல்லாம் பார்த்துப் படமெடுத்தல், பின்னர் இருட்டறையில் பிலிம் ரோலை வெளிச்சம் படாமல் எடுத்து உரிய திரவத்தில் கழுவிக் காயவைத்துப் பிரிண்ட் போடுவது வரை பழக வேண்டும். மதிப்பெண்ணுக்காக மூன்று படங்களை அளிக்க வேண்டும். பிலிமிலிருந்து அச்சாக்கி எடுப்பதுவரை பயிற்சி எடுக்க வேண்டும். படங்கள் எடுப்பதற்காக மதுரைக்குள்ளும் மதுரையைச் சுற்றியும் அலைந்து திரிந்தது பசுமையாக நினைவில் இருக்கின்றன, மீனாட்சியம்மன் கோயிலின் தெற்குக் கோபுரத்தில் ஏறி மதுரையைப் பார்த்ததும், வண்டியூர் தெப்பக்குளத்தையும் அருகே இருந்த வயல் வெளிகளில் திரிந்ததும், அதிகாலையில் ரயில் கிளம்புவதைப் படம் பிடித்ததும் நினைவில் இருக்கின்றன. படம் பிடிக்கப் போனபோது இதழியலை விருப்பப்பாடமாக எடுக்காத வகுப்புத் தோழிகளும் உடன் பயணித்துப் படத்திற்குள் நின்றார்கள். வளையல்கள் அணிந்த கைகளை மட்டும்; காதில் ஆடிய லோலாக்கு மட்டும், மல்லிகைச் சரம் சூடிய சடைப்பின்னலை மட்டும் என அண்மைக்காட்சிகள் எடுத்ததெல்லாம் நினைவில் இருக்கும் கூடுதல் சுவாரசியம்.

*
பத்திரிகை நிறுவனத்தில் பயிற்சிபெற - தினமணி, தினத்தந்தி/மாலைமுரசு, தினமலர் முதலான தினசரிகளோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் இருந்தது. ஒவ்வொரு நிறுவனத்திற்கும் யார்?யார் ? போவது என்று முடிவுசெய்து துறைத்தலைவர் ஒப்பத்துடன் கடிதங்கள் அனுப்பப்பட்டன. எனக்கு தினமணி கிடைத்தது. காலையில் மற்ற வகுப்புகளில் இருந்துவிட்டு மதிய உணவுக்குப் பின் அந்த நிறுவனங்களுக்குச் செல்ல வேண்டும். குறைந்தது 4 மணி நேரம் இருப்போம். பெரும்பாலும் முன்னிரவு 07.30 க்கு முடியும். தெப்பக்குளம் சாலையில் உள்ள தினமணி அலுவலகத்திலிருந்து விடுதிக்கு வர இரண்டு மணி நேரம் ஆகிவிடும். இரண்டு நகர்ப்பேருந்து ஏறி இறங்க வேண்டும். இரண்டு வாரம்/ 15 நாட்கள்/ பயிற்சியில் பிழைதிருத்தம், செய்தி எழுதுதல், செய்தி நிறுவனங்களிலிருந்து வரும் ஆங்கிலத்தகவல்களைத் தமிழாக்கிச் செய்தியாக எழுதுவது வரை பயிற்சிகள் பெற்றேன். அங்கிருந்து பெற்ற சான்றிதழை ஆசிரியரிடம் கொடுத்துவிட்டு வேலை முடிந்தது என்றிருந்தேன். ஆனால் அடுத்த நாள் மறுபடியும் இன்னுமொரு பயிற்சிக்குப் போ என்றார் விரிவுரையாளர் அ.சாந்தா. எனக்கு அவர் அளித்த தண்டனையல்ல; சலுகை.

தினமலர் பத்திரிகைக்குப் பயிற்சிபெறப் போகும் அணியில் நான்குபேர் மாணவிகள். பழங்காநத்தத்தில் இருக்கும் தினமலர் அலுவலகம் சென்று இரவில் திரும்பிவரக் கொஞ்சம் பயப்படுகின்றார்கள். அதனால் நீயும் போகவேண்டும். அதற்காகத் துறைத்தலைவரிடம் சிறப்புக் கடிதமும் வாங்கித் தருகின்றேன். உனக்குக் கூடுதல் பயிற்சி என்றார். போய் வருவதற்கு ஆகும் செலவுபற்றி யோசித்தேன். தயங்கித் தயங்கிச் சொன்னபோது தினமலருக்குப் போக வேண்டிய நான்கு வகுப்புத் தோழிகளும் ‘ராமசாமிக்கு ஆகும் செலவை நாங்கள் பங்குபோட்டுக்கொள்கிறோம்’ என்று சொல்லிவிட்டார்கள். இப்போது பின்வாங்க முடியவில்லை. சரியென்று ஒத்துக்கொண்டு போனேன்.

தினமலரில் பயிற்சி பெற்றபோது செய்திகளின் வகைகளை எழுதுவதில் உள்ள வேறுபாடுகளைக் கற்றுக்கொண்டேன். உள்ளூர்ச் செய்திகளை எப்படி எழுதுவது என்பதில் தினமலரின் பாணி புரிந்தது. உள்ளூர்ச் செய்திகளில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் பெயர்கள் அதிகம் இடமாறு பார்த்துக்கொண்டது தினமலர். அதன் மூலம் அந்தந்தக் கிராமங்களில் தினமலர் நிருபர்களுக்குத் தொடர்புகள் ஏற்படும் என்பது கணக்கு. அதேபோல் விளையாட்டுச் செய்திகளை எழுதுவதில் எதனை மையப்படுத்த வேண்டும்; தமிழ் வாசகர்களுக்கு எதனைச் சொல்ல வேண்டும்; எந்த வகையான மொழியில் எழுத வேண்டும் என்றெல்லாம் சொல்லித்தந்தார்கள். நான் எழுதிய கிரிக்கெட் செய்திகள் அப்படியே அச்சில் வந்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. அதுவரை கிரிக்கெட் செய்தியை எழுதும் வேலையைச் செய்தவர் மூத்த உதவி ஆசிரியர். அவர் தான் பலவற்றைக் கற்றுத்தந்தார். எப்போதும் கதர் ஜிப்பா; வேட்டியில் வருவார். பழுத்த காந்தியவாதி என்ற தோற்றம். மென்மையான பழுப்பு நிறத்தில் இருக்கும் ஆடைகள் அவை. காந்தியவாதிகளுக்குரிய வண்ணம் இல்லை என்பது அப்போது தெரியவில்லை. அவர் பெரும்பாலும் மாலை ஐந்து மணிக்கு மேல் வந்து கடைசி வரை இருந்து எல்லாப் பக்கங்களும் அச்சுக்குப் போனபின் வீட்டுக்குபோவார்.

தினமலர் பயிற்சிக்காலத்தில் மே முதல் தேதியும் அடங்கியிருந்தது. அன்று போனவுடன் பேச்சு வாக்கில் ‘மே நாள் வாழ்த்தெல்லாம் தினமலரில் இல்லையே என்று ஆரம்பித்து, உலகம் முழுவதும் உழைப்பாளர்களுக்கு மே தினத்துக்கு விடுமுறை விடுகின்றார்கள். ஆனால் இங்கு விடுமுறை கிடையாதா?’ என்று கேட்டு விட்டேன். அங்கிருந்த உதவி ஆசிரியர் சிரித்துக்கொண்டே பெரியவர் வருவார்; அவரிடம் கேளுங்கள் என்று சொல்லிவிட்டு ஒதுங்கிக் கொண்டார். அவர் பெரியவர் என்று சொன்னது காந்தியவாதியாக நான் நினைத்த அந்த மூத்தவரைத்தான். அப்போது நின்றுபோன அந்தப் பேச்சு அவர் வந்தபிறகு ஆரம்பித்தது. எங்களுக்குக் காபி எல்லாம் வாங்கித்தந்தார்.

எழுத வேண்டிய தகவல் குறிப்புகளைப் பிரித்துத் தந்தார். எழுதத் தொடங்குவதற்கு முன்னால் மே தினம்; உழைப்பாளர் உரிமை, விடுமுறை என்று ஆரம்பித்தேன். அவரது முகம் சிவந்துவிட்டது. உழைப்பு என்றால் என்ன என்று ஆரம்பித்து படைத்தல், காத்தல், அழித்தல் என்றெல்லாம் வகுப்பெடுத்துவிட்டு, அந்தத்தொழில்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு கடவுளை உருவாக்கிய இந்திய மரபில் உழைப்புக்கும் தொழிலுக்கும் அடையாளமாக இருக்கும் ஒருவரைக் குறிப்பிட வேண்டும் என்றால் விஸ்வகர்மா’வைத்தான் சொல்ல வேண்டும். உழைப்பவர்களுக்கு விடுமுறை தரவேண்டும் என்றால், அவரது ஜெயந்திக்கோ, நினைவு தினத்திற்கோ தான் விடுமுறை தரவேண்டும் என்று முடித்தார். அப்பாவியாக விஸ்வகர்மா தினம் எந்த மாதத்தில் வரும் என்று கேட்டேன். ஒரு புத்தகம் சொல்கிறேன்; படித்துப்பாருங்கள் என்று சொல்லி புத்தகத்தைக் குறிப்பிட்டார். சரியென்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.

மறுநாள் துறையில் பேரா.தி.சு.நடராசனிடம் அந்தப் புத்தகம் பற்றிக் கேட்டேன். சிரித்துக் கொண்டே அதெல்லாம் படிக்க வேண்டியதில்லை. அது ஆர்.எஸ்.எஸ். சிந்தனையைச் சொல்லும் புத்தகம் என்று சொல்லிவிட்டார். அவர் பங்குக்கு அவரொரு பாடம் நடத்தினார். உலகத்தொழிலாளர்களே ஒன்று கூடுங்கள் என்று எழுப்பப்பட்ட குரலின் வலிமையையும், சிகாகோ நகரில் நடந்த அமெரிக்கத்தொழிலாளிகளின் உரிமைப் போராட்ட வரலாறையும் சொன்னார். காந்திய வேடம் போடும் காவிக்காரர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டுப் பல்கலைக்கழகத்திற்குள் இருந்த தேநீர்க்கடைக்கு அழைத்துப் போய் காபி வாங்கிக் கொடுத்தார். இப்படித்தான் எனக்குள் அவ்வப்போது வலதும் இடதும் சந்தித்துச் சந்தித்து விலகிக் கொண்டே இருந்தது. ஆனாலும் எனது ஆர்வம் விஸ்வகர்மா தினம் எப்போது வரும் என்று தேடிக் கொண்டே இருந்தது. அந்த நாள் ஒரு குறிப்பிட்ட நாள் அல்ல என்றும் பஞ்சாங்கக் கணக்கின்படி வரும் என்றும் தெரிந்தது. அவ்வப்போது நாள், நட்சத்திரப்படி மாறிக்கொண்டே இருக்கும் என்பதும் புரிந்தது. 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரட்சிப்பின் உடலாக மாற்றப்படும் சீலியின் சரீரம்

மிதக்கும் வெளிகளை எழுதுதல்: நவீன கவிதையின் இரண்டு புதுமுகங்கள்

தொல்காப்பியம்; இலக்கணத்தைத் தாண்டி...