மு.நடேஷ் நினைவுகள்


நடேஷ் எனது நண்பர் அல்ல. ஆனால் எனக்கு விருப்பமான அரங்கியல் துறையோடு ஓவியராகவும் ஒளியமைப்புத்துறையில் இருந்தவர் என்ற வகையில் நீண்டகால் அறிமுகம் உண்டு. நான் இருபதுகளின் நிறைவுக்காலத்தில் தீவிரமாக நாடகத்துறையில் இயங்கிக் கொண்டும் எழுதிக்கொண்டும் இருந்தபோது அவரது நுழைவு இருந்தது. அப்போது அவருக்கு வயது இருபத்தைந்துகூட ஆகியிருக்காது. அத்துறை சார்ந்த கருத்துநிலையில் அவரோடு முரண்பட்டும் உடன்பட்டும் பயணம் செய்திருக்கிறேன்.
நீண்டகாலமாகவே சென்னை செல்லும்போது நாடக நிகழ்வுகள் இருந்தால் போய்ப் பார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பவன் நான். பார்க்கப்போகும் நிகழ்வுகளில் அவரது இருப்பு பலவிதமாக இருந்து கொண்டே இருந்தது. மிக அண்மைக்காலத்தில் செயல்பாடுகள் குறைந்த போதிலும் அவர் இருந்துகொண்டிருந்தார். அவரது இருப்பு பலவிதமான எண்ணங்களை உருவாக்கக் கூடியதாக இருந்தது. நேற்றிரவு (20/09/2024) முகநூல் பதிவுகள் அவரது மரணச்செய்தியைச் சொல்லிப்போயின. இனி அவர் இல்லை. ஆனால், அவர் நினைவுகளாக இருக்கப் போகிறார் என்பதால் பின்னிரவு வரை தூக்கம் வரவில்லை..

அவரைக் குறித்த நினைவுகள் பலவிதமானவை. மு. நடேஷ் என்ற பெயரை ஓவியக்கலையோடு சேர்த்து அறிமுகம் செய்தது கணையாழி. எனது பட்டப்படிப்புக் காலத்தில் நான் வாங்கிய கணையாழியின் அட்டையில் நவீன ஓவியர்களான ஆர்.பி.பாஸ்கரன், தட்சிணாமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி போன்றோரின் ஓவியங்கள் இடம்பெற்றன. அத்தோடு புதிதாக ஓவியக்கலையில் தீவிரமாக இயங்கவரும் இளைஞர்கள் பற்றிய அறிமுகங்களும் அவ்விதழில் எழுதப்பெற்றன. அப்படியொரு குறிப்பின் வழியாகவே அவரது பெயரும் கோட்டோவியமும் அறிமுகம். நேரடி அறிமுகம் எது என்று சொல்ல முடியவில்லை. ஆனால் 1987 இல் மதுரை குப்தா அரங்கில் நிஜநாடக இயக்கம் நடத்திய மூன்று நாள் நாடகவிழாவில் கூத்துப்பட்டறையும் ஒரு நாடகத்தோடு பங்கெடுத்தது. அந்நாடகத்தின் பின்னரங்கச் செயல்பாட்டாளர்களில் ஒருவராக அவரும் வந்திருந்தார். அதிலும் அவரது ஓவியங்கள் வரையப்பட்ட படுதாக்கள் நின்றிருந்தன. அப்போது அவரை ந.முத்துசாமியின் மகன் என்று அறிமுகம் செய்து வைத்தவர் ப்ரசன்னா ராமசுவாமி. நாடக விழாவின் பொறுப்பாளராக இருந்து அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்தவன் என்ற நிலையில் அவரையும் வரவேற்றுக் கையளித்தேன். பெரிதான உரையாடல் எதுவும் அப்போது நடக்கவில்லை.

நாடகமேடையில் இல்லாமல் அவரது ஓவியங்களைப் பார்த்த இடம், கூத்துப் பட்டறையின் முகவரியாக இருந்த வாலாஜா சாலை அலுவலகம். நினைவில் இருந்த கூத்துப்பட்டறை முகவரிக்குள் நுழைந்தபோது அங்கே ஸ்கிரீன் பிரிண்டிங் செய்யும் அமைப்புகளும் வண்ணக் குப்பிகளும் சிதறலாகக் கிடந்தன. சுவர்களில் அச்சடிக்கப்பட்ட கோட்டோவியங்கள் காய்ந்து கொண்டிருந்தன. இந்த ஓவியங்கள் எல்லாம் நடேஷின் ஓவியங்கள் என்று சொன்னவர் சி. அண்ணாமலை. அன்று மாலை அவரோடு தீவுத்திடல் சிற்றரங்கில் கூத்துப்பட்டறை நாடகம் ஒன்றை பார்க்கப் போனபோது உரையாடலுக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போது நான் புதுச்சேரி பல்கலைக்கழக நாடகப்பள்ளியின் விரிவுரையாளர்.

நாடகத்திற்கு முன்னால் தொடங்கிய உரையாடல், நாடகம் முடிந்த பின்னும் நீடித்தது. நாடகம், ஓவியம், எழுத்து போன்றனவற்றில் எனது கருத்தோடு பெரிதும் முரண்படுபவராக உடனடியாகப் புரிந்து கொண்டேன். அப்போதெல்லாம் கூத்துப்பட்டறை மாதம் ஒரு நாடகத்தைப் பயிற்சி செய்து சிற்றரங்கத்தில் மேடையேற்றிக்கொண்டிருந்தது. ஃபோர்டு பவுண்டேஷன் நிதியுதவியோடு நடிகர் பயிற்சிகள், அரங்க விவாதங்கள் என்பனவும் நடந்துகொண்டிருந்த நேரம். புதுவை நாடகப்பள்ளியைவிடவும் கூடுதல் முனைப்போடு அங்கே நடிகர்கள் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்தார்கள். சிற்றரங்கத்தில் பார்த்த நாடகங்கள் குறித்தெல்லாம் கூட விமரிசனக்குறிப்புகளை எழுதவும் சொல்லவும் தொடங்கியிருந்தேன். கூத்துப்பட்டறையோடு தொடர்புடைய பலருக்கும் அந்த விமரிசனக் குறிப்புகளில் உடன்பாடுகள் இருந்ததில்லை. மற்றவர்கள் பெரிதாக எதுவும் சொன்னதில்லை.

மு.நடேஷ் அப்படி இருக்கவில்லை. ஒரு கட்டத்தில் எனது நிலைபாட்டோடு முரண்பட்டு, “எல்லாவற்றிலும் அரசியல் குறியீடுகளைத் தேடும் உங்கள் பார்வை கலைக்கு எதிரானது” எனச் சொல்லிவிட்டார். அந்த விவாதத்திற்கு முன்பே ந.முத்துசாமியின்'கடவுள்' என்ற நாடகத்தை ‘எது’ என்ற புதிய குழுவிற்காகச் சங்கீத நாடக அகாதெமியின் இளம் இயக்குநர் திட்டத்தில் இயக்கியிருந்தார். கள்ளிக்கோட்டையில் நடந்த தென்மண்டல நாடக விழாவில் அரங்கேறிய அந்த நாடகம் தமிழ்நாட்டில் மேடை ஏற்றப்படவில்லை. அதுதான் பின்னர் நற்றுணையப்பன் என்ற பெயரிடப்பட்ட நாடகம் . ந.முத்துசாமியின் மகனாக இருந்ததால் அந்த வாய்ப்புக் கிடைத்தது என்று நானும் அந்த உரையாடலின் போது சொல்லிவிட்டேன். அந்த விவாதத்திற்குப் பிறகு அவரோடு விவாதங்கள் குறைந்துவிட்டன. ஆனால் சிரித்துக்கொள்வதும் பேசிக்கொள்வதும் நின்றதில்லை.

கூத்துப்பட்டறையின் நாடகங்களுக்கு ஒளியமைப்புச் செய்பவராக அவரைப் பல தடவை சென்னையிலும் புதுச்சேரியிலும் சந்தித்துள்ளேன். புதுவை கம்பன் கலையரங்கில் மேடையேற்றப்பட்ட இங்கிலாந்து என்ற நாடக மேடையேற்றத்தில் அவரது ஒளியமைப்பு கவனிக்கத்தக்கதாகவும் எழுத்து மொழிக்குக் கூடுதல் அர்த்தங்களை உருவாக்குவதாகவும் இருந்தது. அதற்காக மட்டுமல்லாமல் செம்மூதாய் நாடகத்திற்குச் செய்த ஒளியமைப்புக்காகவும் பாராட்டவே செய்தேன்.

அவரது ஒளியமைப்பில் முருகபூபதியின் செம்மூதாய் பார்வையாளர்களுக்குப் பேரனுபவத்தைத் தந்த ஒன்று. அதனைக் குறித்துக் காலச்சுவடுவில் எழுதிய கட்டுரையில் : "இந்நிகழ்வைப் பார்த்த பார்வையாளர்கள் அந்த தேரிக்காட்டின் பின்புலத்தில் வீசியெறிந்த ஒளி வெள்ளத்தில் அசைந்து வந்த முகம் தெரியா நடிகர்களின் -கதாபாத்திரங்களின் -நகர்வுகளை ரசித்துப் பார்த்தார்கள். செக்கச் சிவந்த தேரிக்காட்டு மணல் மீது நீலம் பாரித்த ஒளிவௌ¢ளம் படுவதற்கு முன்பு வானம் நோக்கி விசிறியடித்த மஞ்சள் ஒளி நடிகர்களின் உடல் மொழிக்குப் பலவிதப் பரிமாணங்களை உருவாக்குவதற்கு உதவியது . அந்தப் பரிமாணங்களே பார்வையாளனின் இருப்பைத் தக்க வைத்தது என்பதோடு, அவ்வப்போது அவர்களுக்கு ஆச்சரிய மனோபாவத்தையும் உண்டாக்கியது என்பது சொல்லப்பட வேண்டிய ஒன்று. அதற்குக் காரணமாக இருந்தது மு.நடேஷின் ஒளியமைப்பு. பாராட்டப்பட வேண்டிய ஒன்று". என எழுதினேன். அப்போது நான் திருநெல்வேலியிலிருந்து கிழக்குக் கடற்கரையோரத்தில் தேரிக்காட்டிற்கு நாடகம் பார்க்கப் போனேன். கைகளைப் பற்றிப் பாராட்டிப் பேசினேன்.

ந.முத்துசாமியின் இன்மைக்குப் பிறகு கூத்துப்பட்டறை முதன்மையாக நடிகர்களுக்கான பயிற்சிக்கூடமாகவும், அதன் ஒரு பகுதியில் பயிற்சி நாடகங்களைத் தயாரித்து மேடையேற்றும் அமைப்பாகவும் மாறித் தொடர்ந்து இயங்கியது. முழுநேர நடிகர்களாக இருந்த பசுபதி, கலைராணி, ஜோசுவா போன்றவர்கள் சினிமாவில் நடிகர்களாக ஆன நிலையில் கூத்துப்பட்டறை முதனமையான நடிப்புப்பள்ளியாகக் கருதப்பட்டது. அப்படியானதொரு தனமைக்குப் பின்னால் நடேஷின் வழிகாட்டுதல் இருப்பதாக அறிய முடிந்தது. அங்கே ப்ரசன்னா ராமசாமி, பிரளயன் ஆகியோர் இயக்கிய நாடகங்களைப் பார்க்கப் போனபோது நடேஷோடு இயல்பாகப் பார்த்துச் சிரித்துக்கொண்டதுண்டு. அந்தக் கால கட்டத்தில் அவரது உடல் இயக்கத்தில் முன்பிருந்த தீவிரம் தடைபட்டிருந்தது. அவரது உடல்நிலையை மற்றவர்களிடம் விசாரித்தேனே தவிர அவரிடம் எதுவும் கேட்டுக்கொண்டதில்லை.

மதுரைப் பகுதியில் போடப்படும் வீதி நாடகங்களையெல்லாம் 'நிஜநாடகம்' என்று சொல்வதைப்போலச் சென்னையில் தரப்படும் நடிப்புப் பயிற்சிக்கூடங்கள் எல்லாம் 'கூத்துப்பட்டறை' என்ற பெயரோடு அறியப்படுகின்றன. இவ்விரண்டும் நாடகக் குழுக்கள் என்ற அடையாளத்தைத் தாண்டிய அடையாளமாக மாறியிருக்கின்றன. அப்படி மாற்றித் தொடர்ச்சியை உருவாக்கியர்களில் ஒருவராக மு.நடேஷும் இருந்துள்ளார். அவரது வழிகாட்டுதலில் இயங்கிய கூத்துப்பட்டறை நடிப்புப் பயிற்சிக்காகச் சிறுகதைகள், கவிதைகள், ஓவியங்கள் போன்றவற்றைத் தெரிவு செய்து காட்சிப்படுத்தி நிகழ்வுகளாகத் தந்ததைச் சிறப்பாகச் சொல்லவேண்டும். குறிப்பாக அவரது நெருங்கிய நண்பரான எம்.டி.முத்துக்குமாரசாமியின் கவிதைகளைத் தனித்தனிக் கவிதா நிகழ்வுகளாகவும், கோர்க்கப்பட்ட கவிதைகளைக் கொண்ட குறுநாடகங்களாகவும் மேடையேற்றியது. அவற்றை நேரடியாகப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. ஒளிப்பதிவு செய்யப்பட்ட காணொளிகளாகப் பார்த்தபோதே புதிய அனுபவங்களைத் தந்தன.

ந.முத்துசாமியின் நாடகப்பிரதிகளைத் தாண்டி அவரது மீசையும் பெருங்குரலும் நினைவில் இருப்பவை. மாநில எல்லையைத் தாண்டி நடந்த தென்னிந்திய நாடக விழாக்களிலும் டெல்லியில் நடந்த தேசிய நாடகவிழாவில் அடர்த்தியான தனது மீசையைத் தடவியபடி ந.முத்துசாமி தயங்காமல் தமிழில் பேசுவார். அமைப்பாளர்கள் உடனடியாக ஒரு மொழி பெயர்ப்பாளரைத் தேடுவார்கள். தாய்மொழியில் பேசுவதைத் தயக்கமில்லாமல் செய்யும் அவரது நம்பிக்கையான குரல் கணீரென்று ஒலிக்கும். அவரைப் போலவே பெரிய தொங்கு மீசையோடும் பெருங்குரலோடும் நடேஷ் பேசிய பேச்சுகள் காதில் ரீங்காரமிடக் கூடியவை. சென்னையில் இருந்திருந்தால் அவரது உடலைக் கடைசியாகப் போய்ப் பார்த்துவர வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். தூரத்தில் இருப்பதால் இவற்றைத் தூரமாகவும் விலகலோடும் நினைத்துக்கொள்ளவே முடிகின்றது. இந்த நினைவுக்குறிப்பினால் தந்தையையும் தனயனையும் ஒருசேர நினைத்துக்கொள்ளும் நாளாயிற்று இன்று. கூத்துப்பட்டறையின் தொடர் இயக்கம் என்னவாக மாறும் என்ற கேள்வியும் அத்தோடு எழுகின்றது.

-----------
அம்ருதா, அக்டோபர், 24  



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மனு : சில சொல்லாடல்கள்

ராஜ்கௌதமனின் தலித்தியப்பங்களிப்புகள்

சந்திக்கும் கணங்களின் அதிர்ச்சிகள் : புலப்பெயர்வு எழுத்துகளின் ஒரு நகர்வு