விஜய்குமாரின் கையறு நிலைக்கவிதை

 


இயலாமையையும் கையறுநிலையையும் முன்வைக்கும் கவிதைகளுக்கு ஒரு பொதுக்குணம் உண்டு. அதனை எழுதும் கவிதைகளை வாசிக்கும்போது அந்தக் கவிதைகள் கவிகளின் அனுபவம் போலத் தோன்றுவதைத் தவிர்த்தல் இயலாத ஒன்றாக இருக்கும். குறிப்பாகக் கவிதைக்குள் உருவாக்கப்படும் கவிதை சொல்லியின் - கூற்றுப் பாத்திரத்தின் உறவுநிலைப் பாத்திரங்களின் இயலாமையையோ, கையறு நிலையையோ சொல்லும் விதமாக எழுதப்படும் கவிதையில் இந்தத் தன்மை தானே உருவாகிவிடுகின்றன.

கூற்றுப்பாத்திரத்தின் நேசிக்கப்படும் பாத்திரங்களின் இழப்பு அல்லது வலி அல்லது துயரமான இருப்பு போன்றவற்றை விவரிக்கும்போது கவிதைக்குள் ஒரு இருமை எதிர்வு உருவாக்கப்படுவது நிகழ்கிறது. இருமையில் ஒன்று பருண்மையான இருப்பாகவும் இன்னொன்று அரூபமான எண்ணங்களாகவோ, நினைவுகளாகவோ, கருத்தோட்டமாகவோ அமைகின்றன.

தமிழ்ச் செவ்வியல் கவிதைகளில் இப்படியான கையறுநிலைக் கவிதைகளின் தொகுப்பொன்றைத் திரட்டமுடியும். செவ்வியல் கவிதைகளைத் தாண்டிக் காப்பியங்களிலும் கூட இழப்பையும் கையறு நிலையையும் இரங்கலையும் விவரிக்கும் கவிதைகள் கதைப்போக்குக்குள் தனித்துவத்தோடு வாசிக்கக் கிடைக்கின்றன. அதனைத் தாண்டித் தனிப்பாடல்களில் அத்தகைய கவிதைகள் கிடைக்கின்றன. நவீனக் கவிதைகளில் காதலின் இழப்பு அதிகமாகவும் உறவுகளின் இழப்பைக் குறித்த கையறுநிலையும் ஆதர்சமிக்க ஆளுமைகளுக்கு எழுதப்பட்ட இரங்கல் பாக்களிலும் இந்த இரட்டைநிலையை - எதிரெதிர் நிலையில் காட்சிகளும் எண்ணங்களும் உருவாக்கப்பட்டுக் கவிதையாக்கம் நிகழ்ந்துள்ளது.

செவ்வியல் கவிதைகள் பலரும் அறிந்த கையறுநிலைக்கவிதைகளை வாசித்துப் பார்த்தால் இந்த இரட்டை எதிர்வுகளை உணரமுடியும். ஒன்று பாரி மகளிரின் கவிதை; இன்னொன்று அதியமானைக் குறித்த ஔவையின் கவிதை. பாரிமகளிர்,

அற்றைத் திங்கள் அவ் வெண் நிலவில்,
எந்தையும் உடையேம்; எம் குன்றும் பிறர் கொளார்;
இற்றைத் திங்கள் இவ் வெண் நிலவில்,
வென்று எறி முரசின் வேந்தர் எம்
குன்றும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே!

ஒருமாத இடைவெளியில் இருந்து இல்லாமல் போன தந்தை, பறம்பு மலை என்பதைச் சொல்லிவிட்டு இப்போது அவ்விரண்டும் இல்லாமல் போய்விட்ட இழைப்பை ஒற்றைச் சொல்லால் -இலமே என விளிப்பதின் வழியாகத் தொலைந்துபோன அன்பு, உறவு, பாசம், உடைமை என எல்லாவற்றையும் காட்டித் தங்களின் கதியற்ற மனநிலையை முன்வைக்கின்றனர். ஔவையும் அதியமானோடு இருந்த கள்ளுண்டு களித்த நாட்களை நினைவுக்குள் கொண்டு வந்து நிறுத்திக் காட்டுகிறார்:

சிறியகட் பெறினே, எமக்கீயும்; மன்னே!
பெரிய கட் பெறினே,
யாம் பாடத், தான்மகிழ்ந்து உண்ணும்; மன்னே!
சிறுசோற் றானும் நனிபல கலத்தன்; மன்னே!
பெருஞ்சோற்றானும் நனிபல கலத்தன்; மன்னே!
என்பொடு தடிபடு வழியெல்லாம் எமக்கீயும்; மன்னே!
அம்பொடு வேல்நுழை வழியெல்லாம் தான்நிற்கும் மன்னே!
நரந்தம் நாறும் தன் கையால்,
புலவு நாறும் என்தலை தைவரும்! மன்னே
அருந்தலை இரும்பாணர் அகன்மண்டைத் துளையுரீஇ,
இரப்போர் புன்கண் பாவை சோர,
அஞ்சொல் நுண்தேர்ச்சிப் புலவர் நாவில்
சென்றுவீழ்ந் தன்று, அவன்
அருநிறத்து இயங்கிய வேலே!
ஆசாகு எந்தை யாண்டுஉளன் கொல்லோ?
இனிப், பாடுநரும் இல்லை; பாடுநர்க்குஒன்று ஈகுநரும் இல்லை;
பனித்துறைப் பகன்றை நறைக் கொள் மாமலர்
சூடாது வைகியாங்குப், பிறர்க்கு ஒன்று
ஈயாது வீயும் உயிர்தவப் பலவே!

அவனின் இன்மையைச் சொல்லும் ' இனிப் பாடுநரும் இல்லை; பாடுநர்க்கொன்று ஈகுநரும் இல்லை' என எழுதும்போது துயரத்தின் உச்சநிலைக்குக் கொண்டு செல்கிறார். இக்கவிதையோடு இன்னும் சில இரங்கல் கவிதைகளையும் அதியமானின் இழப்பின் மீது பாடித்தவித்துள்ளாள் ஔவை.

*****

இம்மாத உயிர்மையில் வந்துள்ள இந்த நெடுங்கவிதைக்குள் விஜய்குமாரின் கவிதையாக்கமும் அதே எதிர்வுக் கட்டமைப்பைக் கொண்டதாக இருக்கிறது. அம்மாவின் இருப்பு நிலையை - காட்சிப்படுத்துதலைச் சொல்லும்போது சிலவரிகளை எழுதிக் காட்சிப்படுத்திவிட்டு, அம்மாவைப் பற்றிய எண்ணங்களை-அவளது அன்பை, பிடிவாதத்தை, விருப்பத்தை, நேசத்தைச் சொல்லும்போது விவரிப்பு நடைக்குள் செல்கிறார். அதன் மூலம் அந்த அம்மாவைப் பற்றிச் சொல்லும் கவிதையின் கூற்றுப்பாத்திரத்தின் கையறுநிலையும் தவிப்பும் ஒருசேர வாசிப்பவர்களுக்கு வந்து சேர்கிறது.

காட்சிப்படுத்தும் தொடக்க வரிகளையும் இறுதியில் வரும் காட்சிப்படுத்தும் வரிகளையும் மட்டும் இங்கே தருகிறேன்:

"பிளக் பிடுங்கப்பட்ட ரோபோபோல
வலிப்பு வரும்போதெல்லாம்
கீழே வீழ்வாள் அம்மா".

                        *****
ஜவ்வு மிட்டாய் கழியிலிருக்கும் பொம்மை
சுழியிலிருந்து கீழிறங்கி நடந்தால்
அம்மாபோலவேதான் நடக்கும்
தாங்கித் தாங்கி

மொத்தமாக அந்தக் கவிதையை வாசிக்கும்போது இருநிலை எதிர்வு உருவாக்கப்படும் கட்டமைப்பை மனதில் கொண்டு வாசித்துப்பாருங்கள். விஜய்குமாரின் கவிதை ஆக்கத்தின் திறன் - துன்பியலை எழுதும் அவரது தவிப்பு நிலை உங்களுக்குப் புரியவரும். இனி,

உயிர்மை /அக்டோபர் 44-45 இல் வந்துள்ள முழுக்கவிதை உங்கள் வாசிப்புக்காக.

பிளக் பிடுங்கப்பட்ட ரோபோபோல

வலிப்பு வரும்போதெல்லாம்

கீழே வீழ்வாள் அம்மா.

 

அம்மாவின் நிழல் என்றாவது விழவேண்டும்

மெத்தைகளால் ஆன நிலத்தின்மீது

 

அம்மாவிற்குப் பிடிவாதம் அதிகம்

செல்லக் கோபங்கள் அதிகம்

குழந்தையைப் போலவே அடம்பிடிப்பாள்

குழந்தையைப் போலவே அடிப்பாள்

சப்தமாக வாயில் கோரையொழுக அழுவாள்

 

அவள் உடலில் ஒரு புறம்

அவளது பால்யத்தை விட்டு வெளிவரவில்லை

அவளது மூளையிலும்

 

இயல்பான கண்களுக்கு

சற்றே மாறுகண்

இயல்பான கைகளுக்குக்

கொஞ்சம் எட்ட முடியாத உயரத்தில்

அம்மாவின் ஒரு கை

இயல்பான கால்களுக்குக்

கொஞ்சம் எட்ட முடியாத தூரத்தில்

ஒரு கால்

இயல்பான மூளைக்கு நிகராக

வளராத பிடிவாதம் அவளின் மூளை

 

அம்மா அவளது இடதுபுறத்தால் கைவிடப்பட்டாள்

தன் வலது புறத்தால் வளர்ந்து வந்தாள்

 

 

சூம்பிய வயிறு

பலூன்போல் வீங்கியபோது

யாருக்குமே நம்பிக்கையில்லை

 

நான் இறந்து பிறப்பேன் அல்லது

பிறந்தவுடன் இறப்பேனென

அனைவரும் நினைத்தார்கள்.

 

நான் பிறக்கும்போது

தான் இறந்துவிடுவோமோ என

அம்மா பயந்தாள்.

 

நான் பிறந்தேன்

அவள் கருப்பையின் இடதுபுறத்திலிருந்து

 

அம்மா பிறந்தது முதலே

பாவாடை சட்டைதான்

திருமணமானது முதல்

நைட்டிதான்

 

அம்மாவின் பழைய ஆடைகளை

வேறுவேறு தேவைகளுக்காகக்

கிழித்து எடுத்துக்கொள்வோம்

கிழிந்த பாவாடைகள்

வீட்டின் கால்மிதி துணியாகின

லேசான ரவிக்கைகள்

சமையலறை கரித்துணிகளாயின

காபிக்கறை படிந்த

பழைய நைட்டிதான்

என் தலையணை உறை

 

அரிசி மூட்டைகளுக்கும்

தோட்டத்துச் செடிகளுக்கும் கொடிகளுக்கும்

அவள் பாவாடை நாடாதான் கயிறு

அவள் வாசனையே அறியாத

ரேசன் புடவைகள்தான்

தானியக் கிடங்கு


அம்மாவின் புடவை வாசனையென்றால்
என்னவென்றே தெரியாது.
பாதி கயிறாலான தூளியில்
என்னைத் தாங்கியதெல்லாம்
அம்மாவின் நைட்டிதான்.

உத்தரத்தில் முடிபோட்டுக் கிடக்கும்
நைட்டி தூளியை அவ்வப்போது
ஊஞ்சலாக்கி விளையாடுவோம்
சிறுமியாகவும் அம்மாவாகவும்
மாறிமாறி ஆடிக்கொண்டிருப்பாள் அம்மா
வாழ்வுக்கும் மரணத்துக்குமாய்
இன்னும் ஆடிக்கொண்டேயிருக்கிறது தூளி

 

தெரு தாண்டாதா அம்மா

குலதெய்வக் கோயிலுக்கு

குடும்பத்தில் கல்யாணத்திற்கு

வலிப்பு அதிகம் வரும் நாட்களில்

மருத்துவமனைக்கு என

வெளியூருக்குப் போகும் நாட்களில் மட்டும்

சந்தோசமாய் இருப்பாள்

ஆண்டுக்கு நான்குமுறை அந்த நாட்களில்தான்

அவளுக்குப் புடவை கட்டிவிடுவோம்

 

ஜவ்வு மிட்டாய் கழியிலிருக்கும் பொம்மை

சுழியிலிருந்து கீழிறங்கி நடந்தால்

அம்மாபோலவேதான் நடக்கும்

தாங்கித் தாங்கி

 

தோட்டத்துப் பூக்களைப் பறித்தால்

முதல் பூவை

அம்மா சாமிப்படத்தில் வைப்பாள்

இரண்டாவது பூவை

தன் தலைப்பின்னலில்

மற்ற பூக்களை அவள் ஏன்

யாருக்கும் கொடுக்காமல்

தானே நின்று துப்புகிறாளென

யாருக்கும் தெரியவில்லை.

Vijayakumarklk96@gmail.com

------------------------------------------------------------------





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மனு : சில சொல்லாடல்கள்

ராஜ்கௌதமனின் தலித்தியப்பங்களிப்புகள்

சந்திக்கும் கணங்களின் அதிர்ச்சிகள் : புலப்பெயர்வு எழுத்துகளின் ஒரு நகர்வு