இந்தியாவும் கனடாவும் உரசிக்கொள்வது ஏன்?


காலிஸ்தான் போராளிகளை முன்வைத்துக் கனடாவோடு இந்திய உறவு சிக்கலாகி வருகிறது. இந்திய உளவுத்துறை ரா( RAW)வின் செயல்பாடுகள் மீது கனடாவுக்குச் சந்தேகங்கள் ஏற்பட்டதின் தொடர்ச்சியில் ஏற்பட்ட உரசல், ஒன்றிய அரசின் மீது நம்பிக்கை இன்மையாக மாறியிருக்கிறது. தூதர்களின் வெளியேற்றம் வரை நடந்துவிட்டன.
இந்திய அரசின் அயலகத்துறை வழியாக நடக்க வேண்டியவற்றை உள்துறை அமைச்சகமும் அதன் கட்டுப்பாட்டில் இருக்கும் உளவுத்துறையும் செய்வதாகக் கனடா அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பெயரையும் அதன் குற்றப்பத்திரிகையில் இடம்பெறச்செய்துள்ளது. இதன் தொடர்பில் பல்வேறுவிதமான சிக்கல்கள் உண்டாக வாய்ப்புள்ளது. அரசுகளுக்கு இடையே பன்னாட்டு உறவுகள் மட்டுமல்லாமல், கனடாவில் வாழும் இந்தியக் குடிமக்களின் வாழ்வியலும் நெருக்கடிகளைச் சந்திக்கலாம்.

இந்திய அரசின் உளவுத்துறையின் செயல்பாடுகள் தொடர்பில் கனடா மட்டுமல்லாமல், அமெரிக்காவும் சந்தேகம் கொண்டுள்ளது. காலிஸ்தான் ஆதரவு சீக்கியர் கொலையில் இந்தியாவின் தூதரக அதிகாரிகளுக்குப் பங்கிருப்பதாக வாஷிங்டன் போஸ்ட் போன்ற அமெரிக்கப் பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டுள்ளன. அதனை இந்தியப் பத்திரிகைகளும் ஏற்றுச் செய்திகளாக்கியுள்ளன்.

***********

காலிஸ்தான் என்பது இந்தியப்பரப்பில் 300 ஆண்டு காலமாக உச்சரிக்கப்படும் ஒரு சொல்லாடல். கால்சா என்னும் பண்பாட்டு அமைப்பிலிருந்து உருவான ஒரு நிலைப்பரப்பைக் குறிப்பதே காலிஸ்தான். அந்த நிலப்பரப்பு, இந்தியாவுக்குள் இருக்கும் பஞ்சாப் மாநிலத்தையும் பாகிஸ்தானில் இருக்கும் பஞ்சாப் மாநிலத்தையும் இணைத்து உருவாக்கக்கூடிய பகுதி.

சீக்கியச் சமயக் கொள்கைகள் அடிப்படையில் அமைக்கப்படும் அரசால் சீக்கியர்களும், சீக்கியர்கள் அதிகமாக வாழும் பஞ்சாப்பும் ஆளப்பட வேண்டும் என்பது அதன் அடிப்படை சித்தாந்தம். 15 ஆம் நூற்றாண்டிற்குப் பின் நடந்த முஸ்லீம் அரசர்கள் படையெடுப்பின் போது அவர்களைத் தீவிரமாக எதிர்த்தவர்கள் கால்சா அமைப்பினர்.

கால்சா அமைப்பினர் இந்திய சுதந்திரப் போராட்ட காலத்திலும் தங்களின் தனி அடையாளத்திற்காகப் போராடினார்கள். பிரிட்டானியர்கள், இந்தியாவிற்குச் சுதந்திரம் வழங்கியபோது, தனிச் சீக்கிய நாடு – காலிஸ்தான்- வேண்டுமெனக் கோரிக்கை வைத்தார்கள். ஆனால் அது நடக்கவில்லை.

இந்திய விடுதலைக்குப் பின் காலிஸ்தான் தனிநாடு கோரிக்கை ஓய்ந்திருந்தது என்றாலும் 1960- 70 களில் திரும்பவும் எழுந்தது. அந்தக் காலகட்டத்தில் இந்தியாவெங்கும் மொழி அடிப்படையிலான தேசிய இனங்களின் தனித்துவக்குரல்கள் எழுந்தன என்பது வரலாறு. தமிழ்நாட்டிலும்கூடத் தனிநாடு கோரிக்கையோடு இயக்கங்கள் நடந்தன. அந்த இயக்கங்கள், மாநிலங்களுக்கான சுயாட்சி உரிமைக் கோரிக்கைகளோடு மாநிலக்கட்சிகளாக மாறித் தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியைப் பிடித்தன. தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியைப் பிடித்தது போல பஞ்சாபில் அகாலிதளம் எழுந்து ஆட்சியைப் பிடித்தது.

50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அரசியலில் விவாதிக்கப்படும் காலிஸ்தான், கனடாவோடு தொடர்படுத்திக் கடந்த ஓராண்டில் அதிகம் விவாதிக்கப்படுகிறது. அதன் பின்னணியில் ஓர் அரசியல் கொலை உள்ளது. கொலை செய்யப்பட்டவர் பெயர் ஹர்தீப்சிங் நிசார் என்னும் காலிஸ்தான் ஆதரவாளர்/போராளி. 2023 செப்டம்பரில் கனடாவில் கொலை செய்யப்பட்டார். அவரைக் கொலை செய்த அமைப்பு லாரன்ஸ் பிஷ்னாய் என்பவர் வழிகாட்டலில் இயங்கும் ஒரு வன்முறைக் குழு. இந்தக் குழுவிற்கு இந்திய உளவு அமைப்புகள் தகவல்களைப் பரிமாறுகின்றன; நிதியுதவி செய்கின்றன என்பதுதான் கனடாவின் குற்றச்சாட்டு. அதே மாதிரியான குற்றச்சாட்டை அமெரிக்காவின் பத்திரிகைகளும் செய்தியாக்கியுள்ளன.

கொலை செய்யப்பட்ட ஹர்தீப்சிங் நிஜார், கனடாவில் நுழைவதற்குரிய விசா இல்லாததால் இரண்டு முறை திருப்பி அனுப்பப்பட்டவர். பின்னர் நாடற்றவர் என்ற தகுதி அடிப்படையில் அகதி உரிமை பெற்று அங்கு வாழ்ந்து வந்தார். நிஜார் இந்தியாவிலும், இந்தியாவிற்கு வெளியேயும் இயங்கும் காலிஸ்தான் இயக்கத்தின் முக்கியமான நபர். இந்தியாவிற்கு எதிராக இயங்கும் காலிஸ்தான் இயக்கச் செயல்பாடுகளை ஒருங்கிணைப்புச் செய்பவர்களில் ஒருவர் என்பது இந்தியாவின் குற்றச்சாட்டு.

இந்தியாவிற்குள் காலிஸ்தான் என்னும் தனிநாட்டை உருவாக்கும் நோக்கத்தோடு இயங்கும் இயக்கங்களைக் கனடா அனுமதிக்கக்கூடாது என்பது இந்தியாவின் எதிர்பார்ப்பு. ஆனால் கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் தஞ்சம் அடையும் அந்நிய நாட்டு அரசியல் அகதிகளின் உரிமைகளையும், அரசியல் கோரிக்கைகளையும் ‘தேசிய இன உரிமைகள்’ என்ற கோணத்தில் அணுகி அவற்றுக்கு ஆதரவு தெரிவிக்கின்றன. தனிநாட்டுக் கோரிக்கைகளை ஏற்கின்றன. அத்தகைய இயக்கங்கள் அங்கு செயல்படுவதைத் தடுப்பதில்லை. தார்மீகமாக ஆதரவு தெரிவிப்பதும் இயங்க அனுமதிப்பதும் அந்நாட்டின் இறையாண்மையோடும் அரசியல் பார்வையோடும் தொடர்புடையன.

கனடா, அமெரிக்கா போன்ற நாடுகள் மட்டுமல்ல. பல்வேறு நாடுகள் பல்வேறு விதமாகப் பிறநாட்டு அரசியலில் தலையிடவே செய்கின்றன. இந்தியாவும் கூட இலங்கை, வங்கதேசம் போன்றவற்றின் உள்நாட்டு அரசியலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தலையிட்டே வந்துள்ளது. இத்தகைய தலையீடுகள் அந்தந்த நாடுகளில் நடக்கும் தேர்தல் காலங்களில் முக்கியமான விவாதப்பொருள்களாக மாறுவதுண்டு. பின்னர் நீறுபூத்த நெருப்பாக அடங்கி இருக்கும்.

நிசார் கொலை தொடர்பில் இருக்கும் பிஷ்னாய் குழுவைப் பின்னின்று இயக்குவது இந்தியாவின் உள்துறை அமைச்சகம் என்பதை இந்தியா மறுத்தபோதும், அதனை ஏற்றுக் கொள்ளாமல், உரிய ஆதாரங்களை இந்திய அரசிடம் அளித்துள்ளது கனடா அரசாங்கம். ஆனால் அந்தத் தகவல்களையும் பிஷ்னாய் குழுவிடம் அளித்து மேலும் அதன் செயல்பாடுகளுக்கு இந்தியாவின் உள்துறை அமைச்சகம் ஊக்கம் அளிக்கிறது எனக் குற்றம் சாட்டுகிறார் கனடாவின் ஜனாதிபதி ஜஸ்டின் ட்ரூடோ. இதற்கும் மறுப்புத் தெரிவித்துள்ளது இந்தியா. சரியான தகவல் எதனையும் கனடா தரவே இல்லை என்பது இந்தியாவின் வாதம். இந்த வாத – எதிர்வாதங்களின் விளைவாகத் தூதரக அதிகாரிகள் வெளியேற்றம் நடந்துவிட்டது.

நிசார் கொலைக்கு முன்பும் இந்திய – கனடா உறவைச் சிதைக்கும் வன்முறை நடவடிக்கைகளைக் கனடாவிலிருந்து செயல்படும் காலிஸ்தான் ஆதரவாளர்களும் பாபர் கால்ஸா போன்ற அமைப்புகளும் நடத்தியுள்ளன. விமானங்களைக் கடத்துதல், குண்டு வைத்தல் போன்றனவற்றை அவை நடத்தியுள்ளன. அவற்றுள் மிகப்பெரிய நிகழ்வாக 1985 ஜூன் மாதம் நடந்த ஏர் இந்தியா 182 விமானத் தகர்ப்பைச் சொல்லவேண்டும்.

கனடாவின் மான்றியால் நகரிலிருந்து லண்டன், டெல்லி வழியாக மும்பைக்கு வரவேண்டிய விமானம் லண்டனில் தரையிறங்குவதற்கு முன்பு அட்லாண்டிக் பெருங்கடலின் மேல் வெடிக்கப்பட்டது. அயர்லாந்து கடற்கரைக்கருகில் வெடித்துச் சிதறிய அந்த விமானத்தில் 329 பேர் இருந்தனர். அவர்களில் 268 கனடியர்களும், 27 இங்கிலாந்து நாட்டினரும் 22 இந்தியர்களும் இருந்தார்கள். இப்பெரும் வெடிவிபத்துக்குப் பின்னும் அவ்வப்போது காலிஸ்தான் ஆதரவு சீக்கியர்கள் விமானங்களைத் தகர்க்கும் வேலையைச் செய்தே வந்துள்ளனர்.

அந்தக் காலகட்டங்களில் எல்லாம் கனடா அரசு, இந்திய அரசோடு ஒத்துழைப்புடன் இருந்து வந்தது. ஏனென்றால் இரண்டு நாடுகளுமே காமன்வெல்த் அமைப்பில் இருக்கும் பெரிய நாடுகள். அத்துடன் ஜி-20 என்னும் அமைப்பிலும் இரண்டு நாடுகளும் உறுப்பினர்களாக உள்ளனர். ஆனால் கடந்த தேர்தலில் இப்போது ஜனாதிபதியாக இருக்கும் ஜஸ்டின் ட்ரூடோவின் பொறுப்பிற்குப் பின் காலிஸ்தான் ஆதரவு சீக்கியர்கள் மீதான பார்வையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

தங்களுக்கான தேசம் ஒன்றை உருவாக்கும் நோக்கத்தோடு செயல்படும் காலிஸ்தான் அமைப்பைத் தடைசெய்யவோ, அதன் பொறுப்பாளர்களைக் கைது செய்து தடுக்கவோ முடியாது . அப்படிச் செய்வது கனடா பின்பற்றும் அரசியல் உரிமைக் கொள்கைகளுக்கு எதிரானது என நினைக்கிறார். இப்படி நினைப்பதின் பின்னணியில் அவரது தலைமையில் இயங்கும் அரசின் கூட்டணி அமைப்பும் இருக்கிறது. அவரது அரசில், இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்து கனடாவில் குடியேறியுள்ள சீக்கியர்களின் பிரதிநிதிகள் இருக்கிறார்கள். அமைச்சராகவும் சீக்கியர் இருக்கிறார். கனடாவின் வான்கூவர், பிரிட்டிஷ் கொலம்பியா போன்ற மாநிலங்களில் சீக்கியர்கள் எண்ணிக்கை அதிகம். அவர்களின் வாக்குகள் அவரது தேர்தல் வெற்றிக்குப் பயன்பட்டுள்ளது. விரைவில் வரவிருக்கும் தேர்தலிலும் அவருக்கு அந்த வாக்குகளும் சீக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவும் தேவை.

இப்போதுள்ள இந்திய ஒன்றிய அரசைத் தாங்கி நிற்கும் கூட்டணிக் கட்சிகளின் நிலையைப் போன்றதே அங்குள்ள நிலைமையும். இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்த சீக்கியர்களின் எண்ணிக்கை அதிகம். அவர்கள் அங்கு வேளாண்மையில் ஈடுபட்டுள்ளார்கள். குறிப்பாகக் கனடா முழுவதும் பெரும் வாகனங்களை இயக்கும் ட்ரக் டிரைவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். இவ்விரு தொழில்களும் கனடாவின் பொருளாதாரத்தோடு தொடர்புடையன. சீக்கியர்களைப் போலவே புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களின் வாக்கும் ஜஸ்டின் ட்ரூபோவின் ஆதரவுத் தளமாக உள்ளன. அவர்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளே அவரின் அரசைத் தாங்கி நிற்கிறார்கள்.

தேர்தல் அரசியல் கணக்குகள் இருநாடுகளிலும் உண்டு. இந்திய அரசாங்கம் மறைமுகமான செயல்பாடுகள் மூலம் அந்நிய நாட்டின் இறையாண்மையைப் பாதிக்கும் செயல்களைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும். தூதரக நிலையில் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலமாகவும் பொது அமைப்புகள் மூலமாகவும் நல்லுறவைப் பேணும் வழிமுறைகளைக் காணவேண்டும். இல்லையென்றால் இந்தியாவிலிருந்து கனடாவில் வேலைக்காகவும் வியாபாரத்திற்காகவும் தொழில் முனைவோராகவும் சென்றுள்ள இந்தியக் குடிமக்கள் பெரிய அளவு பாதிக்கப்படுவார்கள்.

இரண்டுமுறை (2016 & 2023) கனடாவில் முறையே 15 நாட்களும் ஒருமாதமும் இருந்துள்ளேன். அப்பெரும் நிலப்பரப்பில் குறுக்கும் நெடுக்கும் பயணம் செய்துள்ளேன். கனடாவில் இந்தியர்களின் இருப்பில் இருக்கும் மகிழ்ச்சியை நேரடியாகப் பார்த்திருக்கிறேன். இந்தியப் பொருட்களும் மனிதர்களும் இவ்விரு நாடுகளிலும் பரவிக்கிடக்கிறார்கள்.

இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே பெரிய அளவு ஏற்றுமதி – இறக்குமதி வியாபாரங்களும் உள்ளன. அதில் ஈடுபட்டுள்ளவர்கள் சீக்கிய இந்தியர்கள் மட்டுமல்ல. குஜராத்திகளும், ராஜஸ்தானிகளும் தென்னிந்தியர்களும் உள்ளனர். குறிப்பாகத் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்குப்பின் ஏராளமான கணினிப் பொறியாளர்கள் – தமிழ் இளைஞர்கள் அங்கே குடியேறியுள்ளனர். கனடியப் பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவர்களின் எண்ணிகையும் கணிசமானது. அவற்றைக் கருத்தில் கொண்டு அயலகத்துறையின் மூலமாக மட்டுமே இதனைப் பேசித் தீர்ப்பதே சரியான வழிமுறையாகும்.

===========================================

 ஜூனியர் விகடன் இணைய இதழில் வந்துள்ளது/ 21-10-24

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மனு : சில சொல்லாடல்கள்

சந்திக்கும் கணங்களின் அதிர்ச்சிகள் : புலப்பெயர்வு எழுத்துகளின் ஒரு நகர்வு

ராஜ்கௌதமனின் தலித்தியப்பங்களிப்புகள்