ஜெயந்தன் விருது விழா

நிறைவில் ஒரு நாடகம்
தொடக்கத்தில் ஒரு குறும்படம்

கலையின் ஓர்மை என்பது தொடக்கத்தை எப்படி முடிக்கிறது என்பதில் இருக்கிறது. அதுபோலவே ஒரு கலைசார்ந்த நிகழ்ச்சிகளையும் நல்ல ஓர்மையுடன் அமைக்க வேண்டும் என நினைப்பவர்கள் தொடக்கமும் முடிவும் எப்படி இருக்க வேண்டும் எனக் கணித்துத் திட்டமிடுவார்கள். அப்படியானதொரு திட்டமிடல் “ஜெயந்தன் விருது வழங்கும் விழாவில் இருந்தது. வழக்கமான வரவேற்புரை, நன்றியுரையைத் தாண்டி இருந்தன. ஆனால் மொத்த நிகழ்வையும் உரைகளாகத் திட்டமிடாமல் பார்வையாளர்களுக்கு ஜெயந்தனின் எழுத்துகளைக் குறும்படமாகவும், நாடக நிகழ்வாகவும் தரவேண்டும் எனத் திட்டமிட்டிருந்தது மொத்த நிகழ்வுக்கும் ஒருவித ஓர்மையை உருவாக்கித் தந்திருந்தது.
நாடகம், சிறுகதை, நாவல், கவிதை என ஒவ்வொரு வடிவத்திலும் சிறந்தது இது எனத் தெரிவுசெய்த நடுவர்கள் தங்களின் தெரிவுமுறையைச் சொல்லும் உரைகளில் முதலில் இருந்தன. கோமதிசங்கரின் ‘நீலகண்ட பிரம்மச்சாரியைச் சிறந்த நாடகமாகத் தெரிவு செய்த நான் (அ.ராமசாமி) நடுவர் உரையோடு, கூட்டத்தலைமை உரையையும் வழங்கினேன். ரா.செந்தில்குமாரின் பதிமூன்று மோதிரங்கள் சிறுகதைத் தொகுதியைச் சிறந்த சிறுகதைத் தொகுதியாகத் தெரிவுசெய்த சு.வேணுகோபால் தனது தெரிவுமுறையைச் சொன்னார். அதேபோலக் கவிதையில் கார்த்திக் திலகனின் ‘அல்லியம்’ தொகுப்பைத் தெரிவு செய்தது ஏன் என்பதைக் கரிகாலன் முன்வைத்தார். முகம்மது யூசுப்பின் ’கொத்தாளி’ நாவலைத் தெரிவுசெய்த நாஞ்சில் நாடனின் தெரிவுரை வாசிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக விருது அளித்து வாழ்த்துரைக்க அழைக்கப்பட்டிருந்த கலைமாமணி நாசர் விருதுகளை வழங்கிச் சிறப்புரையாற்றினார். அவரது உரையில் ஜெயந்தனின் ஓராள் நாடகமான ‘ ஒரு ரூபாய்’ நாடகத்தை மேடையில் நடிப்பேன் என்றும் குறிப்பிட்டார். தனியாள் நாடகம் ஒன்றை மேடையில் நடிக்கவேண்டும் என்பது அவரது விருப்பம். அந்த விருப்பதை நினைவுபடுத்தும் விதமாக எனது உரையில் ஒரு ரூபாய் நாடகத்தின் தன்மையைக் குறிப்பிட்டு நான் பேசியது அந்த அறிவிப்பைச் செய்யத்தூண்டியது. அவரது உரைக்கு முன்னால் விருதுபெற்றவர்களின் ஏற்புரைக்கு வாய்ப்பளித்திருக்க வேண்டும். ஏனோ அது நிகழவில்லை. எனது தொடரும் ஒத்திகைகள் நாடகத்திற்காக ஜெயந்தன் விருது பெற்றபோது-2016- அந்த வாய்ப்பு வழங்கப்பட்டது நினைவில் இருக்கிறது.

*******
விருது விழாவின் நிறைவு நிகழ்ச்சியாக இருந்த ஜெயந்தனின் ‘ மனுஷா.. மனுஷா.. நாடகத்தை பரீக்‌ஷா நாடகக்குழுவிற்காக நண்பர் ஞாநி இயக்கியபோதே பார்த்திருக்கிறேன். அப்போது போதிய ஒத்திகைகள் இல்லாமல் மேடையேற்றியதாக இருந்தது. சென்னையில் முழுநேர நடிகர்கள் இல்லாமல் பரீக்‌ஷாவை செயல்படும் நாடகக்குழுவாக வைத்திருப்பதில் உள்ள சிரமங்களைச் சொன்னார். ஆனால் இப்போது முழுமையான ஒத்திகையுடன் பரீக்‌ஷா குழு அந்நாடகத்தை மேடையேற்றியது. இதே இயக்குநரின் இயக்கத்தில் முன்பும் பார்த்துள்ளேன்.
இந்த மேடையேற்றத்தில் குறியீட்டுத் தன்மை கொண்ட உடை, ஒப்பனைகள் இருந்தன. மன்னரை ஏமாற்றும் வியாபாரிகளாக வரும் பாத்திரங்களுக்கு அமெரிக்க அடையாளம் தரப்பட்டிருந்தது. அரசரும் அமைச்சர், தளபதி, அரசவைக்கவி, கோமாளி ஆகியோரின் உடல் மொழியும் உடைகளும் குறியீடுகளோடு இருந்தன. ஆனால் முழுமையாகப் பார்வையாளர்களுக்குப் போய்ச்சேரும் விதமாக அமையவில்லை. நாடகத்தை நிகழ்த்துவதற்கான மேடையாக இல்லாமல், பேச்சு மேடையில் நிகழ்த்தும்போது சில குறைகள் தவிர்க்க முடியாது. நடிகர்களின் அசைவுகள், நடைகள் கட்டுப்படுத்தப்படும். அதேபோல் ஒளியமைப்பின் வழியாக உருவாக்கக்கூடிய உணர்வுகளை உருவாக்கமுடியாது.

மனுஷா.. மனுஷா.. நாடகம் அங்கத நாடக வகையிலானது. பழிகரப்பாகவும் செம்பொருளாகவும் இருவித அங்கதத்தோடும் மொழியைப் பயன்படுத்தியிருப்பார் ஜெயந்தன். நாடகத்தின் முன்பகுதி மறைமுகமாக அங்கதத்தொனியை -அரசனின் செயல்பாடுகளைப் பேசும். பின்பகுதியில் நேரடியாகவே அத்தொனி வெளிப்படும்.இவ்விரு தன்மையையும் உள்வாங்கி மேடை வடிவாக்கம் செய்ய வேண்டும். அந்தத் தன்மை இந்த மேடையேற்றத்தில் இல்லை.

விருது நிகழ்வின் தொடக்க நிகழ்வாக இருந்த குறும்படக் காட்சியில் ஜெயந்தனின் ‘வாழ்க்கை ஓடும்’ சிறுகதை காட்டப்பட்டது. அப்படத்தை இயக்கியவர் முத்துசுந்தரன். வாழ்க்கை ஓடும் கதையைப் பெரிய அளவு மாற்றமில்லாமல் இயக்கிய முத்து சுந்தரன், கதையின் சாராம்சத்தைக் கொண்டுவரும் விதமாக இயக்கியிருந்தார். ஒரு சிறுகதையை, நாடகம் அல்லது சினிமாவாக மாற்ற நினைக்கும்போது அதற்கான தனித்த வடிவாக்கம் - design - செய்யவேண்டும். அப்படிச் செய்யாமல் எழுதப்பெற்ற வடிவத்திலேயே காட்சிப்படுத்தினால் சினிமாவாக ஆகாமல் போய்விடும். நடித்தவர்களும் இயக்குநரும் புதியவர்கள் என்பது தெரிந்தது. மொத்தப்படத்திற்கான வடிவம் எப்படி முக்கியமோ, அப்படியான வடிவாக்கம் ஒவ்வொரு காட்சியிலும் வேண்டும். அதனை முழுமையாக்குவது நடிகர்களின் நடிப்பாலும் காமிராவின் கோணத்தாலும் நகர்வுகளாலும் உருவாகும். அதற்கு இசைப்பின்னணி கூடுதல் வலு சேர்க்கும். இதெல்லாம் முழுமையாக அந்தப்படத்தில் இல்லை.
***********
குறைசுட்டல் என்பது நாடகமும் குறும்படத் தயாரிப்பும் மேலும் சிறப்பாக வேண்டும் என்பதற்கான சுட்டல்கள் மட்டுமே. இதில் விருது நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கு இடமில்லை. அவர்கள் தங்கள் நிகழ்ச்சியில் ஒரு நாடகமும் குறும்படமும் இடம்பெற வேண்டுமென நினைத்த வகையில் சிறப்பானது. ஜூன் 22, தி.நகர் தக்கர்பாபா பள்ளியின் விநோபா அரங்கு பார்வையாளர்களால் நிறைந்திருந்தது.
*****
சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் ஜெயந்தன் விருது நிகழ்வு தொடர்வதாக அறிவித்த செய்தியைப் பார்த்திருந்தேன். ஏப்ரல் மாதத்தொடக்கத்தில் ஒரு நாள் சீராளன் அலைபேசியில் தொடர்புகொண்டார். நாடகப்பிரிவிற்கு நடுவராக இருக்க வேண்டும் என்றார். நான் இலங்கைப் பயணத்திற்கான தயாரிப்பில் இருப்பதால் உடனடியாக வாசித்து முடிவு சொல்ல முடியாது எனச் சொல்லி மறுத்தேன். இலங்கை போய்விட்டு வந்து நிதானமாக வாசித்துச் சொல்ல காலம் உண்டு என்று சொன்னார். ஒப்புதல் தந்தபின் அனுப்பி வைத்தார். வந்திருந்த நாடகங்களில் கோமதி சங்கரின் ‘ நீலகண்ட பிரம்மச்சாரி’ வரலாற்றுப் பாத்திரங்களாகவும் இலக்கிய ஆளுமைகளாகவும் அறியப்பட்டவர்கள் வாழ்க்கை வரலாறுகளை ஆய்வு செய்து நீலகண்டரின் வாழ்க்கையோடு இணைத்துக் காட்சிகளாக்கி இருந்தார் கோமதி சங்கர். நற்றிற நாடக வடிவம் இல்லையென்றாலும் தொடர்காட்சி அடுக்குகள் என்ற சொல்முறையில் எழுதப்பெற்ற அந்நாடகம் மற்ற பனுவல்களைவிடவும் முக்கியமானதாகத் தோன்றியது. அதனைத் தெரிவு செய்து அனுப்பினேன்.

=======================================================

சில குறிப்புகள்


ஜெயந்தன் இலக்கியவகைகள் ஒவ்வொன்றிலும் தனது காத்திறமான் பங்களிப்பைச் செய்தவர் நாவல்களாக -
1.இந்தச்சக்கரங்கள்,
2முறிவு,
3.பாவப்பட்ட ஜீவன்
4.தேடுகிறவர்கள்,
5. கிளி
6.பொன் மலர்  
என ஆறும்,
1. மையம்
என ஒரு குறுநாவலும் ,சிறுகதைத் தொகுப்புகளாக
1. சம்மதங்கள்
2. அரும்புகள்
3.மனச்சாய்வு
4.மீண்டும் கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்
5. நிராயுதபாணியின் ஆயுதங்கள்
6. ஞானக்கிறுக்கன் கதைகள்
7. அவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள்
என ஏழும். அரங்க நிகழ்த்து நாடகங்களாக
1.மனுஷா .. மனுஷா
2. ஆண் தர்மம,
3. நிறை காப்பு
4. இயக்க விதி
5.நினைக்கப்படும்
6. தெய்வம்
7. கணக்கன்
8,ஒரு ரூபாய்
9.சுவர்கள்
10 மெய் (கவிதை நாடகம்)
வானொலி நாடகங்களாக
1. சிறகை விரி வானம் உனது
2.கற்றவர்கள்
என இரண்டும், கவிதை வடிவில்
1. கவிதைகள், பாடல்கள், காட்டுப்பூக்கள்
என ஒன்றும், கட்டுரைத் தொகுப்பாக
1. எண்ணம்
எனவும் எழுதியவர்.
அவர் தனது ‘நினைக்கப்படும்’ நாடகத்திற்காக ஒரு முறையும்(1978 ) சிறுகதைக்காக ஒருமுறையும் (1985) இலக்கியச்சிந்தனையின் விருதைப் பெற்றவர். வானொலி நாடகத்திற்காக அரசின் விருதையும், சிறந்த சிறுகதைத் தொகுப்புக்காகச் சுஜாதா விருதையும் (2010) ஜெயந்தன் நாடகங்கள் நூலுக்காகத் தமிழக அரசின் விருதையும் பெற்றவர்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நீங்கள் இந்து அல்ல என்றால் ..

நவீனத்துவமும் பாரதியும்

தி.சு.நடராசனின் திறனாய்வுப் பார்வைகள் :தமிழ் அழகியல், தமிழகத்தில் வைதீக சமயம்