எழுதிப்பழகிய கைகள்- யுவன் சந்திரசேகரும் வண்ணநிலவனும்

 யுவன் சந்திரசேகர்: காலகட்டத்தின் கதை

இம்மாத உயிர்மையில் வந்துள்ள ’நகுதற் பொருட்டு’ கதையின் நிகழ்வெளிகளாகச் சேலமும் மதுரையும் உள்ளன. ஆனால், இரண்டும் ஒன்றுபோல இடம் பெறவில்லை. சேலம் நிகழ்காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளோடு தொடர்புபடுத்திக் காட்டப் படுகிறது. ஆனால் மதுரை நினைக்கப்படும் வெளியாக - கடந்த கால நிகழ்வுகளின் வெளியாக விரிந்துள்ளது.
நிகழ்காலத்தில் - சேலத்தில் சந்தித்த பாத்திரத்தின் வழியாகக் கடந்த காலத்திற்குள் நுழையும் கதைசொல்லி பாத்திரம், தனது மாணவப்பருவத்து நண்பர்கள் இருவரின் எதிரும் புதிருமான எண்ணங்களையும் செயல்பாடுகளையும் அலசிக் காட்டுவதாகக் கதையின் காட்சிகள் வந்து போகின்றன. அந்த அலசல்கள் தனிநபர்கள் இருவரின் மனப்பாங்குகள் என்பதாகத் தோன்றலாம். ஆனால் அந்த இருவரையும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் மாணவர்களாகச் சித்திரித்ததின் மூலம் அக்காலகட்டப் பொதுப்போக்கொன்றை விவாதிக்கும் நோக்கத்திற்குள் நுழைகிறது கதை. அந்த விவாதம் இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்து மாணவ மனநிலை என்பதால், இந்தக் கதை முக்கியமான கதையாக மாற்றம் பெறுகிறது.
யுவன் சந்திரசேகரின் கதைகளுக்கான வெளியாக மதுரை நகரமும் வைகைக்கரை கிராமங்களும் இருக்கின்றன என்பதைக்கொண்டு அக்கதைகளில் வரும் மனிதர்களை மதுரையின் மனிதர்களாகச் சொல்லிவிட முடியாது. மனிதர்களின் பொதுக் குணத்தையும் இருப்புகளையும் நகர்வுகளையும் எழுதும்போது அந்த மனிதர்கள் குறிப்பிட்ட வெளியில் இருந்தார்கள் எனக் காட்டுவது புனைகதையின் பொதுக்கூறு ஒன்றை உருவாக்கும் புனைவாக்கம் மட்டுமே. அதைத்தாண்டி அந்த இடத்திற்குப் பெரிய அளவு முக்கியத்துவம் இல்லை. ஆனால் இந்தக் கதையில் இடம்பெறும் கல்லூரி, மதுரையில் ஒரு தனித்துவமான கல்லூரி என்பதைக் கதை பதிவு செய்துள்ளதால் மதுரைக்கதையாக ஆக்க யுவன் முயன்றுள்ளதும் தெரிகிறது.
அரசியல் பார்வைகள் வேறுவேறாக இருந்தபோதிலும் அதனை விவாதிக்கும்போது ஆவேசமாகவும் பிடிவாதமாகவும் வெளிப்பட்ட கருத்தியல்வாதிகளாக இருப்பவர்கள், சட்டென்று மாறி நண்பர்களாகப் பேசிச் சிரித்து மகிழ்ந்திருக்கிறார்கள். அதே நேரம் அவர்கள் நம்பிய அரசியல் கருத்துக்களுக்காகக் கல்லூரி வளாகத்திலும் வெளியிலும் விசாரணைகளைச் சந்திக்கும் நெருக்கடிக்குள்ளும் நுழைந்திருக்கிறார்கள். அப்படி நுழையும்போது நட்பு மட்டுமே முதன்மையாக இருந்திருக்கிறது.
1980 களின் மாணவர்களிடையே கவர்ச்சிகரமான அரசியல் பார்வையாக இருந்த தீவிர இடதுசாரித்தனம். புரட்சிகரமான மாற்றங்களை விரும்பியவர்கள் மெல்லமெல்ல அதனையெல்லாம் கைவிட்டு முதலாளியத்திற்குள் நகர்ந்தது. இடதுசாரித்தனத்தின் மீது கற்பனையான ஈர்ப்பு ஏற்பட்டு விலகலை அடைந்த தலைமுறையின் மீது விமரிசனப் பார்வையை முன்வைத்துள்ள கதையின் வெளியாக மதுரையின் ஒரு கல்லூரி இருக்கிறது. அவர் விவரிக்கும் கல்லூரி வெளியோடு தொடர்புடையவன் என்பதால் இந்தக் கதையும் கதையின் நிகழ்வுகளும் எனக்கும் நெருக்கமாக இருக்கிறது. அந்தக் காலகட்டத்தின் மனிதர்களில் ஒருவன் என்பதால் கதையின் பாத்திரங்களில் ஒருவனாகவும் என்னைப் பொருத்தி வாசிக்க முடிந்தது.

வண்ணநிலவனின் இரண்டு கதைகள்
அதே உயிர்மையில் ‘நாற்றம்’ என்றொரு கதையை எழுதியுள்ளார் வண்ணநிலவன். இதைப் படித்தபின்பே காலச்சுவடுவில் வந்துள்ள ’உறுத்தல்’ கதையும் வாசிக்கத் தோன்றியது. இப்போது தனி வடிவமாகச் சொல்லப்படும் குறுங்கதை வடிவத்தில் இருக்கிறது உறுத்தல். ஒற்றை நிகழ்வு; ஒற்றை மனநிலையின் அலைவு என ஆரம்பித்து அங்கேயே முடிகிறது உறுத்தல் கதை. ஆனால் உயிர்மையில் வந்துள்ள நாற்றம் கூடுதல் நிகழ்வுகளோடும் சில திருப்பங்களோடும் வாழ்க்கையின் இயல்பான போக்கில், அவரவர்க்கான இணைகள் எங்கிருந்தோ வந்து சேரும் கீழ்த்திசை வாழ்வின் ஆச்சரியத்தைக் குதூகலமோ, குறைசொல்லலோ இல்லாமல் முன்வைத்துள்ளது. கதையாக வடிவம் கொள்வதில் நாற்றம் அடைந்திருக்கும் முழுமையை , உறுத்தல் அடையவில்லை.
வண்ணநிலவனின் புனைகதைகள் சார்ந்து எனக்கு எப்போதும் ஓர் ஆச்சரியம் உண்டு. சொந்த ஊரிலிருந்து - திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து விலகிப்போய்ப் பல பத்தாண்டுகளைத் தாண்டிவிட்டார். ஆனால் புனைவுகளில் அதே மனிதர்கள், அதே உறவுகள், அதே மனநிலைகள் எனக் கதைக்குள் உருவாக்கித் தந்துகொண்டே இருக்கிறார். அவரது கதைகளை மட்டும் வாசிக்கும் ஒருவருக்கு நெல்லையிலேயே வாழ்ந்து கொண்டிருப்பவர் வண்ணநிலவன் என்ற எண்ணமே தோன்றும். நீண்ட காலமாகச் சென்னையில் வாழ்பவர் என்று சொல்லிப் புனைவுகளில் இருந்து தடயம் காட்ட நினைத்தால் தோற்றுத்தான் போகவேண்டும். எப்போதாவது உறவினர் வீட்டு நல்லது கெட்டதுக்கு மட்டும் வந்துபோவதின் மூலம் நெல்லைக்குள் இருக்கும் மனதை - பால்யகாலத்து மனநிலையைப் புதுப்பித்துக் கொண்டு பால்யகாலத்து நெல்லையை எழுதிக் கொண்டே இருக்கிறார். வாழ்க்கை தந்த நெருக்கடியால் சொந்த ஊரை விட்டு இடம் பெயர்ந்து புதிய வெளிகளுக்குள் தள்ளப்பட்ட பின்பும் படைப்பில் சொந்த ஊருக்குள்ளேயே அலைந்துகொண்டிருப்பது வரமா? சாபமா? என்று கேட்டால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதில் சொல்லக்கூடும்.
நத்தைக்குக் கூண்டு சுமையில்லை என்று சொல்பவர்கள் வரம் என்பார்கள். கூந்தங்குளத்துக்கு வந்து போகும் பெலிகன், நாரைகள் போன்றன சாகசப்பறவைகள் என்பார்கள். கூண்டு வாழ்க்கையா? சாகச வாழ்க்கையா? அவரவர் விருப்பம் அவரவர்க்கு.

வண்ணநிலவனோடு சேர்த்து நெல்லையின் மூவர்களாகச் சித்திரிக்கப்படும் கலாப்ரியா, வண்ணதாசன் ஆகியோரும் தொடர்ந்து எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களும் அதே ஆச்சரியத்தைத் தருகிறார்கள் என்றாலும் ஒரு வித்தியாசம் உண்டு. கலாப்ரியா இடைகாலிலும் வண்ணதாசன் பெருமாள்புரத்திலும் நிலைகொண்ட பருந்துகள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நீங்கள் இந்து அல்ல என்றால் ..

நவீனத்துவமும் பாரதியும்

தி.சு.நடராசனின் திறனாய்வுப் பார்வைகள் :தமிழ் அழகியல், தமிழகத்தில் வைதீக சமயம்