எல்லை தாண்டும் ஆசைகள்


ஒரு நிலப்பரப்பின் ஆட்சித்தலைவனைக் குறிக்கும் பலசொற்களுள் ஒன்று வேந்தன் என்பது .தன் ஆளுகைக்குட்பட்ட நிலப்பரப்பில் வாழும் மனிதர்களையும் பிற உயிரினங்களையும் தன் விருப்பம்போல வாழும்படியான உத்தரவுகளைச் சட்டங்களாக்கி ஆண்ட நிர்வாகிகளைக் குறிக்கப் பயன்பட்ட நிலமானிய காலப் பெயர்ச்சொல் அது. மன்னன், அரசன், போன்றன அதே அதிகாரங்களை எடுத்துக் கொண்ட நபர்களைக் குறிக்கப் பயன்பட்ட வேறு சொற்கள்.

எதையும் கேள்விக்குட்படுத்தித் தேர்வு செய்து ஏற்றுக் கொள்ளச் சொல்லும் மேற்கத்தியக் கல்வி முறையோடு அதனை நிர்வாகம் செய்யப் பல்கலைக்கழகங்கள் என்ற அமைப்பையும் சேர்த்தே கொண்டு வந்தார்கள் ஆங்கிலேயர்கள். அப்போது அவ்வமைப்பின் தலைமை நிர்வாகியாக இருந்தவரின் பதவிப்பெயர் வைஸ் சான்ஸ்லர்-Vice-Chancellor- என்பது. அதுவும் சேர்ந்தே இந்தியாவுக்குள் வந்தது. அச்சொல்லை இந்திய மொழிகள் ஒவ்வொன்றும் அதனதன் போக்கில் மொழி பெயர்த்துக் கொண்டன. தமிழ் தன்னிடம் இருந்த வேந்தன் என்ற சொல்லைச் சேர்த்து உள்வாங்கிக் கொண்டது [ தமிழை வளர்ப்பதில் அதிக அக்கறை காட்டுபவர்களாகச் சொல்லிக் கொள்ளும் பலரும் அதற்கு நிலமானிய கால அர்த்தங்களைத் தருவதில் தான் கவனம் செலுத்துகின்றனர் என்பது தனியாகப் பேசப்பட வேண்டியது]. துணைவேந்தர் என்ற சொல்லில் வேந்தர் இருப்பதனாலேயே நிலமானிய கால அர்த்தங்களும் அதிகாரங்களும் இருப்பதாகக் கருதும் ஆபத்துக்கள் நேர்ந்து விடுவதைப் பல நேரங்களில் காண முடிகிறது.

சமீப காலங்களில் பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விதிக்கப்படும் தடைகளும் அறிவிப்புகளும் அந்த எல்லைகளைத் தொட்டுவிட்டு வருகின்றன என்றுதான் சொல்லவேண்டும். மாணாக்கர்கள் உடுத்த வேண்டிய ஆடைகளில் வரன்முறைகள், கல்லூரிகளில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளில் எவ்வகை நடனங்களை ஆடலாம் என்ற உத்தரவு, கல்லூரிக்குச் செல்லிடப்பேசிகளைக் கொண்டுவரத்தடை என்ற கட்டுப்பாடுகள் எனத் தொடர்ச்சியாகப் பல அறிவிப்புகளை - ஆணைகளைப் பிறப்பித்து செங்கோலாட்சியைச் செவ்வனே செய்து வருகிறார் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர். அவரது ஆணைகள் எந்தவித எதிர்ப்புகளுமின்றி ஏற்றுக் கொள்ளப்படும் நிலையில் தமிழ் நாட்டிலுள்ள பிறவகைப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கும் இதே மாதிரியான ஆசைகள் வரும். அவர்கள் இதற்கும் மேலான கட்டுப்பாடுகளுடன் கூடிய அறிவிப்புகளை உத்தரவுகளாகப் பிறப்பிப்பார்கள். மாணவர்களூக்கு விதிக்கப்படும் உத்தரவுகளைப் போலவே தொடர்ச்சியாக ஆசிரியர்களுக்கும் கூடத் தடை உத்தரவுகள் வரக்கூடும்.

மாணவர்களுக்குத் தேவையான கல்விமுறையைத் திட்டமிடல், அவற்றில் தேவையான மாற்றங்களைச் செய்தல், பிறதேசங்களின் கல்வி வளர்ச்சியை அறிந்து அதனை நமது மாணவர்களுக்குக் கொண்டு வர முயலுதல், அதற்கேற்ற வகையில் ஆசிரியர்கள் பயிற்சி பெற ஏற்பாடு செய்தல் எனக் கல்வியுலக எல்லைக்குள் தன்னாட்சி அதிகாரம் கொண்ட பதவிதான் துணைவேந்தர் பதவி.. அவரது அதிகாரம் தன்னிச்சையானது என்றாலும் ஒவ்வொரு பல்கலைக்கழகங்களிலும் இருக்கும் கல்விக்குழு, ஆட்சிப்பேரவை மற்றும் ஆட்சிக்குழு (Senate and Sindicate) போன்றவற்றிற்குப் பதில் சொல்லவேண்டிய பொறுப்புடைய பதவி என்பதும் உண்மை. அந்த வகையில் நிலமானிய காலத்துப் பெயரால் அழைக்கப்பட்டாலும் ஜனநாயக காலத்தின் பதவிதான்.

இந்தப் பதவிக்கான பணிகளை அதன் எல்லைகளுக்குள் நின்று சிறப்பாகச் செய்தவர்கள் பலருண்டு. அவர்களின் பணிகள் கல்வியுலகவாசிகளான மாணாக்கர்களாலும் ஆசிரியர்களாலும் எப்பொழுதும் நினைத்துக் கொள்வது முண்டு. அதேபோல அந்தப் பதவிக்குரிய எல்லைகளைத் தாண்டி மாணாக்கர்களின் மீது அக்கறை கொண்ட வர்களாகக் காட்டிக் கொண்டவர்களையும் கல்வியுலகம் நினைவில் வைத்துக் கொள்ளத்தான் செய்யும். பொறியியல் கல்லூரிகளின் நிர்வாகத்தையும் மாணவர்களுக்குத் தரவேண்டிய கல்வியையும் ஒழுங்குபடுத்திக் கட்டுப்படுத்தும் பணிகளைச் செய்ய வேண்டிய துணைவேந்தரின் அறிவிப்புகள் உண்மையில் கல்வியுலகம் சார்ந்தது தானா..? அல்லது கலாசாரக் காவல் என்னும் பணியைச் செய்யும் ஒருவரின் அறிவிப்புக்களா,,? என்று யோசிக்க வேண்டியுள்ளது. துணைவேந்தரின் அறிவிப்புகளில் ஒன்று பொறியியல் கல்லூரிகளில் நடக்கும் கலைநிகழ்ச்சிகளில் திரைப்படப்பாடல்களுக்கு ஆடுவதைத் தடை செய்கிறது. அந்த உத்தரவை அடுத்து அவர் பேசிய பேச்சுகளில் சினிமாப் பாடல்களுக்கு ஆடுவது தடுக்கப்பட்டுள்ளது. ஆனால் பரதம், நாட்டுப்புற நடனம் போன்றவற்றிற்குத் தடை இல்லை என்கிறார். இப்படிச் சொன்னவர் அப்படி அனுமதித்ததற்குச் சொன்ன காரணம் விநோதமாக இருந்தது. திரைப்படப் பாடல்களுக்குப் பயிற்சி செய்வதற்காக மாணாக்கர்கள் அதிக நேரம் செலவிடுகிறார்களாம்.. அது உண்மையாகக் கூட இருக்கலாம். ஆனால் ஆடுவதற்கு அனுமதி அளித்துள்ள பரதம், நாட்டுப்புற நடனம் போன்றவற்றைப் பயிற்சி செய்ய வேண்டும் என்றால் திரைப்படப் பாடல்களுக்கு ஆகும் நேரத்தை விடக் கூடுதலான நேரமும், பணமும் வேண்டும் என்பது தான் உண்மை. இந்தத் தடை ஒருவகையில் மாணாக்கர்களின் கலையீடுபாட்டைக் குறிப்பிட்ட வட்டத்திற்குரியதாக ஆக்கும் நோக்கம் கொண்டது. 

சாஸ்திரீயக் கலையான பரதமானாலும்சரி, நாட்டுப்புறக் கலைகளான கரகம், காவடி போன்றவைகளானாலும்சரி; குரு அல்லது ஆசிரியர் இல்லாமல் ஆடிப்பழகிவிட முடியாது. அல்லது குடும்பப் பெரியவர்களின் அனுமதியுடன் சிறுவயதிலிருந்தே இவ்வகை நடனங்களில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். அதேபோல செல்லிடப்பேசியின் பயன்பாட்டால் பாடங்களைக் கவனித்தல் குறைகிறது என்றால் வகுப்பறைக்குள் அனுமதிக்காமல் இருக்கலாமே யொழிய வளாகத்திற்குள்ளேயே கொண்டுவரத் தடை விதிப்பது எவ்வகையில் நியாயம் என்று தெரியவில்லை. உடைகளில் குறிப்பாக மாணவிகளின் உடைகள் சார்ந்தே கட்டுப்பாடுகள் அதிகம் விதிக்கப்பட்டுள்ளன.

துணைவேந்தரின் இந்த அறிவிப்புகள் எல்லாமே மாணவர்களின் கற்கும் நேரத்தைக் கூட்டவும் கல்வியில் மட்டுமே கவனம் செலுத்தவும் உதவக்கூடிய அறிவிப்புகள் என்று சொல்லப்பட்டுள்ளது. அந்த வகையில் அது ஒருவித ஒழுங்கு நடவடிக்கைப் பிரச்சினை. தங்கள் பிள்ளைகள் முதலாளிய உலகில் பல பத்தாயிரம் சம்பளம் வாங்கும் பொறியாளர்களாக வரவேண்டும் என்ற ஆசையை ஒருபக்கமும் ஆனால் அதே நேரத்தில் தங்கள் சொல்லைத் தட்டாதவர்களாகவும் வளரவேண்டும் என்ற ஒழுக்கம் சார்ந்த ஆசையை இன்னொரு பக்கமும் கொண்டுள்ள பெற்றோர்கள் இந்த ஒழுங்கு நடவடிக்கையை ஆதரிக்காமல் போனால் தான் ஆச்சரியம். திருமணம் போன்ற முடிவுகளை தங்கள் விருப்பப்படி முடிவு செய்து விடப் பெற்றோர்கள் அனுமதிக்கக் கூடியவர்கள் அல்லவே.கட்டுப்பாடாக வளர்க்க வேண்டும் என்பதில் முழு நம்பிக்கை கொண்டுள்ள தமிழ் நாட்டுப் பெற்றோர்கள் அந்தப் பொறுப்பைப் பல்கலைக்கழகமே ஏற்றுக் கொண்டால் பாராட்டத்தானே செய்வார்கள்.

துணைவேந்தரின் அறிவிப்புகளுக்கு அதிகம் கிடைத்தவை பாராட்டுக்கள் மட்டும் தான். ஆனால் ஒரேயொரு எதிர்வினை மட்டும் வந்துள்ளது. மெலிதான எதிர்ப்பு என்றாலும் இந்தப் பிரச்சினையின் அடுத்த பரிமாணத்தைப் புரிந்தகொண்ட எதிர்ப்பு அது. ஜனநாயக மாதர் சங்கத்தின் உ.வாசுகி தெரிவித்துள்ள கருத்துகள் முக்கியமானவை. இக்கட்டுப்பாடுகள் எல்லாம் கல்வி சார்ந்த ஒழுங்குப் பிரச்சினைகள் அல்ல; அவை பண்பாட்டுப் பிரச்சினைகள். பாரம்பரியப் பழக்கங்களில் ஈடுபாடும் விருப்பமும் கொண்ட அதிருப்தியின் வெளிப்பாடு என்றுதான் சொல்ல வேண்டும். சுதந்திர மனோபாவம் கொண்ட நிகழ்கால மாணாக்கர்களின் உடைப்பழக்கம், கலை ஈடுபாடு, செல்லிடப்பேசிகளைப் பயன்படுத்தும் முறை பற்றி எதிர்மறையான எண்ணங்களைக் கொண்டுள்ள துணைவேந்தரின் மனம் தனது அதிகார எல்லையை விரிவு படுத்தி ஒழுங்கு செய்ய விரும்புகிறது என்றே தோன்றுகிறது. அதிகாரத்தின் வழியாகப் பண்பாட்டுப் பிரச்சினைகளைத் தீர்த்துவிட முடியும் என்று நம்புவது நேர்மறையான அணுகுமுறையாக இருக்க முடியாது. அதற்குப் பதிலாக விரிவான விவாதங்களுக்கும் கலந்துரையாடலுக்கும் வாய்ப்பளிக்கக் கூடிய கல்வி முறையை அறிமுகப்படுத்துவது கூடுதல் பலன்களை அளிக்கலாம். ஆண்களூம் பெண்களும் சேர்ந்து பயிலும் வாய்ப்புகள் அதிகமாகிவிட்ட இந்தச் சூழலில் எதிர் பாலினரைப் பற்றிய குறுகுறுப்பும் தேவையற்ற கூச்சமும் களையப்பட்ட சூழலை உருவாக்குவதும், நண்பர்களாகப் பழகுவதில் உள்ள மேன்மைகளைக் கற்றுத் தருவதும் வகுப்பறைகளின் முக்கியமான பணி. அந்தப் பணி கல்வி நிலையங்களின் எல்லைக்குள்- துணைவேந்தரின் அதிகார எல்லைக்குள்- இருக்கக் கூடியதும் கூட.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தமிழில் நடப்பியல் இலக்கியப் போக்குகள்