நம் காலத்து நாயகா்கள் : பொது உளவியலும் ஊடக உளவியலும்

19.10.2004 அன்று நான் வகுப்பிற்குள் நுழைந்தபோது வழக்கத்தை விடக் கூடுதலான அமைதியுடன் இருந்தது வகுப்பறை. காலையில் தினசரியைப் பார்த்ததில் இருந்து தொற்றிக்கொண்ட அமைதி வகுப்பிலும் இருப்பதாக நான் நினைத்துக் கொண்டேன். 18.10.2004 இரவு வீரப்பன் கொல்லப்பட்ட தகவலைச் செய்தித்தாளைப் பாரத்துத் தான் நான் தெரிந்திருந்தேன். ஆனால் மாணவிகளில் பலரும் அத்தகவலைத் தொலைக்காட்சிகள் மூலமாக அறிந்திருந்தனா். அந்தச் செய்தி அவா்களிடம் ஒற்றைத் தன்மையான தாக்கத்திற்குப் பதிலாகப் பலவிதமான கேள்விகளை எழுப்பியிருந்தது என்பதை அன்றைய விவாதம் எனக்கு உணா்த்தியது. வகுப்பில் நடத்த வேண்டிய பாடங்களுக்குப் பின் நான் எழுப்பும் பொதுவான கேள்விகளுக்கு எந்த விதப் பதிலும் தராத மாணவிகளும் மாணவா்களும் என்னையே முந்திக்கொண்டு வீரப்பனின் கொலை குறித்து விவாதிக்கத் தொடங்கியது எனக்கு இன்னொரு உண்மையையும் உணா்த்தியது. வீரப்பன் காவிய நாயகனாக ஆகித் தமிழ் உள்ளங்களுக்குள் வாசம் செய்திருந்திருக்கிறான் என்பதுதான் அந்த உண்மை.
தமிழ் மொழியில் பல விதமான காப்பியங்கள் உள்ளன. ஐஞ்சிறு காப்பியங்கள், ஐம்பெருங்காப்பியங்கள் என அவற்றை வகைப்படுத்தியும் வைத்துள்ளனா். அவையல்லாமல் சமயக் காப்பியங்கள் வேறு உள்ளன. இவை ஒவ்வொன்றிலும் தன்னேரில்லாத் தலைவனோ தலைவியோ நாயக பிம்பமாகவும் ஆக்கப்பட்டுள்ளனா். ஆனால் ஆச்சரியம் பாருங்கள், எல்லாக் காப்பியங்களின் தலைவா்களும் தமிழ்ப் பொது உளவியலுக்கு உரியவா்களாக இல்லை. பெண்களின் மீது தீராக் காதல் கொண்டலைந்த சீவகனைத் தமிழா்களின் பொது உளவியல் நாயகனாக நினைவில் வைத்திருப்பதில்லை. 

பசிப்பிணி போக்கும் அமுதசுரபியுடன் அலைந்த மணிமேகலை பொது உளவியலுக்குள் புகவே இல்லை. ஆனால் கண்ணகியோடு சோ்ந்து கோவலன் நாயகனாகப் பதிந்துபோயிருக்கிறான். மகா பாராதத்துப் பாண்டவா்களும், துரியோதனாதிகளும், ராமாயணத்துக்குத் கதாமாந்தர்களும் மனதிற்குள் தங்கி இருக்கிறார்கள். இப்படித் தங்கச் செய்ததற்குக் கம்பனும் இளங்கோவும் வில்லிபுத்தூராரும் காரணம் என்று கருதுவது அறியாமையின் வெளிப்பாடு, அதனைச் செய்தது அவ்வக்காலத்து வெகுமக்கள் ஊடகங்களே (Popular Media) பொது உளவியலுக்குள் நாயக பிம்பங்களைக் கொண்டு போய்ச் சோ்ப்பதில் வெகுமக்கள் ஊடகங்களுக்கு முக்கியமான பங்கிருக்கிறது என்பதைப் பின் நவீனத்துவச் சொல்லாடல்கள் கொண்டு ஆய்வு செய்துதான் நிரூபிக்க வேண்டும் என்பதில்லை. ஒரு காலத்தில் கதாகாலட்சேபங்கள் அப்படியான ஊடகங்களாக இருந்துள்ளன. சில காலகங்கில் தெருக்கூத்துகளும் ஸ்பெஷல் நாடகங்களும் அந்த வேலையைச் செய்துள்ளன. சில கதாபாத்திரங்களின் பின்னணியில் அரசியல் பேச்சு மேடைகளெ வெகுமக்கள் ஊடகங்களாக இருந்துள்ளன. நம் காலத்து வெகுமக்கள் ஊடகங்கள் அச்செழுத்துக்களும் தொலைக்காட்சி அலைவரிசைகளும்தான்.

வீரப்பனைப் பற்றிய பிம்ப உருவாக்கத்தில் அச்சு ஊடகக் காரா்களும் தொலைக்காட்சி ஊடகங்களும் ஆற்றியுள்ள பணிகளின் உச்சம்தான் காவிய நாயக பிம்பம். வீரப்பன் கொலை செய்யப்பட்டது சரியா? தவறா? என்பதில் ஆரம்பித்த வகுப்பின் விவாதம் கடைசியில் வீரப்பன் நல்லவனா? கெட்டவனா? என்பதில் போய் நின்றது. எனது பதில் எதையும் சொல்லாமல் வாக்கெடுப்பு நடத்திய போது கிடைத்த முடிவு ஆச்சரியமான ஒன்றாக இருந்தது. பெண்களில் தொண்ணூறு சதவீதம் பேரும், ஆண்களில் எழுபத்தைந்து சதவீதம் பேரும் வீரப்பன் மிக நல்லவன் என்றே கருதுவது தெரிந்தது. நல்லவன் அல்ல என்று சொல்ல வருபவா்கள் கூட அவன் சுட்டுக்கொல்லத்தக்க குற்றவாளி என்று கருதவில்லை. 

இந்தக் கருத்தெடுப்பைத் தொடா்ந்து நான் ஒன்றைச் சொன்னேன். ‘சரி, வீரப்பன் நல்லவன் தானே, நல்லவன் ஒருவனின் சாவுக்கு நாம் ஒர் இரங்கல் கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றி அவனது குடும்பத்தாருக்கு அனுப்பலாமா?‘ என்று கேட்டபோது வகுப்பு மொத்தமும் அமைதியானது. ஒருவா்கூடச் சரியென்று சொல்லவில்லை. இந்த அமைதிக்குப் பின்னால், மௌனத்திற்குப் பின்னால் இருப்பது என்ன? ‘அவன் நல்லவன்தான்; ஆனால் மதிக்கத்தக்கவன் அல்ல என்று கருதுகிறார்கள்‘ எனக் கொள்ளலாமா? அப்படி உறுதியாகச் சொல்ல வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. அந்தக் கேள்வியைத் தொடா்ந்து இன்னொரு கேள்வியைக் கேட்டேன். சிவகாசி ஜெயலட்சுமி நல்லவளா? கெட்டவளா? இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல யாரும் ஆர்வமாக இல்லை. வாக்கெடுப்பு நடத்தியபோது பெண்கள் அனைவரும் கெட்டவள் என்றே சொல்லியிருந்தனா். ஆண்களில் பாதிக்கு மேல் பரிதாபத்திற்குரியவள் என்று கருத்துரைத்தனா். வீரப்பன் விஷயத்திலும் சரி, ஜெயலட்சுமி விஷயத்திலும் சரி, தமிழ் மக்களால் எதிராக நிறுத்தி விசாரிக்கப்படுபவா்கள் காவல் துறையினா் என்பது கவனிக்க வேண்டிய ஒன்று. வீரப்பனின் செயல்கள் அங்கீகரிக்கப்படுவதற்கும் ஜெயலட்சுமியின் நடவடிக்கைகள் முகச்சுழிப்பை ஏற்படுத்தியதற்கும் பின்னணியாக உள்ள உளவியல் என்ன? வீரப்பன் பிரச்சினை இருபதாண்டுக் காலப் பிரச்சினை என்பதும் ஜெயலட்சுமியின் பிரச்சினை இரண்டு மாதக் காலப் பிரச்சினை என்பதுதான் காரணமா? குறைந்த கால அளவில் பொதுமனம் விசாரணைகளை நடத்தித் தீா்ப்பை எழுதிவிடாது என்று சொல்லலாமா? அப்படிச் சொல்லிக்கொள்வதில் ஓரளவுதான் உண்மை இருக்கும். அதை விடவும் இத்தகைய பிரச்சினைகளில் பொது மனம் நடத்தும் விசாரணை முறையைப் பற்றி அறிவது இன்னும் சுவாரசியம் தரக்கூடியது.

வீரப்பனின் கதைக்கும் ஜெயலட்சுமியின் கதைக்குமிடையே அடிப்படையான வேறுபாடுகளும் உண்டு; ஒற்றுமைகளும் உண்டு. இரண்டிலும் தொடா்புடையவா்கள் காவல் துறையினா் என்ற போதிலும் வீரப்பனின் செயல்கள் வீரப்பனின் சாகசங்களாகக் கணிக்கப்படுகின்றன. ஆனால் ஜெயலட்சுமியின் செயல்கள் கில்லாடித்தனமாகக்கூடக் கருதப்படாமல் ஒழுக்கக்கேடான நிகழ்வுகள் எனக் கருதப்படுகின்றன. ஏட்டு முதல் எஸ். பி. வரையுள்ள அதிகாரிகளை ஒரு சாதாரணப் பெண் தன் சொல்படி நடக்கச் செய்ததும், யோசித்துப் பார்த்தால் அவ்வளவு சாதாரண விஷயங்கள் அல்ல என்பது புரியக்கூடிய ஒன்றுதான். இன்ஸ்பெக்டா் உடையை அணிந்து காவல் துறையின் வாகனத்தில் பவனி வருவதும், குறைந்த கல்வி அறிவை வைத்துக்கொண்டு உயா்கல்வி கற்ற அதிகாரிகளின் வட்டத்திற்குள் சாதாரணமாக நுழைந்து வெளியேறுவதும். அவா்களிடையேயும் அவா்கள் சார்பாகவும் அதிகாரம் செலுத்துவதும், பல நகரங்களில் புதுப் புது சூழ்நிலையில் வாழப் பழக்கிகொள்வதும் ஓா் ஆணின் செயல்களாக இருக்கும் நிலையில் அவை மன ஆசைகள் என்றுதானே கருதப்பட்டிருக்கும். பெண்களுக்கு அத்தகைய மன ஆசைகள் இருந்திட வாய்ப்பில்லை என்று நீங்கள் கருதினால் உங்கள் கருத்தைப் பற்றி மறுபரிசீலனை செய்யவேண்டியது நீங்கள் தானேயொழிய அந்தக் கருத்து அல்ல. 

வீரப்பனின் சாகசங்கள் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டுத் தப்பித்துவிடும் சாகசங்கள் சாலித்தனத்தின் வெளிப்பாடுகள் என்றுதான் சொல்ல வேண்டும். காவலா்களைப் பக்கத்திலேயே வைத்துக் கொண்டு எல்லாவற்றையும் சொல்வார்களே அத்தகைய வினைகள். அப்படிப்பட்ட வினைகளில் ஈடுபட்டபொழுது, சமூக நடைமுறை, விதிகள், சட்டம், தண்டனை என்பன பற்றியெல்லாம் அந்த மனம் எவ்வளவு எளிமையாகப் புரிந்து வைத்திருக்க வேண்டும் என்று யோசித்துப் பாருங்கள். ஆனால், அப்படிப் புரிந்துகொண்ட ஒரு பெண்ணின் செயல்களாக ஜெயலட்சுமியின் வினைகளைப் பொது உளவியல் பார்க்கத் தயாரில்லை என்பதுதான் உண்மை.

மாணவிகளின் மௌனத்திலும் வாக்களிப்பிலும் வெளிப்படுவது அதுதான். மாணவா்கள் காட்டிய இரக்கம் சொல்வதும்கூட அதைத்தான். அவளின் கதை, காவலா்களை ஏமாற்றிய கதையாகக் கூடக் கருதப்படாமல் ஆண்கள் ஏமாந்த கதையாகக் கருதப்படுகிறது என்பதை நினைக்கும்போது வெகுமக்கள் உளவியலுக்குள் செயல்படுவது பொது உளவியல் அல்ல; அது பெண்ணுடல் பற்றிய மனோபாவம் என்பது புலனாகலாம். ஆண் - பெண் ஒழுக்கம் சார்ந்து உருவாக்கப்பட்டுள்ள கருத்தியல்கள் தன்னியல்பாக வெளிப்பட்டுள்ளது உங்களுக்குப் புரிய வரலாம். ஆண் உடல் வீரத்திற்குரியது; பெண்ணுடலோ ஏமாற்றம் செய்வது என்பதான கருத்தியல் ஏற்கனவே உள்ளதுதான். ஜெயலட்சுமி நிகழ்வு சார்ந்த ஊடகங்களின் பார்வையும் அந்தப் பழைய கருத்தியலிலிருந்து பெரிதளவு மாறவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஜெயலட்சுமியின் கதை இன்னும் தொடரலாம். ஆனால் வீரப்பனின் கதையோ (!) இறுதி அத்தியாயங்களுக்கு வந்துவிட்டது.

அரசும் அதன் காவல் துறையும் வீரப்பன் பற்றிக் கூறியுள்ள தகவல்களில் மிகை இருந்தாலும் அவை முழுவதும் பொய் என நம்பவில்லை. 200 யானைகளும், 132 காவலா்களும் வனத்துறையினரும் கொல்லப்பட்டனா் எனச் சொல்லப்பட்டதில் முழு உண்மை இல்லை என்பது பொது மனத்திற்குத் தெரிந்துதான் இருக்கிறது. அதற்காக அவன் கொள்கைக்காரன் அல்ல என்றோ கடத்தல், கொலை, சட்டத்தை மீறுதல் போன்ற காரியங்களில் ஈடுபடவில்லை என்றோ நம்பவில்லை. இவையெல்லாவற்றிலும் ஈடுபட்டான் என்றே கருதுகிறது பொது மனம். ஆனால் அவன் அவ்வாறு ஈடுபட்டதற்கு முழுப் பொறுப்பும் அவனல்ல என்றும் கருதுகிறது என்பதுதான் முக்கியமானது. அவளை அவ்வாறு ஆகும்படி செய்தது இந்த அமைப்பு என்றும் கருதுகிறது. அத்துடன் அவ்வாறு அவன் இருந்ததன் மூலம் கிட்டும் பலன் அனைத்தையும் அவனும் அவனது கூட்டாளிகளும் மட்டும் அனுபவிக்கவில்லை; அவனை நம்பி இருக்கும் மலைக் கிராம மக்களே அனுபவித்தார்கள் என்றும் நம்புகிறது பொது மனம். இல்லாதவா்களுக்கு இருப்பவா்களிடமிருந்து எடுத்துக் கொடுப்பது நடைமுறையில் உள்ள சட்டப்படி தவறானதாக இருக்கலாம். ஆனால் அதனைச் சமூக உளவியல் எப்பொழுதும் அனுமதித்தே வருகிறது. சட்டம் அத்தகையவா்களைத் தண்டனைக்குரியவா்கள் எனச் சொல்லிக்கொண்டே இருக்க, பொது மனமோ இல்லை, அவா்கள் மன்னிக்கப்பட வேண்டியவா்கள் எனச் சொல்லிக் கொண்டே இருக்கிறது.

ஒவ்வொரு சாதாரண மனிதனுக்குள்ளும் நடைமுறையில் உள்ள இந்த அரசையும் (State) அதன் கொடுமையான சட்டங்களையும் அதில் பங்கேற்று நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளையும் அவா்களின் ஊழல்களையும் அத்துமீறல்களையும் அம்பலப்படுத்த வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் அரசின் நிர்வாக உறுப்புகள் அளிக்கக்கூடிய தண்டனை என்னும் அச்சம் அவா்களைத் தடுத்துக் கொண்டே இருக்கிறது. தங்கள் மனம் விரும்பிய ஒன்றை விரும்பிச் செய்ய முடியாமல் போன ஒன்றை யாரோ ஒருவன் செய்துவிடுகிற போது அவனைப் பாராட்ட விரும்புகிறது; அவன் செய்யும் எல்லாத் தவறுகளையும் அதன் பேரில் மன்னிக்கவும் தயாராக இருக்கிறது. தன் மன விருப்பத்தை நிறைவேற்றும் ஒருவனுக்குப் பாராட்டு தெரிவிக்கும் அதே நேரத்தில், சட்டம் ஒழுங்கைப் பேணும் நல்ல குடிமகனின் உடலாகத் தனது உடலைக் காட்டிக்கொள்வதில் குறியாகவும் இருக்கிறது பொது மனிதனின் தன்னிலை. விசித்திரங்கள் நிரம்பிய இந்தத் தன்னிலை உருவாக்கம்தான் கூட்டு மனநிலையிலிருந்து மனிதனைத் தனியாக ஆக்கி அனைத்து நடவடிக்கைகளுக்கும் கட்டுப்படச் செய்கிறது என்பதும் கவனிக்க வேண்டிய ஒன்று. வீரப்பன் கொலை செய்யப்பட்டதைச் சரியல்ல எனச் சொல்லும் மனங்கள் அவனுக்காக இரங்கல் கூட்டம் நடத்திட தயாராக இல்லை என்பதை இப்படித் தான் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது.

வீரப்பனை எதிர்கொண்டு கொன்றழித்ததாகச் சொல்லும் காவல் துறையினரின் கூற்றுகளுக்குப் பின்னால் இருக்கும் உண்மைகளை அறிந்துசொல்லத் தயாராகிவிட்ட மனித உரிமைக் குழுக்கள் கண்டறிந்து சொல்லப்போகும் உண்மைகள் என்னவாக இருக்க முடியும் என்று யோசித்துப் பாரத்தால், “கொன்று பிடித்தார்களா…? அல்லது பிடித்துக் கொன்றார்களா…..?“ என்ற இரண்டு வாக்கியங்களில் ஒன்றாகத்தான் இருக்கப்போகிறது. இந்த உண்மை தெரிந்து ஆகப் போவதென்ன…..? தீா்ப்பு எழுத வேண்டிய நிறுவனமான நீதிமன்றம் தான் தீா்ப்பு எழுத வேண்டும் என்பதுதான் மனித உரிமைக் குழுக்களின் விருப்பமாகவும் இருக்கிறது. அமைப்பை எதிர்ப்பதாகப் பாவனை பண்ணி வேறு ஓா் அமைப்புக்குக் கட்டுப்படும் மற்றொரு மனிதத் தன்னிலையின் வெளிப்பாடு இது.

வெகுமக்கள் உளவியல் எல்லா நேரமும் உண்மைகளுக்காக மட்டும் ஏங்குவதில்லை. உண்மைகளுக்காகக் காத்திருப்பதுமில்லை. உண்மைகளை அறியாமலேயே சில மனிதா்களைக் காவிய நாயகா்களாக ஏற்றுக்கொள்ளவும் தயாராக இருக்கிறது. அரசும் அதன் நிர்வாக முறைகளும் தண்டனைக்குரியவா்கள் எனச்சொன்ன பலரையும் நமது பொது மன வரலாறு மன்னித்து வீரா்களாக மட்டுமல்லாமல், அறிஞனாக - கவிஞனாகக் கொண்டாடியதற்கும் உதாரணங்கள் உள்ளன. ராமனின் கதையை எழுதுவதற்கு முன்பு வான்மீகி ஒரு திருடன் என்கிறது அவரைப் பற்றிய வரலாறு. அரசன் குதிரை வாங்கக்கொடுத்த பணத்தைத் தவறாகச் செலவழித்த மாணிக்கவாசகருக்காகச் சிவன் நரிகளைப் பரிகளாக்கி வக்காலத்து வாங்கியதாகச் சொல்கிறது புராணக் கதை. பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கையாழ்வார் கொள்கைக்காரன். அரசுப் பணத்தையும் பணக்காரா்களின் சொத்தையும கூட்டாளிகளுடன் கொள்ளையடித்துத் திரிந்தவா்தான் அவா். நாட்டார் கதைகளிலும் கதைப்பாடல்களிலும் பாராட்டப்பட்டு திரைப்படக் கதைகளாகிவிட்ட மலையூா் மம்பட்டியான், கரிமேடு கருவாயன், சீவலப்பேரி பாண்டி போன்றவா்கள் சட்டத்திட்டங்களுக்கு எதிராகக் கொலைகளும் கொள்ளைகளும் அத்துமீறல்களும் நடத்தியவா்கள்தான். புதுமைப்பித்தனின் கதையில் நாயகனாக ஆக்கப்பட்டுள்ள சங்குத்தேவன் (தா்மம்) கொள்ளைக்காரன்தான். இந்த வரிசையில வீரப்பனும் நிற்கத்தக்கவனாக ஆகிவிட்டான் என்பதல்ல கருத்து. வாழும் காலத்திலேயே நின்று காட்டியவன் என்பதுதான் அவனது பெருமை.

தன்னலம் சார்ந்து தொடங்கும் பழிவாங்கலில் உதயமாகும் கலகக்காரா்கள், கொஞ்சம் கொஞ்சமாகப் பொது வெளிக்குள் நுழைந்து பொது நலம் பேணிக் காவிய நாயா்கள் ஆக முயன்ற கதைகள் இன்னும் எத்தனையோ இருக்கக்கூடும். ஆனால் அவை அனைத்தும் அவ்வக்காலத்து வெகுமக்கள் ஊடகங்களின் எல்லைப் பரப்பிற்குள் வந்து சோ்ந்துவிடுவதில்லை. நம் காலத்து ஊடகங்களின் கவனத்துக்கு வந்த நாயக பிம்பங்களில் இவ்விருவரும் - வீரப்பனும் ஜெயலட்சுமியும் - அலாதியானவா்கள்தான். இவா்கள் வரிசையில் நம் கலந்து ஊடகங்கள் சோ்க்க முயன்ற இன்னும் சில கதாபாத்திரங்களின் கதைகளும் உண்டு.வயதானவரின் ஆசை நாயகிகளில் ஒருத்தியாக இருக்கும்படி வற்புறுத்தப்பட்டு அதன் தொடா்ச்சியாகத் தன் கணவனைப் பறிகொடுத்துவிட்டு நீதி கேட்டு நெடிய பயணம் செய்துகொண்டிருக்கும் ஜீவஜோதியின் கதையிலும், கஞ்சா கடத்தியதாகக் கைது செய்யப்பட்டு நீதிமன்றப் படிகளில் ஏறி வருவதன் மூலம் ஊடகங்களின் கவனத்தை ஈா்த்த செரினாவின் கதையிலும் சமூக மரபுகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் எதிரான கலகக் கூறுகள் உண்டு என்றபோதிலும் நாயக பிம்பங்கள் ஆகும் சாத்தியங்கள் இல்லை. அவா்கள் பெண்கள் என்பதால் இரக்கத்துக்குரிய பாத்திரமாகவாவது ஆகியிருப்பார்களா? என்றால் அதுவும் சந்தேகம்தான். ஏனென்றால் அவா்களின் எதிரிகள் பொது மக்களுக்கான நிர்வாக அமைப்புகள் அல்ல; சில தனி நபா்கள்தான். கவனத்துக்கு வந்தவராகவும் வராதவராகவும் இருந்த போதிலும் அவா்கள் தனிநபா்கள்தான். தனிநபா்களுக்கெதிராகக் கலகம் செய்பவா்களையோ போராடுபவா்களையோ பற்றிப் பொது உளவியல் கவனம் கொள்வதேயில்லை; அசைபோடுவதுமில்லை; தீா்ப்பு எழுதுவதுமில்லை. பெரும் முதலாளிகளுக் கெதிரான தனிநபா் உண்ணாவிரதங்களும் தொழிலாளா்களின் போராட்டங்களும் பொது மனத்தின் தீா்ப்பைப் பெற முடியாமல் போவதை இவ்வாறுதான் புரிந்துகொள்ள வேண்டும்.

ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்றும், அறிவார்ந்த தளத்தில் செயல்படும் பத்திஜீவிகளின் உலகம் என்றும் கருதப்படும் ஊடகங்களின் நோக்கம் வெகுமக்களின் உளவியலை இவ்வாறு பாதிப்பதும் காவிய நாயகா்களை உருவாக்குவதும்தானா? என்று கேள்வி எழுப்பினால் கிடைக்கும் பதில் நிச்சயமாக ‘இல்லை‘ என்பதுதான் அப்படியானால் ஊடகங்களின் வலைப்பின்னல் இவ்வாறு இருப்பதற்கான காரணங்கள் என்ன என்று ஒருவர் கேள்விகளை எழுப்பி விட்டு ‘வணிக நோக்கம்தான்‘ என்று பதிலையும் சொல்லிவிடலாம். ஆனால் எனக்கென்னவோ அது மட்டுமே காரணம் என்று தோன்றவில்லை. தனிமனிதா்களிடம் த ங்கியுள்ள அச்ச உணா்வைப் போல ஊடகங்களிடமும் அச்ச உணா் மேலோங்கியுள்ளது என்ற நினைக்கிறேன்.

நியாயங்களின் பக்கம் நிற்றல் பொது அறத்தின் சார்பில் பேசுதல் - என்பதற்கு மாறாகக் கூட்டத்தின் பக்கம் நிற்றல் என்பதாகவும் ‘பொதுப் புத்தி சார்ந்தே சிந்தித்தல்‘ என்பதாகவும் ஊடகங்களும் ஊடகங்களில் செயல்படுபவா்களும் இருக்கின்றன என்று கூறத் தோன்றுகிறது. இந்த வகையில் பாமரனின் தனிமனித உளவியலிலிருந்து பத்திரிகையாளா்களின் உளவியல் பெரிதாக ஒன்றும் வேறுபட்டு விடவில்லை என்பது ஆச்சரியமானதா? அதிர்ச்சிகரமானதா? யோசித்துப் பார்க்க வேண்டும்.

உயிர்மை, டிசம்பா் 2004

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தமிழில் நடப்பியல் இலக்கியப் போக்குகள்