கனலியில் மூன்று சிறுகதைகள்


அண்மையில் பதிவேற்றம் பெற்றுள்ள கனலி -இணைய இதழில் மூன்று சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. பெரும்பாலும் கனலியில் புதிதாக எழுதப்பெற்ற கதைகளோடு புதையல் என ஏற்கெனவே வேறுவடிவில் வந்த ஒரு கதையைப் பெட்டகம் எனத் தலைப்பிட்டு வெளியிடுகிறார்கள். இந்த இதழ்ப் பெட்டகமாக வந்துள்ள கதை சு.வேணுகோபாலின் பூமாரியின் இன்றைய பொழுது.இந்தக் கனலிக்காகப் பெறப்பட்டுப் பதிவேற்றவை 
பெருமாள் முருகனின் முத்தம் 
இரா.கோபாலகிருஷ்ணனின் யோகம் 
இரா முருகனின் ஒற்றைப்பயணி வரும் ரயில் நிலையம். 
ஆகிய மூன்றும். மூன்றில் இரா.முருகனின் ஒற்றைப்பயணி வரும் ரயில் நிலையம் மட்டுமே புனைகதை தரும் வாசிப்பனுபவத்தை முழுமையாகத் தருகிறது. 
அந்தக் கதையிலும் கூடத் தொடக்கத்தில் இருக்கும் இரண்டு பத்திகள் கதைக்குள் நுழைவதை தடுக்கின்றன. “சிறுநகரத்தையும், சிற்றூரையும் இங்கே யாரும் போய்ப்பார்த்ததில்லை.நகரம் போகும் ரயில், சிற்றூர் போகும் ரயில் என்று திசைவேறுபடுத்திக் காட்ட , என்று பெயர்களாக மட்டுமே அவை பயன்பட்டன” என்றே தொடங்கியிருக்கலாம். 

அதேபோல் அந்த ரயில் நிலையம் -கதை நிகழும் வெளி எங்கிருக்கிறது என்பதைக் காட்டும் சிறு குறிப்பையாவது தந்திருக்கலாம். இப்போதுள்ள விவரணைகளில் இடம்பெற்றுள்ள பனிப்படர்வு, குளிர் ஆடைகள் போன்றன மாநில அடையாளமும் தேச அடையாளமும் இல்லாமல் இந்தியாவிற்கு வெளியே நடக்கும் கதையோ என்ற நினைப்பை உருவாக்கியுள்ளது. பாத்திரங்கள் ஒவ்வொன்றும் தங்களின் இயல்புகளை தாங்களே விசாரித்துக் கொள்ளும் பாங்கில் ஐரோப்பிய மொழிக் கதையொன்றை வாசிக்கும் உணர்வைத் தருகிறது. 
சரக்கு ரயிலின் தேவையும் நின்றுபோன பிறகும் சில ஆண்டுகளாக ஒரேயொரு பயணிக்காக நின்று கிளம்பும் ரயில், அதற்கு விடை தந்து அனுப்பும் நிலையத் தலைவர்(ஸ்டேசன் மாஸ்டர்), ரயிலோட்டி (இஞ்சின் டிரைவர்) ஆகியோரின் எந்திரத்தனமான இயக்கத்திற்குப் பின்னால் ஓர் உயிர்ப்பான வாழ்க்கை இருக்கிறது. உயிர்ப்பான அந்த வாழ்க்கைக்குள் இருக்கும் வலி கொண்ட துன்பியல் பாத்திரங்கள் இருவரின் முடிவும் ரகசியமாக இருக்கிறது எனக் கதை விவரிக்கிறது. 
தினசரி காலையில் ஏறிப் போய்விட்டு மாலையில் வந்திறங்கிச் செல்லும் அந்தப் பெண்ணைப் (மைனா) பற்றி - ஒற்றைப்பயணியைப் பற்றிய முழுவிவரங்களும் தெரிந்து வைத்திருக்கும் ரயிலோட்டி, ஸ்டேஷன் மாஸ்டரிடம் உண்டாக்கும் குற்றவுணர்வோடு தொடங்குகிறது கதை. கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்ட நகரத்தில் நேர்ந்த கும்பல் மரணத்திலிருந்து தப்பிக்க முடிந்த ஒரு மகளும்தந்தையும் மரணத்திற்கான காலம் முடிவு செய்யப்பட்டு இந்த ரயில் நிலையத்திலிருந்து ஒதுங்கி நிற்கும் அந்தத் தனி வீட்டில் தணித்திருக்கிறார்கள் என்பதை அறிந்த ரயிலோட்டி தனது பயணியைச் சந்திக்க வந்து திரும்பும் நிகழ்வுகளே கதைப் பரப்பு. ஒற்றைப்பயணியான மைனாவையும் அவள் அப்பாவையும் வீடு தேடிப் போய்ப் பார்த்துவிட்டுச் செல்லும் ரயிலோட்டியின் மகளுக்குத் தொண்டையில் புற்றுநோய் என்னும் தகவலும், அதற்கு மருத்துவம் பார்க்கத் தலைநகருக்கு மாறுதல் கேட்டபோது இறந்தவர்களின் நகரத்திற்கு மாறுதல் தருவதாகச் சொன்னதைச் சொல்கிறார். அதற்கு ஆறுதலாக ரயில் நிலையத்தலைவர், “மைனாவின் வீட்டில் இரண்டு பூச்செடிகள் துளிர்விட்டிருக்கின்றன; அதேபோல் உங்கள் வீட்டுத்தோட்டமும் பூக்கட்டும்” என்று சொல்லி அனுப்புகிறார். இந்த நிகழ்வுகளின் வழியாகவும் பாத்திரங்களின் உரையாடல்கள் வழியாகவும்எழுப்பப்படும் உணர்வலைகள் வாசிப்பவர்களிடம் ஒருவிதக் கொந்தளிப்பை எழுப்பித் தணிக்க முடியாத நீட்டிப்பை உண்டாக்கக்கூடும். இரா.முருகனின் கதையமைப்பும் உரையாடல்களுக்கான மொழிநடையும் அதனை சாத்தியமாக்கியிருக்கிறது 

இந்தக் கதையோடு பதிவேற்றம் பெற்றுள்ள மற்ற இரண்டு கதைகளும் – பெருமாள் முருகனின் முத்தமும், இரா. கோபாலகிருஷ்ணனின் யோகமும் கட்டுரையாக எழுதவேண்டியவை. ஒரு மலைக்கோயில் பக்கத்தில் நடக்கும் விடலைப்பருவக் காதல் இணைகளின் ஒதுங்கல்கள், அதனைத் திட்டமிட்டுக் கவனித்து படம்பிடித்து இணையத்தில் ஏற்றுவேன் என மிரட்டிக் காசு பறிக்கும் ஒருவன்(முருகேசு) என்ற நிகழ்வுப்பரப்புகளும் விவரிப்புகளும் ஒரு கட்டுரையின் மொழியிலேயே இருக்கின்றன. முழுநேரத்திருடனாக இல்லாமல் தேவைக்கேற்ப வழிப்பறி செய்யும் அவனது சூழலும் காரணங்களுமே கதையின் முழுப்பரப்புமாக இருக்கிறது. ஆனால் கதையின் கடைசியில் இடம்பெறும் முத்தத்தின் காரணம் மட்டுமே கதைக்கான புனைவுநிலையில் அமைந்துள்ளது. திருடனிடம் சிக்கிய ஒரு காதல் இணையிடமிருந்து பறித்துக் கொள்ள எதுவும் இல்லாத நிலையில், அவள் அவனுக்குத் தந்த முத்தம் காமத்தால் பரிமாறிக் கொண்ட முத்தம் அல்ல; காதலனுக்குத் தரப்பட்ட பிறந்த நாள் பரிசு என்று அறிகிறபோது, ‘ போய்த் தொலைங்க’ என்று அனுப்புகிறான். அப்போதும் கூட அவன் மனநிலை வெளிப்பாடு வேண்டா வெறுப்பாகவே இருக்கிறது. அதற்கு மாறாக இப்படியான செயல்களில் ஈடுபட நேர்ந்த குற்றவுணர்வோ, பெருந்தன்மையாகவோ எழுதப்பெற்றிருந்தால் கதையின் நோக்கமும் வாசிப்பு அனுபவமும் வேறாக மாறியிருக்கும். அதற்கான வாய்ப்பைப் பெருமாள் முருகன் உருவாக்கவில்லை. 
இரா. கோபாலகிருஷ்ணனின் யோகம் நித்திய சைத்யன்ய யதியின் சீடர்களில் ஒருவரான அனந்தன் சாமியின் இருப்பிடம், அவரது வாழ்க்கை, மன்னிக்கும் மனம் என்பதைச் சொல்லும் கட்டுரையாகவே எழுதப்பெற்றிருக்கிறது. எழுத்தாளர் முகாம், நாஞ்சில் நாடனின் வயிற்றுப்போக்கு போன்ற விவரணைகள் எல்லாம் கட்டுரைத்தன்மையை கூடுதலாக்கியிருக்கின்றனவே தவிரக் கதையின் கூறுகளாக ஆகவில்லை. கதையாக மாற்றும் முயற்சியில் ஒரு சிறுவன் பாத்திரம் நுழைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவன் வழியாகவே உள்ளூர் அரசியல்வாதிகளின் அந்தத் தாக்குதல் திட்டமிடுதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்பிவிட்டு நின்றுவிடுகிறது . 

ஒரு கதையின் கட்டமைப்பில் எதன் பகுதிகள் அதிகமாக எழுதப்படுகின்றன; அப்படி எழுதப்படும்போது புனைகதையாசிரியரின் ஆக்கமுறைமையும் மொழிப்பயன்பாடும் வாசகர்களுக்கு எதனைக் கடத்துகின்றன எனப் பார்க்கும் நிலையில் இரா.முருகனின் கதை மட்டுமே முழுமையான கதையாக வாசகர்களைத் திளைப்பில் நிறுத்தக்கூடியதாக இருக்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தமிழில் நடப்பியல் இலக்கியப் போக்குகள்