முழுமையைத் தேடியுள்ள வலைத்திரை

மொத்தம் 10 பகுதிகளைக் கொண்ட ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ யை வெளியீடு கண்ட ஏப்ரல் மாதத்தில் ஒருமுறை பார்த்தேன். எனது அயல்நாட்டுப் பயணம் காரணமாக எழுத முடியாமல் போய்விட்டது. ஆனால் நடிப்புக்கலைக்கும் கருத்துநிலைக்கும் முக்கியத்துவம் தந்த ஒரு தொடர்பற்றி ஒரு விமரிசனக்குறிப்பொன்றை எழுதாமல் விட்டதில் மனக்குறை இருந்தது. அதனால் திரும்பவும் பார்த்தபின்பே எழுதுகிறேன். 

45 நிமிடங்கள் முதல் 60 நிமிடங்கள் வரை ஓடக்கூடியதாகப் பிரிக்கப்பட்ட தொடரின் முதல் பகுதியை, முதலில் பார்த்து முடித்தபோது, தொடர்ந்து பார்க்க வேண்டுமா? என்ற மனநிலை இருந்தது. காரணம் முதல் பகுதியின் முடிவில் இந்தத் தொடர் எவ்வகையான தொடராக எடுக்கப்பட்டிருக்கும் என்ற தீர்மானம் எதுவும் உருவாகவில்லை. ஒரு பழங்குடிச் சமூகத்தின் நம்பிக்கையால் நடக்கும் தன்பலிக் காட்சியோடு நிறைவுற்ற அந்தப் பகுதியில் நேரடிக் காட்சிகளுக்குப் பதிலாக கணினி தொழில்நுட்பத்தின் உதவியால் ஆக்கப்பட்ட வரைகலைக் காட்சிகள் அலுப்பை உண்டாக்கின; காட்சிகளோடு இணைந்து பயணிக்கும் பார்வையாள மனநிலையை உருவாக்கவில்லை. வனத்தில் வாழும் கானகர்களின் உடல்மொழியும் அசைவுகளும் நடிப்பு முயற்சி எதுவும் வெளிப்படாமல் இருந்தன. அதே நேரம் இ.குமரவேல், செம்மலர் அன்னம் போன்ற எனக்குத் தெரிந்த நாடகக்காரர்களின்/ மாணவர்களின் முகங்களும் பெயர்களும் வந்த நிலையில் ஒவ்வொன்றாகத் தொடர்ந்து பார்த்து விடுவது என்று முடிவும் எடுத்தேன். அத்தோடு வனக்காவலர்களின் நுழைவும் பழங்குடி மக்களின் வாழ்வும் என்ற எதிர்வு உருவாக்கப்பட்ட நிலையில் பார்த்துவிடுவது என்ற என்ற தூண்டுதல் கிடைத்தது, அந்த ஆர்வத்தில் அடுத்தடுத்த நாட்களில் ஒவ்வொரு நாளும் மூன்று பகுதிகள் என்று பார்த்து முடித்தேன்.

*******
காட்சி ஊடகச்செயலிகள் வழியாகத் தயாரிக்கப்படும் வலைத்தொடர்களில் சில பொதுத் தன்மைகள் காணப்படுகின்றன. வெளிப்பாட்டு மொழியின் அடையாளத்தைத் துறத்தல் என்பது முதல் பொதுத்தன்மை. வணிக நிறுவனங்களின் பொழுதுபோக்கு அம்சங்களுக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என நினைப்பது இரண்டாவது தன்மை. இத்தன்மை மாற்றத்தில் காட்சிச் செயலிகளின் இலக்குப்பார்வையாளர்கள் பற்றிய கணக்கீடுகளும் முக்கியப்பங்கு வகிக்கின்றன. இந்தப் பின்னணியில் சில குறிப்பிட்ட வகையான வலைத்தொடர்களே முதன்மையாகத் தயாரிக்கப்படுகின்றன. அவற்றைத் திகில்/மர்மம், அமானுஷ்யம்/இறையருள் நம்பிக்கை, குற்றச்செயல்/துப்பறியும் தொடர் என்பதான வகைப்பாட்டுக்குள் அடக்கிவிடலாம்.

வயதுக்கு வந்த பார்வையாளர்களை இலக்குப்பார்வையாளர்களாக நினைக்கும் நெட்பிளிக்ஸ் செயலி, காமஞ்சார்ந்த உளவியல் சிக்கல்களை மையமிட்ட தொடர்கள் அதிகமாகத் தயாரித்து ஒளிபரப்பு செய்கின்றது. உலக அளவுப்பார்வையாளர்கள் என்பது அதன் இலக்கு, ஆனால் அமேசான் பிரைம் குற்றப்பின்னணிச் சாகசக் கதைகளுக்கும் துப்பறியும் தொடர்களுக்கும் முதன்மையளித்துத் தயாரிக்கின்றது. உலகப்பார்வையாளர்கள் என்ற இலக்கைத் தாண்டி இந்தியா போன்ற நாடுகளுக்கான பார்வையாளர்களை இலக்காக நினைக்கும் அமேசான் பிரைம் காமத்தையும் உளவியலையும் கலந்த தொடர்களைவிடவும் குற்றவாளிகளின் சாகசங்கள் மற்றும் மர்மங்களை விலக்கிக் காட்டும் துப்பறியும் தொடர்களில் கவனம் செலுத்துவதைக் காண்கிறோம். அதிலிருந்து ஏற்படும் விலகல்கள் மாநில எல்லைகள், உள்ளூர் எல்லைகள் என இலக்குப் பார்வையாளர்களைத் தீர்மானித்துக்கொள்கின்றன.
 வலைத்தொடர்களின் பார்வையாளர்களாக.

எல்லாச் சினிமாக்களையும் ஒன்றுபோல் பார்க்கக்கூடாது என்ற தெளிவு இருக்கவேண்டும். குறிப்பாக மர்மம் அல்லது அமானுஷ்யம் சார்ந்த சினிமாக்களையும், தொடர்களையும் பார்ப்பதற்கு முன்பு அவை பற்றி வரும் விமரிசனங்களைப் படிக்காமல் இருப்பது நல்லது. இப்போது இவ்வகைக் கதைகளை நெடும் தொடராக எடுப்பவர்கள் சிறிய அறிமுகத்தைத் தருகிறார்கள். அவற்றைப் படிப்பதைத் தவிர்த்துவிட்டே பார்ப்பது வழக்கம். படித்துவிட்டுப் பார்த்தால் இவ்வகைப் படங்கள் தரும் அனுபவங்கள் நமக்குக் கிடைக்காது. அதனாலேயே இடையிலேயே விலகிப் போவது நடந்துவிடும். ஒரு துப்பறியும் தொடரில் துப்பறிவதுதான் நடக்கும் என்றாலும் எவ்வகையான குற்றம், அதன் முடிச்சுகளை எப்படித் திறந்து காட்டுவது என்பதை நிகழ்வுகள் ஆக்குவதின் வழியாகக் காட்சிகள் விவரிக்கப்படுகிறது என்பதைப் பார்ப்பதுதான் பார்வையாள அனுபவம். இதே நிலையை தெய்வ நம்பிக்கை, பேய்களின் நடமாட்டம் போன்ற அமானுஷ்ய/மர்ம வகையினப் படங்களுக்கும் தொடர்களுக்கும் பொருத்திக் கொள்ள வேண்டும்.

பெரும்பாலான காட்சிகளில் அறிவார்ந்த மனநிலை அல்லது பகுத்தறிவு மனநிலை வெளிப்படாது. ஆனால் அதுகுறித்துக் கேள்வி எழுப்புவதற்கு ஏதாவது ஒரு பாத்திரத்தை இயக்குநர்கள் உருவாக்கிப் பார்வையாளர்களின் அறிவுநிலையோடு உரசிக்கொண்டே இருப்பார்கள். அப்படி இல்லையென்றாலும், முடிவில் அறிவார்ந்த மனநிலையை நிலை நாட்டும் நோக்கத்துடன் விவாதங்களை எழுப்பியே நிறைவு செய்வார்கள். இவ்வகைப்படங்களில் முடிச்சுகள் ஒவ்வொன்றாக அவிழும்போது நடைமுறையில் இருக்கும் சட்ட விதிகளைப் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தும் போக்கும் வெளிப்படுவதையும் முக்கியமான பாணியாக இயக்குநர்கள் பின்பற்றுவார்கள்.

தனிநபர்களின் காமம் சார்ந்த குற்றச் செயல்கள், பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசையின் விளைவுகள், அவற்றோடு தொடர்புடையவர்களின் அச்சுறுத்தல் பின்னணிகள், திட்டமிட்ட சமூகவிரோதக் குழுக்களின் நோக்கங்கள், பழைய சமூக நடைமுறைகள் தரும் நெருக்கடிகள் என்பன போன்ற காரணங்கள் பின்னணிக்காரணங்களாக அமைக்கப்பட்டிருக்கும். இத்தகைய பொதுத்தன்மைகள் பலவற்றைக் கொண்டிருந்தாலும் ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ மற்றவற்றிலிருந்து பலவிதங்களில் மாறுபட்ட தொடராக எடுக்கப்பட்டிருக்கிறது.

நான்கு மொழிகளில் அமேசான் பிரைமில் பார்க்கக் கிடைக்கும் ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ என்னும் இத்தொடரின் முதன்மை மொழி தமிழ் என்பதில் எனக்கு ஐயம் எழவில்லை. இப்படிச் சொல்வதற்குச் சில காரணங்கள் இருக்கின்றன. தொடரின் நேரடிக்காட்சிகள் நிகழும் வெளிகள் முழுமையும் கோவை மாவட்டக்கானகம் ஒன்றில் நடக்கின்ற காட்சிகளாக இருக்கின்றன. மொத்தத்தொடரின் நேரடி நிகழ்வுகள் தாண்டி முன் நிகழ்வுகளும் கூடக் கோவை, சென்னை போன்ற தமிழ்நாட்டு நகர வெளிகளிலேயே நடக்கின்றன. அத்தோடு பெரும்பாலான பாத்திரங்களும் தமிழ் பேசும் பாத்திரங்களாகவே இருக்கின்றன. காட்டிலாகாவில் பணியாற்றும் ஒரேயொரு பாத்திரம் மலையாளப் பின்னணியோடு - அதுவும் தமிழகத்தின் அருகில் இருக்கும் பாலக்காட்டுப்பின்னணியைக் கொண்டதாக இருக்கிறது.

வெளி, பாத்திரங்கள் என்ற புனைவாக்கத்தை- திரைக்கதையை ஆங்கிலத்திலோ வேறு மொழியிலோ கூட எழுதியிருக்கலாம். பாத்திரங்களுக்கான வசனங்கள் தமிழில் எழுதப் பெற்று, பேச்சுப்பயிற்சி அளித்துத் தயாரிக்கப்பட்டுள்ள தொடர் என்று சொல்லும் அளவுக்குத் தமிழ் நடிகர்கள் பங்கெடுத்துள்ளனர். குறிப்பாகத் தமிழின் நாடகக் குழுக்களிலும் அரங்கியல் பயிற்சி நிறுவனங்களிலும் பயிற்சி எடுத்துக்கொண்டவர்கள் எனோதானோவென்று வந்து போகின்றவர்களாக இல்லாமல் முக்கியப்பாத்திரங்கள் சிலவற்றை ஏற்று நடித்துள்ளனர். புதுவை நாடகப்பள்ளியின் முதல்வரிசை மாணவரான இ.குமரவேல் வனக்காவலர்களில் மூத்தவராகவும் மொத்தத்தொடரிலும் பங்கெடுக்கும் பாத்திரமாகவும் வந்துள்ளார். கூத்துப்பட்டறையின் மூத்த நடிப்புக்கலைஞர் கலைராணி தொடரின் ஆரம்பித்தையும் முடிவையும் இணைக்கும் கிறித்தவச் சேவைச் சகோதரியாக நடித்து ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார். அதேபோல், அருண்மொழியின் ஸ்டானிஸ்லாவ்ஸ்கி நடிப்புப்பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்று மேடையிலும் திரைப்படங்களிலும் நடித்துவரும் செம்மலர் அன்னம் தொடரின் மர்மப் பாத்திரமான வனராட்சியாகவும் அதன் வெளிப்படைப் பாத்திரமான மங்கைப் பாத்திரத்திலும் நடித்துள்ளார். இருவேறு நிலைக்கும் அவர் காட்டும் மென்னுணர்விலும் வன்னுணர்விலும் போதுமான வேறுபாடுகள் காட்டவில்லை என்றபோதிலும், அப்பாத்திரத்துக்குத் தேவையான உடல்மொழியை இவரளவுக்குத் தர இன்னொரு நடிகையைத் தமிழ்ச் சினிமாவுக்குள்ளிருந்து தேடிக்கண்டு பிடிக்க முடியாது என்பதும் உண்மை. இவர்களின் பெயர்கள் என்னளவில் தெரிந்த பெயர்கள். இவர்களல்லாமலும் சில பாத்திரங்களை ஏற்றுள்ளவர்கள் நடிப்புப் பயிற்சி பெற்றவர்களாக இருக்கிறார்கள். அதனாலேயே இதனைத் தமிழ்த் தொடர் என்றே பரிந்துரை செய்கிறேன்.


எனது பரிந்துரை, இன்ஸ்பெக்டர் ரிஷியின் இயக்குநர் ஜே.எஸ். நந்தினியின் ஈடுபாடு சார்ந்தும் அமைகிறது. அவர் ஒவ்வொரு நிலையிலும் தன்னை – தனக்கான அடையாளத்தை வெளிப்படுத்த வேண்டுமென நினைப்பவராக இத்தொடர் மூலம் அறிமுகமாயிருக்கிறார். தான் எடுக்கும் சினிமா அல்லது தொடரின் பார்வையாளர்களை மேம்பட்ட பார்வையாளர்களாகக் கருதும் ஒருவர்தான் இப்படியான எண்ணத்தோடு தன்னை முன்வைக்க முடியும். கதைப்பின்னல், பாத்திரங்களை வடிவமைத்தல், அதற்கேற்ற நடிப்புக்கலைஞர்களைத் தேர்வு செய்தல், நிகழ்வுகளுக்காகத் தேர்வுசெய்துள்ள வெளிகள், அதனைக் காமிராவின் வழியாகக் காட்டும் கோணங்கள், வண்ணங்கள் போன்றவற்றோடு, முன்வைக்க நினைக்கும் முடிவுகள் போன்றவற்றில் அறிவார்ந்த சிந்தனையும் விலகிநின்று பார்க்கும் மனோபாவமும் வெளிப்பட்டுள்ளது. அதன் வழியாகத் தீர்ப்புகள் எழுதாத கலைப்பார்வை கொண்டவராகவும் வெளிப்பட்டுள்ளார் இயக்குநர் நந்தினி. இதில் காட்டியுள்ள தொழில் நேர்த்திக்காகப் பாராட்டப்பட வேண்டியவர். ஏனென்றால் இந்த நேர்த்தியும் வெளிப்பாடு தமிழில் இயங்கும் இயக்குநர்களிடம் குறைவு.

****

கானகக் கிராமம் ஒன்றின் பலியிடல் சடங்கை நிகழ்த்துவதுபோன்ற காட்சியோடு தொடங்குகிறது முதல் பகுதி. இப்போதும் கிராமத்தெய்வங்களுக்கு நடத்தப்படும் பூக்குழி இறங்குதல் என்னும் தீமிதி நிகழ்ச்சி போன்ற நிகழ்வு அது. ஆனால் இது தீமீதியைப் போல ஓடிவந்து தீக்கொப்பளங்களை ஆற்றித் தப்பித்துக் கொள்ளும் நிகழ்ச்சியாக வடிவமைக்கப்படாமல், தங்களின் கிராமத்தின் / கானகத்தின் கடவுளான வனராட்சிக்கு முன்னால் நடக்கும் அக்கினிப்பிரவேசம் என்பதாகக் காட்டப்பட்டது. சாமியாட்டத்திற்குத் தயாராக வந்து தெய்வ உருவின்/ வனராட்சியின் முன்னால் உள்ள அக்கினிக்குண்டத்தில் முதலில் ஒரு பெண் இறங்க, அவரைத் தொடர்ந்து கிராமத்தின் மொத்தப்பேரும் அக்கினியில் இறங்கி உயிரைவிடும் நேர்த்திக்கடன் செய்யும் காட்சி அது. அக்காட்சி ஒரு சமயச் சடங்கு போலக் காட்டப்பட்டு, அந்தக் காட்டோடு ஒரு தொன்மக்கதையின் பகுதியாக மாற்றப்படுகிறது. கானவர்களின் தெய்வமான வனராட்சியின் காவல் இப்போதும் அங்கு இருக்கிறது என்ற நம்பிக்கை அந்தத் தொன்மத்தின் வழியாகப் பரவி நிற்கின்றன.

காட்டை அழிக்க நினைப்பவர்களை - வனத்தின் உயிர்களுக்குக் கேடு நினைப்பவர்களைக் காக்க வனராட்சி வருவாள் என்ற நம்பிக்கைக்குப் பின்னால் இருப்பது நல்ல எண்ணமா? தங்கள் தவறுகளை மறைத்துக் குற்றச்செயல்களில் ஈடுபடும் தனிநபர்களின் தீய எண்ணங்களா? என்பதே மொத்தத் திரைத் தொடரின் மர்ம முடிச்சுகளாக நீள்கிறது.

கானுயிர்களையும், கானகக் காட்சிகளையும் படம்பிடிக்கும் புகைப்படக்காரர் ஒருவரின் மரணத்தைக் கொலையா? விபத்தா?எனத் துப்பறியத் தொடங்குவதில் இன்ஸ்பெக்டர் ரிஷி, தனது இரண்டு உதவி இன்ஸ்பெக்டர்களோடு இணைந்து மர்ம முடிச்சுகளை விடுவித்துக் கொண்டே போவதுதான் தொடரின் பகுதிகள். அந்தக் கொலையைத் துப்பறியும் போக்கில் அதற்கு முன்பு நடந்த கொலைகளையும் இப்போது நடத்தப்படும் கொலைகளையும் யார் செய்துவிட்டு வனராட்சியின் பலிவாங்கும் நடவடிக்கை எனக் கண்டறிந்து சொல்வதைக் கச்சிதமாகத் திரைக்கதையாக்கித் தந்துள்ளார் இயக்குநர். அது மட்டுமல்லாமல், கானகக் காட்சிகளும் நடனக்கோர்வைகளும் அரங்கியல் அசைவுகளைக் கொண்ட கோர்வைகளாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இவையெல்லாம் சேர்ந்து ஒரு புதுவகைத் திரைத்தொடரை – நடிப்புக்கலையை விரும்பி ஏற்ற தமிழ் நடிகர்கள் பங்கேற்றுள்ள திரைத்தொடரைப் பார்க்கிறேன் என்ற உணர்வைத் தந்த நிலையில் தொடர்ச்சியாகப் பார்க்கும் மனநிலை உருவானது. அம்மனநிலையைத் தொடர்ந்து தக்கவைக்காமல் விலகலை ஏற்படுத்தும் காட்சிப்பின்னல்களும் இருந்தன என்பதைச் சொல்லவேண்டும். அக்காட்சிகளைத் தொடரின் நீளத்தைக் கூட்டுவதற்காக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் எனக்குறையாகச் சொல்லலாம். அதே நேரம் இந்தத் தொடரோடு நேரடியாகத் தொடர்பில்லாத சில கருத்துநிலைப் பேசுவதற்கான வாய்ப்பாக இயக்குநர் அதைத் தெரிவு செய்து பாத்திரமாக்கலைச் செய்திருக்கிறார் எனவும் சொல்லலாம்.

வனத்திற்குள் நடந்த கொலையைத் துப்பறிய வரும் இன்ஸ்பெக்டர் ரிஷியின் திருமணம் சார்ந்து ஒரு முன் கதை இருக்கிறது, அக்கதையும் ஆவியாக வருதல் தொடர்பானது என்ற நிலையில் வனராட்சி ஆவியா? பலி வாங்கும் கானகர்களில் ஒருத்தியா? என்ற கேள்வியோடு தொடர்புடையது எனப் பொருத்தம் சொல்லலாம். இதே தன்மையில் ரிஷியின் உதவியாளர்களாக வரும் துணை ஆய்வாளர்களின் பின்னணிக்கதைகளையும் கிளைக்கதைகளையும் அப்படிச் சொல்ல முடியாது. இயக்குநர் புதிய கருத்தியல்களை – இந்திய சமூகத்தில் தீவிரமாக விவாதிக்கப்பட வேண்டிய கருத்துக்களை முன்வைக்கும் ஆர்வம் காரணமாக அக்கதாபாத்திரங்களின் சொந்தக்கதைகளை உருவாக்கியிருக்கிறார் என்ற நிலையில் அதனை ஏற்கலாம். ஒருபால் விருப்பம் கொண்டவர்களை நமது சமூகம் எப்படிப் பார்க்கிறது என்ற விவாதத்தைப் பார்வையாளர்களுக்கு இந்த அளவுக்குக் கடத்திய சலனப்படக் காட்சிகள் தமிழில் இல்லையென்ற அளவில் அதனை வரவேற்கவே வேண்டும் அத்தோடு அக்கதைகளிலும் மர்மம், அமானுஷ்யம் என்ற இவ்வலைத்தொடரின் மையத்தோடு தொடர்புகள் இருக்கின்றன என்பதால் பெரிய விலகல்களாகவும் கருத வேண்டியதில்லை.

தொடரின் பெரும்பகுதியை வனம், வனத்திற்குள் உள்ள கிராமம், அப்பகுதி மக்களின் வாழ்வியல் என்பதைக்கொண்டு காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றிற்கிணையாகவே நகர வாழ்க்கையும் காட்டப்பட்டுள்ளன. வெளிசார்ந்த எதிர்வில் இயக்குநரின் சார்பு கருத்தியல் ரீதியாக இதுதான் என்பதாக இல்லை. அதனை விவாதிக்க வேண்டும் என்பது மட்டுமே அவரது நோக்கமாக இருந்துள்ளது. மர்மத்தொடர் ஒன்றில் சமூகப் பார்வையை வெளிப்படுத்தியதோடு நடிப்புக்கலையில் தேர்ச்சியுள்ளவர்களைப் பயன்படுத்தவேண்டுமென நினைத்த இயக்குநர் நந்தினியை முழுமையைத் தேடிய இயக்குநர் எனக் கருதமுடிகிறது.




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

கெட்டுப்போகும் பெண்கள்

மந்திர நடப்பியல் உருவாக்கம் : நேசமித்திரனின் இயக்கி