மந்தையின் ஆடுகள் : பற்றும் வெறியும்

இயல்பான விருப்பங்களைப் பற்றாகவும், பற்றின் அளவைத் தாண்ட வைத்து வெறியாகவும் மாற்றுவதில் நமது காலச் சமூக ஊடகங்கள் மறைமுகக் காரணிகளாக இருப்பதாகத் தோன்றுகிறது. வெறியாக மாறும்போது மனிதர்கள் வன்மங்கொண்டவர்களாக மாறிப் பகைமை உணர்வுக்குள் தள்ளப்படுவார்கள். ஒவ்வொருவரும் தங்கள் மூளையைத் தொலைத்துவிட்டுச் சிந்திக்க மறந்து கூட்டத்தின் போக்குகளுக்குள் (Trends) சிக்கிக்கொள்கிறார்கள். தங்களின் திறனைக் கைவிட்டுக் கூட்டத்தின் பகுதியாகக் கலந்து விடுகிறார்கள். அண்மையில் உருவான சில மந்தைப் போக்குகளை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்.

***
இளையராஜாவின் திரையிசைப்பாடல்களை ரசித்தவர்களை ரஹ்மானின் இசைக்கு எதிர்நிலைப்பாடு எடுக்கச் செய்வதில் தொடங்கும் வன்மம் சாதிப்பற்று, சமயப்பற்று என மாறி வன்மப்பேச்சுகளாக மாறுவதைப் பார்க்கிறோம். அதன் தொடர்ச்சியில் இசையின் விற்பனையும் வணிக நிறுவனங்களும் இருக்கின்றன. இசையின் ரசிகர்களை வணிகச் செயல்பாடுகள் குறித்தும், காப்புரிமை குறித்தும் பேச வைக்கின்றன. சினிமா என்னும் கூட்டுச் செயல்பாட்டைக் கூறுகட்டிச் சிதைத்துப் பாடலாசிரியர், இசைக் கோர்வையாளர், இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பகைமுரண்பாடுகளைக் கூர்தீட்டுகின்றன.

கிரிக்கெட் தீவிரமான தேசப்பற்றின் அடையாளமாக உருவாகிப் பாகிஸ்தானில் இந்திய அணியும், இந்தியாவில் பாகிஸ்தான் அணியும் விளையாட முடியாத நிலை உருவாகி விட்டது. எந்தக் கோப்பையாக இருந்தாலும் இந்திய அணியே வெல்ல வேண்டும் எனத் தீச்சட்டி ஏந்தி நேர்த்திக் கடன் சொல்ல வைத்தார்கள்; வேத மந்திரங்கள் ஓதி யாகம் வளர்த்தார்கள். இந்திய அணிக்குக் கோப்பை கிடைக்க வில்லையென்றால் தோல்விக்குக் காரணமான வீரர்களின் வீட்டின் மீது கல்லெறிந்தார்கள்; கொடும்பாவி கொளுத்திக் கோபம் கொண்டார்கள். அதிலும் பாகிஸ்தானோடு மோதி இந்திய அணி தோற்றுப் போய்விட்டால் கையை வெட்டிக் கொள்ளவும், காலை உடைத்துக் கொள்ளவும் கூடத் தயாராகி விட்டது இந்திய ரசிக மனோபாவம். எப்போதும் இந்திய அணியே வெல்ல வேண்டும் என்ற மனநிலையை உருவாக்கிப்பிற அணிகளை எதிர்க்கவேண்டிய நிலையை உருவாக்கியதில் சிறிய மாற்றத்தை ஏற்படுத்தியவை ஐபிஎல் போட்டிகள்.

தேசப்பற்றின் ஊற்றாகவும், வெற்றி தோல்விக்காக விடுமுறை அளிக்கும் நிகழ்வாகவும் ஆகிவிட்ட கிரிக்கெட்டின் பின்னணியில் அசைவது என்ன? பெரும் கும்பல் மனோபாவம் தான். இந்தக் கும்பல் மனோபாவம் தன்னெழுச்சியாக உருவான கும்பல் மனோபாவம் அல்ல என்பது தான் கவனிக்க வேண்டிய ஒன்று. இப்போது இந்தக்கும்பல் மனோபாவத்திற்கு ஐபிஎல் வட்டாரத் தன்மையைக் கொண்டுவந்திருக்கிறது. அதற்குள்ளும் சில நேர்மறைக்கூறுகள் இருக்கின்றன. டெல்லியைச் சேர்ந்த விராட் கோலி பெங்களூரின் புதல்வராகிறார். தமிழ்நாட்டு வீரர்கள் குஜராத் அணியிலும் கொல்கத்தா அணியிலும் கோலோச்சுகிறார்கள். எல்லா அணிகளிலும் மேற்கிந்திய அணியின் திறமையான ஆட்டக்காரர்கள் கொண்டாட்டத்திற்குரியவர்களாக இருக்கிறார்கள். இந்த மாற்றம் கிரிக்கெட்டில் நடந்துள்ள மிகப்பெரிய வரவேற்கத்தக்க மாற்றம்.

ஐபிஎல் ஆட்டங்களின் நேர்மறைத் தன்மைகளைச் சிதைத்துக் கொண்டிருக்கின்றன சமூக ஊடகங்களின் மந்தைத் திரட்சி. தேர்ந்த கிரிக்கெட் ஆட்டக்காரர்களின் திறமைகளை ரசித்த ரசிகர்களை அணிகளின் ஆதரவாளர்களாக மாற்றி இடத்தோடும் மொழியோடும் பிணைத்துப் பற்றை வெறியாக்கும் வேலை இது. தொடக்கப்போட்டிகளில் வெளிப்படாத வன்மமும் வெறியூட்டங்களும் கடைசிக்கட்டப் போட்டிகளின் போது கூர்மையானதின் பின்னணியில் சமூக ஊடகங்களின் பங்கு இருக்கின்றது. கடைசி நான்கு அணிகள் என்றான பின் ஒவ்வொரு அணியின் ஆதரவாளர்களும் சமூக ஊடகங்களில் மட்டுமல்லாது, விளையாட்டு மைதானங்களிலும் மோதல் போக்கை -மந்தையாகிக் கூச்சலிடுவதில் இணைந்தார்கள். இப்படித் திரட்டுவதிலும் அணிகளின் வணிக நோக்கங்களும் இருக்கின்றன. வணிகக் குழுமங்களின் லாபநோக்கமும் இருக்கின்றது.

****

மாவட்டம் சார்ந்த உணவுப் பண்டங்களைப் பற்றிய பேச்சை அடுத்த மாவட்டத்தைக் கேலி செய்யும் ஒன்றாக மாற்றுவதில் சமூக ஊடகங்களின் எழுத்துகளும் படங்களும் போட்டிபோட்டுக் கொண்டே இருக்கின்றன. உணவு விருப்பம், வட்டாரப்பேச்சுமொழி போன்றன ஒருவிதத்தில் நிலவியலின் இயல்புகள். ஆனால் அவற்றைக் கேலியும் கிண்டலுமாக மாற்றிப் பிறர்மீதான பகையாக மாற்றுகின்றன சமூக ஊடக எழுத்துகள். உருவக்கேலி, சாதிப்பகை, சமயவெறுப்பு எனப் பழக்கவழக்கங்கள் மீதான வன்மப் பேச்சாக மாற்றிவிடுகின்றன சமூக ஊடகங்கள். கோவையின் அரிசிம்பருப்பு, மதுரையின் வடைகள், திருநெல்வேலி அல்வாக்கள், சென்னையின் பிரியாணிக் கடைகள், பரோட்டாக்கடைகளின் சால்னாக்கள் என ஒவ்வொன்றின் மீதான அங்கதப் பேச்சுகள், மனிதக்கூட்டங்களின் மீதான வன்ம வெளிப்பாடுகளாக மாறுவதைத் தவிர்க்க நினைப்பதில்லை அதில் இயங்குபவர்கள்.

******

சமூக ஊடகங்களில் எப்போதும் மந்தைத் திரளுக்குரிய கச்சாப்பொருளாக இருப்பது பெண் x ஆண் எதிர்வு நிலை. பெண்களின் உடல் அழகை ரசிப்பவர்களாகவும் வெளிப்படையான காமத்தை வேண்டுபவர்களாகவும் காட்டிக்கொள்ளும் பலர் பொது நிலையில் பெண் வெறுப்பாளர்களாகத் திகழ்கிறார்கள். பெண்ணியம் பேசுபவர்களை வெறுப்பதாக வெளிப்படும் அவர்களின் நிலைப்பாடுகள், எப்போதும் பெண்களின் ஆளுமைத் திறனைக் குறைத்து மதிப்பீடு செய்யும் நோக்கத்தில் இருப்பதையும் மறுக்க முடியாது. திரைப்படங்களில் காட்டப்படும் பெண்களின் ஆளுமையை – ஊடகங்களில் செயல்படும் பெண்களின் நோக்கங்களையும் எள்ளலுடன் பேசுவதின் வழியாக உருவாக்கப்படும் மந்தைப்போக்கு – ட்ரெண்ட் – முடிவில் பெண் வெறுப்பாக மாறும் என்பதை உணர்வதில்லை. பள்ளிக்கல்வியின் தேர்தல் முடிவுகளில் பெண்கள் அதிகமான எண்ணிக்கையில் இருப்பதையும் அதிகமானவர்கள் தேர்ச்சி பெறுவதையும் மதிப்பெண்கள் வாங்குவதையும் கூட ஏற்கும் மனநிலை இல்லாமல் எதிர்மனநிலையை வெளிப்படுத்துவதற்குச் சமூக ஊடகங்கள் தரும் சுதந்திரம் பயன்பட்டுக்கொண்டே இருக்கிறது.

***

ஜூன் 4 இல் வரப்போகும் பொதுத்தேர்தல் முடிவுகளைக் குறித்தும் அங்கதமாகவும் எள்ளலாகவும் எழுதவே செய்வார்கள். அதன் வழியாக உருவாகும் மந்தைப்போக்குப் பின்விளைவுகளைக் குறித்துக் கவலைப்படப்போவதில்லை. மந்தையில் கலப்பது தன்னிலையைத் தொலைத்துக் காணாமல் போகும் விருப்பம் என்பதை ஒவ்வொருவரும் நினைவில் கொள்ளவேண்டும்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

கெட்டுப்போகும் பெண்கள்

மந்திர நடப்பியல் உருவாக்கம் : நேசமித்திரனின் இயக்கி