புகையிரத (ரயில்) பயணத்தில்

இலங்கை போன்ற குட்டி நாட்டில் நீண்ட தூரப் பயணங்களை இருப்பூர்தி வழியாகத் திட்டமிடலாம். தூரப் பயணங்களுக்குப் பேருந்துகளே போதுமானது; ஏற்றது. 2016 இல் சென்ற முதல் இலங்கைப் பயணத்தில் ரயிலைப் பார்க்கவே இல்லை. போர்க்காலம் முடிந்து 7 ஆண்டுகள் ஆன நிலையிலும் தமிழர் பகுதிக்குள் செல்லும் பாதைகள் இன்னும் செப்பனிடப்படவில்லை என்றும், ஓடும் ரயில்களும் பழைய ரயில்கள் என்றும் சொன்னதால் அந்தத்தடவை ரயில் பயணம் பற்றி யோசிக்கவே இல்லை. ஆனால் இந்த முறை எல்லாம் மாறிவிட்டன. ஓரளவு சொகுசு ரயில்களே வந்துவிட்டன என்று சொன்னார்கள். அதனால் கொழும்புவிலிருந்து கிளம்பிய முதல் நகர்வே ரயில் பயணம் தான். பேராதனைக்குப் பேருந்திலும் போகலாம்; ரயிலிலும் போகலாம். தனது காரில் அழைத்துப் போவதில் இருந்த சிக்கலைப் பேரா.நுஃமான் தெரிவித்துவிட்ட நிலையில் ரயிலில் பயணிப்பது என்பது உறுதிசெய்யப்பட்டது.

இலங்கைத் தமிழர்கள் ரயிலைப்(Rail)புகையிரத வண்டி என்று மொழியாக்கம் செய்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் ரயில் பாதையை இருப்பூர்தித் தடம் என்றும் தொடர்வண்டிப் பாதை என்றும் தொடர்வண்டி நிலையம் என்றும் பலவிதமான சொற்கள் பயன்பாட்டில் உள்ளன. மக்களோ ரயில் என்றும் ரயில்வே ஸ்டேஷன் என்றும் சொல்கிறார்கள். எனது முதல் தொடர் வண்டி பயணம் மதுரையிலிருந்து திண்டுக்கல்லுக்கு 1972 இல். அப்போது தமிழ்நாட்டிலும் புகைவண்டிகளும் இருந்தன; புகைவண்டி நிலையங்களும் இருந்தன. நிலக்கரியில் ஓடிய காலகட்டத்தில் புகையைக் கக்கிக் கொண்டு ஓடியதை நானும் பார்த்திருக்கிறேன்.
கொழும்புவிலிருந்து நான் போகவேண்டிய பல்கலைக்கழகம் இருக்கும் பேராதனையிலேயே சிறிய நிலையம் உண்டு என்றும், அதற்கு முன்பு கண்டி நிலையம் கொஞ்சம் பெரியது என்றும் சொன்னார்கள். கண்டியில் இறங்கியும் பல்கலைக்கழகத்திற்குப் போகலாம்; பேராதனை நிலையத்திலும் இறங்கலாம். இரண்டு நிலையத்திலிருந்தும் தூரத்தில் அதிகம் வித்தியாசம் இல்லை என்பதும் சொல்லப்பட்டது. பயணச்சீட்டுக்காக முதல் நாள் இரவு, முஸ்டீன் இணைய வழியாகத் தேடியதை நிறுத்திவிட்டுக் காலையில் நடையாகப் புகையிரத நிலையம் போய் பயணச்சீட்டை வாங்கிவிடலாம் என்று முடிவுசெய்தார். முன் பதிவு இல்லாத நிலையில் அரைமணி நேரத்திற்கு முன்பாகப் போனால் போதும் என்று சொல்லிவிட்டார்.

கொழும்பிலிருந்து கண்டி வழியாகச் செல்லும் ரயில்களில், காலை 10 மணிக்குக் கிளம்பி, மதியம் 01,30 -க்குப் பேராதனை போய்ச் சேரும் ரயிலில் பயணம் செய்வது என்று முடிவுசெய்து வீட்டிலிருந்து 9 மணிக்குக் கிளம்பினோம். புகையிரத நிலைய உணவு விடுதியில் காலை உணவு எடுத்துக் கொண்டிருக்கும்போது முஸ்டீன் டிக்கெட் வாங்கி வந்தார். பிளாட்பாரத்தில் புகையிரதம் வந்து நின்றது. பயணப்பொதியை ஏற்றி உள்ளே வைத்துவிட்டு, உரிய இடத்தில் உட்கார வைத்துவிட்டு இறங்கிச் சென்றார் முஸ்டீன்.

அது கண்டி வழியாகப் பதுளை செல்லும் ரயில். பேராதனைக்கும் கொழும்புவிற்கும் இடைப்பட்ட தூரம் 115 கிலோமீட்டர். மூன்றரை மணி நேரத்தில் கடந்துவிடும் பேராதனையை அடைந்துவிடும். பெரும்பாலான தூரத்தை மலைப்பாதை வழியாகவே கடக்கிறது. அகலரயில் அல்ல. குளிர்சாதன வசதியும் இல்லை. ஆனால் சாய்வுவசதி கொண்ட இருக்கைகள் இருந்தன. இரண்டுபக்கமும் இருவர் இருவராக அமரும் நான்குபேர்கொண்ட வரிசையில் பெட்டிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. நான் ஏறிய பெட்டியில் முதல் வரிசையில் மூன்றாவது இடம் காலியாக இருந்தது. அமர்ந்து விட்டேன். முதல் இரண்டு இடங்களில் வெள்ளைக்கார ஜோடி ஒன்று அமர்ந்திருந்தது. என்னருகில் சிங்களர் ஒருவர் அமர்ந்திருந்தார்.

கொழும்பிலிருந்து கிளம்பி சமவெளிப்பகுதியில் சென்று கொண்டிருந்தது. பச்சையம் பூசிய வயல்களும் மரங்களும் பின்னோக்கி நகர்ந்து கொண்டிருந்தன. இருபது நிமிடங்கள் கழித்து பக்கத்திலிருந்தவரோடு பேச நினைத்தேன். ஆங்கிலம் தெரியுமா? என்று ஆங்கிலத்தில் கேட்டதற்கு ஆங்கிலம் தெரியும் என்று ஆங்கிலத்திலேயே சொல்லி விட்டுப் பேசத்தொடங்கினார். தான் ஒரு வேதியியல் தொடர்பான அரசுப்பணியில் இருப்பதாகச் சொன்னார். விவசாயம், மீன்வளம் போன்றவற்றில் வேதியியல் சார்ந்த ஆய்வுகள், அறிக்கைகள் தயாரிப்பு போன்றவற்றைச் செய்து அரசுக்குத் தருவதும், அரசின் உதவிகளை தேவையானவர்களுக்குக் கொண்டுபோவதுமான ஓர் அரசுப்பணி என்பது புரிந்தது. தான் வட இந்தியாவில் மதுரா, ஆக்ரா போன்ற இடங்களுக்கும் டெல்லிக்கும் போயிருப்பதாகச் சொன்னார். தமிழ்நாட்டிற்குள் வந்ததில்லை என்றும் சொன்னார். சிலநேரங்களில் சிங்களர்களைத் தமிழ்நாட்டில் தாக்கியதை நினைவுபடுத்திப் பேசினார். மதுரை மீனாட்சியம்மன் பற்றியும் திருப்பதி வெங்கடாசலபதி பற்றியும் நிறையப் பேசினார். பார்க்க ஆசையாக இருப்பதாகவும் சொன்னார். இருவரும் ஒரு படம் எடுத்துக்கொண்டொம்.

ரயில் சின்னதும் பெரியதுமான ஊர்களில் நின்றுநின்றுதான் போனது. அவரோடு பேசிக்கொண்டும் மலைப்பாதைகளின் சரிவையும் பள்ளத்தாக்குகளையும் கடந்து கொண்டிருந்தது. எனக்கான இருக்கை இடது புறத்தின் உள் இருக்கை. அந்தப் பக்கம் வெட்டப்பட்ட பாறைகளே அதிகம் தென்பட்டன. பாறை இடுக்குகளில் வேர்கள் ஓடிய மரங்களும் நீர்க்கசிவுகளும் கண்ணில் பட்டன. அதன் எதிர்ப்பக்கத்தில் ஆழமான பள்ளத்தாக்குகளும் அலைந்து அசையும் மரக்காடுகளும் அடர்வனத்தின் இறுக்கத்தைக் காட்டின.

எங்களுக்கு எதிர்ச்சாரியில் இருந்த வெள்ளைக்கார இணை இறங்கிவிட்டது. அந்த இடத்தில் இன்னொரு இணை வந்து அமர்ந்தனர். அமர்ந்த சில நிமிடங்களுக்குப் பின்னர் அங்கே ரயில்வே காவலர்களோடு மூன்று துறவிகள் வந்தார்கள். வந்தவுடன் முன்வரிசையில் இப்போது அமர்ந்த இருவருடம் உடனே எழுந்து துறவிகளுக்கு இடம் அளித்துவிட்டுப் பின்னால் போய் நின்றுகொண்டனர். அப்போதுதான் கவனித்தேன். அந்த முன்னிருக்கை இரண்டும் குருமார்களுக்கு என்று குறிப்பிடப்பட்டிருந்தது.என் வரிசைக்கு முன்னால் பார்த்தேன். இடதுபுற வரிசையில் அப்படியொரு குறிப்பு இல்லை. வந்த மூன்று குருமார்களில் இருவர் அமர, இளைய குரு ஒருவருக்கு இடமில்லை. உடனே என்னருகில் அமர்ந்திருந்த சிங்களர் எழுந்து அவருக்கு இடத்தைக் கொடுத்து விட்டுப் பின்னால் போய் நின்று கொண்டார்.

அமர்ந்த புத்தபிக்குவான குரு எழுந்துபோனவரைவிட 20 வயது குறைவானவராக இருப்பார். ஆனால் குரு தனக்கான இடம் உறுதியான ஒன்று என்பதுபோல என் பக்கத்தில் வந்தமர்ந்தார். நான் எழவில்லை. அருகில் அமர்ந்த சிறுவரான குருவிடம் ஒரு அலைபேசி இருந்தது. அது பழைய வகையானது. பேசத்தான் முடியும். அவரோடு ஆங்கிலத்தில் பேசமுயன்றேன். அவருக்கு ஆங்கிலம் பேசத் தெரியவில்லை. ஆனால் நான் பேசுவதைப் புரிந்துகொண்டார். ஒரு படம் எடுத்துக் கொள்ளலாமா? என்று கேட்டேன். வரிசையின் கடைசியில் அமர்ந்துள்ள மூத்த பிக்குவிடம் அனுமதி கேட்டார். அவரது சம்மதத்திற்குப் பின்னர் படம் எடுத்துக் கொண்டோம். இலங்கையில் புத்த குருமார்களுக்கு எல்லா வகையான போக்குவரத்திலும் தனியிடங்கள் ஒதுக்கப் பட்டுள்ளன. அவர்களுக்கு ஒதுக்கப்படாத இடத்தைக் கூடச் சிங்கள மக்கள் வழங்கத் தயாராகவே இருக்கிறார்கள். ஒருவேளை இது தமிழ்ப்பகுதியாக இருந்தால் குருமார் நின்று பயணிக்க வேண்டியதிருக்கலாம்.

இப்போது நான் இறங்கவேண்டிய பேராதனை வந்தது. நான் பேராதனைக்குப் போகிறேன் என்று முன்பு குருமாருக்கு இடம் அளித்துப்போன நண்பருக்குச் சொல்லியிருந்தேன். அவர் பதுளை வரை போகிறவர். பேராதனையில் நான் இறங்கியதும் அந்த இடத்தில் அமர்வதற்காக வந்தார். நான் எழுந்து அவருக்கு இடமளித்துவிட்டுக் கைகுலுக்கி விடைபெற்றேன்

பேராதனை ரயில் நிலையத்தில் தமிழ்த்துறையின் இளம் ஆசிரியர் ஒருவர் மகிழுந்துடன் காத்திருப்பார் என்பதைத் துறையின் தலைவரான வ.மகேஸ்வரன் தெரிவித்திருந்தார். அங்கிருந்து தங்குமிடத்திற்குச் சென்று தங்கியிருக்கலாம்; மாலையில் ஆய்வாளரொருவர் வந்து கண்டிக்கு அழைத்துப் போய் இடங்களைக் காட்டுவார்; இரவுணவை அங்கேயே முடித்துக்கொண்டு இரவு ஓய்வெடுத்தால், மறுநாள் காலை உணவு தங்குமிடத்தில் தருவார்கள். பின்னர் துறைக்கு அழைத்துச் செல்லக் கார் வரும் எனப் பயணத்திட்டத்தைச் சரியாகவே போட்டுத்தந்து விட்டார் பேராசிரியர்.

பல்கலைக்கழக வளாகத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரம் விலகி இருந்த அந்தத் தனியார் விடுதி- கிங்ஸ் லெசர்ஸ் ரெசிடென்சியில் மூன்று பேர் தங்கும் அறையில் நான் மட்டும் தங்கியிருந்தேன். பொதுவாக டிசம்பர் மாதம் இலங்கையில் மழையும் குளிருமான காலம். அதிலும் கண்டி தொடங்கி மேலே நகரும் மலையகத்தில் எப்போதும் மேகங்கள் திரண்டு மழையாக மாறிக்கொண்டே இருக்கும். விடுதிக்குப் போகும் பாதையில் மதிய உணவைப் பொட்டலங்கட்டி வாங்கிக் கொண்டு போய்ச் சாப்பிட்டுவிட்டு ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டு கார் கிளம்பிவிட்ட து. திரும்பவும் ஐந்து மணி வாக்கில் ஆய்வாளர் வந்து புத்தரின் தங்கப்பல் இருக்கும் தலதா மாளிகைக்கு அழைத்துப் போனார். மழையாக இல்லாமல் சாரலாகப் பெய்து கொண்டிருந்தது. வளாகம் முழுவதும் நீரோட்டம். சுற்றிப் பார்த்து, அமர்ந்து ரசித்து, விளக்கொளியில் கண்டு ரசித்துக் கொண்டிருந்த போது, இந்தத் தலதா மாளிகையும் போரில் சிதைக்கப்பட்டது என்பது நினைவில் ஓடியது.

சிங்களர்களின் பண்பாட்டுப் பெருமிதங்களில் ஒன்றான தலதா மாளிகையை முன்னைவிடவும் பன்மடங்கு அழகுமிக்கதாகக் கட்டி எழுப்பிக் கொண்டிருக்கிறார் அதிபர் கோத்தபயா என்பதைப் பார்க்க முடிந்தது. மழை வலுத்துப் பெய்ய ஆரம்பித்தபோது, ஊர் சுற்றிக் காட்ட நினைத்த ஆய்வாளருக்குத் தர்மசங்கடம். இந்த மழையில் எதனை காட்டமுடியும் எனத் தவித்தார். அவரது தவிப்பைப் புரிந்து கொண்ட நான், எதிரில் இருந்த இந்திய உணவுச் சாலையில் ஒரு மசால் தோசையும் உளுந்து வடையும் கட்டி எடுத்துக் கொண்டு அறைக்குப் போய் விடுகிறேன். நீங்கள் உங்கள் இடத்திற்குப் போய்ச்சேருங்கள். மழையில் எதனையும் பார்க்க முடியாது எனச் சொன்னவுடன் ஆறுதலாகப் பார்த்தார். அறைக்கு வந்துவிட்டுவிட்டு வருகிறேன் என்று வலியுறுத்தினார். நீங்கள் ஆட்டோ பிடித்து அனுப்பிவிட்டால் போதும் என்று சொன்னதைத் தயங்கத்துடன் கேட்டு அதன்படி செய்தார். இரவெல்லாம் மழை பெய்து கொண்டே இருந்தது. அறையில் வெம்மைக்கான கருவி இருந்ததால் குளிர் தெரியவில்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தமிழில் நடப்பியல் இலக்கியப் போக்குகள்