படம் தரும் நினைவுகள்-2

அமெரிக்கன் கல்லூரியின் முதன்மைக் கட்டட மாடியில் உள்ளமேடையில் எடுக்கப்பட்ட படம். 1989 - எனது இயக்கத்தில் மேடை ஏறிய முதல் நாடகமான ஞான.ராஜசேகரனின் ‘வயிறு’ நாடகத்தின் மேடையேற்றத்திற்குப் பின் பார்வையாளர்கள் எல்லாம் வெளியேறியபின் நடிகர்களும், நாடகத்தோடு பின்னணி வேலைசெய்தவர்களுமாக இருக்கிறோம்.பேரா.சாலமன் பாப்பையா மாணவர்களுக்குள் ஒருவராக பின்வரிசையில் நிற்கிறார். அப்போது அவர் தமிழ்த்துறையின் தலைவர். பேச்சுக்கலையின் சாத்தியங்களை முழுமையாகப் பயன்படுத்தியதற்காக இந்திய அரசின் பத்மஸ்ரீ விருதை (2020) பெற்றவர். அவர் நிற்கும் அதே வரிசையில் வலது ஓரத்தில் நிற்கும் இரு பெண்களில் ஒருவர் தனலட்சுமி. கோவையில் இருக்கிறார். வங்கி அதிகாரியான பொன்.சந்திரனின் துணைவியார். இப்போது மாற்றுச் சினிமாவிக்களிலும் இணையவெளிக்காகத் தயாரிக்கப்படும் தொடர்களிலும் நடிக்கிறார் . 

இன்னொருவர் அப்போது அங்கு படித்த மாணவி. அவர் பெயர் மட்டுமல்ல. அந்நாடகத்தில் பங்கேற்ற மாணாக்கர்கள் ஒருவரின் பெயரும் இப்போது நினைவில் இல்லை. நடிகர்களாகப் பங்கேற்காமல் பின்னணி இசையை வழங்கிய பிரபாகர் வேதமாணிக்கம், ஒத்திகைகளில் ஒருங்கிணைப்புகளைச் செய்த எவாஞ்சலின் மனோகரன் முதலானோர் நான் பணியில் சேர்ந்த அதே ஆண்டு சேர்ந்த புதிய ஆசிரியர்கள். பின்வரிசையில் சுந்தர்.காளியின் முகமும் தெரிகிறது. அமெரிக்கன் கல்லூரியின் கலை, இலக்கியச் செயல்பாடுகளில் தன்விருப்பமாக இணைந்துகொள்ளும் முன்னாள் மாணவர்

மூன்று நாள் நாடகப்பயிற்சி ஒன்றுக்குப் பிறகுத் தமிழ்த்துறையின் சார்பில் ஒரு நாடகத்தை அரங்கேற்றலாம் என்ற முன்மொழிவைத் துறைத்தலைவர் சாலமன் பாப்பையாவிடம் சொன்னபோது உற்சாகமாக அனுமதி அளித்தார். நாடகத்தை மேடையேற்றக் குறைந்த செலவினத் தொகையாக ரூ 5000/ தேவைப்படும் என்றும் சொன்னேன். கல்லூரியில் ஆண்டுக்கு இரண்டு மூன்று ஆங்கில நாடகங்களை மேடையேற்றும் ஆசிரியர்கள் அத்துறையில் இருந்தார்கள். அதற்குக் கல்லூரியின் கலை அரங்கம் தரப்படுவதோடு நிதியுதவியும் அளிக்கப்படுவதுண்டு. ஆங்கிலத்துறையைப் போலத் தமிழ்த் துறையும் கலை இலக்கியத் துறையில் செயல்படும் துறையாக இருக்க வேண்டும் என்ற ஆர்வம் தலைவர் பாப்பையாவுக்கு இருந்தது. ஒத்திகையை ஆரம்பித்து நடத்துங்கள். கல்லூரி முதல்வருக்கு ஒரு கடிதம் கொடுத்து அந்த ஐயாயிரத்தைக் கேட்போம். நிர்வாகம் தரவில்லையென்றால் நான் தருகிறேன் என்று சொல்லி உற்சாகம் ஊட்டினார்.

ஒத்திகையை ஆரம்பித்த போது என்ன நாடகத்திற்கான ஒத்திகை என்று முடிவுசெய்திருக்கவில்லை. ஆனால் எழுதி அச்சிடப்பெற்ற நாடகம் ஒன்றை மேடையேற்றுவது என்பதில் உறுதியாக இருந்தோம். ந.முத்துசாமி, இந்திரா பார்த்தசாரதி, ஜெயந்தன், ஞான.ராஜசேகரன் நாடகப்பனுவல்கள் என்வசம் இருந்தன. அவற்றில் ஜெயந்தனின் மனுஷா.. மனுசா.. அல்லது ஞான ராஜசேகரனின் வயிறு இரண்டில் ஒன்று என்று நெருங்கியபோது ஒத்திகையில் கலந்து கொண்டிருக்கும் மாணவர்கள் அனைவரும் பங்கேற்கும்படியாக வயிறுவே இருக்கும் என்பதால் அதனை நகலெடுத்து வாசிக்க ஆரம்பித்த அன்றே பெண் பாத்திரத்திற்கு ஆள் தேவை என்பது முதல் சிக்கலாக வந்து சேர்ந்தது. அம்மா பாத்திரம் என்பதால் நடுத்தர வயதைத் தாண்டிய பெண் வேண்டும். மாணவிகளில் ஒருவரை அந்தப் பாத்திரத்தில் நடிக்க வைப்பதைவிட நடுத்தரவயதுக்காரரே கிடைத்தால் நல்லது என்று நினைத்தோம். அந்த நேரத்தில் சுதேசிகள் நாடகக்குழுவில் சார்பில் பல்லக்குத்தூக்கிகளை மேடையேற்றியபோது இசைப்பின்னணிக்காக பொன். சந்திரன் வருவார். அவர் வரும்போது அவரது மனைவியும் வருவார். அவரைக் கேட்கலாம் எனச் சுந்தர் சொன்னார். கேட்டவுடன் ஒத்துக்கொண்டு ஒத்திகைக்க்கு வந்து விட்டார்.

வயிறு நாடகத்தை மேடையேற்றுவதென்று முடிவான பின் 10 நாட்கள் பயிற்சி. கல்லூரி முதல்வர் முனைவர் பீட்டர் ஜெயபாண்டியன் குடும்பத்தோடு வந்து நாடகம் பார்த்தார். 600 பேர் ஒரே நேரத்தில் தேர்வு எழுதும் அளவுக்குப் பெரிய அரங்கம். ஆசிரியர்களும் விடுதி மாணவர்களுமாக முதன்மை கட்டட மாடி அரங்கம் பாதியளவு நிறைந்திருந்தது. வயிறு நாடகத்தை இயக்குவதற்கு முன்பு பட்டப்படிப்புக் காலத்தில் அந்த அரங்கில் கவிதை வாசிப்புக்காகவும் பட்டம் பெறுவதற்காகவும் மட்டுமே மேடையேறியவன். வயிறு நாடகம் மதுரை நிஜநாடக இயக்கத்தின் தொடர்பில்லாமல் இயக்கி மேடையேற்றிய நாடகம். அன்று நாடகம் பார்க்க வந்தவர்களில் நண்பர் த.பரசுராமனும் ஒருவர். இந்தப் படத்தில் அவர் இல்லை.

மதுரையின் நவீன நாடகச் செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்ட காலம் எட்டு ஆண்டுகள். முதுகலையில் சேர்ந்த 1981 முதல் 1989 வரை மதுரை நிஜநாடக இயக்கத்தின் செயல்பாடுகள் ஒவ்வொன்றிலும் ஈடுபாட்டுடன் இருந்தேன். நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அல்லாமல், புதிய சிந்தனைகளைப் புதிய வடிவத்தில் சொல்லும் நோக்கத்தில் கிளம்பிவரும் அலைகள் ஒவ்வொன்றுக்குள்ளும் நுழைந்து பார்க்கும் இளம்பருவத்துக்கோளாறுகள் ஒன்றாக இப்போது அந்த ஈடுபாட்டைக் கணிக்கத்தோன்றுகிறது. மதுரையின் மையமான ஓரிடத்தில் - திண்டுக்கல் சாலையிலிருந்த ஆர்யபவான் அரங்கில் நிகழ்த்தப்பெற்ற வட்டவடிவ அரங்கச் செயல்பாடுகளைக் குறித்த பதிவாகக் கணையாழியில் வந்திருந்த அந்தக் கட்டுரையை வாசித்த பின்பே நிஜநாடக இயக்கம் பற்றித் தெரிந்துகொண்டேன். அதன் நிறுவனர் மு.ராமசுவாமி நான் சேர்ந்துள்ள மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தான் இருக்கிறார் என்ற தகவலோடு அவரிடம் அறிமுகம் செய்தவர் எனது வகுப்புத்தோழர் த. பரசுராமன்.

பரசுராமனும் நானும் அமெரிக்கன் கல்லூரியில் புதுமுக வகுப்பில் கணித மாணவர்கள். பட்டப்படிப்பில் அவர் சிறப்புக் கணிதத்தைத் தொடர, நான் தமிழ் இலக்கியத்தைத் தெரிவு செய்தேன். கல்லூரியின் நாட்டுநலப் பணித்திட்ட நிகழ்வுகள் மட்டுமல்லாமல், கலைவிழாக்கள் போட்டிகள் போன்றவற்றிற்குத் தயாராகும் மாணவர்களை ஒருங்கிணைக்கும் பேரா.சாமுவேல் சுதானந்தாவோடு உடன் நிற்கும் நம்பிக்கையாளர்கள் நாங்கள். பல்கலைக்கழகத்தில் நான் பட்டப்படிப்பின் நீட்சியாக முதுகலை தமிழ் படித்து முனைவர் பட்டம் முடிக்க, பரசுராமன் மொழியியல் படித்தார். முனைவர் பட்டத்தை புனேயில் உள்ள மொழியியல் உயராய்வு நிறுவனத்தில் முடித்தார். அங்கிருந்து புதுவை மொழியியல் நிறுவன ஆய்வாளராகச் சேர்ந்தார். நான் முனைவர் பட்ட த்திற்குப் பின் இரண்டு ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் தற்காலிக ஆசிரியராக இருந்துவிட்டுப் புதுச்சேரியில் சங்கிரதாஸ் நிகழ்கலைப்பள்ளி போனபோது திரும்பவும் சந்தித்துக்கொண்டோம்.

தனி மனித வாழ்க்கையில் காந்தியத்தைக் கடைப்பிடித்த பரசுராமன், மக்களைச் சந்திக்க இடதுசாரிகளோடு இணைந்து செயல்பட்டார். புதுச்சேரியில் அறிவியல் இயக்கத்தோடும், அறிவொளி இயக்கத்தோடும் இணைந்து மக்களிடம் சென்றார். அந்த நேரத்தில் நான் கூட்டுக்குரல் என்ற நாடக க்குழுவின் மூலம் சுற்றுச்சூழல் நாடகங்களைத் தயாரித்து வீதி நாடக இயக்கத்தில் இயங்கியதைத் தொடர்ந்தேன். பின்னர் அக்குழு தலித்தியம், பெண்ணியம் சார்ந்து நாடகங்களை மேடையேற்றியது. புதுவையில் இயங்கும் முற்போக்குக் கலைஞர்கள் எழுத்தாளர் சங்கம் த.பரசுராமன் பெயரால் ஆண்டுதோறும் நாடகக்கலைஞருக்கான விருதொன்றை உருவாக்கி வழங்கி வருகிறது. எங்களுக்கெல்லாம் நாடகத்தின் அடிப்படைகளைக் கற்றுத்தந்த மு.ராமசுவாமிக்கே அந்தவிருது வழங்கப்பட்ட து. வீட்டிலிருந்து பணியிடத்திற்குத் தினசரிநடந்து செல்வதை வழக்கமாகக் கொண்டவர் பரசுராமன். போகவர 5 கிலோமீட்டர் தூரம் நடந்துகொண்டிருந்தவருக்கு இருதயம் அடைத்துக்கொண்டது ஒருநாள்(14/10/2015)


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தமிழில் நடப்பியல் இலக்கியப் போக்குகள்