பெண் மைய விவாதங்கள் கொண்ட இரு குறும்படங்கள்


பெண்ணின் மனசைச் சொல்லாடலாக விவாதிக்கும் இரண்டு குறும்படங்கள் - யூ ட்யூப் – அலைவரிசைகளில் ஒருவார இடைவெளியில் வெளியாகியிருந்தன. அடுத்தடுத்த நாளில் அவற்றைப் பார்த்தேன். முதலில் பார்த்த படம் பொட்டு. அதன் இயக்குநர் நவயுகா குகராஜா. (வெளியீடு:10/06/2021). இரண்டாவது படம் மனசு.(வெளியீடு: 18-06-2021) இயக்குநர் மு.ராஜ்கமல்.
கலையின் அடிப்படைக்கூறுகளான காலம்,வெளி,இடம்பெற்றுள்ள பாத்திரங்கள் என அனைத்திலும் இலங்கைப் பின்னணியைக் கொண்டது வி.எம். குகராஜாவின் பொட்டு. பெண்மை கூடிவரும் பதின்வயதில் பெண்ணின் நெற்றிக்கு வந்துசேரும் பொட்டு முகத்தைப் பொலிவுறக் காட்டும் ஓர் அலங்காரப்பொருள் என்பது பொதுவான அறிதல். இந்த அறிதலோடு, பொட்டுவுக்கு சில அடையாளங்களையும் வேறுபாடுகளையும் உருவாக்கும் சக்தி இருப்பதாகப் பண்பாட்டு நடவடிக்கைகள் உறுதிப்படுத்தியுள்ளன. இந்த உறுதிப்பாடு சமயம்சார்ந்த பண்பாட்டு அசைவு. எல்லாச்சமயங்களும் இப்பண்பாட்டு அசைவைக் கொண்டிருக்கவில்லை. இந்து சமயம் சார்ந்தவர்கள் எனக் காட்டிக்கொள்பவர்களின் நடவடிக்கை வழி உருவாகும் பண்பாட்டு அசைவு.ஒருவித த்தில் தமிழர்களின் சமயப் பண்பாட்டுக்கூறு என்றும் சொல்லலாம். தமிழையே புழங்குமொழியாகக்கொண்டிருந்தாலும் கிறித்தவ, பௌத்த, இசுலாமிய சமயங்கள் பொட்டின் வழியாகப் பண்பாட்டுக்கூறுகளை வலியுறுத்துவதில்லை. தமிழ்நாட்டுக் கிறித்தவ சமயப் பெண்கள் பொட்டு வைப்பதைத் தவிர்ப்பதைத் தங்கள் மத அடையாள வெளிப்பாடாக நினைக்கின்றனர்.

இந்து/தமிழர் வாழ்வில் பால்குடிக்கும் சிறார்களாக இருக்கும்போது கன்னத்திலும் நெற்றியிலும் வைக்கப்படும் கறுப்புப் பொட்டுக்குக் கண்ணேறை- கண்படுதலைத் தடுக்கும் சக்தி இருப்பதாக நம்பப்படுகிறது. இருபால் குழந்தைகளுக்கும் கறுப்புமையால் நெற்றிப்பொட்டும் கன்னத்தில் ஒரு பொட்டும் வைத்துக் கண்ணேறு படுவதைத் தவிர்க்கிறார்கள் தாய்மார்கள். பால்குடி மறக்கும் நிலையில் ஆண் குழந்தைக்குப் பொட்டிடுதல் தவிர்க்கப்படுகிறது. பெண் குழந்தைகள் கறுப்புப்பொட்டைத் தவிர்த்து வண்ணப் பொட்டுகளுக்கு மாறுகிறார்கள். வண்ணமாற்றம் நடக்கும்போது பொட்டுக்கு பால்வேறுபாடு காட்டும் திறன் உருவாகி விடுகிறது. பல்வண்ணப் பொட்டு வைக்கும் பெண்ணுக்குச் செந்தூரப்பொட்டு– குங்குமச்சிவப்பு கட்டாயம் என்றாகும் நிலையில் இன்னொரு அடையாளத்தை உருவாக்கும் திறன் அந்தப் பொட்டுவுக்கு வந்து சேர்கிறது. குங்குமப்பொட்டு வைத்திருப்பவள் திருமணம் ஆனவள் என்பதாக உணர்த்தப்படுகிறது. அந்தச் சிவப்புப்பொட்டுக்குத் தடைவிதிக்கும் நிகழ்வாக ஒரு பெண்ணின் கணவனின் இறப்பு அமைகிறது. திருமணத்தன்று வந்து சேரும் தாலி நீக்கத்தோடு, நெற்றிப் பொட்டு நீக்கமும் விதவையின் அடையாளங்களாகின்றன. பொட்டிலாத நெற்றியும் ஒற்றைவண்ண ஆடையும் விதவைக்கோலம் என நம்பவைக்கப்பட்டு, நல்ல காரியங்கள் -மங்கல நிகழ்வுகள் நடக்கும்போது அவளின் இருப்பை விலக்கி வைக்கின்றார்கள் உறவினர்களும் அக்கம்பக்கதாரும்.

பொட்டு அலங்காரப்பொருளா? அடையாளங்களை உருவாக்கும் சக்தி கொண்ட பண்பாட்டுச் சின்னமா? என்ற சொல்லாடலை விவாதப் பொருளாக்கியிருக்கும் பொட்டு பட இயக்குநர் அதனை அலங்காரப் பொருளாகவே பாவிக்க வேண்டும் என்பதின் பக்கம் நிற்கிறார். பொட்டிழந்த தாயின் நெற்றியில் திரும்பவும் பொட்டுவைத்துப் பார்த்துவிட நினைக்கும் சிறுமியின் கோணத்திலிருந்து விரியும் காட்சிகள் அழுத்தமான நடிப்பாலும் பொருத்தமான வசனங்களாலும் கச்சிதமாக்கப்பட்டுள்ளன. காட்சிகளின் பின்னணியை உருவாக்கியுள்ள கலை இயக்குநர் தேர்ந்த பொருட்களைக் கொண்டும் வண்ணங்களாலும் நிரப்பிப் பார்வையாளர்களின் ஈர்ப்பைக் கூட்டியிருக்கிறார். பின்னணி இசையும் விலகிச் செல்லாமல் இயைந்து பயணித்துள்ளது.

தாய் திலகா- மகள் துர்கா என இரண்டு பாத்திரங்களின் மனவோட்டங்களின் நகர்வாகச் சொல்லப்பட்டுள்ள காட்சிகள் நல்லதொரு சினிமாவின் அடுக்குகளாக இருக்கின்றன. தொடர்புடைய காட்சிகளாகச் சேர்க்கப்பட்டுள்ள இரண்டும் மையவிவாதத்தை வலுப்படுத்தப் பயன்பட்டுள்ளன. எதிர்வீட்டிலிருக்கும் தமிழ்க்குடும்பத்துப் பெண் பொட்டில்லாத விதவைக்கோலத்தை அமங்கலமாக நினைக்க, அதே தெருவிலிருக்கும் சிங்களப்பெண் அதனைப் பொருட்படுத்தவில்லை. தன் மகள் விரும்பும் பரதநாட்டியத்தைக் கற்பிக்கவேண்டும் அவளை நாடிவரும் அவள் ‘பிறந்த வயிறுதான் நமது இன, மத வேறுபாட்டை உருவாக்கிவிட்டன’ எனச் சொல்கின்றாள். பரதத்தையும் பொட்டு வைத்துக்கொள்வதையும் விரும்பும் தன் மகள் தமிழ்ப் பெண்ணாக இருந்திருப்பாளோ எனச் சொல்லும்போது வெளிப்படுத்தும் ஏற்பு மனநிலை இலங்கையின் சூழலில் முக்கியமானதொரு காட்சி. அந்தப் பேச்சு, திலகாவின் விதவைக்கோலத்திற்கு இலங்கையில் நடந்த போரே காரணம் என்பதை உணர்ந்த பேச்சாக நினைக்கத் தூண்டுகிறது.

இருபுருவங்களுக்கிடையில் ஓடும் நரம்பின் மீது வைக்கப்படும் பொட்டு உடல் நலத்தைக் கூட்டும் என்ற காரணத்தை ஆசிரியை சொல்லும்போது, துர்கா “என் அம்மா பொட்டு வைக்காமல் இருக்கிறாரே; அவர் உடல் நலத்தோடு இருக்க வேண்டாமா?” என்று கேட்கிறாள். இந்தக் கேள்விக்குப் பொருத்தமான பதில் சொல்லாத ஆசிரியை, ‘உங்கள் அப்பா இறந்துவிட்டதால் பொட்டு வைத்துக்கொள்வதில்லை எனச் சடங்கு சார்ந்த பதிலையே தருகிறார். பொட்டும் நகைகளுமாக இருந்த அம்மாவின் நெற்றியில் பொட்டு வைத்துப் பார்க்க ஆசைப்படும் மகள் மொட்டைத்தலைப் பொம்மைக்கும், அம்மாவிடம் பரதம் படிக்கவரும் சிங்களச்சிறுமிக்கும் பொட்டுவைத்துப் புன்னகைக்கிறாள். கணவன் இறந்த பின்னும் பொட்டு வைத்துக்கொள்ளும் பெண்ணைக் கோயிலில் சந்தித்துத் தனது மனதிற்கான பதிலைப் பெறும் சிறுமி, ‘தன் தாய்க்குப் பொட்டு வைத்துவிடும் முடிவை எடுக்கிறாள்’ என்பதாகப் படம் முடிவை நோக்கிப் போகிறது. இவ்விரு காட்சிகளின் வழி விவாதம் வலுப்படுத்தப்பட்டுள்ளது.

மகளின் அந்த முடிவை ஏற்பதா? சமூகம் ஏற்படுத்தியுள்ள சடங்குகளின்படி பொட்டில்லாத நெற்றியோடு இருப்பதா? என்ற தாயின் அதிர்ச்சிகரமான நிலைக்காட்சியே படத்தின் இறுதிச் சட்டகம் என்றாலும் விதவைக்கோலம் போன்ற பழைய மதிப்பீடுகளைக் கைவிட வேண்டிய காலகட்டத்தில் தமிழ்ப்பெண்கள் இருக்கிறார்கள் என்பதைப் படம் வார்த்தைகளால் சொல்லாமல் குறிப்பால் உணர்த்தியுள்ளது. அண்மைக்காட்சியாகப் பார்வையாளர்களுக்கு முதுகைக்காட்டி நிலைக்கண்ணாடி முன் நிற்கும் பெண்ணின் நெற்றியில் பொட்டிடும் காட்சியை முதலில் நிறுத்தித் தொடங்கும் படத்தின் ஒவ்வொரு நகர்வும் பொட்டு என்ற மையத்திலிருந்து விலகாமல் நகர்த்தப்பட்டுள்ள திரைப்பட மொழி குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. பதினாறு நிமிடங்களே ஓடும் பொட்டு ஒரு முழுநீளப்படம் தரும் அனுபவத்தைத் தருகிறது.

*******


மனசு படத்தின் மூலக்கதையான திருமதி பெரேரா இலங்கைப் பின்னணியைக் கொண்டது ( சிங்கள மூலம்: இஸுரு சாமர சோமவீரா/ தமிழில் எம். ரிஷான் ஷெரிப்). குறும்படமாக்கியது தமிழ்நாட்டின் கருணா கனவுப்பட்டறை. அதனால் தமிழ்நாட்டுச்சூழலுக்கு மாற்றப்பட்டிருக்கிறது. பாத்திரப் பெயர்கள், நிகழ்வெளிகள் மட்டுமல்லாமல் கதையில் இடம்பெற்ற இரண்டு பாத்திரங்களின் வர்க்க அடையாளமும்கூட மாற்றப்பட்டிருக்கிறது. கீழ்நடுத்தரவர்க்கத்தின் அடுக்கக் குடியிருப்புகள் ஒன்றில் இருக்கும் கணவன் – மனைவி என்ற பாத்திர எதிர்நிலையை மையப்படுத்திக் கொண்டு பெண் மனசின் எண்ண ஓட்டங்களைச் சொல்ல நினைத்ததால், திருமதி பெரேரா சிறுகதையில் விவரிக்கப்பட்ட இடப்பிண்ணனி மு.அமல்ராஜின் படத்தில் காணாமல் போய்விட்டது.

எழுத்து வடிவ வெளிப்பாடான சிறுகதையை அப்படியே படமாக்க வேண்டியதில்லை. தன்னைப் புரிந்துகொள்ளாத -தன் விருப்பத்தையே மனைவியின் விருப்பமாக நினைக்கும் ஒரு ஆணோடு நான் ஏன் வாழவேண்டும் என்ற எண்ணம் உருவாவதை யார் தடுக்கமுடியும்? அப்படியொரு எண்ணம் உருவான பின் கணவனுக்கு வரும் மரணத்தைக் கூடப் பெரிதாக அவள் எடுத்துக்கொள்ள மாட்டாள் என்பதைக் கதை விவாதப்பொருளாக்கியிருக்கிறது. இந்த விவாதத்தை மட்டுமே ‘மனசு’ பட த்தின் இயக்குநர் முதன்மையாக நினைத்ததால் நிகழ்வுகள் விரிவாகாமல் சுருங்கிப் போய்விட்டன.

ஆண்மைய சமூகம், பெண்களின் இருப்பை உடலாக மட்டுமே ஏற்று நகர்கிறது; அவளுக்கு மனமென ஒன்று இருப்பதைக் கவனத்தில் கொள்வதே இல்லை என்பது பெண்நிலைவாதக் குற்றச்சாட்டு. மனிதத்தன்னிலையை உருவாக்குவதில் உடலுக்கு எவ்வளவு பங்கிருக்கிறதோ, அதேயளவு பங்கு மனதுக்கும் இருக்கிறது. உடலின் இயக்கம் பருண்மையாக – நேர்க்காட்சியாக அசையும்; அதற்கு எல்லைகளை வரையறை செய்து தடைகள் போடலாம். மீறினால் தண்டனை உண்டு என்று அச்சமூட்டிக் கட்டுப்படுத்தலாம். அதனையும் மீறும் நிலையில் உடலை இல்லாமல் ஆக்கலாம். இதற்கெதிரானது மனசு. அதனைக்கட்டுப்படுத்த முடியாது; தண்டிக்கமுடியாது. ஏனெனில் மனசு அரூபமானது. எங்கே இருக்கிறது என்று சொல்லமுடியாது. எப்போதும் அலையும் விருப்பம் கொண்டது. விருப்பம் காரணமாக ரகசியங்களைப் பேணுவதோடு அலைதலிலும் விடுதலையிலும் தன்னை இணைத்துக் கொள்வது. இந்தப் பொருண்மையைப் பெண்நிலைவாதக் கலையிலக்கியங்கள் தொடர்ச்சியாக முக்கியமான சொல்லாடல்களாக ஆக்கிக்கொண்டே இருக்கின்றன.

உடலை ஏற்கும் நிலையில் அவ்வுடலுக்கு இயங்குவெளியாக வீட்டை மட்டுமே வழங்கி வந்திருக்கிறது. வீடென்னும் இயங்குவெளியைத் தளமாகக்கொண்டு நகரும் குடும்ப அமைப்பில் பெண்ணுடலுக்கு இரண்டு பணிகள் உண்டு. முதல் பணி வம்சவிருத்தி; அதனை நிறைவேற்றும்பொருட்டுப் பெண் உடல் அழகைப் பேணுவது அவசியம். இன்னொன்று குடும்பத்தின் அன்றாடத் தேவையான உணவு தயாரித்தல். இவ்விரண்டையும் வேறுவழியின்றி ஏற்கும் பெண்ணுக்குள் ரகசியங்களும் ஆசைகளும் ரசனைகளும் நினைவுகளின் அடுக்குகளும் கொண்ட மனசு இருக்கிறது என்பதை ஆண்மைய சமூகம் ஏற்பதில்லை. இந்த முன்வைப்பை விவாதப்பொருளாக்கிய வகையில் மனசு முக்கியமான படமாகிறது. ஆனால் திரைமொழி, பொருத்தமான நடிப்பு, காட்சிப் பின்னணிகள், இசைக்கோர்வைகள் என ஒவ்வொன்றிலும் போதாமையைக் கொண்டிருக்கிறது படம். சமகாலத்தை விவாதிக்கும் ஒரு கலைப்படைப்பு, அக்கலையின் வெளிப்பாட்டுக்கூறுகளின் கலவையைச் சரியாகச் செய்யவேண்டும். அப்படிச் செய்யும்போதுதான் அது சென்றுசேர வேண்டிய இலக்குகளை அடையும். ஏற்படுத்த நினைத்த விளைவுகளை ஏற்படுத்தும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தமிழில் நடப்பியல் இலக்கியப் போக்குகள்