இரண்டாம் உலகப்போரின் கடைசிக்குண்டு: கதைப் படம் அல்ல; முன்னெடுப்பு சினிமா

 

படத்திற்குள் கதை இருக்கிறது. அதுவும் ஒரு காதல் கதை இருக்கிறது. ஒரு தடையை உருவாக்கிக் காட்டி, இந்தத்தடையை மீறிக் காதல் நிறைவேறுமா? என்ற கேள்வியை எழுப்பிச் சிக்கல்களை முன்வைத்துத் திருப்பங்களைத் தாண்டிக் காதல் நிறைவேறியது எனக்காட்டி இன்பியல் முடிவைத் தரும் காதல் கதைகள் இங்கே செய்யப்படுகின்றன. இந்தப் படத்திலும் அப்படிச் செய்யப்பட்ட காதல் கதை இருக்கிறது.

லாரி டிரைவராக நடிக்கும் தினேஷ் -சித்தப்பாவால் வளர்க்கப்படும் டீச்சராக வரும் கயல் ஆனந்தி ஆகிய இருவரும் அறிமுகமான நாயக -நாயகி நடிகர்கள். அவர்கள் ஏற்றுள்ள பாத்திரங்களைச் சுற்றிப் பின்னப்பட்ட நிகழ்ச்சிகள் படத்திற்கான கதையையும் திரைக்கதையும் உருவாக்கியிருக்கிறது. நடைமுறையில் நிறைவேறாத காதலையே மரியாதை செய்யும் இந்திய/ தமிழ்ச் சமூகத்திற்கு வெற்றிபெறும் காதலையே கொடுத்துத் திளைக்க வைக்கும்  தமிழ்ச் சினிமா இயக்குநர்கள் உருவாக்கியுள்ள வழமையான காதல் கதைப் படமே இருபத்தியோராம் நூற்றாண்டின் கடைசிக்குண்டு என்று சொல்லி விடலாம். எனவே இது கதைப்படம் தான் என வகைப்படுத்திப் பார்த்து ரசிக்கலாம். அப்படிச் சொல்லவும் ரசிக்கவும் தடைபோடும் ஒரு கூறு படம் முழுவதும் இருக்கிறது.


சொந்த வாழ்வில் ஆண்களின் காதல் விருப்பத்திற்குத் தடைசொல்லப் பெரிதாக யாரும் இருப்பதில்லை. இருந்தாலும் மீறி முடிவெடுத்து வெளியேறி விடுவான் நாயகன் எனக் காட்டி ஆணின் நாயகத்தனத்தை – ஆணாதிக்க பிம்பத்தைக் கட்டியெழுப்பும் ஒரு படமாகப் பார்த்து ரசிக்கலாம். அதே நேரத்தில் தனது காதலுக்குப் போடப்பட்ட -சாதி, மதம், வர்க்கம், எனப் பலப்பல வேறுபாடுகளை முன்வைத்துச் சொந்தபந்தங்கள் போடும்-  பல தடைகளையும் மீறிக் காதல் கணவனோடு வாழ்ந்த புதுமைப் பெண்ணின் கதையாகக் கைதட்டவும் படம் வாய்ப்பளித்துள்ளது. நாயகியை மையமாக வைத்து வாசிக்கும்போது கிடைக்கும் கதை அது.

இருவரிடையே இருப்பது ஏற்றத்தாழ்வான வர்க்க வேறுபாடா? சாதி வேறுபாடா? என்பதைக் குவிமையப்படுத்திக் காட்டாமல் காதலுக்குத் தடைபோடும் பெண் வீட்டாரின் எதிர்ப்பையும் மீறிக் காதலை நிறைவேற்றி விடத் துடிக்கும் பெண்ணின் தீர்மானமான காதல் சொல்லப்படுகிறது. வீட்டார் மட்டுமல்லாமல் தோழிகளிடம் கூட டிரைவரைக் காதலிக்கிறேன் என்று  சொல்லத் தயங்கி, அவனது பிடிவாதத்தை ரசித்துக் காதல் மனைவியாகும் பெண்ணின் காதல் கதை. காதலிப்பதில் ரசனை இருப்பது போலவே, சம்பளம் வாங்கும் லாரி டிரைவராக இருந்து, அந்த  லாரிக்கே சொந்தக்காரனாக மாறி லாரி ஓட்டும் ஆசையும் லட்சியமும் இருக்கும் ஒரு அடித்தட்டு மனிதனின் காதல் கதையாகவும் நாம் வாசிக்கலாம். அந்த வாசிப்பு ஆணை மையமாகக் கொண்ட வாசிப்பு.

இந்த இரண்டு வாசிப்புக்கும் தேவையான நிகழ்ச்சிகள் இருக்கின்றன; பாத்திரங்கள் இருக்கின்றன. நிகழ்ச்சிகளுக்கான காலப்பின்னணியும் கூட இருக்கிறது. ஆனால் அதனை முழுமையான சினிமாவாக – காதல் சினிமாவாக ஆக்க இன்னொன்றும் தேவை. அது இங்கே வேறாக இருக்கிறது. அதுதான் தடைபோடும் – படம் முழுக்க இருக்கும் அந்தக் கூறு.  ஒரு கதை தழுவிய நாடகத்திற்கும் சினிமாவுக்கும் நாவலுக்கும் தேவையான காலம், பாத்திரங்கள் மட்டும் இருந்தால் போதாது. அவை இயங்கும் வெளியும் பொருத்தமாக இருக்க வேண்டும். இந்தப்படத்தின் நிகழ்வுகளும் காட்சிக் கோர்வைகளும் ஒரு பழைய இரும்புக் கடையாகவும், அங்கு கொண்டுவரப்படும் ஒரு வெடிக்காத குண்டாகவும், குண்டு பயணம் செய்யும் லாரியாகவும் இருக்கிறது. மொத்தப் பட த்தின் நிகழ்வு வெளியாக இருக்கும் இந்தக்கூறு படத்தைக் காதல் கதைப் படமாகப் பார்த்துவிட்டுப் போவதைத் தடுக்கிறது. வேறுவகைப் படமாக – ஒரு பிரச்சினையை – அதற்கான பின்னணிகளை – அப்பின்னணிகளை இயக்கும் அரசியலை முன்வைக்கும் படமாகப் பார்க்கும்படி தூண்டுகிறது.

வெடிக்காத குண்டுக்குப் பின்னால் ஒரு வரலாறு இருக்கிறது. அதன் பின்னால் உலகு தழுவிய ஊழலும் அரசதிகாரத்தின் பொறுப்பின்மையும் இருக்கின்றன. இரண்டும் உலகத்திற்குச் சொல்லப்படுவது முக்கியம். அதற்காகவே நாங்கள் புலனாய்வு செய்கிறோம் என ஒரு பத்திரிகையாளரும்(ரித்விகா), அவருக்கு உதவி செய்யும் தோழரும்(ஆதவன் தீட்சண்யா) இருக்கிறார்கள். அவர்கள் கண்டு பிடித்துச் சொல்வதற்கு முன்பே  குண்டைக் கைப்பற்றுவதோடு அவர்களைக் தீர்த்துக் கட்டிவிட முயலும் ஒரு கும்பலும், அவர்களுக்கு உதவும் காவல் துறையும் இருக்கின்றன.

காதலித்தவர்களைத் தடுப்பது சாதி வேறுபாடா? வர்க்கவேறுபாடா? எனக் காட்டுவதில் ஏற்பட்ட குழப்பம் தெளிவாக இருக்கிறது. இரண்டில் ஒன்று என்பது முடிவுசெய்யப்பட்டிருந்தால் அதுசார்ந்த மோதலும் முட்டலும் உச்சத்தை அடைவதில் ஏற்படும் திருப்பங்களை முன்வைத்துக் கதை நகர்ந்திருக்க வேண்டும். எழுதப்பட்ட வசனங்களும் உரையாடலும் பாத்திரங்களின் குரல் வழியாகவும் உடல்மொழியாகவும் மோதியிருக்க வேண்டும். அந்தப் பின்னலும் வளர்ச்சியும் முக்கியமில்லை வெடிக்காத குண்டுதான் படத்தின் மையம் என்பதால் உரையாடல்களின் கவனமும் வெளிப்பாடும் அதைச் சுற்றியே இருக்கின்றன. அத்தோடு மையப் பாத்திரத்தோடு உறவுகொண்டுள்ள துணைப்பாத்திரங்கள் எல்லாம் – காயலான் கடை முதலாளியின் மனிதாபிமானமே இல்லாத சுரண்டல், அதைத் தட்டிக்கேட்க முடியாத தொழிலாளிகள்,  அவரது தயவுக்காகக் காத்திருக்கும் ஓர் அப்பாவி கிளீனர் என எல்லாப் பாத்திரங்களும் குண்டைச் சுற்றியே உருவாக்கப்பட்டுள்ளன.  அக்குண்டைச் சுற்றிய நிகழ்விற்கான தீர்வு அல்லது முடிவைப் பார்வையாளர்களுக்கு உண்டாக்குவதே படத்தின் – இயக்குநரின் நோக்கம் என்பதால் உச்சநிலைக் காட்சிகள் திருமணத்தை நோக்கிய நகர்வாக இல்லாமல் வெடிகுண்டைக் கைப்பற்றுவதும் உண்மையைச் சொல்ல விடாமல் தடுப்பதும், அதில் கிடைக்கப்போகும் வெற்றியுமாக நகர்த்தப்பட்டுள்ளது. அந்த உண்மை ஒரு பல்கலைக்கழகக்கருத்தரங்கில் ஆவணப்படமாக க்காட்டப்பட்துட மொத்தத்தில் உலகப்போரின்போது வெடிக்காமலும் -செயலிழக்கப்படாமலும்- இருக்கும் குண்டுதான் படத்தின் மையம் என்பதாகக் காட்சிகளும் நிகழ்வுகளும் அடுக்கப்பட்டிருக்கின்றன.

ஒரே படத்திற்குள் இரண்டு ஓட்டங்களை – கதை நிகழ்வோட்டங்களை உருவாக்கியுள்ள திரைக்கதை இரண்டிற்கும் ஏற்புடைய தீர்வை – கதை முடிவைத் தர முயன்றுள்ளது. அம்முயற்சியில் இயக்குநர் அதியன் ஆதிரை எவ்வளவு தூரம் சாத்தியமாக்கியிருக்கிறார் என்பது தான் படத்தைக் கவனிக்கத்தக்க படமாக மாற்றும்.   

காதல் படமாக முன்வைக்கத் தேவையில்லை என இயக்குநர் முடிவு செய்ததாலும் வெகுமக்கள் ரசனைக்கான காதலர் சந்திப்புகள், பாடல் காட்சிகள் போன்றவற்றைப் படத்திற்குள் வைக்காமல் விட்டுவிடவில்லை. அக்காட்சிகளே வெகுமக்களின் ரசனைக்கான காட்சிகள். அதனை உணர்ந்து நடிகர்கள் நடித்துள்ளார்கள். ஓரளவு படித்துவிட்டுக் கிராமத்தில் இருக்கும் பெண்ணின் நாசுக்குத்தனமும் இயல்பான பாவங்களும் வெளிப்படும் கயல் ஆனந்தியின் நடிப்பு முழுமையாக வெளிப்பட்டிருக்கிறது. அதே போல் காதலை விடவும் அப்பாவின் கனவான லாரி உரிமையாளர் என்பதில் தீவிரம்கொண்ட கொஞ்சம் முரட்டுத்தனமும் கொண்ட இளைஞனின் பாத்திரத்தின் தினேஷும் பொருந்தி இருக்கிறார்கள். ஆனால் அந்தப் பாத்திரங்களின் வார்ப்பு முழுமையாக இல்லை. நாயகியின் சமூகப் பின்புலத்திற்குள் தீவிரமாக நுழையவில்லை. சொந்தப் பிள்ளை என்பதாகக் காட்டப்படாமல், அவளைப் படிக்கவைத்தவர் அவளது சித்தப்பாவாகக் காட்டப்படுகிறார். அவரும் அவரது மனைவியும் திருமணத்திற்குத் தடையேற்படுத்திவிட்டு இன்னொரு கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்கிறார்கள் என்பதைத் தாண்டிக் கூடுதல் அழுத்தங்கள் உருவாக்கப்படவில்லை. நாயகனுக்கும் காதலும் குண்டும் சமநிலையில் இருக்கும் சுமைகள் தான். ஒன்றை அடையவேண்டும்; இன்னொன்றைத் தள்ளிவிடவேண்டும். இரண்டையும் அவனே செய்வதாகப் படம் சொல்லவில்லை.

இதற்கு மாறாகப் பழைய இரும்புக்கடை கடை முதலாளி, அந்த வெளியில் இடம்பெறும் பாத்திரங்களும் முழுமையாக உருவாக்கப்பட்டுள்ளனர்.  ஏற்கத்தக்க பின்னணிச் சூழலையும் உருவாக்கியுள்ளார்.  விளிம்புநிலைச் சமூகத்து நாயகனைக் கொண்ட பல  தமிழ்ச் சினிமாவில் இந்த வெளி நிகழ்வுவெளியாக அமைக்கப்பட்டிருந்தாலும்   இந்த அளவுக்கு நம்பும்படியாக உருவாக்கப்பட்டதில்லை. நாயகனுக்கு இருக்கும் இலக்கு ஏற்கத் தக்க இலக்கு. அவனோடு பயணிக்கும் கிளினரின் விருப்பமும் – நகைச்சுவையாகத் தோன்றினாலும்  இயல்பான ஆசையே.

படத்தின் மையமாக இருக்கும் வெடிகுண்டு கண்டெடுக்கப்படுவது தொடங்கி, அதன் பின்னணி அரசியலைச் சொல்ல வேண்டும் என விரும்பும் பத்திரிகையாளப் பெண், அவளது தோழி, அதைத் தடுக்க முயலும் காவல்துறை, அதன் பின்னணியில் இருக்கும்  போலி ஒப்பந்தக் குழுமம் போன்றன போகிற போக்கில் பேசும் பேச்சுகளில் தகவல்களாகச் சொல்லப்படுகின்றன. அவை காட்சி ரூபங்களில் காட்டப்பட்டு, விவாதங்களோடு கூடிய உரையாடல்களின் வழி நிகழ்த்தப்பட்டிருந்தால் அதன் தீவிரம் பார்வையாளர்களுக்குப் புரியக்கூடியதாக மாறியிருக்கும். பத்திரிகையாளரும் அவருக்கு ஆலோசனைகள் தருபவராக வரும் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யாவின் பாத்திரமும் தட்டையாக உருவாக்கப் பட்டிருக்கின்றன. அவர்களின் ஈடுபாடு கட்சி சார்ந்ததா? தன்னார்வத் தொண்டு நிறுவனச் செயல்பாடா? கல்விப்புல ஆய்வுக்கானதா? என்பன முன்வைக்கப்படவில்லை. இவற்றில் எது எனத் தீர்மானிக்கப்பட்டிருந்தால் அதனையொட்டி இந்தப் பாத்திரங்கள் வளர்சிதை மாற்றங்களோடு உருவாக்கப்பட்டிருக்கலாம். அந்தப் பகுதியில் இயக்குநர் கூடுதல் கவனம் செலுத்தத் தவறியிருக்கிறார்.

 ‘கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்’  என்ற ஆவணப் படத்திற்கான முடிவைச் சொல்வதற்கான சினிமாவை, ஆவணப்படத்தின் காட்சி அடுக்குகளால் வரிசைப் படுத்துவதா? கதை தழுவிய புனைவுப்பட த்தின் அடுக்குகளால் நகர்த்துவதா? என்ற குழப்பத்தைக் கொண்டிருக்கும் இருபத்தியோராம் நூற்றாண்டின் குண்டு என்னும் படத்தை பிரச்சினையைப் பேசும்  முன்வைப்புப்படம் (Problem filma )  என வகைப்படுத்திக் கொண்டால், அதன் அழகியல் வழி ரசிக்கலாம். உலகப்போர்களில் மட்டுமல்லாமல், ஒவ்வொரு நாடும் இப்போதும் வாங்கிக் குவிக்கும் ஆயுதங்களுக்காக அண்டை நாட்டு மக்கள் மீது பொழியும் குண்டுகள் வெடித்துச் சிதறடித்த உடல்கள் ஏராளம். பரவிய ரத்தத் துளிகள் அநேகம். ஏற்பட்ட ஊனங்களும் சிதைந்த குடும்பங்களும் கணக்கற்றவை. அதேபோல் வெடிக்காமல் புதைந்து கிடைக்கும் கண்ணிவெடிகளும் கடலின் அடியாளத்தில் போடப்பட்டுக் கரையொதுங்கும்போது ஏற்படுத்தும் அழிவுகளும் கணக்கிலடங்காதவை. அவையெல்லாம் சினிமாவில் பேசப்பட வேண்டும் என ஒரு கலைஞர் – சினிமா இயக்குநர் நினைக்கலாம். அதனைப் பார்வையாளத் திரள் பார்த்து ரசிக்கும் உத்திகளோடு தரவேண்டும் எனக் கருதுவதும் பிழையன்று. 

இரண்டாம் உலகப்போரின் கடைசிக் குண்டு இயக்குநர் அதியன் ஆதிரை அப்படியே நினைத்திருக்கிறார். அதற்கான திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார். இரட்டைக் கதைப்பின்னலில் எது முதன்மையானது; முடிவை நோக்கிய நகர்வுக்குத் தேவையான காட்சிகளும் பாத்திரங்களும் எவை என்பதில் தீர்மானமான முடிவுகள் அவரிடம் இல்லை. அதனால்   இரண்டையும் பார்வையாளர்களின் மனதிற்கு நெருக்கமாகக் கொண்டுவர முடியாமல்   – ஏற்கத்தக்க முடிவைச் சொல்லமுடியாமல்   அந்தரத்தில் நிற்பதாகப் படத்தை முடித்துள்ளார்.   என்றாலும் தமிழில் முன்வைப்பு ஒன்றைக் கதைப்பின்னலாக்கிப் படம் செய்யலாம் என்ற நம்பிக்கையை உருவாக்கியிருக்கிறார். அதற்காக அவர் பாராட்டப்படவேண்டியவர்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தமிழில் நடப்பியல் இலக்கியப் போக்குகள்