உள்ளூர் விருதும் உலகவிருதும்


நோபல் விருதுக்குப் பரிந்துரைகளும் எதிர்பார்ப்புகளும் முடிவுக்கு வந்துவிட்டன. அமெரிக்கப்பெண்கவியும் பேராசிரியருமான லூயி க்ளுக்கிற்கு வழங்கப்பட்டதை ஏற்க மனமின்றி நேற்றிரவு பலர் தூக்கம் தொலைத்திருக்கிறார்கள் என்பதை முகநூல் காட்டுகிறது. ஏற்பவர்களுக்கும் நிராகரிப்பவர்களுக்கும் அவரவர்க்கான காரணங்கள் இருக்கலாம். ஆனால் நோபல் விருதுக்குழுவினர் விருதுக்குரியவரைத் தேர்வு செய்ததற்கான காரணத்தைச் சொல்லி விடுகின்றார்கள். அந்தக் காரணம் இலக்கிய ஆக்கத்தின் - ஒரு போக்கின் அடையாளமாக இருக்கிறது என்ற வகையில் தெரிவுசெய்யப்பட்டவர் பொருத்தப்பாடு கொண்டவராக மாறுகிறார். கலை, இலக்கியத்தில் பல்வேறு போக்குகள் இருக்கின்றன; அதில் ஒரு போக்கு இந்த ஆண்டு கவனம் பெற்றிருக்கிறது என்ற அளவில் ஏற்பு நிகழ்கிறது. அந்தக் காரணத்தோடு ஒத்துப் போகின்றவர்கள் விருதாளரைக் கொண்டாடுவார்கள். மறுப்பவர்கள் தங்களின் இலக்கியப்பார்வையை முன்வைத்துக் கட்டுரைகள் எழுதலாம்.

க்ளுக்கை முன்வைத்து, நமது காலகட்டம் பின் நவீனத்துவ காலகட்டம். அதன் இலக்கிய வெளிப்பாட்டை இவர் உள்வாங்கவில்லை. அதனைக் கண்டுகொள்ளாமல் தேர்வுக்குழுவினரும், முந்திய காலகட்டத்து இலக்கியப் போக்கின் பிரதிநிதியாக இருப்பவரைத் தேர்வு செய்துள்ளார்கள் எனப் பொறுப்பான கட்டுரைகள் இனி எழுதப்படக்கூடும்.

உலக அளவிலான விருதோ, கவனப்படுத்தும் நிகழ்வோ அது நிகழ்வதற்கு முன்னால் இவர்தான் அதற்கு ஏற்றவர்; அவருக்கு வழங்கப்பட வேண்டும்; இவர் கவனிக்கப்பட வேண்டும் என விவாதங்களை முன்வைத்து எழுதப்படும் குறிப்புகள் - கட்டுரைகள் அந்தத் துறைக்குப் பயன்படும். அப்படியான எழுத்துகள் தமிழில் வருவதில்லை. அதற்கு மாறாகத் தங்களின் விருப்பப் பெயர்கள் மட்டுமே சுட்டப்படுகின்றன. சுட்டப்பட்ட பெயர்களுக்குக் கிடைக்கவில்லை என்றால், வழங்கப்பட்ட எழுத்தாளரைப் பற்றிய எதிர்மறைக் குறிப்பொன்றை எழுதிவிட்டு ஒதுங்குவதுதான் ஒவ்வொரு வருடத்தின் போக்காக இருக்கிறது.

இலக்கியத்திற்கான நோபல் விருதைக்குறித்த எதிர்பார்ப்புகளை- பெயர் பரிந்துரைகளைச் சொல்வதுபோல இந்திய அரசின் இலக்கிய அமைப்பான சாகித்திய அகாடெமியின் விருதுக்கான பரிந்துரைகளையும் எதிர்பார்ப்புகளை முன்னெடுக்கலாம். விருது வழங்கப்படும் ஆண்டிற்கு முந்திய மூன்று ஆண்டுகளில் வெளியாகும் நூலுக்கே விருது என்ற அடிப்படையை எப்போதும் தவறவிட்டுவிடுகிறார்கள் அகாதெமியின் தேர்வுக்குழுவினர். ’இந்த ஆண்டு இவருக்கு’ என முடிவுசெய்துவிட்டு அவர் எழுதிய பொருட்படுத்தப்படாத நூலைப் பரிசுக்குரியதாக அறிவிப்பதே பல ஆண்டுகளின் முடிவுகள். விருதுக்குரிய ஆண்டுக்கு முன் வாசிக்கப்பட்டும் விவாதிக்கப்பட்டும் கவனம் பெற்ற எழுத்து என்பதற்குப் பதிலாக வயதில் மூத்தவர் என்பதற்காகவே தமிழின் சாகித்திய அகாதெமி விருது வழங்கப்படுகிறது. எப்போதாவது 50 வயதுக்கும் கீழே இருக்கும் ஒருவரது நூல் பரிசு பெறுகிறதென்றால், வெளியில் தெரியாத வலுவான பரிந்துரைகள் இருந்தன என அறிவிப்புக்குப் பிந்திய செய்திகள்/ வதந்திகள் வருகின்றன. எப்போதும் இந்த விருது இந்தக் காரணத்திற்காக வழங்கப்படுகிறது என்ற குறிப்பை அகாதெமி சொல்வதில்லை.
2020 -க்கான விருதுக்குரிய நூல் ஒன்றைப் பரிந்துரை செய்து விவாதிக்கும் திறனாய்வு கட்டுரைகள் தொடர்ச்சியாக எழுதப்படும் நிலையில் சாகித்திய அகாதெமியின் தேர்வுக்குழுவிற்கு நெருக்கடியை உருவாக்கலாம். இப்போதிருந்து ஆரம்பித்தால் டிசம்பர் கடைசியில் வரும் அறிவிப்பில் திருப்பங்கள் நிகழ வாய்ப்புண்டு.








கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தமிழில் நடப்பியல் இலக்கியப் போக்குகள்