பிராமணியம் என்பது நபர்கள் அல்ல.


ஒரு காலகட்டத்தில் ஏற்புடையவர்கள் இன்னொரு காலத்தில் எதிர்ப்பாளர்களாகவும்  எதிரிகளாகவும் ஆவதற்குப் பல காரணங்கள் இருக்கும். நமது கருத்து மாற்றங்கள் காரணங்களாக இருப்பதுபோல, அவர்களின் செயல்பாடுகளும் காரணங்களாவதுண்டு. சமூக ஊடகங்களின் வரவுக்கு முன்பு இவ்வகை மாறுபாடுகள் வெளியில் தெரியாமல் ஒதுங்குவதும் ஒதுக்குவதுமாக இருந்துள்ளது. இப்போது சமூக ஊடகங்களில் பாவனையாக இருக்கும் நட்புப்பட்டியல் என்பது உண்மையில் நட்புப்பட்டியல் அல்ல. தெரிந்தவர்; சந்தித்தவர்; நம்மை ஏற்கக்கூடியவர்; எதிர்ப்புநிலையை அறிந்துகொள்வதற்காகக் கவனிக்கப்படுபவர் எனப் பலநிலைகளில் இருப்பவர்களைக் கொண்ட பட்டியலே நட்புப்பட்டியல். 

அப்பட்டியலிலிருந்து ஒருவரை  விலக்குவதும் தடுப்பதும் ஒரே காரணத்திற்காக நடப்பதில்லை. ஒருவரின் இன்மைகள் பட்டியலில் விலக்கத்தைத் தூண்டுகின்றன. பலரின் மரணத்திற்குப் பிறகு பட்டியலில் நீக்கியிருக்கிறேன். செயல்பாடின்மை காரணமாகவும் நீக்கியிருக்கிறேன். தொடர்ச்சியாகக் கருத்திடுவதில் காட்டும் வன்மத்திற்காகவும் எரிச்சலூட்டுவதற்காகவும் தடை செய்திருக்கிறேன். சில அமைப்புகளின் செயல்பாட்டுக்காகச் சமூக ஊடகங்களில் இருக்கும் நபர்களை நட்பு நீக்கம் செய்யத்தயங்குவதே இல்லை. அப்பட்டியலில் ‘நாம் தமிழர்’ கட்சியினர் இருக்கிறார்கள். தீவிர இந்துத்துவர்களும் இருக்கிறார்கள். நடுநிலையாக இருப்பதான பாவனை கொண்ட இந்துத்துவர்களை நான் தடை செய்ததில்லை; நட்பு நீக்கம் கூடச் செய்த தில்லை. பணியிடம் சார்ந்து உள்முரண்பாடுகளைப் பேசுபவர்களை விலக்கியிருக்கிறேன்.  

எழுத்துவழியாகவும் செயல்பாடுகள் வழியாகவும் மதிப்பிற்குரியவர்கள் எனக்கருதி நட்பு பாராட்டிய இவர்களோடு முரண்பாடுகள் தோன்றியபோதும்  நான் நட்பு விலக்கம் செய்ததில்லை. ஆனால் எனது நிலைபாட்டைச் சொல்வதைக் கடமையெனக் கருதிச் சொல்லிப் பதிவுகள் எழுதியதுண்டு. அதன் தொகுப்பு இது. 

கிழக்கு பத்ரி சேஷாத்ரி

கிழக்கு பத்ரி -? என்று தொடங்கி ஒரு கேள்வியைக் கேட்கத் தொடங்கினார் அந்த நண்பர். டொரண்டோவில் இருக்கும் அந்த நண்பருக்கு “கிழக்கு” என்பது மேற்கின் எதிர்வு என்று சொன்னேன்.

இரண்டும் எதிர்வாகும்போது இரண்டுமே திசைகளைச் சுட்டும் சொற்களாக இல்லாமல் வேறு சிலவாக மாறிவிடும். இரண்டும் எதிரெதிரான வாழ்நிலைகளை - சிந்தனைகளை- மன அமைப்பைக் குறிக்கும் கருத்தியல் கலைச்சொற்கள். அப்படி மாறிய பின் உருவாக்கும் அர்த்தங்களில் சிலவற்றை நாம் ஏற்கலாம்; சிலவற்றை மறுக்கலாம். ஆனால் கிழக்கின் பற்றாளர்கள் மேற்கை எதிரியாக நினைக்கிறார்கள்; வெறுக்கிறார்கள்.

ஓரியண்டலிசம் X ஆக்ஸிடெண்டலிசம் என்று ஆங்கிலத்தில் உச்சரிக்கப்படும் வாதங்கள் நீண்ட காலமாகத் தத்துவத்துறையிலும் சமூகவியல் துறைகளிலும் புழக்கத்தில் இருக்கும் சொற்கள். எதிரெதிர் முரண்களின் விவாதச் சொல்லாடல்கள். நவீன இந்திய அரசியல் வரலாற்றில் மேற்கிலிருந்து அதிகமும் கற்றுக்கொள்ளவும் பின்பற்றவுமான கூறுகள் இருக்கின்றன என நம்பிய தேசியத்தலைவர்களில் முதலிடம் நேருவுக்கு உண்டு. அம்பேத்கரின் அறிவு மேற்கின் அடிப்படையில் உருவான அறிவு. சமத்துவ எண்ணங்கள் கொண்ட எழுத்துகளை - அரசியல் நெறிமுறைகளை முன்மொழிந்த பின்னணியில் அவர்கள் மேற்கில் கற்ற கல்வி இருந்தது. காந்திக்கு மேற்கின் மீது அவ்வளவு விருப்பம் இருந்ததில்லை. ஆனால் எதிர்த்து விரட்டியே ஆகவேண்டிய கருத்தியலாக நினைத்தவர் இல்லை. இந்தியப் பாரம்பரியத்திலிருந்து நவீன இந்தியாவைக் கட்டமைக்கமுடியும் என்றொரு நம்பிக்கை/ கனவு அவரிடம் இருந்தது. இந்தியத்தத்துவவியலில் பெரும்புலமை பெற்றிருந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் நூல்கள் இருவகைப் பார்வையையும் சமநிலையில் விவாதிக்கின்றன. ரவீந்திரநாத் தாகூரும் பாரதியும் கவிதையில் இரண்டின் இணைவையும் உருவாக்க நினைத்தவர்கள்.

இந்து மகாசபையை உருவாக்கியவர்கள் மேற்கை எதிர்நிலையில் பார்த்தார்கள். எதிர்க்க மட்டுமே நினைத்தார்கள். மேற்கைக் காலனியாதிக்கத்தின் ஒற்றைப் பரிமாணத்தில் மட்டுமே வைத்து, இந்தியாவின் மரபு, சனாதன சமூகம், கலைகள், பண்பாடு என எல்லாவற்றையும் அழித்தவர்கள் எனப் பேசினார்கள். மெக்காலே கல்வி உருவாக்கிய பரவலான அறிவை எதிர்நிலையில் வைத்துப் பேசும் ஆரம்பம், இன்றளவும் தொடர்கிறது. சாதியக் கட்டமைப்பைக் கேள்விக்குள்ளாக்கிய மேற்கின் அறிவையும் சமூகமாற்றம் பற்றிய பார்வையையும் அடியோடு ஏற்காதவர்களும் கிழக்கைத் திசையாகப் பார்ப்பதில்லை.

பெரியாரும் அண்ணாவும் மேற்கோடு ஒத்துப்போக நினைத்த தமிழ்த்தலைவர்கள். திராவிட இயக்கத்திற்கான அடித்தளத்தை உருவாக்கிய மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை, போன்றவர்கள் இரண்டிற்குமான இணைவையும் விலகலையும் முன்மொழிந்தவர்கள். சம்ஸ்க்ருதம் -தமிழ் என்ற எதிர்வில் கிழக்கு சம்ஸ்க்ருதத்தை ஏற்கும். அம்மொழியே இந்திய மொழிகள் அனைத்திற்கும் மூலமொழி என நிறுவ விரும்பும். அதனால் திராவிட மொழிக்குடும்பம் என்ற சொல்லாட்சியை உருவாக்கிய கால்டுவெல் போன்றவர்களை மேற்கிலிருந்து வந்து இந்திய மொழி ஒற்றுமையைக் குலைத்தவர்கள் எனப் பேசத்தயங்க மாட்டார்கள் கிழக்கு விரும்பிகள். கலை இலக்கியப் பார்வையில் மேற்கின் அறிவுவாதத்தோடும் சமூக விமரிசனத்தோடும் அடையாளம் கண்டது திராவிடக் கலையிஇயலின் தொடக்கம். இடதுசாரிக் கலையியல் பார்வையும் அதனோடு உடன்பாடு கொண்டதுதான். ஆனால் வேறுபாடுகள் உண்டு. இப்போது திராவிடக் கலையியல் பார்வை திசைமாறி நிற்கிறது. கீழ்த்திசையில் - கீழைப்பண்பாட்டுப் பார்வையில் மயங்கும் திராவிட எழுத்தாளர்களும் உண்டு.

கீழைத்தேய மரபு படிநிலையாதிக்கத்தை நிலை நாட்டும் நோக்கம் கொண்டது என்பதை மறைத்துக் கொண்டு தேசம், தேசப்பற்று என வெகுமக்கள் சொல்லாடல்களின் வழியாக - கருத்தாக்கங்கள் வழியாக மக்கள் திரளைப் பொதுப்புத்தியோடு திரட்டுவது கிழக்கின் பற்றாளர்களின் விருப்பம். பத்ரியின் ‘கிழக்கு’ அடிப்படையில் கிழக்கு என்னும் கருத்தியலைப் பேசுவதற்கான உருவாக்கப்பட்ட பதிப்பகம். வெற்றிகரமான பதிப்பகமாக இயங்க அதற்குச் சந்தை வேண்டும். அதற்குத் தாராளவாதத்தைப் பின்பற்ற வேண்டும். சந்தையின் வெற்றிக்காக எல்லாவற்றையும் வெளியிடும் தாராளவாதப் போக்கைக் கடைப்பிடித்தது. இதனைப் புரியாதவர்கள் அதன் வழியாகத் தங்கள் நூல்களை வெளியிட்டார்கள்; வெளியிடுகிறார்கள். புரிந்து கொண்டவர்களும் வணிகத்தில் பின்பற்றும் வணிகச் செயல்பாடுகளின் அடிப்படை ஒழுங்கிற்காகத் தங்களின் எழுத்துகளை அதில் வெளியிடுகிறார்கள்.

இப்படியொரு ஒரு உரையாடலை நடத்த அந்தக் கேள்வி தூண்டியது. பத்ரி சேஷாத்ரியின் இந்திய வருகையும் கிழக்குப் பதிப்பகத் தொடக்கமும் வலது சிந்தனையைப் பரப்புவதற்கான வருகை என்பதை முன்பே அறிவேன். எங்கள் பல்கலைக்கழகத்தில் நடந்த பாட த்திட்ட மாற்றங்கள் குறித்த பயிலரங்கில் வல்லுநராக அழைத்திருக்கிறேன். அப்போது நெருங்கிய நண்பர்கள் வலதுசாரியென அடையாளப்படுத்தி அழைக்கவேண்டாம் எனச் சொன்னபோது, இந்தியா வலதுசாரிகளின் நாடாக இருக்கும்போது அவர்களின் கருத்துகளைத் தெரிந்துகொள்ளாமல் நாம் எப்படி ஒதுங்கமுடியும் என்று சொன்னதுண்டு. அவரது கணினித்தமிழ் பங்களிப்புக்காக மதித்து அது சார்ந்த பேச்சுகளின்போது அவர் பெயரைச் சுட்டிக்காட்டியிருக்கிறேன்.  சென்னையில் எனது மகள் பார்த்த வேலையை விட்டுவிட்டுத் தன்னார்வ மனத்தோடு ஏதாவது பணி வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளலாம் எனத் திட்டமிட்டபோது, அவரிடம் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்துள்ளேன். புதிய தலைமுறையில் காலைநேர உரையாடல்கள் இருந்தபோது இருவரும் எதிரும்புதிருமாக விவாதங்களைச் செய்திருக்கிறேன். இப்போதும் அதையெல்லாம் மதிக்கிறேன். நட்புப்பட்டியல் இருக்கிறோம். 

 ப்ரசன்னா ராமஸ்வாமி

நாடகச்செயல்பாடுகள் வழியாக 30 ஆண்டுகாலம் நட்பில் இருந்த ப்ரசன்னா ராமஸ்வாமி 3 ஆண்டுகளுக்கு முன்னால் நட்பிலிருந்து கழற்றிக் கொண்டார். அதற்கு முன்பு அவரது பல நாடகங்களின் மேடையேற்றத்தைப் பார்த்து எழுதியிருக்கிறேன். அதற்குப் பிறகும் கூட இமையத்தின் கதைகளை நாடகமாக்கி மேடையேற்றியபோது , இமையத்தின் அழைப்பை ஏற்றுப் பார்த்துவிட்டு எழுதியிருக்கிறேன். இமையத்தின் கதைகளை நாடகமாக்கியது திமுக அரசு தரும் விருதுகளில் ஒன்றைப் பெறுவதற்கான முயற்சி என்பது தெரியும். அதை இமையத்திடமே சொல்லியிருக்கிறேன்.

நட்பு விலக்கம் நடந்த சம்பவமும் முகநூலில் தான் நடந்தது. ஒன்றிய ஆட்சியில் பாரதிய ஜனதா கட்சி பொறுப்பேற்றபின் தமிழ்நாட்டு பிராமணர்களின் நகர்வு எப்படி மாறியிருக்கிறது என்றொரு பதிவை எழுதியபோது அந்தப் பதிவில் அவர் எந்தக் குறிப்பும் சொல்லாமல் திராவிட எதிர்ப்பில் பெரும் மல்லராகச் செயல்படுவதாக நம்பும் ஒருவருக்குத் தொடுப்பு கொடுத்து ஏவி விட்டார். அவர் என்னை ” உயிர்மையின் இடம் நிரப்பி எழுத்தாளர்” எனக் கேலி செய்து பதிவு போட்டிருந்தார். அவர் எனது நட்பில் இல்லாததால் இன்னொருவர் வழியாக அப்பதிவை வாசிக்க முடிந்தது. அவரோடு விவாதிப்பதை விட்டுப் ப்ரசன்னா ராமஸ்வாமியிடம் நேரடியாகக் கேட்டான். உங்களிடம் செயல்படும் பிராமணியத்தின் அளவு குறைவு என்று நினைத்துத்தான் உங்கள் நாடகங்களைப் பார்த்து விமரிசனக்குறிப்புகள் எழுதி வந்தேன். எனது நினைப்பு தவறு என்று உணர்கிறேன் என்று சொல்லி உரையாடலை முடித்துக்கொண்டேன். அதன் பிறகு சிலகாலம் முகநூலிலிருந்து தற்காலிக விடுப்பில் இருந்தார். திரும்ப வந்தபோது நான் அவரது நட்புப் பட்டியலிலிருந்து விலக்கப்பட்டிருந்தேன்.

இப்போது மூர்க்கமான ஆணவத்துடன் செயல்படுகின்றார் என்பதைப் பலரும் பகிர்ந்துள்ள பதிவு காட்டுகிறது. இதற்கு முன்பும் அவரது பதிவுகளைச் சுட்டிக்காட்டிக் கலைஞர் விருதைத் திருப்பித் தரச்சொல்லிய பதிவுகளை வாசித்திருக்கிறேன். அவர் திருப்பித் தரமாட்டார். தானாகக் கிடைத்த விருதுகள் என்றால், தார்மீக ரீதியில் திருப்பித் தரும் உள்ளுணர்வை உருவாக்கும். ஆனால் நட்பு வட்டங்கள் வழியாக வாங்கிய எந்த விருதையும் திருப்பி அளிக்கும் மனநிலை தோன்றாது.

மாலன்:

மூத்த பத்திரிகையாளர்; நல்ல சிறுகதைகள் எழுதியவர் என்ற அடையாளத்தோடு நடுநிலையாகச் சிந்திப்பவர் என்ற அடையாளத்தைப் பேணிவந்த மாலன், நேற்று எழுதிய ஒரு பதிவில் தனது பா.ஜ.க. ஆதரவை அப்பட்டமாகக் காட்டிவிட்டார் என அவர்மீது மரியாதைகொண்ட பலரும் புலம்பியிருந்தார்கள். நான் அவரது பதிவை நேரடியாக வாசிக்கவில்லை.

அவரால் நட்புப் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டவன் நான். எங்கள் பல்கலைக்கழகத்தில் நான் நடத்திய கருத்தரங்கம் ஒன்றைக் குறித்து அவர் எழுப்பிய கேள்விகளுக்குச் சொன்ன பதிலை முன்னிட்டு என்னை நட்பு நீக்கம் செய்தார். அவர் நடத்தும் நிகழ்வுகளும் எழுதும் இலக்கியங்களும் அர்த்தம் கொண்டவை; தீவிரமானவை; மற்றவர்கள் செய்வன அர்த்தமற்றவை என்பதே அவரது வாதமாக இருந்தது. இது நடந்தது நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்னால். என்றாலும் அதற்குப் பின்னால் அவரும் நானும் சில இலக்கிய/ பண்பாட்டு நிகழ்வுகளில் சந்தித்திருக்கிறோம்; புன்னகை செய்திருக்கிறோம். நலம் விசாரிக்கவே செய்திருக்கிறோம்.

மோடி அரசின் ஆதரவு ஊடகங்கள் நடத்திய கருத்துக்கணிப்பைக் கொண்டு திரும்பவும் அவரே ஆட்சிக்கு வருவார். அதனால் அதிகாரத்துக்கு வருபவரை - வெல்லப் போகின்றவரை ஆதரிப்பதே புத்திசாலித்தனம். தோற்றவரை ஆதரிப்பதின் மூலம் எதிர்ப்பரசியல் தான் செய்யமுடியும். அதனால் தமிழகத்திற்கு நன்மை இல்லை; தீமையே விளையும் என்று மாலன் தனது ஆதரவைக் காட்டுவதும், தன்னையொத்தவர்களின் வாக்குத்திரட்சியை மடைமாற்றம் செய்வதும் ஆச்சரியமானதல்ல. அவர் எப்போதும் சார்புநிலை கொண்டவர்தான். நடுநிலையாளர் இல்லை. அவர் மட்டுமல்ல இங்கே யாரும் சார்புநிலை இல்லாமல் இருக்கவியலாது என்பதும் உண்மை. ஆனால் ஒருவரின் பொதுவெளிச் சார்பு அதிகாரத்திற்கேற்ப மாறும் தன்மை கொண்டதாக இருக்கும்போது அச்சார்பு ஆபத்தானது என்பது உறுதியாகும்.

மாலன் எழுதிய புனைவுகளில் இருக்கும் தன்னிலை பெரும்பாலும் குடும்ப அமைப்பும் சாதிக் கட்டுமானமும் உருவாக்கிய தன்னிலை. அதே நேரத்தில் அவரது பெயர் பொறித்து வந்த கணையாழி, தினமணி, சன் நெட்வொர்க், புதிய தலைமுறை என பணியிடங்களில் வெளிப்பட்ட தன்னிலை வேறானது. அந்நிறுவன விதிகளையும் அரசியல் நோக்கங்களையும் மறைமுகச் சார்புகளையும் அறிந்து நிறைவேற்றும் பணியிடப் பொறுப்பை உணர்ந்தது. அதேபோல் மைய அரசின் சாகித்திய அகாடெமி போன்ற அரசு சார்ந்த இலக்கிய, பண்பாட்டு நிறுவனங்களில் உறுப்பினர் ஆதல் போன்றவற்றிற்கு நேர்மையான வழிகளையே அவர் பின்பற்றினார் என்று நம்பவேண்டியதில்லை. அவர் எழுதியதின் காரணமாகவே உறுப்பினர் ஆனார் என்றால் மைலாப்பூரில் இருக்கும் அவரது நண்பர்களே ஒத்துக் கொள்ளமாட்டார்கள். அவருக்குக் கிடைக்கும் உள்நாட்டு வெளிநாட்டுப் பயணங்களும் கூட அப்படியான கேள்விக்குட்பட்டவையே. எல்லா நேரங்களிலும் எல்லா அமைப்புகளிலும் அதிகார மையத்தை - அதன் தலைமையை அனுசரித்துப் போகும் வாய்ப்பையே கைக்கொண்டவர் அவர். இந்த மனநிலை நடுத்தரவர்க்க - குமாஸ்தா மனநிலை. மாலன் அப்படித்தான் இருக்கிறார்; வெளிப்படுகிறார்.

அவரது வாழ்க்கைச் சூழல் அப்படித்தான் கட்டமைக்கிறது. ஒரு மாதச் சம்பளக்காரர்  ‘வீட்டில் ஒருவராகவும் வேலைபார்க்கும் இடத்தில் இன்னொருவராகவும்’ இருக்க வேண்டிய- நடிக்கவேண்டிய பாவனைகள் உண்டு. அதனைச் செய்யும்படி வலியுறுத்துவது அமைப்பின் விதிகள். வீட்டில் ஆணாதிக்கவாதியாகவும் மனைவியை அடித்துப் போட்டுவிட்டுக் கதவைப் பூட்டிச் சாவியைக் கையில் எடுத்துக்கொண்டு போகும் ஒருவர் அதே மனநிலையை அவர் வேலை பார்க்கும் அலுவலகத்தில் காட்ட முடியாது. அப்படிக் காட்டினால் தண்டனை கிடைக்கும். இந்தியாவில் ஒவ்வொருவரும் அந்தரங்க வெளியில் ஒருவராகவும் பொதுவெளியில் இன்னொருவராகவும் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். இம்மனநிலைக்கு இங்கே படித்துச் சூதும் வாதும் செய்யும் ஒவ்வொருவரும் விலக்கானவர்கள் அல்ல. அதனால்தான்  எந்த அமைப்பிலும் இணைந்து வேலைசெய்ய மாட்டேன் என்று தீவிர எழுத்தாளர்கள் தான் தோன்றியாக அலைகின்றார்கள். அமைப்புகளின் விதிகளுக்கு உடன்படாத கலகக்காரர்களாக - அனார்க்கிஸ்டுகளாக இருக்கிறார்கள். சித்தர் மரபும் தனிப்பாடல்கள் பாடிய காளமேகம் போன்ற ஒன்றிரண்டு புலவர்களும் கலகமனத்தை எழுதிக்காட்டிவிட்டுப் போயிருக்கிறார்கள்.

நவீனத்துவம் நுழைந்தபின்பு பாரதியிடமும் பிரமிளிடமும் ஜி.நாகராஜனிடமும், விக்கிரமாதித்தியனிடமும் ஓர் அலைவு மனத்தைக் காண்கிறோம். கோணங்கியும்கூட அந்த வரிசையில் வரவே ஆசைப்படுகிறார். அமைப்பில் செயல்படுவதில் ஆர்வமற்றவர்களாய் - செயல்பட நேர்ந்தாலும் அதன் நடைமுறைகளுக்கு ஒத்துப் போகும் விருப்பம் இல்லாதவர்களாய் வெளியேறியிருக்கிறார்கள். அவர்களின் வாரிசுகளாக இப்போது எந்த எழுத்தாளரையும் சுட்டிக்காட்ட முடியாது. சித்தர்களின் மரபில் சொல்லத்தக்க நவீன எழுத்தாளன் என அவர்கள் சொல்லிக்கொள்ளலாம். ஆனால் உண்மையல்ல. ஏனென்றால் அவர்களைக் கட்டுக்குள் கொண்டுவரும் பலமான அமைப்புகளாகக் குடும்பமும் சாதியும் இருக்கின்றன.

இங்கே ஒருவரின் அந்தரங்க வெளியைத் தீர்மானிப்பதில் குடும்ப அமைப்பும் சாதிக் கட்டுமானங்களும் முக்கியப் பங்காற்றுகின்றன.இவ்விரண்டும் நம்பிக்கைகளின் மேல் இயங்கும் அமைப்புகள். அதனை மீறினால் தண்டனைகள் கிடைக்கும் என்றில்லை. ஆனால் பொதுவெளி நடவடிக்கைகளை அவர் பணியாற்றும் அமைப்பின் சட்டவிதிகள் தீர்மானிக்கின்றன. அதிலிருந்து மீறினால் தண்டனை கிடைக்கும் வாய்ப்புண்டு.

 நடைபெறப்போகும் தேர்தல் ஒவ்வொருவரையும் சாதிக்குள் சிந்திப்பவராகக் காட்டிவிட்டது. ரகசியங்களை வெளிப்படையாக்கிவிட்டது.எழுத்தாளர்கள் - நவீனத்துவத்தை உள்வாங்கிய எழுத்தாளர்கள் -ஒவ்வொருவரும் சாதியாகவே வெளிப்படுகிறார்கள். அதிலும் குறிப்பாகப் பிராமணர்கள்- எழுத்தாளர்களாகவும் பத்திரிகையாளர்களாகவும் அறிவுஜீவிகளாகவும் வேடம் கட்டிய பிராமணர்கள் ஒவ்வொருவரையும் அதைத் தாண்டிச் சிந்திக்கவிடாமல் குறுக்கிவிட்டது. பாரதிய ஜனதா கட்சியின் அரசாங்கம் - மோடியின் அரசாங்கம் - பிராமணியத்தைக் காக்கும் அரசாங்கம் என நினைக்கிறார்கள். அதனால் அதனைக் காக்கும் வேலையும் பொறுப்பும் தங்களுக்கு இருப்பதாக நம்புகிறார்கள். அந்த நம்பிக்கையில் தான் இந்திய அரசியல் சட்டவிதிகள் எல்லாவற்றையும் மீறியதின் விளைவாகத் தொடரும் மாநில அரசையும் அவர்கள் ஏற்கிறார்கள். ஊழல் தான் முதன்மைப் பிரச்சினை; கட்சி அரசியலின் தலையீடுகள் தான் அரசு அமைப்புகளின் வீழ்ச்சிக்குக்காரணம் எனச் சொல்லிவந்த பிராமணர்களும் பிராமணிய அறிவு வர்க்கமும் இப்போதைய அரசைக் கேள்வி கேட்காமல் நழுவிக்கொண்டே போகிறது.

பழைய கணையாழி எழுத்தாளர்களாகவும் நவீன நாடகத்தோடு தொடர்பு கொண்டிருந்த அறிவு வர்க்கமாகவும் இருந்த பலரும் முகநூலில் பாரதிய ஜனதாவையும் அதன் தமிழ்நாட்டு முகமான அ இ அதிமுகவையும் வெளிப்படையாக ஆதரிக்கும் நபர்களாக வலம் வருகிறார்கள். வாக்களிப்பது ரகசியமான வினை என்னும் அடிப்படையைக் கூடக் கைவிட்டுவிட்டு நான் இவரை ஆதரிக்கிறேன் என்று எழுதுகிறார்கள்.

இந்த வீழ்ச்சி தனிநபர் வீழ்ச்சி அல்ல. ஓர் அறிவியக்கத்தின் வீழ்ச்சி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தமிழில் நடப்பியல் இலக்கியப் போக்குகள்