திருப்பத்தூரில் நாடகவிழா:நவீனத்தமிழ் அரங்கவியல் : தொடரும் சில செயல்பாடுகள்

பிரித்துப்பிரித்து விளையாடுவது நவீனத்துவத்தின் மூன்றாவது விதி. முதல் இரண்டு விதிகள் என்னென்ன என்று கேட்கவேண்டாம். அவைபற்றி இங்கே எழுதப் போவதில்லை. எழுதவேண்டுமென்ற கட்டாயமுமில்லை. ‘நவீன’ என்ற முன்னொட்டோடு இயங்கத் தொடங்கிய தமிழ்க் கலை. இலக்கியச் செயல்பாடுகள் தொடர்ச்சியாகப் பிரிந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் அந்த விளையாட்டிலிருந்து அரங்கவியல் மட்டும் தப்பித்துவிடும் எத்தணத்தோடு தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே இருக்கிறது. நவீன நாடகம் பலமாகத் தேய்ந்தும் கொஞ்சமாகத் தீவிரப்பட்டும் தொடர்கின்றது. இந்நிலை தமிழின் பலமோ.. பலவீனமோ அல்ல. அரங்கவியலின் பலமும் பலவீனமும்.

தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, தமிழர்களின் வெகுமக்கள் கலைகளாக அறியப்படும் சினிமாவிலும் இசையிலும் ‘நவீன’ என்ற முன்னொட்டை ஒட்டிக்கொள்ளவிரும்பும் ஒரு கலைஞரோ, ஓர் இயக்குநரோ இல்லை. நவீனத்துவத்தின் மீது ஆழமான பார்வைகள் கொண்ட ஒரு விமரிசகர் அல்லது கருத்தியலாளர் விரிவான அலசல் வழியாக ஒருவரை அடையாளப்படுத்திச் சொல்ல விரும்பினாலும் அந்த இசைக் கலைஞர், அல்லது சினிமா இயக்குநர் அதனை ஏற்றுக்கொள்வாரா என்பது சந்தேகம்தான். மரபின் பிடியிலிருந்து விலகாமல் இருக்கும் அவர்களுக்கு ‘நவீனம், நவீனத்துவம்’ போன்ற சொற்களின் மீது ஒவ்வாமையும் எரிச்சலுமே தங்கியுள்ளன. அவர்களின் வணிகம் சார்ந்த வெற்றிக்கும், பெருந்திரளின் ஏற்புக்கும் அந்தச் சொல் இடையூறாக மாறிவிடும் என்ற அச்சமும்கூட இருக்கிறது. ஆனால் அரங்கியல்கலையோ, ஓவியக் கலையையோ, சிற்பக்கலையோ அப்படியான எதிர்மறை மனநிலையோடு இல்லை என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. கவிதை, புனைகதை, நாடகம் போன்ற எழுத்துக் கலைகளும் இல்லை. அவற்றில் செயல்படுபவர்கள் ஒருபடிமேல் நோக்கி நகர்ந்து நவீன அடையாளம் கிடைக்காதா? என்று ஏங்குகின்றனர். ஒரு விமரிசகன் அப்படிச் சொல்ல வேண்டுமெனக் காத்திருக்கின்றனர். 

தன்னை இன்னொருவருக்குப் புரியவைக்க முடியாது என்று தெரிந்தபோதிலும் தொடர்ச்சியாக முயற்சிசெய்வது நவீனத்துவக் கலைகளின் தொடர் நடவடிக்கைகளாக இருக்கின்றன. ஒரு நவீனத்துவக் கலைஞர் தனது கலைவெளிப்பாட்டை ரசிக்கின்ற ஒருவரைத் தன்னைப் புரிந்துகொண்டவராகக் கருதிக்கொள்ளும் வாய்ப்புகள் தன்னை வன்முறை. தனிமனிதர்களின் தன்னிலை உருவாக்கத்தில் விருப்பங்களுக்கும் சுதந்திரத்துக்கும் தடையில்லை என்ற அளவில் கொண்டாடப்படும் ஒன்றாக இருக்கிறது நவீனத்துவம். ஒவ்வொருவரின் விருப்பங்களும் தேவைகளும் சுதந்திரத்தின் அளவுகோல்களும் வேறுவேறு என்பதால், அவர்களின் வெளிப்பாடாக இருக்கும் கலைகளும் வேறுவேறாகவே இருக்கின்றன. நவீனத்துவத்தின் வெளிப்பாடுகளாக இருக்கும் நவீனக் கவிதைகளும் நவீன ஓவியங்களும் அவர்களது தனிமைக்கும், அமைப்புக்குள் நின்று செயல்பட முடியாத இயலாமைக்கும் தன்னிரக்கத்திற்கும் ஏற்றனவாக இருக்கின்றன. இசையாக்கமும்கூட அவ்வாறிருக்க வாய்ப்புண்டு. ஆனால் இங்கே அத்தகைய இசையாக்கங்கள் உருவாக்கப்பட வேண்டுமென்ற எண்ணமே இல்லை. 
நவீன என்ற சொல்லாடலை முதன்முதலில் ஒட்டிக்கொண்ட ஓவியக்கலையில் தீவிரமாகச் செயல்படும் நவீன ஓவியர்கள் இருக்கிறார்கள். ஆனால் ஓவிய இயக்கங்கள் இல்லை. இதே நிலைதான் நவீனக் கவிதைகளுக்கும், நவீனப் புனைகதைகளுக்கும். ஆனால் நாடகத்துறையில் ஒவ்வொருவரும் நவீன நாடகக்காரராக அறியப்படுவதோடு – நாடகக்குழுவின் பகுதியாக அறியப்பட்டு அதன் தொடர்ச்சியாக நவீன நாடக இயக்கத்தின் பகுதியாக ஆகிவிடுவது தவிர்க்கமுடியாததாக ஆகிவிடுகிறது. இந்த எத்தணிப்பின் வெளிப்பாடுகளில் சில அமைப்புகளும் சில நிறுவனங்களும், சில தனிநபர்களும் குமிழிகளாக அலைகின்றனர். 
நவீன நாடகச் செயல்பாடுகளின் நிரந்தரக் காலக்காட்டிக் குறிப்புகளில் ஒன்றாக மாறியிருக்கும் மாற்று நாடக இயக்கத்தின் பயிற்சிமுகாமும் நாடகவிழாவும் பரிசளிப்பும் முதன்மையான பெருங்குமிழியாகக் கவனம் பெற்றிருக்கிறது. திருப்பத்தூர் (வேலூர்) தூயநெஞ்சக் கல்லூரியில் தமிழ்த்துறை ஆசிரியராக இருக்கும் கி.பார்த்திப ராஜாவை மையமாக்கி நிகழும் தொடர்நிகழ்வுகளும், தமிழ்நாட்டின் பல கல்லூரிகளுக்கும் அங்காங்கே நாடகச்செயல்பாடுகளில் ஈடுபடும் நாடகக் குழுக்களுக்கும் தேவையான நடிகர்களையும் பின்னரங்கக் கலைஞர்களையும் தயாரித்து அனுப்பிக் கொண்டிருக்கிறது. பயிலரங்கின் பின்னிகழ்வுகளாக நடக்கும் நாடகவிழா, ஏற்கெனவே மேடையேற்றம் கண்ட நவீன நாடகங்களுக்கும் இன்னொரு மேடையேற்ற வாய்ப்பை வழங்குகிறது. பொதுநிலையில் வழங்கப்படும் விருதுகளில் ஒதுக்கப்படும் நாடகச் செயல்பாட்டாளர்களுக்கு நாடகவிழாத் தொடக்கத்தில் அளிக்கப்படும் விருதுகள் தங்கள் அரங்கச் செயல்பாடுகள் மீதான கையறுநிலையைக் கைவிடச் செய்கிறது; சில நேரங்களில் திரும்பவும் செயல்படத் தூண்டுகிறது. 
ஆறு ஆண்டுகளாக நடக்கும் பயிலரங்கில் பங்கேற்றவர்கள் அரங்கியல் செயல்பாடுகளோடு நின்றுவிட வாய்ப்பில்லை. பின்னாட்களில் சின்னத்திரைகளிலும் பெருந்திரைகளிலும் திறமைகளைக் காட்டக் கூடும். பயிற்சிமுகாமைத் திட்டமிட்டு நடத்தும் கி.பார்த்திபராஜாவின் நோக்கமும் பயிற்சியாளர்களின் பயிற்சியும் நாடகத்தில் -நவீன நாடகங்களில் பங்கேற்று வெளிப்பட வேண்டும் என்பதாக இருந்தாலும், பங்கேற்பாளர்களின் நோக்கங்கள் அதனோடு இணைவதில்லை என்பது கடந்த காலம் கற்றுத்தந்துள்ள பாடம். கூத்துப்பட்டறை பல நடிகர்களைச் சினிமாவுக்கு வழங்கியுள்ளது. மதுரை நிஜநாடக இயக்கமும்கூட. இவையல்லாமல் ஆங்காங்கே நடந்த பல அரங்கப் பயிலரங்கில் பங்கேற்றவர்களும் சினிமா நடிகர்களாக ஆகியிருக்கிறார்கள். தேசிய நாடகப் பள்ளியும் புதுச்சேரி நிகழ்கலைப் பள்ளியும் திரைநடிகர்களுக்கான பயிற்சிகளை வழங்கவில்லை என்றாலும் அங்கிருந்து வருகிறவர்கள் சினிமாவையும் நோக்கமாகவே கொள்கின்றனர். சென்னையில் இயங்கும் 10 -க்கும் மேற்பட்ட திரைப்படப் பயிற்சி நிறுவனங்களிலும் இந்நாள் நாடகக்காரர்களும் முன்னாள் நாடகக்காரர்களுமே நடிப்பைக் கற்றுத்தருகிறார்கள். தமிழ்ச் சினிமாவை முன்வைத்து நடிப்புச் சொல்லித்தரும் பயிற்சி முறைகளை இங்கே ஒருவரும் உருவாக்கித் தரவில்லை. சென்னைத் திரைப்படக்கல்லூரியில் கற்பிக்கும் நடிப்புப் படிப்பில்கூட அப்படியொரு பாடத் திட்டம் இருப்பதாகவோ, கற்பிக்கப்படுவதாகவோ அங்கிருந்து வந்தவர்கள் சொல்லவில்லை. பொதுவாகத் தமிழ்நாட்டில் இயங்கும் கலைசார்ந்த கல்வி நிறுவனங்களில் பாடத்திட்டத்தை முன்வைத்துக் கற்பிக்கும் முறைமைகளுக்கு முக்கியத்துவம் இருப்பதில்லை. குருகுலக்கல்விமுறை சார்ந்த கற்கைகளுக்கே மதிப்பிருக்கிறது. ஆனால் நவீன நாடகங்களுக்கான பயிற்சிப் பட்டறைகளின் பாடத்திட்டம் வேறானவை. செய்ம்முறைகளும் உரைகளும் உரையாடலும் கலந்துகட்டித் தருபவை. 
இந்த ஆண்டு நடந்த மாற்று அரங்கின் பட்டறையில் 90 பேர் இருந்தார்கள். 90 பேரை மூன்று குழுவாகப் பிரித்துத்தான் அடிப்படையான பயிற்சிகளை வழங்கினார்கள். காலையில் உடலை வசப்படுத்தும் சிலம்பம், யோகா, மூச்சுப்பயிற்சி போன்றவற்றிற்குப் பின் குரலை வளப்படுத்தும் பயிற்சிகள். பின்னர் குரலையும் உடலையும் இணைக்கும் பயிற்சிகள். காட்சிரூபங்களை உண்டாக்கும் கற்பனைப்பயிற்சிகள் என நீளக்கூடியன. செய்ம்முறைப் பயிற்சிகளைக் கைவிட்டுக் கருத்தியல் தளத்தில் செயல்படும் என்னைப்போன்றவர்கள் உரையையும் உரையாடலையும் வழங்குவார்கள். எனது அமர்வில் மூன்று குழுக்களையும்- 90 பேர்களையும் - ஓரிடத்தில் அமர்த்தி நாடகக்கலை எப்படி அனைவரும் - நாடகாசிரியன் தொடங்கி, ஓவியன், சிற்பி, ஒளியமைப்பாளன், ஒலியமைப்பாளன், இசைஞன், ஒப்பனையாளன், உடையமைப்பாளன், அரங்க அமைப்பாளன், நடிகர்கள் என அனைவரும் இணைந்து இயக்குநர் என்னும் நெறியாளரின் வழிகாட்டலில் செயல்பட வேண்டும் என்பதை உரையாகச்சொன்னேன். நாடகக்கலையில் நடிக மையம், இயக்குநர் மையம், ஆசிரிய மையம் என மூன்று முக்கிய மையங்கள் சார்ந்த செயல்பாடுகள் இருந்தாலும் பார்வையாளர்களைக் கட்டுக்குள் கொண்டுவருவதில் காட்டும் முனைப்புதான் நாடக வெற்றியின் ரகசியம். அதைச் செயல்பாடுகளோடு கருத்தியல் ரீதியாகவும் அறியவேண்டும். 
நாடகவிழாவின் தொடக்க நாளில் வழங்கும் விருதுகள் பெறுமதிகொண்ட விருதுகளாக மாறியுள்ளன. கேரள நவீன நாடக இயக்கங்களுக்கும் தமிழ் நவீன நாடக இயக்கங்களுக்கும் ஆழமான பங்களிப்புச் செய்துள்ள பேரா.ராமானுஜம் பெயரில் மொத்தப் பங்களிப்புக்கான விருதொன்றைக் கடந்த ஆறாண்டாக வழங்கி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, ‘நம்பிக்கை நாடகர்’ விருதாக பெண்-ஆணென இளையோருக்கு இருவிருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு முதல் நாடகக்காரர் ஞாநியின் பெயரில் அவரது குடும்பம் ஏற்படுத்தியுள்ள 'நாடக ஆசிரியர்' விருதும் சேர்ந்துள்ளது. இந்த ஆண்டு அந்த விருதுகளைப் பெற்ற பிரசன்னா ராமஸ்வாமி, ஞா.கோபி & அஸ்வினி காசி, எஸ்.எம்.ஏ.ராம் ஆகியோரும் வழங்கிப் பாராட்ட அழைக்கப்பட்ட பாரதி மணி, அ.ராமசாமி, அரியநாயகம்(பாரிஸ்) ஆகியோரோடு தலைமைப் பேருரைக்காக அழைக்கப்பெற்ற இலங்கையின் நாடகப் பேரா.சி.மௌனகுருவும் தமிழ்நவீன நாடக இயக்கத்தின் தவிர்க்கமுடியாத ஆளுமைகள். இந்தப் பட்டறைகளையும் விழாவையும் விருதுகளையும் தொடர்ச்சியாகச் சாத்தியப்படுத்தி வரும் பார்த்திபராஜாவும் அவருக்கு இந்த வாய்ப்பை உருவாக்கித் தரும் திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரியின் நிர்வாகமும் பாராட்டுக்குரியவர்கள். அக்கல்லூரி நினைத்தால் தமிழ்நாட்டில் சமூக நிகழ்வுகளை -விளக்கங்களை-விமரிசனங்களைக் கலையின் எல்லைக்குள் நின்று பேசும் அரங்கியலாளர் திரளை உருவாக்கி அனுப்ப முடியும்.அதற்கான வளாகச்சூழலும் மனிதவளத்தை ஒருங்கிணைத்துச் செயல்படத் தூண்டும் வாய்ப்பும் கொண்டதாக இருக்கிறது. 


அன்றே தொலையும் பசுமையும் மஞ்சளுமாய் 

===========================================
திருப்பத்தூர் தூயநெஞ்சக்கல்லூரியில் இன்று -28-05-18 தொடங்கி 4 நாட்களுக்கு நடக்கப்போகும் நாடகவிழா மாலையில் தொடங்குகிறது.
காலை நடைக்குப் பின் கல்லூரி வாசலுக்குப் பக்கத்தில் தொடங்கும் தேங்காய்ச் சந்தைக்குக் கண்ணைக் கொடுத்தபோது பக்கத்துச் சந்துக்குள் அழைத்துப்போனது. அதிகாலையில் பறித்துவரப்பெற்ற பச்சைக் கீரைகளும் பசுமையும் மென்மையும் மாறாக் காய்களும் மஞ்சள் பழங்களுமாய் அந்தச் சந்தைத்தெரு அழைத்துக் கொண்டது. சந்தைக்குள்ளும் கூட்டம் நிரம்பி வழிகிறது. 

அன்றாடம் பறிக்கும் காய்கனிகளை அன்றே விற்றாக வேண்டிய கட்டாயம் இந்திய விவசாயிகளுக்குள்ள நெருக்கடி. வளர்ந்த நாடுகள் மாதக்கணக்கில் பதப்படுத்தி விவசாயிகளுக்கு அந்த நுட்பத்தைக் கற்றுக்கொடுக்கின்றன. விளையும் இடத்திலேயே பதப்படுத்திப் பாதுகாக்கும் வாய்ப்புகள் இருப்பதால் முழுப் பலனையும் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கே கிடைக்கச் செய்கின்றன. 
வேளாண்மை இந்தியாவின் முதுகெலும்பு என்று சொல்லிக்கொண்டே விவசாயத்தின் லாபத்தை வியாபாரிகளுக்கு நகர்த்திக்கொள்ளும் வாய்ப்பை வழங்குகின்றன இந்திய அரசுகள். திட்டமிடத்தெரியாதவர்கள் நிபுணர்களாக இருக்கிறார்கள். திட்டமிடச்சொல்லி வற்புறுத்தாத தலைவர்கள் தரகுக்காக அலைகிறார்கள். 
நாடகக்கலைக்கான பயிற்சிகள்
==============================
நாடகக்கலைக்கான 10 நாள் பயிற்சிப்பட்டறையைத் திட்டமிட்டு நடத்திவருபவர் நண்பர் கி.பார்த்திபராஜா. அவருக்கு அந்த வாய்ப்பை வழங்குவது அவர் பணியாற்றும் திருப்பத்தூர் தூயநெஞ்சக்கல்லூரி. ஒவ்வொரு ஆண்டும் பயிற்சிக்காக வரும் இளையோர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே இருக்கிறது. இப்போது நடக்கும் பட்டறையில் 90 பேர் இருக்கிறார்கள். 90 பேரை மூன்று குழுவாகப் பிரித்துத் தான் அடிப்படையான பயிற்சிகளை வழங்குகிறார்கள். காலையில் உடலை வசப்படுத்தும் சிலம்பம், யோகா, மூச்சுப்பயிற்சி போன்றவற்றிற்குப் பின் குரலை வளப்படுத்தும் பயிற்சிகள். பின்னர் குரலையும் உடலையும் இணைக்கும் பயிற்சிகள். காட்சிரூபங்களை உண்டாக்கும் கற்பனைப்பயிற்சிகள் என நீளும். நான் 90 பேர்களையும் ஓரிடத்தில் அமர்த்தி நாடகக்கலை எப்படி அனைவரும் - நாடகாசிரியன் தொடங்கி, ஓவியன், சிற்பி, ஒளியமைப்பாளன், ஒலியமைப்பாளன், இசைஞன், ஒப்பனையாளன், உடையமைப்பாளன், அரங்க அமைப்பாளன், நடிகர்கள் என அனைவரும் இணைந்து இயக்குநர் என்னும் நெறியாளரின் வழிகாட்டலில் செயல்பட வேண்டும் என்பதை உரையாகச்சொன்னேன். 
நாடகக்கலையில் நடிக மையம் இயக்குநர் மையம் ஆசிரிய மையம் எனச் செயல்பாடுகள் இருந்தாலும் பார்வையாளர்களைக் கட்டுக்குள் கொண்டுவருவதில் காட்டும் முனைப்புதான் நாடக வெற்றியின் ரகசியம்.அதைச் செயல்பாடுகளோடு கருத்தியல் ரீதியாகவும் அறியவேண்டும். தொடர்ச்சியாகச் செயல்படும் பார்த்திபராஜா பாராட்டுக்குரியவர் 




விருதுகள் தரும் மகிழ்ச்சி. 
======== ==============
இயல் இசை நாடகமெனத் தமிழை வகைப்பாடு செய்து பேசினாலும் நாடகம் சார்ந்த ஆளுமைகள் கண்டு கொள்ளப்படுவதில்லை. சரியாகச் சொல்வதென்றால் நாடகங்கள்- மேடையேற்றங்களாயினும், பனுவல்களாயினும் கண்டு கொள்ளாமல் தவிர்க்கப்படுவது தமிழகச்சூழல். 
இந்தச் சூழலில் உடைப்பு ஏற்படுத்தும் விதமாகத் திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரியின்/ கி.பார்த்திபராஜாவின் ஈடுபாடும் ஆர்வமும் இருக்கிறது. 6 ஆண்டுகளாக நடத்தும் பயிற்சிப்பட்டறையும் நாடகவிழாவும் -மே மாதம் கடைசிப் பத்து நாட்கள்- அரங்கியலாளர்களின் ஆண்டு நாட்காட்டியில் குறித்து வைத்துக் கொள்ள வேண்டிய நாட்களாக மாறி விட்டன. 

நாடகவிழாவின் தொடக்க நாளில் வழங்கும் விருதுகள் பெறுமதிகொண்ட விருதுகளாக மாறியுள்ளன. பேரா.ராமானுஜம் பெயரில் மொத்தப் பங்களிப்புக்கான விருது, நம்பிக்கை நாடகர் விருதாக பெண்-ஆணென இளையோருக்கு இருவிருதுகள் என்ற நிலையில் இந்த ஆண்டு முதல் நாடகக்காரர் ஞாநியின் பெயரில் அவரது குடும்பம் ஏற்படுத்தியுள்ள 'நாடக ஆசிரியர்' விருதும் சேர்ந்துள்ளது. அவற்றைப் பெற பிரசன்னா ராமஸ்வாமி,
எஸ்.எம்.ஏ.ராம், ஞா.கோபி,அஸ்வினி காசி ஆகியோரும் வழங்கிப் பாராட்ட பாரதி மணி, அரியநாயகம்(பாரிஸ்) அ.ராமசாமி, இரா.இராசு ஆகியோரோடு வாழ்த்துரைக்காக பத்மாவதியும் தலைமைப் பேருரைக்காகப் பேரா.சி.மௌனகுருவும் என மேடையை நிரப்பினோம் . கல்லூரி சார்பாக செயலர் அவர்கள் தலைமை. 
அக்கல்லூரி நினைத்தால் தமிழ்நாட்டில் 
சமூக நிகழ்வுகளை-விளக்கங்களை-விமரிசனங்களைக் கலையின் எல்லைக்குள் நின்று பேசும் அரங்கியலாளர் திரளை உருவாக்கி அனுப்ப முடியும்.அதற்கான வளாகச்சூழலும் மனிதவளத்தை ஒருங்கிணைத்துச் செயல்படத் தூண்டும் வாய்ப்பும் கொண்டதாக இருக்கிறது. 

பறக்கவிட வேண்டிய பலூன் 


தூத்துக்குடி கலவரங்களால் விரட்டியடிக்கப்பட்ட மக்கள் திரளைத் தொலைக்காட்சிகள் காட்டிக்கொண்டிருந்தன. திட்டமிட்ட படுகொலை; அரச பயங்கரவாதம் எனச் சமூக ஊடகங்களின் பதிவுகள் கோபங்காட்டிக்கொண்டிருந்தன. தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு இணைய வசதியும் சமூகப் பதிவுகளும் மறுக்கப்பட்ட சூழலில் அங்கிருந்து கிளம்பி கோவைக்கு வந்தேன். வரும்போது எனது நினைவுக்குள் ஞாநி எழுதிய நாடகத்தின் காட்சிகள் நிகழ்ந்துகொண்டே இருந்தன. அந்த நாடகத்தை மதுரை நிஜநாடக இயக்கம் – தமிழ்நாடு மக்கள் சிவில் உரிமைக்கழகத்தின் நிதிதிரட்டலுக்காக மேடையேற்றியபோது கோபம்கொண்ட கவிஞர் சத்தியனாக நான் நடித்திருந்தேன். முடிந்தபின் அப்போது சிவில் உரிமைக்கழகத்தின் மதுரைப்பொறுப்பாளராக இருந்த ஹென்றி திபாங்கே நாடகக் குழுவினரைத் தனியே அழைத்துச் சென்று தேநீர் வாங்கிக் கொடுத்துவிட்டுத் தாழ்ந்த குரலில் சொன்னார். “உங்களைத் தேடி ரகசியப்போலீஸ் நாளைக்கோ அதற்கடுத்த நாளோ வரலாம்; நீங்கள் நாடக நடிகர் என்று மட்டும் காட்டிக்கொண்டால் போதும்” என்பதாக யோசனை சொல்லிவிட்டுப் போனார். ஒருவாரம் வரை காத்திருந்து பார்த்தும் ஒருவரும் வரவில்லை. ரகசியப்போலீஸுக்கு வேறு வேலைகளில் ஈடுபட்டு மறந்துவிட்டார்கள். 
கோவையிலிருந்து திருப்பத்தூருக்குப் போய் நாடகங்கள் பார்க்கவேண்டும். நினைவில் ஓடிக்கொண்டிருந்த நாடகப்பிரதிகள் இரண்டு. அபத்த நாடகத்தின் ஆகச் சிறந்த நாடகப் பிரதியான அயனெஸ்கோவின் காண்டாமிருகம் முதலாவது; ஞாநியின் பலூன் இரண்டாவது நாடகம். பெங்குவின் வெளியீடான ஒபன் ஸ்பேஸ் ப்ளேஸ் தொகுப்பிலிருக்கும், தி சிகாகோ கான்ஸ்பிரசி தந்த உந்துதலில் உருவாக்கப்பெற்ற பிரதி ஞாநியின் பலூன். போராட்ட மனம் கொண்ட பத்திரிகையாளராக அறியப்பெற்ற ஞாநி 1981 இல் எழுதி வெளியிட்ட பலூன் நாடகத்தை அதே ஆண்டு ஆகஸ்டு, 25 இல் சென்னை ம்யூசியம் தியேட்டர் அரங்கில் மேடையேற்றினார். மதுரை நிஜநாடக இயக்கம் 1982 இல் மேடையேற்றியபோது நாடகாசிரியர் ஞானி பார்வையாளராக வந்திருந்தார். நாடகத்தின் முடிவில் நடந்த மக்கள் உரிமைக் கழகத்தின் கூட்டத்தில் உரையாற்றியபோது ஞானி, இந்த நாடகம் என்னுடைய நாடகமல்ல; இது நிஜநாடக இயக்கத்தின் – மு.ராமசுவாமியின் நாடகம் என்றார். காரணம் அவரது பலூனின் முழுப்பிரதியையும் நிஜநாடக இயக்கம் நிகழ்த்தவில்லை. ஆனால் ஞாநி, தனது பலூன் நாடகப்பிரதியைப் பலமுறை தனது பரிக்‌ஷா குழுவினரைக் கொண்டு மேடையேற்றியிருக்கிறார். 
அவரது மறைவுக்குப் பிறகு பரிக்‌ஷா குழுவிற்காக ஞாநியோடு இணைந்து உதவி இயக்குநராகச் செயல்பட்ட அற்புதன் விஜயன் திருப்பத்தூர் நாடகவிழாவிற்காக இயக்குநராகப் பொற்றுப்பேற்றுள்ளதாகச் சிற்றேடு சொல்லியது. அற்புதன் விஜயனின் மேடையேற்றம் ஞாநியின் மேடையேற்றங்களைவிடக் கச்சிதமாகவும் வீர்யத்துடனும் வெளிப்பட்டது. ஏறத் தாழ இரண்டு மணிநேரம் நிகழ்ந்த பலூனைப் பார்த்து முடித்தபின் அதன் மேடையேற்றச் சிறப்புகளைப் பேசவேண்டும் என்று தோன்றியதைவிட, அந்நாடகத்தின் நிகழ்காலப் பொருத்தப்பாட்டைச் சொல்லவேண்டும் என்று தோன்றியது. 
தமிழகத்தைக் கடந்த ஓராண்டாகப் போராட்டங்களின் நிழல் கவிழ்ந்து மூடிக்கொண்டே இருக்கிறது. ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைத் தூண்டிவிடும் அமைதியாக வேடிக்கை பார்த்த அரசு எந்திரம் திடீர் திருப்பமாக எதிர்நிலையை மேற்கொண்டது. எந்த முடிவும் இல்லாமல் களைய மறுத்தவர்களைக் கோபமூட்டும் வகையில் தடியடி நடத்திக் கண்ணீர்ப்புகை வீசி, விரட்டியது. காவல் துறையினரைக் கொண்டே தீவைத்துக்கொண்டு, மக்களைப் பயங்கரவாதிகள், சமூகவிரோதிகள் என முத்திரை குத்தித் தண்டித்தது. இந்தத் திசை திருப்பலும் முத்திரைக் குத்தலும் நீட் எதிர்ப்புப் போராட்டத்தின் மீது அதிகமானது. காவிரி மேலாண்மை வாரியத்திற்கு, நெடுவாசலில் நீண்டு தூத்துக்குடி ஸ்டெரிலைட் போராட்டத்தின்போது கொடுங்கனவாய் மாறிப்போய்விட்டது. 13 பேர் போலீஸ் சுட்டதில் செத்திருக்கிறார்கள். 
சேலம் -சென்னை எட்டுவழிச்சாலையைப் பற்றிப் பேசினாலே கொடிய காண்டாமிருகமாய்க் கனவில் வந்து விரட்டுகிறது காவல் துறை. இப்போதைய நிலையில் மக்களோடு கலைவடிவத்தின் வழியாக உரையாட விரும்புபவர்கள் அயனெஸ்கோவின் காண்டாமிருகத்தையும் பலூனையும் தேர்வுசெய்யலாம் என்றாலும், பலூன் ஆகப்பொருத்தமான ஒன்று என்று பரிந்துரைக்கிறேன். 
மெலிதான மாற்றுக்குரல்களைக் கூடச் சகித்துக்கொள்ளாமல் தேசவிரோதிகள், சமூக விரோதிகள், வளர்ச்சிக்கு எதிரானவர்கள் எனக் கட்டம் கட்டும் சூழல் நிலவுகிறது. அப்படிக் கட்டம் கட்டும் சூழலில் அரசு எந்திரங்களான காவல் துறையும், நீதிமன்றங்களும் எப்படிச் செயல்படும் என்பதை வெளிப்படையாக விமரிசிக்கும் பிரதி பலூன். அப்பிரதியில் வெளிப்படும் ஒரே நம்பிக்கைக்குரல் பத்திரிகையாளரின் குரல் மட்டுமே. பத்திரிகையாளர் ஞாநி செயல்பட்ட காலம் இப்போது இல்லை. அவரைப்போல பத்திரிகை முதலாளியைப் பகைத்துக்கொண்டு வெளியேறும் தனிமனிதர்களின் மனச்சாட்சியைப் பயன்படுத்திக்கொள்ளும் இன்னொரு ஊடகத்தை இப்போதைக்கு அடையாளம் காட்டவும் முடியாது. ஒட்டுமொத்தச் சூழலும் நம்பிக்கை தருவதாக இல்லை என்பதே நிலை. இந்தச் சூழலில் திரும்பத் திரும்ப மேடையேற்ற ஒரு நாடகப் பிரதி அல்லது அரங்கேற்றப்பட்ட நாடகம் என்றால் பலூனே பொருத்தமானதாக இருக்கும். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தமிழில் நடப்பியல் இலக்கியப் போக்குகள்