மா.அரங்கநாதனை நினைத்துக்கொண்ட போது

பாண்டிச்சேரியில் இருந்த காலத்தில் (1989 -97) அடிக்கடி சென்னை போவதுண்டு. போகும்போது திரும்பத் திரும்பப் போன இடம் மா.அரங்கநாதனின் ‘முன்றில்’ புத்தகக் கடை. நாடகம் பார்ப்பது, இலக்கியக் கூட்டங்களில் பங்கேற்பது என்பதோடு முன்றிலுக்குப் போய் வருவதும் முதன்மையான வேலையாக இருந்தது. சென்னை போவதற்கு முன்பே முன்றிலின் வாசகனாக இருந்த நான் மா. அரங்கநாதனை நேரில் பார்த்தது தி.ரங்கநாதன் தெருவிலிருந்த முன்றில் அலுவலகத்தில்தான். முன்றில் போய் அரட்டை அடிப்பது போலவே ரங்கநாதன் தெருவில் நடப்பதும் சுவாரசியமானது. சித்திரைத் திருவிழாவில் எதிர் சேவையில் நடக்கும் மனநிலையைத் தரும் நடை.
மாம்பலம் ரயில் நிலையத்தை ஒட்டியிருந்த முன்றிலில் 1990-களில் வந்த இலக்கியப் பத்திரிகைகள் எல்லாம் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும். எனது முகவரியிலிருந்து வந்த ஊடகம் இதழைச் சென்னையில் விற்பனை செய்வதற்காகக் கொடுத்துவிட்டுப் பெரும்பாலும் மாற்று இதழ்களையும் சில புத்தகங்களையும் வாங்கிக்கொண்டு திரும்பியதாகவே நினைவு.

எனது முதல் புத்தகமான ‘நாடகங்கள் விவாதங்’களை விற்றுக் கணக்கு வைத்துப் பணம் கொடுத்தவர் அரங்கநாதனின் மகன் மகாதேவன்தான்.  இப்போது இலக்கியம் தெரிந்த நீதிபதி. சுஜாதாவின் ‘மஞ்சள் ரத்தம்’ கதையைக் கட்டுடைத்து ரவிக்குமார் எழுதிய கட்டுடைப்புக் கட்டுரையை முன்றில்தான் வெளியிட்டது. எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய ‘ராமசாமிகளின் வம்ச சரித்திரம் கதை’யும் முன்றில் வெளியீடுதான். இவ்விரு எழுத்துகளும் முன்றில் இதழைப் பரபரப்பாக்கிய எழுத்துகள் என்பதாக எனது நினைவு சொல்கிறது.

புத்தகங்களை விடவும் இலக்கிய இதழ்களை விற்பனை செய்வதிலும் இலக்கிய விவாதங்களை உற்பத்தி செய்வதிலும் முன்றில் முதன்மையாக இருக்கிறது என்று நினைத்துக்கொள்வேன். அங்கே போய் நேர்ப் பேச்சுகளில் பங்குபெறாமல் இருந்தால் மா.அரங்கநாதனைப் பற்றிய எனது கருத்து மாற்றம் பெற்றே இருக்காது. க.நா.சுப்பிரமண்யம், அசோகமித்திரன் போன்ற எழுத்தாளர்களை அதிகம் மதித்தவராகவே முன்றில் மூலம் வெளிப்பட்டார்.

ரங்கநாதன் தெருவில் நடந்து திரிவதற்கு நேரத்தை ஒதுக்குவதுபோலவே முன்றிலில் உட்கார்ந்து பேசவும் நேரத்தை ஒதுக்கியாக வேண்டும். நுழைந்துவிட்டால் உடனே திரும்ப முடியாது. இரண்டு மூன்று எழுத்தாளர்கள் அங்கே இருப்பார்கள். அதில் ஒருவர் மூத்த எழுத்தாளராக இருப்பார். முன்பே ப்ரமிளைப் பார்த்திருக்கிறேன் என்றாலும் இயல்பாகப் பேசும் நபராகச் சந்தித்த இடம் முன்றில்தான். அதேபோல் கோபிகிருஷ்ணன், நம்பிராஜன், கவிதாசரண் எனப் பலரின் நீளமான பேச்சுகளை அங்குதான் கேட்டிருக்கிறேன்.

எஸ்.ராமகிருஷ்ணன் இளையவராக இருந்தாலும், அதிகம் பேசும் எழுத்தாளராக அங்குதான் எனக்கு அறிமுகம். மா.அரங்கநாதனுக்கு ‘அவரது இடம்; அவருக்கேயான இடம்’ என்று ஒன்று உண்டு. அந்த இடத்தை உறுதி செய்ய வேண்டும்; அடுத்த தலைமுறைக்கும் அவரைக் கடத்த வேண்டும்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தமிழில் நடப்பியல் இலக்கியப் போக்குகள்