கனா: சிதறும் இலக்குகள்

2.0 சினிமாவை நெல்லையில் ஒரு தடவை பார்த்தேன். அது ஒற்றை அரங்கு. பார்வையாளர்களாக வந்தவர்களில் பெரும்பாலோர் இளைஞர்கள், நடுத்தரவயதினர். குழந்தைகள் குறைவு. இரண்டாவது தடவை சென்னையில். அது பல அரங்குகள் கொண்ட சினிமா வளாகம். அங்கே குழந்தை, குட்டிகளோடு குடும்பம் குடும்பமாக அந்தப் படத்திற்கு வரிசை கட்டுகிறார்கள். வேறு படங்களுக்குப் போகும்போதும் கவனிக்கிறேன்.

ரஜினியின் 2.0 குழந்தைகளுக்கான படமாக முடிவுசெய்யப்பட்டு குடும்பமாக வரும் கூட்டம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அலைபேசிக் கோபுர அதிகரிப்பு அதனால் உண்டாகப்போகும் விளைவுகள் பற்றியெல்லாம் நினைத்துக்கொள்ளாமல் குழந்தைகளுக்கான மகிழ்ச்சியைத் தரும் சிட்டி, குட்டி ரோபோக்களை முதன்மையாக்கிக் குழந்தைகள் படமாக நினைத்துக்கொண்டு பிள்ளைகளோடு போய்க்குவிகிறார்கள்.சரியாகச் சொல்வதென்றால் 2.0.குழந்தைகள் சினிமா அல்ல. 

இதன் எதிர்த்திசையில் நகர்கிறது கனாவுக்கான கூட்டம். நடுத்தர வயதினரும் பெரியவர்களுமே அதன் பார்வையாளர்களாக இருக்கிறார்கள். உண்மையில் இந்த சினிமாவின் இலக்குப் பார்வையாளர்களாக குழந்தைகள், சிறுவர்கள், இளைஞர்கள் இருக்கவேண்டிய படம். ஆனால் குடும்பமாக வந்து பார்ப்பவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. 

கனாவிலும் ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகத்திற்கான ஒரு முக்கியமான செய்தி இருக்கிறது. விவசாயத்தைக் காக்கவேண்டும் என்னும் உயிராதாரமான பிரச்சினையும் அதற்கெதிரான விவசாயக் கொள்கையும் இயல்பான கதையில் விமரிசனத் தொனியில் முன்வைக்கப்பட்டுள்ளது. நகரங்களுக்கு இடம்பெயர்ந்துவிட்ட நடுத்தரவர்க்கத் தமிழர்களின் குற்றமனத்தைத் தூண்டும் அந்தக் கதையோடு சமூக வெளியில் பெண்களின் இடம், அவர்களின் திறனை மேம்படுத்தத் தேவையான ஊக்கம் போன்றன சரிவிகிதத்தில் கலந்து தரப்பட்டுள்ள படம். ஒருவித இணைப்பிரதியாக்கத்தன்மையைக் கொண்டுவர இயக்குநர் முயன்றுள்ளார். சொல்முறையில் கவனமாகச் செயல்பட்டிருந்தால் இணைப்பிரதியின் அழுத்தமான காட்சிகள் பாராட்டத்தக்கதாக ஆகியிருக்கக் கூடும். அதற்குப் பதிலாக நகைச்சுவைக் காட்சிகளாக மாறியிருக்கின்றன. 

இதுபோன்ற விளையாட்டு ஆளுமைகளைக் குறித்த எம்.எஸ், தோனி- சொல்லப்படாத கதை, மேரி கோம்ஸ், சச்சின் போன்ற படங்கள் அளவுக்குக் கூட கனா கவனம் பெறவில்லை. முழுமையான வாழ்க்கை வரலாற்றுப் படமாக இல்லாமல் புனைவுப்படமாக ஆக்கியது காரணமாக இருக்கலாம். ஆனால் உண்மைக்குப் பக்கத்தில் இருக்கும் புனைவுப்படம். கிரிக்கெட் வீராங்கனை -கௌசல்யா முருகேசனாக நடித்துள்ள ஐஸ்வர்யாவின் நடிப்பும் பாத்திரத்தை முழுமையாக்க அவர் காட்டியுள்ள ஈடுபாடும் தொடர்ச்சியாக அவர் வெளிப்படுத்தும் நடிப்பாற்றலின் ஒரு பரிமாணம். அப்பாவாக நடித்துள்ள சத்யராஜ், அம்மா , உரக்கடைக்காரர், உதவும் உறவினர்/ காதலர் என ஒவ்வொருவரும் படத்தின் புனைவுக்கும் நடப்பும் உதவுகிறார்கள். முழுமையும் வெளிப்புறப் படப்பிடிப்பாகக் கிராமக்காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. அக்காட்சிகளில் நடிப்பவர்களைத் தயார் செய்வதில் இருக்கும் கஷ்டங்கள் சினிமாவில் இருப்பவர்களுக்குத் தான் புரியும். 

நடப்பியல் படம் என்பதால் கிராமப்புற மனிதர்களின் பெண்கள் பற்றிய பார்வையோடு உடன்படாமல் மாற்றத்தை முன்னெடுக்கும் வகைமாதிரிகளாகப் பாத்திரங்களை வடிவமைத்துள்ள இயக்குநர் அருண்ராஜா காமராஜ் பாராட்டப்படவேண்டியவர்., அவருக்கு அந்த நிலையை வெளிப்படுத்த வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ள தயாரிப்பாளர் சிவ கார்த்திகேயனும் பாராட்டப்படவேண்டியவர். இந்தப் படத்தில் வரும் சிவகார்த்திகேயன் இதுவரையான அவரது ஒற்றைப் பரிமாண அடையாளத்தைக் கொஞ்சம் மாற்றிக் கொள்ளவும் முயன்றிருக்கிறார். 
படிக்கவும் வேலை செய்யவும் கூட்டம் கூட்டமாக வந்துகொண்டிருக்கும் பெண் பிள்ளைகள் ஒவ்வொருவரும் இந்தப் படத்தைப் பார்க்கவேண்டும். ஏனென்றால் இந்தப் படத்தின் இலக்குப் பார்வையாளர்கள் அவர்கள் தான். அவர்களை அழைத்துச் சென்று பார்க்கச் செய்யும் பெற்றோரும் இந்த இலக்கை ஏற்கும் பார்வையாளர்களாக ஆகிக்கொள்ளலாம். 





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்