நேரடியாகப் பேச நினைக்கும் பெண்குரல்

கவிதையின் மொழிதல் ஒருவழிப்பாதையாக இருக்கும்போது உணர்ச்சி வெளிப்பாடாக மாறி விடும். கவிதைக்குள் உருவாக்கப்படும் சொல்லி ( Narrator) தன்னை - தனது தன்னிலையை- உருவாக்குவதற்காகக் குறைவான சொற்களைப் பயன்படுத்திவிட்டுக் கேட்கும் இடத்தில் இருப்பவர்களை (Receivers) -முறையீட்டைக் கவனிக்கவேண்டியவர்களைக் குறித்துப் பலவிதமான சொற்களை உண்டாக்குவது வெவ்வேறு உணர்ச்சிகளின் வெளிப்பாடுகள். உண்டாக்கப்பட்ட சொற்களின் வழியாக அவர்களுக்கும் சொல்லிக்குமிடையே இருக்கும் உறவுநிலைகளை - உடன்பாட்டு நிலையாகவும் எதிர்மறை நிலையாகவும் பேசுவதின் வழியாகக் கவிதையின் இயக்கத்தை அல்லது செயல்பாட்டை உருவாக்குவது என்பது கவிதையியலின் தொடக்கநிலைக் கூறு.

கனலி விஜயலெட்சுமியின் இந்தக் கவிதைத் தொகுப்பில் சொல்லியாக இருப்பவரின் தன்னிலை பெரும்பாலும் ஒருவராகவே இருக்கிறார். அவர் ஒரு பெண். ஆண்களின் பலவிதமான பார்வைகளில் பட்டுக்கொண்டே இருக்கும் பருவங்களில் இருக்கும் பெண். கொஞ்சம் பழைய தமிழ் மொழியில்  பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை , பேரிளம்பெண் எனப் பெயரிட்டு அழைத்திருக்கலாம்.  நவீனத்தமிழ்ச் சொல்லாடலில் அப்பெண்கள் குமரிப்பெண், கன்னிப்பெண், இளம்பெண், யுவதி, அழகி என்ற பொதுச்சொற்களில் அழைக்கப்படுவதைத் தாண்டி தங்கை, காதலி, மனைவி, தாய் என்பதான  பாத்திரங்களாகவும் அறியப்படலாம். என்ன பெயரிட்டு அழைத்தாலும் அந்தப் பெண்ணை ஆண் என்னும் தன்னிலை வெற்றுப்பண்டமாக - பார்க்கப்படும் பண்டமாகவும் பார்வையாலாயே ரசிக்கப்படும், ருசிக்கப்படும் பண்டமாகவுமே கருதுகிறது என்பதை முதன்மையான குற்றச்சாட்டாக வைக்கும் கவிதைகளின் தொகுதியாக இருக்கிறது.

நின்று நிதானமாகப் பேசவேண்டுமென்ற விருப்பங்களைத் தொலைத்து விட்டுப் படபடவெனப் பொழிந்துவிடும் மனநிலையில் உருவாகும் கவிச்சொற்கள் தடையின்றி ஓடி நிற்கும்போது மனதின் வெப்பமும், ஆற்றாமையின் கனலும் வெளிப்படும் கவிதைகளைக் கொண்ட தொகுப்பொன்றை வாசித்துக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வு தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை. பால்(ழ்) முரண்  என்னும் தொகுப்பின் தலைப்பே அந்த உணர்வைச் சொல்லும் நோக்கத்தையே கொண்டிருக்கிறது

இரண்டு முலைகளையும்
இடுப்புச் சரிவில்
தெரியும் தொப்புளையும்
மறைப்பதிலேயே
என் ஆயுசு
அடியோடு முடிந்துவிட்டது
சேலை இழுத்துவிடும்
வேலை முடித்து
காமப் பார்வைகளின்
கதிர்வீச்சை மீறி
உரசல் தொல்லைகளின்
உபாதைகள் கடந்து
அப்பப்பா என்
சிந்தனைகள் உடலையே
கடக்க முடியவில்லை
இதில் உயரப் பறப்பது எங்கே? (தொல்லை/47)

கவிதையை நுட்பங்கள் கொண்ட சம்பவ வெளிப்பாடாக ஆக்காமல் நேரடிக்கூற்றில் வினாக்களாக வைக்கும் கவி, இதேபோன்ற கவிதைகளை லாவகமாக எழுதும் ஆற்றலைக் கொண்டவராக வெளிப்பட்டுள்ளதைத் தொகுப்பில் பலகவிதைகளின் வழி உணரமுடிகிறது.

நீண்டு வளர்ந்தன விரல்கள்
அக்டோபஸாய் கைகள்
கனன்றன கண்கள் புலிபோல்
தேகமெங்கும் இந்திரக்குறிகள்
செல்களில் எல்லாம் நமநம அரிப்பு
நொறுங்கிப் பொடிந்தன முகமூடிகள்
ஊறிய விந்தின் உந்து விசையால்
மோப்பம் பிடித்து அலைந்த்து
இரவு விலங்கு
வேட்டை இன்மையால்
எஞ்சிய எச்சிலை கழுதைப்புலியாய்
தின்று இச்சை தீர்த்த்து
விடியலின் வெளிச்சம் பட்டு
மீண்டும் மனிதவடிவம் / உருமாற்றம்/37

இத்தகைய கூற்றுகளாலான கவிதைகள் ஒற்றைவாசிப்பிலேயே சொல்ல நினைத்ததைப் பளிச்சென்று சொல்லிவிட்டு மறைந்து விடும் மின்மினிப்பூச்சிகளாய்ப் போக்குக்காட்டும் தன்மையன. குறிப்பாகத் தங்களை ஒடுக்கும் சக்தியின் பலத்தைச் சரியாகக் கணிக்கமுடியாதபோது உருவாகும் கசப்பும், எரிச்சலுமே இத்தகைய மொழிதலில் உண்டாக்கப்படும் ஆகக்கூடிய சாத்தியங்கள். அவற்றை எளிமையின் சாத்தியங்கள் எனவும் சொல்லலாம். சடங்குகளாலும் கருத்தியலாலும் உரிமைகளற்ற வெளியாலும்  ஒடுக்கப்படுவதாக நினைக்கும் கவிகளின் கோபமாக இல்லாமல், பெண்ணை உடலாகப் பார்க்கும் மனிதர்களை நோக்கிப் பேச நினைத்த பலரின் கவிதைகள் - தொடக்ககாலக் கவிதைகள் இப்படித்தான் இருந்தன. குறிப்பாகச் சொல்லாத சேதிகள் என்ற இலங்கைப் பெண்கவிகளின் தொகுப்பில் இருக்கும் கவிதைகள் பலவற்றை நினைவூட்டும் கவிதைகளாக இவை இருக்கின்றன.

அதே நேரத்தில் அதே எளிமையான சொற்களால் தீட்டப்பட்டுள்ள கதையம்சத்தைக் கொண்ட ஒற்றைப்பனை கவிதை உருவாக்கியுள்ள அடுக்குகளும் விவரிக்கும் பரப்பும் கவிதை வாசிப்போர்களை இன்னொரு தளத்திற்கு அழைத்துச் செல்கின்றது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அத்தகைய கவிதைகள் தொகுப்பில் இன்னும் சில கிடைக்கும் எனத் தேடியபோது ஏமாற்றமே மிஞ்சியது. அக்கவிதை மட்டுமே ஆழமான வண்ணங்களுடன் அடைத்துக்கிடக்கும் பூந்தோட்டத்தில் அத்திபூத்தாற்போல சிரித்தது. நேரடித்தன்மையைக் குறைத்துக்கொண்டு, அறிவார்ந்த பெண்ணின் தன்னிலையைக் கவிதைக்குள் உருவாக்கிப் பேசும் வல்லமையுள்ள குரலாக - பெண்ணியக்குரலாகக் கனலி விஜயலட்சுமியால் முடியும் என்பதை இந்த முதல் தொகுப்பில் காணமுடிகிறது.

 ஒற்றைப்பனை

சுற்றிலும் சூழ்ந்திருக்கும்
எண்ணற்ற மரங்களுக்கிடையில்
ஒற்றையாய் ஒரு
பனைமரம்........
சூழலுக்குப் பொருந்தாமல்
ஓர் ஆண் பனைமரம்...
காலவெள்ளத்தில்
யாரோ கடித்துத் துப்பிய
பனங்கொட்டை
ஈரமும் மண்ணும் இருக்க
உற்சாகமாய் முளைத்து
வளர்ந்து... இன்று
மரமாய் உயர்ந்து
ஆண்குறியாய் பூத்துக்கிடக்கிறது

பூச்சிகள் கொண்டுசெல்லும்
இம்மகர்ந்தம்
எந்தப்பூவாலும்
ஏற்றுக்கொள்ளாமலும்
மண்ணில் விழுகிறது

இதென்ன.. இப்படி ஒரு
மரம்...?
பட்டாம்பூச்சி முதல்
மரம்கொத்தி வரை
பனை மரத்தை
வித்தியாசமாகப்
பார்த்துச் செல்கின்றன

நீரும் நிலமும் நிறைய
இருந்தும்
கண்காணா
பனங்காட்டில் பாடித்திரியும்
வலசைப் பறவையின்
வருகைக்காய்
நிமிர்ந்து, தனித்து
காத்து நிற்கிறது அந்த
ஒற்றைப் பனைமரம்.
=========================







கருத்துகள்

M.S.Rajendiran இவ்வாறு கூறியுள்ளார்…
மொத்தம் நாலு கவிதை
அதில்-
முலை, தொப்புள், விந்து, ஆண்குறி
எல்லாம் வந்து விட்டது.
வராதது அல்குல் தான்.
- எம்.எஸ்.ராஜேந்திரன்
Vijigowsalya இவ்வாறு கூறியுள்ளார்…
பெண்களை வருணிக்க சங்க இலக்கியம் இவ்வார்த்தைகளை கூறினால் சரி என்கிறீர்கள்,பெண்களின் பிரச்சனைகளை சொல்வதற்கு இவ்வார்த்தைகளை கூறினால் மட்டும் தவறு என்கிறீர்களே இது ஞாயமா?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்