August 13, 2017

தொடரும் கதைவெளி மனிதர்கள்

இப்படியான சிறுகதைத் தொகுதியை ஒரே மூச்சில் வாசித்துவிட முடியாது. ஒருவர் எழுதிய 14 கதைகளென்றால் தொடர்ச்சியாக வாசித்துக்கொண்டே போகலாம். இரண்டு அல்லது மூன்றுநாளில் முடிந்துபோகும். அகநாழிகை பதிப்பக வெளியீடாக, ‘பொன்.வாசுதேவன்’ தேர்வுசெய்து தொகுத்துள்ள “விளிம்புக்கு அப்பால்” சிறுகதைத் தொகுதியில் 14 பேரின் 14 கதைகள் இருக்கின்றன.
இப்பதினான்கு கதைகளுக்கும் ஓரொற்றுமை கதையின் புனைவுக்காலம். பெரும்பாலும் 2010க்குப் பின்னான காலத்தைப் புனைவின் காலமாகக் கொண்டிருக்கின்றன; ஆனால் அவற்றின் புனைவுவெளிகளோ விதம்விதமாக இருக்கின்றன. தமிழகப்பரப்பைத் தாண்டி சிங்கப்பூர், ப்ரான்ஸின் பாரிஸ், பெல்ஜியம். தமிழீழத்தின் கிளிநொச்சி, கொழும்பு, பெங்களூர் முதலான நிலப்பரப்பிற்குள் வாழும்/ சென்றுவரும் பாத்திரங்களை எழுதிக்காட்டியுள்ளன. தமிழக நிலப்பரப்பிற்குள்ளும் சென்னை, சேலம், மேட்டூர், நெல்லை, அரியலூர்ப் பக்கத்துக் கிராமம், கன்யாகுமரி மாவட்டத்துத் தேங்காய்ப்பட்டணம், கரூர் எனப் பலவண்ணங்களைக் கொண்ட நிலப்பரப்பைக் கதைப்பரப்பாக்கியுள்ளன.
ஒருவர் எழுதிய பல கதைகளைக்கொண்ட சிறுகதைத்தொகுப்பை வாசிப்பதற்கு ஆகும் நேரத்தைவிடப் பலரின் கதைகளைக்கொண்ட ஒரு தொகுப்பை வாசிக்க ஆகும் நேரம் அதிகம். தேர்வையும் தொகுப்பையும் செய்துள்ள பொன்.வாசுதேவன் தமிழ்ச்சிறுகதையின் சுருக்கமான வரலாற்றையும் தந்துள்ளதோடு, எழுத்தாளர்களின் ஊர் மற்றும் வசிப்பிடம் பற்றிய குறிப்புகளையும் தந்துள்ளார்.
1. அப்பாவின் ரகசியம்/ 19-30 கிருஷ்ணமூர்த்தி- சேலம்/ சென்னை
2. நின்றுகொல்லும்/31-41 அரசன்-அரியலூர் மாவட்டம் உகந்தநாயகன் குடிகாடு/சென்னை
3. நெடுங்கடலும் தன் நீர்மை /42-48 மா.க.பாரதி-கரூர்/ சென்னை
4. ஈர்ப்புவிசை/49-53 சித்ரா நவீன்-புங்குடுத்தீவு, ஈழம்/பாரிஸ்
5. வங்காளி/ 54- 66 ஜீவகரிகாலன்-தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம்/சென்னை
6. அரூபன்/ 67-74 சித்துராஜ் பொன்ராஜ்-காஞ்சிபுரம்/ சிங்கப்பூர்
7. வள்ளம்/ 75-84 கார்த்திக் புகழேந்தி- திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை/ சென்னை
8. மாயபுரி/85-95 மாதவன் இளங்கோ-திருப்பத்தூர் மாவட்ட வேலூர்/ பெல்ஜியம்
9. நோக்கு/96-105 நாகபிரகாஷ்-சேலம்/ கொச்சி
10. பெர்ஃப்யூம்/106-110 ரமேஷ் ரக்சன் - திருநெல்வேலி மாவட்டம் தளவாய்புரம், /சென்னை
11. தங்கம்/110-122 ஷான்-பெருந்துறை/சென்னை
12. பரிசு எண்கள்/123-132 விஷால் ராஜா- திருநின்றவூர்/பெங்களூர்
13. சங்கிலியன் படை/133-142 அகரமுதல்வன் -கிளிநொச்சி/ தமிழீழம் சென்னை
14. டிரங்குப் பெட்டி புகைப்பட பெண்/143-155 கவிதா சொர்ணவல்லி- திருநெல்வேலி மாவட்டம்/சென்னை
இத்தகவல்கள் தொகுப்புக்கதைகளை வாசிக்கக்கூடுதல் பங்களிப்பாக இருக்கின்றன. இத்தொகுப்பை வாசித்து முடித்தபின் ஏற்கெனவே எழுதி வெளியிட்டுள்ள கதைவெளி மனிதர்கள் (நற்றிணை வெளியீடு/2016) என்ற நூலின் இரண்டாம் பகுதியை எழுத வேண்டுமென்ற தூண்டுதல் உண்டானது. இத்தொகுப்பில் உள்ள பாதிக்கும் மேலான கதைகள் ஒவ்வொன்றும் விரித்துப்பேசவேண்டிய கதைகள். எதிர்வரும் மலைகள். காம் இதழில் முதல்கட்டுரையை எழுதித்தொடங்கிவிடலாம். நண்பர் சிபிச்செல்வன் இந்த வாய்ப்பைத் தரத் தயாராகவே இருப்பார்.

No comments :