June 25, 2017

தேடிப்படிக்கவேண்டிய நூல்கள்

இக்கால மொழியியல் என்ற தலைப்பில் 2011 இல் அடையாளம் பதிப்பகம் வெளியிட்டுள்ள நூலின் முந்திய வெளியீடு 1984. அவர் எனது ஆசிரியர் என்றாலும் இந்த நூலில் இருக்கும் செய்திகளை அவரிடம் நான் கற்கவில்லை. அமெரிக்கன் கல்லூரியில் நான் பட்டப்படிப்புப் படித்த காலத்தில் முதலிரண்டு ஆண்டுகளில் அவரைப் பார்த்தது இல்லை. அப்போது அமெரிக்காவில் இருந்தார்.
மூன்றாமாண்டில் அவரது சிறப்புப்பாடமான இலக்கணமும் மொழியியலும் பாடத்திட்டத்தில் இல்லை. அதனால் இந்த நூலின் விவரங்களை அவரிடம் நேரடியாகக் கற்கவில்லை. அவரிடம் பாடங்கேட்டவர்கள் ஒவ்வொருவரும் சொன்ன விதமே அவரது நூலையாவது வாசித்துவிடவேண்டும் என்ற ஆவலை உண்டாக்கியது. அந்த நூல் எனது ஆய்வுக்காலத்தில் வந்தது. இலக்கணம் சாராத ஆய்வு என்பதால் வாங்கிவைத்துப் படிக்கவில்லை. ஆய்வுமுடித்துத் திரும்பவும் ஆசிரியராக அமெரிக்கன் கல்லூரிக்குள் நுழைந்தபோது அதைப் படித்தேன்.
தமிழர்கள் தமிழ் மொழியின் அமைப்பியல் இலக்கணத்தைத் தொல்காப்பியம், நன்னூல் என்ற இரண்டு மரபுப்பிரதிகளை மட்டுமே வைத்துக் கற்றுக்கொள்ள முடியாது என்பதை உணர்த்தும் நூல் இது. கற்பிப்பவர்களுக்கும் கற்பவர்களுக்கும் பயன்படும் வகையில் ஒரு புதுத்துறையை - மரபையும் நவீனத்தையும் இணைக்கும் ஒரு நூலை எப்படி எழுதுவது என்பதற்கு முன்மாதிரியாகக் கொள்ளவேண்டிய நூல் இது. இப்போதுள்ள பல்கலைக்கழகத் தமிழ்மொழிப்பாடத்திட்டம் ஒவ்வொன்றிலும் -பட்டப்படிப்பு நிலையில் கட்டாயம் படிக்கவேண்டிய நூல் இது என உறுதியாகச் சொல்லலாம்.
பள்ளி தொடங்கிக் கல்லூரி வரையிலும் இலக்கணக்கல்வி என்பது இலக்கணக்குறிப்பு கண்டுபிடிக்கும் முறையிலேயே கற்பிக்கப்படுகிறது. சொற்றொடரில் அமையும் ஆகுபெயரை, அன்மொழித்தொகை, வினையாலணையும் பெயரை, சுட்டுச்சொல்லைக் கண்டுபிடித்துச் சொல்லி விட்டாலே முழுமதிப்பெண் வழங்கும் தேர்வுமுறையில் இலக்கணக் கல்வியை மொழியியல் அடிப்படையோடு கற்பிக்கும் முறையை வலியுறுத்தவேண்டும். மொழியியலும் மொழியியலின் பல்வேறு கோட்பாடுகளும் அம்மொழியின் அமைப்பை, அமைப்பின் கூறுகள் அவ்வாறு இருப்பதால் உண்டாகும் அர்த்தத்தளங்களை, அர்த்தத் தளங்களால் பேச்சிலும் எழுத்திலும் உண்டாகும் தகவல் தொடர்பை, தகவல் தொடர்பு இலக்கியப் பிரதியாக மாறுவதை என விரித்துக்கொண்டே செல்லும் தொடர்புச் சங்கிலிகளைக் கற்பிக்கும் ஓர் அறிவியல் முறைமைகள். தமிழ்க் கல்வியை அறிவியலாக்குவதற்கு மொழியியலின் தேவை உணரப்படும்போது கு.பரமசிவனின் இக்கால மொழியியல் அறிமுகம் என்ற நூலின் தேவை உணரப்படும். அது அறிமுகம்தான். வளர்ச்சியைக் காட்டும் பலநூல்கள் இருக்கின்றன.
15
இதனைத் தேடிப்படித்த நூல் என்று சொல்வதைவிட தேடியபோது கிடைத்த நூல் எனச் சொல்லலாம். நூறாண்டுகளுக்கு முந்திய புத்தகம். அட்டை இல்லை. நூலின் பெயர்: வடகரை ஆதிக்கத்தின் சரித்திரம். உள்ளே போனால் வரலாற்றுப்புத்தகமாக இல்லை. தொகுப்புநூல். ஒரு வட்டாரத்தைப் பற்றிய நூல்களின் தொகுப்பு. வடடகரை நாடு என்பது 17 ஆம் நூற்றாண்டில் ஒரு பாளையமாக இருந்து பின்னர் ஜமீனாக மாறிய ஒரு பகுதி. அதனை ஆண்டவர்களின் பரம்பரையில் ஒருவர் சின்னனஞ்சாத்தேவர். அவர் மீதும் அவர் ஆண்ட நாட்டின்மீதும் பாடப்பட்ட பிரபந்த இலக்கியங்களின் தொகுப்பே இந்த நூல். வடகரை, தென்கரை போன்ற பெயர்களுடன் திருநெல்வேலி மாவட்டத்தில் ஊர்கள் இருக்கின்றன. பெரிய கிராமங்கள் என்று சொல்லத்தக்கன. அவைதான் அப்போதைய ஒருநாட்டின் தலைநகரம். இப்போது தென்காசி வட்டாரத்திற்குட்பட்டதாக இருக்கலாம்.
இத்தொகுப்பில்1. சவ்வாதுவிடு தூது, 2.சந்திரகலா மஞ்சரி, 3.பட்பிரபந்தம், 4.திருமலைக்கறுப்பன்பேரில் காதல்,5.நொண்டிநாடகம்,6. பருவப்பதம்,7. பிள்ளைத்தமிழ், 8.வருக்கக்கோவை 9.கோவைச்சதகம்,10 விறலிவிடுதூது எனப் 10 பிரபந்தங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. ஒரு வட்டாரத்தைப் பற்றிய நூல்களின் தொகுப்பு என்ற வகையில் தமிழில் கிடைக்கும் வட்டார இலக்கியத்தின் முன்னோடி எனச் சொல்லலாம். அவற்றிலிருந்து ஒரு சிறிய வட்டாரத்தின் வரலாற்றை அறியமுடியும். சமூகவரலாற்றில் ஆர்வமுள்ளவர்கள் இலக்கியவாசிப்போடு அணுகினால் நுண்வரலாறொன்றை எழுதலாம்.
14
இந்நூலின் ஆசிரியர் இப்போது அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கிறார். இந்திய மொழிகள் பற்றிய ஆய்வுகளை உலக அளவில் கொண்டுசென்ற தமிழ் அறிஞர். அவரை இந்தியப் பல்கலைக்கழகங்கள் -குறிப்பாகத் தமிழகப் பல்கலைக்கழகங்கள் பயன்படுத்திக்கொண்டது மிகவும் குறைவு. வ. அய். சுப்பிரமணியனின் வழிகாட்டுதலில் தொடங்கப்பட்ட தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்குத் துணைவேந்தராக ஆக்கப்பட்டிருக்கவேண்டும்; நடக்காமலேயே காலம் நகர்ந்துகொண்டிருக்கிறது.
மா.சு. திருமலை அவர்கள் 1986 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தின் அறக்கட்டளைச் சொற்பொழிவை நூலாக வெளியிட்ட நிறுவனம் அவர் அப்போது பணியாற்றிய இந்திய மொழிகளுக்கான மைய நிறுவனம். அந்நிறுவனம் தமிழ் மொழிக்கல்வியோடு தொடர்புடையான முதன்மை நூல்கள் பலவற்றை வெளியிட்டிருக்கிறது. ஆனால் தமிழகப் பல்கலைக்கழகப் பாடத்திட்டங்கள் அவற்றைக் கண்டுகொள்வதில்லை. அதனைப் பேசினால் என்னையும் சேர்த்தே நான் குறை சொல்லிக்கொள்ளவேண்டும். மைசூரிலிருந்து இயங்கும் இந்திய மொழிகளுக்கான மைய நிறுவனம் வெளியிடும் நூல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமானவை.
மனிதர்களைப் படிப்பதற்கு அவர்களின் தொடர்புக்கருவியான மொழியைப் படிக்கும் மொழியியல் வழியாக முயல்வதே அறிவுத்தேடலின் முதன்மை வழிமுறை எனக் கருதிய கருத்தோட்டம் 1960 களில் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் முதன்மைப்படுத்தப்பெற்றன. மொழியியல் கல்வியைச் சமூக அறிவியலின் மையமாக்கிய அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் தாக்கம் அல்லது கருத்தியல்போக்கு இந்திய மொழிகளுக்கான மைய நிறுவனம் வழியாகவே இந்தியப் பல்கலைக்கழகங்கள் பலவற்றுக்குள் நுழைந்தன. மொழியியலிலிருந்து மானிடவியல், சமூகவியல், சமூக உளவியல், நாட்டார் வழக்காற்றியல் எனப் பலகிளைகள் இந்தியாவுக்குள் தோன்றுவதற்கு இந்நிறுவனம் நேரடியாகவும் மறைமுகமாகவும் தூண்டுகோலாக இருந்தது.
1986- இல் ஆற்றிய உரையை 1987- இல் நூலாக வெளியிட்டது அந்நிறுவனம். அந்நிறுவனம் நடத்திய பயிலரங்கிற்குச் சென்ற எனது நண்பர் த.பரசுராமன் (புதுவை மொழியியல் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய அவர் ஓராண்டுக்கு முன்பு மரணமடைந்தார்) அங்கிருந்து எனக்காக வாங்கிவந்து அன்பளிப்பாகத் தந்தார். தமிழ் நாவலில் உடல்மொழி என்று தலைப்பில் நாவல் என்பது மையப்படுத்தப்பட்டிருந்தாலும் இந்நூலை நாவல் விமரிசனம் என்றோ, ஆய்வு என்றோ நான் சொல்லமாட்டேன். நாவலை ஆய்வுக்கான கருவிப்பொருளாகக் கொண்டு மொழி, இலக்கியம், பண்பாடு என ஒன்றோடொன்று தொடர்புடைய பல்துறை ஆய்வுநூல். மனித உடலின் சாத்தியங்களையும் அதன் வழியாக உருவாக்கப்படும் மௌனமொழி, பேச்சுமொழி ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய தொடர்புமொழி உருவாக்கும் அழகியலை ஆய்வுசெய்துள்ள அடிப்படை ஆய்வுநூல் இது. ஒருதுறை ஆய்விலிருந்து பல்துறை ஆய்வுகள் வளரவேண்டிய காலகட்டமாக உலகப்பல்கலைக்கழகங்கள் அறிவித்து அரைநூற்றாண்டுக்கும் மேலாகிவிட்டது.
தமிழகப்பல்கலைக்கழங்களும்கூட அத்தகைய முயற்சிகள் சிலவற்றைச் செய்திருக்கின்றன என்றாலும், அவற்றின் தாக்கம் மிகவும் குறைவு. பல்துறை ஆய்வுகள் பெருகவேண்டியதை வலியுறுத்தி ஆய்வாளர்கள் இந்நூலைத் தேடிவாசிக்கவேண்டுமெனக் கூறுவேன்.
13
இப்போது அந்த நிலை இல்லை. எனது மாணவப் பருவத்தில் நேரடி நூல்களைவிட மொழிபெயர்ப்புகள் விலை குறைவாகக் கிடைத்தன.மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பக மொழிபெயர்ப்பு நூல்கள் மிகக்குறைந்த விலையில் கிடைத்துக் கொண்டிருந்தது.டவுன்ஹால் ரோட்டில் புதிய புத்தகங்கள் கிடைக்கும். என்.சி.பி.ஹெச்., மீனாட்சி புத்தக நிலையம் எல்லாம் டவுன்ஹால் சாலையில். பழைய புத்தகங்கள் அதற்கிணையான திண்டுக்கல் சாலையில்.
மதுரையிலொரு திண்டுக்கல் ரோடு உண்டு. செண்ட்ரல் சினிமா தியேட்டர் சந்துக்குள் நுழைந்து திண்டுக்கல் ரோட்டில் வந்தால் வரிசையாகப் பழைய புத்தகக் கடைகள். மீனாட்சி அம்மன் கோயில் தெற்குக் கோபுரவாசல்வரை விரித்துப் பரப்பிவைத்திருப்பார்கள். திருப்பத்தில் இருந்த மூலைக்கடை பெரியது. அங்குதான் இந்த நூலை வாங்கினேன். வெளியான ஓராண்டுக்கு முன்னதாகவே அங்கு வந்திருந்தது. 1982 இல் வாங்கி வாசித்தேன்.
1981-ல் தென்மொழிகள் புத்தக நிறுவனத்திற்காக ஜெர்மன் மொழியின் எழுத்துகளைத் தொகுத்து மொழிபெயர்ப்பு செய்து தந்தவர் கா.திரவியம். ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி, தன்னோடு தெசிணி என்னும் கவியை இணைத்துக்கொண்டு உருவாக்கிய நூல். பனைகதைகள்,கவிதைகள், கட்டுரைகள், விவாதங்கள் என வகை பிரித்து தரப்பட்ட நூல்.
ஜெர்மானிய இலக்கியம் பற்றிய முன்னுரை வழியாகவே ப்ரக்டும் சீக்பிரிட் லென்ஸ் என்னும் நாடகக்காரரும் அறிமுகம்.இப்படியான மொழிபெயர்ப்புகள் வழியாகவும்தான் நவீனத்துவம்தமிழில் வந்து சேர்ந்தது. இந்தியாவை இந்துத்துவ நாடாக ஆக்கிவிட நினைப்பவர்களும் அவர்களது பின்னோடிகளும் இவற்றையும் சந்தேகத்தோடுதான் பார்க்கிறார்கள்

No comments :