இலக்கிய ஆய்வுகளும் பிறதுறை அறிவும்: சில குறிப்புகள்


தமிழ் ஆய்வுகள், தமிழியல் ஆய்வுகளாகக் கல்வி நிறுவனங்களுக்குள் மாறிவிட்டன. புதிதாகத் தொடங்கப்படும் ஒரு பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை, தமிழியல் துறையாக அமைக்கப்பட வேண்டும் என வல்லுநர்குழுக்கள்பரிந்துரைக்கின்றன. பல்கலைக்கழகத்திற்கு வெளியே செயல்படும் தமிழ் சார்ந்த உயராய்வு நிறுவனங்களும் தமிழியல் ஆய்வு நிறுவனங்களாகவே செயல்படுகின்றன. கல்வித்துறை சாராத விமரிசனங்களும் ‘ரசனை அனுபவத்திலிருந்து நுகர்வு திணிப்பு’பற்றிப் பேசுவனவாக மாறிக் கொண்டிருக்கின்றன. கல்விப்புல ஆய்வுகளும், சாராத ஆய்வுகளும் ஏற்படுத்திக்கொண்டுள்ள இம்மாற்றங்கள் வெறும் எண்ணளவு மாற்றங்கள் (Quantitative changes) மட்டும் அல்ல; பண்பு மாற்றங்களும் (Qualitative changes) கூட. தமிழில் நடந்துள்ள இந்த மாற்றம் இந்திய மொழிகள் பலவற்றிற்கும் பொருந்தக்கூடியது.
தமிழ்நாட்டுச் சூழலில் மேற்கத்திய அணுகுமுறைகள் எல்லாம், எழுதப்பட்ட இலக்கியப் பிரதிகளுக்குள்ளேயே திரும்பத்திரும்பச் செயல்பட்டே வந்துள்ளன என்பதையும் இங்கே நினைவில்கொள்ளவேண்டும். அதிலும் செவ்வியல் இலக்கிய மரபு அல்லது நிறுவனங்கள் சார்ந்த இலக்கிய மரபு ஒன்று தெரிவு செய்து தந்த தரமான இலக்கியப் பிரதிகளையே ஆய்வுத் தரவுகளாகப் பயன்படுத்திக் கொண்டு புதிய முடிவுகளை முன்வைக்க முயல்கின்றன. இவ்விடத்தில் சிறுபத்திரிகை சார்ந்த இலக்கிய மரபையும் நிறுவனங்கள் சார்ந்த இலக்கியமரபு என்று குறிப்பிடுவதாகத்தான் கொள்ளவேண்டும். ஏனெனில் தமிழின் அங்கீகரிக்கப்பட்ட சிறுபத்திரிகை மரபு என்பது தரமானதைத் தெரிவுசெய்யும் பணியைத் தலையானதாகக் கொண்டது. ஒரு சிறுபத்திரிகை தனக்கென வரித்துக் கொண்ட இலக்கியக் கோட்பாட்டை மட்டுமே சிறந்தது எனக் கருதுகிறது. அந்த அடிப்படையிலான பிரதிகள் மட்டுமே சிறந்த பிரதிகள் அந்தப்பத்திரிகைக்கு. அப்பிரதிகள் வேறு வகையான பிரதிகளை நாசியைத் துளைக்கும் தூசிகளாகக் கூட கருதுவதில்லை
 
தமிழாய்வை தமிழியல் ஆய்வாக விரித்துக் கொண்ட இலக்கிய ஆய்வுகள் புதிய அணுகுமுறைகளையும் புதிய ஆய்வுநோக்கங்களையும் தன்னளவில் புரிந்து கொண்டு, உள்வாங்கத் தொடங்கி அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. உள்வாங்கத் தொடங்கியுள்ள அணுகுமுறைகள், பெரும்பாலும் உள்ளிருந்து கிளர்ந்தனவாக இல்லை. வெளியிலிருந்து வந்தனவாகவே இருக்கின்றன. கல்வித்துறைக்குள் தேசிய அடையாளம் தேவையெனச் சொல்பவர்களால் உயர்கல்விக்கான ஆய்வுமுறையியல்களையும், புதியன உருவாக்கும் அல்லது புதிய கண்டுபிடிப்புகளையும் முடிவுகளையும் முன்வைக்கும் அணுகுமுறைகளையும் முன்வைக்க முடியவில்லை. அந்நிலையில் மேற்கத்திய அணுகுமுறைகளைக் கைக்கொள்வதைத்தவிர வேறு வழியில்லை. அவற்றைப் பயன்படுத்தும் ஆய்வாளர்கள் கவனத்தில்கொள்ள வேண்டிய அடிப்படைகளை இக்கட்டுரை முன்வைக்கிறது.

இலக்கியத் திறனாய்வு : முதன்மையான கருத்தோட்டம்:
ஒரு எழுத்தாளரின் எழுத்துகள் என்பன அவை எழுதப்பட்ட காலகட்டத்தின் ‘சமூக வெளிப்பாடு’ ,‘மனச்சாட்சி’, சமூக உண்மைகள்; உண்மைகளைத் தவிர வேறெதுவும் இல்லை’ என்று ஏற்றுக்கொண்டு செய்யப்பட்ட ஆய்வுகள் தமிழில் பல உண்டு. ஆய்வேடுகளாகவும் நூல்களாகவும் வந்துள்ள அவை யானையின் உறுப்பொன்றைத் தொட்டுப் பார்த்துவிட்டு, ஒட்டுமொத்த யானையைப்பற்றி விவரிக்கும் குருட்டுத் தனத்தின் பல அம்சங்களைக் கொண்டவை. ஏனெனில் ஒரு படைப்பின் நோக்கம் அதில் இடம்பெற்றுள்ள வார்த்தைசார்ந்த தகவல்களில்மட்டுமே வெளிப்படுவதில்லை. வெளிப்படும் நோக்கமும் ஒற்றைத் தளத்தோடு மட்டும் இருந்து விடுவதும் இல்லை. எழுத்தை எழுத்தின் நோக்கம் என்ற கோணத்தில் யோசித்துப் பார்த்தால், ‘எழுத்து அதன் காலத்தை அப்படியே பிரதிபலிக்கிறது’ என்று சொல்வதின் போதாமை புலப்படக்கூடும். ஒரு எழுத்தாளர் தனது பிரதிக்குள் உருவாக்கும் சமூகம் என்பது வெளியில் இயங்கும் சமூகத்தின் ஒர் இணைச் சமூகம் ( Parallel society) அல்லது மாதிரி சமூகம் ( Model society) என்று சொல்ல முடியுமே தவிர, அதுதான் அக்காலகட்டத்துச் நிகழ்வுச் சமூகம் என்று சொல்ல முடியாது.
 
பொதுவாக இலக்கியப்பிரதிகளில் அதனை எழுதியவர் தன்காலத்துக்கு முந்திய நிகழ்வுகளை அசைபோடுபவராகவாகவும், அதனைத் தன் போக்கில் புரிந்து கொள்ளமுயல்பவராகவாகவும், விளக்குபவராகவும் வெளிப்படக்கூடும். சில வேளைகளில் கடந்த காலத்தின் மீதும் நிகழ்காலத்தின் மீதும் விமரிசனங்களை வைப்பதுமுண்டு. அதன்வழி ஒருவிதமான கருத்துருவாக்கம் ஏற்படும். கருத்துருவாக்கம் என்பது எல்லாவகைப் பிரதிகளுக்கும் பொதுவான அம்சம். தரமான இலக்கியப்பிரதி எனத் தெரிவுசெய்யப்படும் ஓரெழுத்தும், வெகுமக்கள் ரசனைக்கான பிரதியெனத் தள்ளப்படும் ஓரெழுத்தும் அடிப்படையில் கருத்துருவாக்கத்தில் ஈடுபடுகின்றன என்பதை நாம் மறுக்க முடியாது. ஒரு பிரதியின் மூலம் எழுத்தாளர் நேரடியாகக் கருத்துக்களைப் பேசுவதோடு ஒட்டுமொத்தமாகப் பிரதியுருவாக்கம் மற்றும் அமைப்பின் ஊடாகவும் வாசக மனத்தைக் கட்டமைக்க முயல்வது நடக்கும் என்பதை நவீனத்திறனாய்வு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதே போல் ஒரே மாதிரியான தொடர்கதையை எழுதும் எழுத்தாளரும், மாத நாவல் வெளியீட்டாளரும், துணுக்கு எழுத்தாளரும், சுவரொட்டிகளை உருவாக்கி அச்சிடுபவரும் வாசக மனத்தை -வெகுமக்கள் உளவியலைக் கட்டமைப்பதில் தொடர்ந்து ஈடுபடத்தான் செய்கின்றனர். இவர்களின் வினையாற்றும் திறன், தரமான இலக்கியப் படைப்பெனக் கருதும் பிரதியைத் தரும் எழுத்தாளனின் வினையைவிடக் கூடுதலானது; காத்திரமானது என்று கூடச் சொல்லலாம். அந்தத் திறன். பிரதியின் அமைப்பு மற்றும் மொழிப்பயன்பாடு சார்ந்த திறன் அல்ல; தொடர்ந்து மேலும்மேலும் ஒரே புள்ளியில் தாக்கும் திறன் சார்ந்தது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

இலக்கியப்படைப்பின் நோக்கத்தைப் புரிந்து கொள்ள நம்காலத்துக்கு முந்திய இலக்கியங்கள் உதவுவதைவிட நம்காலத்து எழுத்துகள் அதிகம் உதவக்கூடும். நம்காலத்து இலக்கிய வடிவங்களான கவிதை, சிறுகதை, நாவல், நாடகம் போன்றனவற்றில் அளவில் சிறியவைகளான சிறுகதையும் கவிதையும் சமகாலத் தன்மைகள் அதிகம் கொண்டவை. இங்கு அதிகம் என்பது நாவலும் நாடகமும் என்ற வடிவங்களோடு ஒப்பீட்டு அளவில் தான். நடப்பு வாழ்க்கையின் விவரணையோடு ஒருவித விமரிசனத் தொனியைத் தனது வடிவத்தின் கட்டமைப்பிற்குள் அவை கொண்டிருக்கின்றன.வெளிப்படும் விமரிசனத்தொனி நடப்பு வாழ்வின் மீதான அதிருப்தியாகவோ எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையாகவோ அமைகின்றன. அந்த நம்பிக்கை முன்னர் சொன்ன இணைச் சமூக அமைப்பு பற்றியதாக மாறிவிடுகிறது. ஆனால் நாவல் என்பது அளவு காரணமாக, அதன் முந்திய காலத்திற்குள் நுழைந்து கொண்டு வரலாற்றைப் பேசுவனவாக மாறிக் கொள்கிறது. நாவல்கள் பேசும் வரலாறுகள் பலநேரங்களில் தனிமனித வரலாறுகளாகவும், சில நேரங்களில் ஊரின் வரலாறாகவும், சாதிகளின் வரலாறாகவும், இயக்கங்களின் வரலாறாகவும், பிரதேசங்களின் வரலாறாகவும் இருக்கின்றன. இந்த வரலாறுகள் அப்படியே பதிவு செய்யப்படுவதில்லை. நாவலாசிரியனின் கோணத்திலிருந்து தான் பதிவு செய்யப்படுகின்றன. அவனது கோணம் உருவாக்கும் நாவலின் கட்டமைப்பு, சொல்லப்பட்ட வரலாறு பற்றிய கருத்துநிலையை உருவாக்குகிறது எனக் கூறலாமேயொழிய, அதன் காலத்தைப் பதிவு செய்துள்ளது என்று சொல்ல முடியாது.தமிழ் நாவல்களிலிருந்து மேலே சொன்ன வரலாறுகளுக்கு இங்கு பல உதாரணங்களைக் கூற முடியும்.

இன்னொரு வடிவமான நாடகமோ அளவில் பெரியது என்றாலும் நாவலிலிருந்து விலகிநிற்பது. அது கடந்த காலத்தைத் திரும்ப எழுதித் தருகிறது என்பதாக இல்லை. வரலாற்றை விவாதத்திற்குள்ளாக்குகிற தன்மையுடையதாக இருக்கிறது. ஏனெனில் அதன் கட்டமைப்பும் வெளிப்பாட்டுமுறையும் அப்படி. மேலே சொன்ன கவிதை, சிறுகதை, நாவல், நாடகம் என்ற வடிவத்தில் ஏதாவது ஒன்று இக்காலகட்டத்தைச் சரியாகப் பிரதிபலிக்கும் வடிவம் எனவும், அதில் இந்த எழுத்தாளரின் இந்தப் பிரதி நமது காலச்சமூகவாழ்வின் சரியான பிரதிபலிப்பு என்று நம்மால் சொல்லமுடியாது. சொல்ல முயன்றால் ஒவ்வொருவரிடமிருந்தும் வேறுவேறு பெயர்கள் வரக்கூடும்.
கருத்துருவாக்கம்: தீவிர எழுத்தும் வெகுமக்கள் எழுத்தும்


புதுமைப்பித்தன், கு.ப.ராஜகோபாலன் தொடங்கி, ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி வழியாக.. ஜெயமோகன் , இமையம் என அங்கீகரிக்கப்பட்ட எழுத்தாளர்களின் பிரதிகளை மட்டுமே ஆய்வுத் தரவுகளாகக் கொண்டு தமிழ் வாழ்வின் சகல பரிமாணங்களையும் அறிந்து விடமுடியுமா..? பெரும்பான்மைத் தமிழர்களின் நினைவுகளில் நுழையாத இந்தப் பெயர்களும் அவர்களின் பிரதிகளும் அதில் வெளிப்படும் தரவுகளும் தமிழ்ச் சமூகத்தின் வெளிப்பாடு எனச் சொல்வது எந்த விதத்தில் சரியாக இருக்க முடியும்..? இப்படியான கேள்விகளை எழுப்பிக் கொண்டே போய்த் தமிழ்ச்சமூகம் பற்றிய ஆய்வுகளுக்கு, தமிழ் இலக்கியங்கள் தரவுகள் ஆகாது என்று சொல்லிவிடுவது எனது நோக்கம் அல்ல. அப்படிச் சொல்வதும் , ‘இலக்கியங்களே முழுமையான சான்றுகள்’ என்று சொல்வதும் ஒன்றுதான்.

காத்திரமான சிந்தனைகள் கொண்ட ஒரு படைப்பாளியின் படைப்புகள், சமூகத்திற்கான கருத்துக்களை உருவாக்கித் தருகின்றன என்ற அளவில் அவை அதன் காலத்துச் சமூகக் கட்டமைப்பில் வினையாற்று கின்றன. அந்த வினையின் காரணமாக அவை தரவுகளாக நிற்கின்றன. அவை மட்டுமல்லாமல் சமூகத்தின் அனைத்து வகையான பிரதிகளும் இதே காரணத்திற்காகத் தரவுகளாக ஆகமுடியும். அந்த நிலையில் அந்தப் பிரதிகளில் தரமான பிரதி அல்லது தரமற்ற பிரதியென எதுவும் இருக்க முடியாது. சமூக அறிவியல் ஆய்வுக்குத் தரவுகளாக அமையும் நிலையில்- அவை எழுதப் பட்ட காலத்தில் கருத்துக்களை உருவாக்கி வெகுமக்களைக் கட்டமைக்கின்றன என்ற அளவில்- புதுமைப்பித்தனின் பிரதிகளும் கல்கியின் பிரதிகளும்கூட ஒன்றுதான்; சுந்தரராமசாமியின் எழுத்துக்களும் பட்டுக்கோட்டை பிரபாகரின் எழுத்துக்களும் கூடச் சமமானவைகளே.

இன்றைய அரசியல் நிகழ்வுகளை விளங்கிக் கொள்ள முயலும் ஒரு சமுதாய அரசியல்துறை மாணவனுக்கு, ‘ இந்திய ஜனநாயகத்தின் அடிப்படையான அம்சம் தேர்தல்’ என்பது புரியவேண்டும். தேர்தலில் கூட்டணி அமைக்க ஆள்பலம் காட்டப்பட வேண்டும். ஆள்பலம் காட்டுவதற்கான ஒரு வடிவம் பேரணி மற்றும் மாநாடுகள் என்பது அவனுக்குத் தெரியும். அதைத் தெரிந்து கொண்ட ஆய்வாளன் மாநாட்டை யும் பேரணியையும் நேரில் பார்த்து குறிப்பெடுத்துக் கொண்டு, இயற்றப் படும் தீர்மானங்களின் நகல்களைப் பெற்றுக் கொண்டு வந்து தனது ஆய்வுக் கட்டுரையை எழுதினால், அக்கட்டுரை அவனது நோக்கத்தை முழுவதும் நிறைவேற்றாது. அதற்கு மாறாக, அழைக்கும் அரசியலின் ஆழத்தைப் புரிந்து கொள்ள, அழைக்கப்படும் விதம், எழுதப்படும் சுவரெழுத்து வாசகங்கள், எழுத்துக்களின் உயரம், கட்-அவுட்டுகளின் அளவு மற்றும் எண்ணிக்கை, ஊர்வலத்தின் நேரம் மற்றும் நகர்வுமுறைகள் என மாநாட்டுக் கெனத் தேதி குறித்த நாள் முதலே, அந்த அரசியல் கட்சியின் செயல்பாடுகள் அத்தனையும் அவசியம். இவையெல்லாம் சேர்ந்து தான் அந்தக் கட்சியைப் பற்றியும், அக்கட்சியின் தலைவரைப் பற்றியும், வெகுமக்களிடையேயும், வெகுமக்களின் ஊடகங்களிடையேயும், கருத்தினை- பிம்பத்தினை உருவாக்குகிறது.

எழுத்துப்பிரதிகளைவிடவும், கூடுதல் வலுமிக்க கோஷங்களும், பேச்சுக்களும், அவை நிகழும் இடங்களும், நிகழ்த்தும் முறைகளும் சரியாகக் கவனித்துத் தரவுகளாகப் பயன்படுத்தப் பட வேண்டியவைகளாக மாறிக் கொண்டிருக்கின்றன. ஓர் இலக்கியப்பிரதி உருவாக்கும் கருத்து- பிம்பம்- என்பன அந்த அளவு வலிமையுடையன அல்ல என்றாலும், கருத்துரு வாக்கம்தான் ஒரு பிரதியின் அடிப்படையான நோக்கம் என்பதில் ஐயமில்லை. அந்த அடிப்படையின் பேரில் தான் இலக்கியப்பிரதிகள் சமூக அறிவியலின் ஆய்வுத்தரவுகளாகக் கொள்ளப்படுகின்றன; கொள்ளப்பட வேண்டும். அப்படிக் கொள்ளப் படும் நிலையில் தான் ஒரு இலக்கிய ஆய்வு சமூக அறிவியலின் ஒரு பிரிவாக மாறும். அல்லாத நிலையில் அவை வெறும் இலக்கிய ஆய்வாக மட்டுமே நின்று விடும்.
திறனாய்வுமுறைகளும் அணுகுமுறைகளும்

ஓராய்வை வெறும் இலக்கிய ஆய்வாக மட்டும் செய்தல் கூடாது என்பதில்லை. அப்படிச் செய்யப்படும் ஆய்வும் முழுமையான தரவுகளோடும் விளக்கங்களோடும் அமையப்பெற்றால் தரமான ஆய்வாகவே கருதப்படும். அத்தோடு இலக்கிய ஆய்வை பிறதுறை அறிவோடும் இணைத்துச் செய்யப்படும் ஆய்வுகள் கூடுதல் பயன்களைத் தரவல்லன என்பதை உணரவேண்டும் என்பது மட்டுமே வலியுறுத்தப்படும் ஒன்று. அத்தோடு, ஆய்வாளர்கள் எவை திறனாய்வுமுறைகள், எவை திறனாய்வு அணுகுமுறைகள் என்ற வேறுபாடுகளைப் புரிந்துகொண்டு பயன்படுத்த வேண்டுமெனவும் வலியுறுத்தவேண்டியிருக்கிறது. ஒரு இலக்கியப்பிரதியை அல்லது பனுவலை இலக்கிய நுட்பங்கள், வடிவம், உள்ளடக்கம், உத்திகள் அவற்றின் வழியாக உருவாக்கப்படும் கருத்து மற்றும் உணர்வு சார்ந்த கலைச்சொற்களைப் பயன்படுத்தும் சொல்லாடல்களைத் திறனாய்வுமுறைகள் என்று புரிந்துகொள்ளவேண்டும். இதற்குமாறாகச் சமூக அறிவியலின் அறிவைப் பக்கத்துணையாகக் கொண்டு செய்யப்படும் ஆய்வுகளே அணுகுமுறை ஆய்வுகள் என எளிமையானதொரு வேறுபாட்டை இங்கே விளங்கிக்கொள்ளவேண்டும்.

மனித வாழ்க்கையோடு தொடர்புடைய சமூக அறிவியல் மற்றும் அறிவியல் புலங்களைப் பயன்படுத்திக் கலை இலக்கியத் திறனாய்வுகளைச் செய்யமுடியும்; செய்யவேண்டுமெனக் கூறுபவர்களின் வலியுறுத்தல் பலவிதமானவை. முதலில் மொழியியல் என்னும் அறிவியல் முறைமையை அறிமுகப்படுத்தி அறிவியலுக்கும் சமூக அறிவியலுக்குமிடையே தொடர்புகளையும் இணைப்புகளையும் உருவாக்கினார்கள். அமைப்பியலின் வழியாக மொழியமைப்பு விளக்கப்பட்டதின் தொடர்ச்சியாக சமூக அறிவியல் ஒவ்வொன்றும் அமைப்பியலின் பகுதிகளாக மாற்றம் கண்டன. சமூகவியல், பொருளியல், உளவியல், வரலாற்றியல், நிலவியல் போன்றன இலக்கியத்திறனாய்வுக்குப் பயன்பட்டன. அதன் தொடர்ச்சியாகவே சமூகவியல் அணுகுமுறை, மார்க்சிய அணுகுமுறை, மானுடவியல் அணுகுமுறை, உளவியல் அணுகுமுறை, வரலாற்றியல் அணுகுமுறை, பண்பாட்டு நிலவியல் போன்றன இலக்கியத் திறனாய்வின் பகுதிகளாக மாறியுள்ளன. சமூக அறிவியல் துறைகள் அளவிற்கு இல்லையென்றாலும் அறிவியல் கோட்பாடுகள் சிலவும் கலை, இலக்கிய ஆய்வுக்கான பின்புலமாக மாறியிருக்கின்றன. டார்வினின் பரிமாணவியல் கோட்பாடு இலக்கியவரலாற்றுவளர்ச்சியோடு பொருத்திக்காட்டப்பட்டுள்ளது. தாவரவியலில் செயல்படும் பரவல், மற்றும் தாக்கக்கோட்பாடுகள் ஒப்பியல் ஆய்வுகளின் பகுதிகளாக மாறியுள்ளன., இதைப்போலவே அறிவியல் துறைகளான சூழலியல் ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொண்ட திறனாய்வு அதனை அமைப்பியல் அணுகுமுறை எனவும் சூழலியலில் அணுகுமுறை எனவும் பெயரிட்டு அழைக்கின்றது.

இலக்கியத்திற்குரிய நெகிழ்ச்சியான விதிகளோடு சமூக அறிவியல் துறைகளின் அறிவைப் பயன்படுத்திச் செய்யும் திறனாய்வு முறைகளைத் திறனாய்வு முறைமைகள் (Critical Methods) என்பதாக விளக்காமல் திறனாய்வு அணுகுமுறைகள் (Critical Approach) அல்லது கோட்பாட்டாய்வுகள்(Theoritical Research) என விளக்குகின்றனர் மேற்கத்தியத் திறனாய்வாளர்கள். பீட்டர் பெர்ரியின் கோட்பாட்டாய்வின் தொடக்கம் (Beginning Theory: An Introduction to Literary and Cultural Theory (Beginnings) Paperback – 1 Nov 2008 ) என்னும் கல்விப்புல அடிப்படை நூலில் விரிவாக இது விளக்கப்பட்டுள்ளது.

அணுகுமுறைகள்: கருத்தியல் தளமும் செயல்பாட்டுத்தளமும்

பொதுவாகக் கோட்பாடுகளுக்கு விழிப்புணர்வு உண்டாக்கும் நோக்கங்கள் உண்டு. அவற்றை உள்வாங்கித் திறனாய்வுச் சொல்லாடல்களை உருவாக்கும் அணுகுமுறைகளும் விழிப்புணர்வு உருவாக்குவதை வலியுறுத்துவதைக்காணலாம் சிலவகைக்கோட்பாடுகள் கருத்தியல் மாற்றங்களைத் தூண்டுவதை முதன்மைப்படுத்தும். சிலவகைக் கோட்பாடுகள் செயல்நிலையைத் தூண்டுவதை முதன்மையாகக் கருதும். இந்த வேறுபாட்டைப் புரிந்துகொள்ள தத்துவ விவாதங்களின் சொல்லாடல்களான கருத்துமுதல்வாதம், பொருள்முதல்வாதம் என்பனவற்றை விளங்கிக்கொள்ளவேண்டும். கருத்துமுதல்வாதத்தின் மீது கொண்ட நம்பிக்கையிலிருந்து உருவாகும் கோட்பாடுகள் கருத்தியல் விழிப்புணர்வையும், பொருள்முதல்வாதத்தின் மீது கொண்ட நம்பிக்கையிலிருந்து செயல்நிலை விழிப்புணர்வும் உருவாகின்றன. மார்க்சியம் அடிப்படையில் பொருள்முதல்வாதத்தின்மீது தனது கருத்தியல் தளத்தையும் செயல்பாட்டுத்தளத்தையும் உருவாக்கிக்கொண்ட அரசியல் பொருளாதார தத்துவம். அதிலிருந்து உருவான மார்க்சியத் திறனாய்வு அணுகுமுறையும் செயல்பாட்டை முதன்மையாக வலியுறுத்தும் திறனாய்வாக அறியப்படுகிறது. அத்திறனாய்வுமுறையின் கிளைகளாக அறியப்படும் பெண்ணியத் திறனாய்வும், விளிம்புநிலைப் பார்வைகளும் திறனாய்வை செயல்பாட்டை முதன்மையாகக் கருதுவதைக் கவனித்திருக்கலாம். இதிலிருந்து விலகிய தன்மையில் உளவியல் அணுகுமுறையும் அதன் உட்பிரிவுகளான தொன்மவியல் பார்வையும் இருக்கின்றன. அதேபோல் அமைப்பியல் அணுகுமுறையும் அதற்கு முன்னோடியான உருவவியல் பார்வையும் கருத்தியல் புரிதலையே வலியுறுத்தக்கூடியன. மானுடவியல் விதிகளைப் பயன்படுத்தும் திறனாய்வுக்கோட்பாடுகளான மானுடவியல் அணுகுமுறையும் இனவரைவியல் அணுகுமுறையும்கூட கருத்தியல் ரீதியான விளக்கங்களையே முதன்மைப்படுத்துகின்றன.

முடிவுரை


இலக்கிய ஆய்வுக்குள் பிறதுறை அறிவும், அவற்றின் வழியாக அணுகுமுறைகளும் உள்வாங்கப்பட்டு தமிழியல் ஆய்வுகள் விரிந்து கொண்டிருக்கின்றன என்றாலும், பல்கலைக்கழகங்களில் பதிவுசெய்யப்படும் ஆய்வுத்தலைப்புகள் அதிகப்படியான தலைப்புகள் இன்னும் “ இல்” என்னும் வேற்றுமை உருபைப்படுத்தும் ஆய்வுத்தலைப்புகளே அதிகம் இருக்கின்றன. சங்க இலக்கியத்தில் சமூக அமைப்பு, திருக்குறளில் உளவியல் கூறுகள், ஜெயகாந்தன் நாவல்களில் வர்க்கப்போராட்டங்கள், இமையம் நாவல்களில் தலித்துகள் போன்ற தலைப்புகளே அதிகமாக எடுத்துக்கொள்ளப்படுகின்றன. பொதுவாக ‘ இல்’ வேற்றுமை ஒருவரை அதிகம் யோசிக்கவிடாமல், இங்கே இது இருக்கிறது என வெளிச்சம்போட்டுக் காட்டும் ஒருவராகவே முன்னிறுத்தக் கூடியது. ஒரு இருட்டு அறையில் விளக்கு எரிவதற்கான கருவியை அழுத்தினால் வெளிச்சம் வரும். அப்படியான நபர்களாக ஆய்வாளர்களைச் சுருக்கிவிடும் ‘ இல்’ வேற்றுமைத் தலைப்புகள் தவிர்க்கப்பட வேண்டும். தனது ஆய்வுப்பார்வையையும் விளக்கங்களையும் விவாதங்களையும் கண்டுபிடிப்புகளையும் விரிந்த தளத்தில் முன்வைக்கும் தலைப்புகளைப் பதிவுசெய்ய வேண்டும். தலைப்புத் தேர்விலிருந்தே ஆய்வுத் தரவின் எல்லைகளும் ஆய்வு முறையியலும் அதற்கான அணுகுமுறைகளும் விரிவான வாய்ப்புகளை அளிக்கும்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்