June 07, 2017

தேடிப் படித்த நூல்கள் -2

 சென்னை,108. தியாகராயர் நகர் உஸ்மான் சாலையிலிருந்த பாரதி நிலையம் வெளியிட்ட கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள் மூன்றாம் பதிப்பு வந்த ஆண்டு1986. அதில் இடம்பெற்றுள்ள 'என்னுரை'என்னும் பகுதியில்,' தொகுத்த தமிழ்க்கனி பதிப்பகத்தாருக்கும் வெளியிட்ட பாரதி பதிப்பகத்தாருக்கும் நன்றி' எனத் திரு மு.கருணாநிதி குறிப்பிட்டுள்ளார். அப்படிக்குறிப்பிட்டுள்ள ஆண்டு 1971. இந்தத் தொகுப்பை வெளியிட்ட காலகட்டத்தில் பாரதி பதிப்பகம் அவரது பலவகையான நூல்களையும் வெளியிட்ட பதிப்பக இருந்ததைக் கடைசிப்பக்கக் குறிப்பு தெரிவிக்கின்றது.

தமிழ் நவீனத்துவத்தின் பலவகைகளையும், அவற்றின் வகைமாதிரி எழுத்துகளையும் புனைகதைகளின் வழியாக அறிமுகம் செய்யும் ஒரு பாடத்திட்டத்தைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டபோது கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள் என்ற இந்த நூலைத் திரும்பவும் தேடியெடுத்துப் படித்தேன்.திராவிட இயக்க எழுத்தின் வகைமாதிரிக்கு இப்போதும் கலைஞரின் கதையைத்தான் தெரிவுசெய்யவேண்டியுள்ளது என்பது அவ்வியக்கம் கலை, இலக்கியங்களைக் கைவிட்டுவிட்டு முழுவதும் அரசியல் இயக்கமாக ஆகிவிட்டதின் அடையாளம்; வருத்தமான ஒன்று. அவரைப்போலத் திராவிட இயக்கக் கருத்தியலையும் இலக்கியக் கோட்பாட்டையும் உள்வாங்கி மொழியைப் புதுக்கிக் கதைகள் எழுதிய பலரும் இருக்கிறார்கள் என்றாலும், அவர்கள் தங்களை வெளிப்படையாக அதன் வாரிசுகளெனச் சொல்லிக்கொள்வதில்லையென்பதற்கும் காரணங்கள் இருக்கின்றன. இருக்கட்டும்.
280 பக்கங்களில் 37 கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. சிறுகதையின் வடிவம், உத்தி போன்றவற்றை வரையறை செய்து முன்வைத்த மேற்கத்தியத் திறனாய்வாளர்கள் சொல்வனவற்றை மீறாமலேயே இத்தொகுப்பிலிருக்கும் பலகதைகள் இருக்கின்றன. ஆர்வமூட்டும் ஆரம்பம், உரையாடல் வழி ஆரம்பம், எச்சரிக்கையைக் குறிப்பாக முன்வைத்துக் கதையைச் சொல்லும் தன்மை, வாசகரை விளித்துத் தான் எழுதும் பாத்திரத்தைப் பற்றிய குறிப்பை முன்வைக்கும் தன்மை எனப் புதுமைப்பித்தன் கையாண்ட கதைத் தொடக்க உத்திகள் கலைஞரிடமும் உள்ளன. உருவம், உத்தி சார்ந்து தமிழின் நவீனத்துவ எழுத்தாளர்கள் செய்துள்ள அனைத்து வகையான சோதனைகளையும் செய்து பார்த்துள்ளார் கலைஞர். ஆனாலும் நவீனத்துவ விமரிசகர்களின் கவனத்தைப் பெறாமலேயே போனதின் காரணத்தைத் தேடினால், தமிழ்க்கலை இலக்கியப் பார்வைகளின் பிளவுகளும், அதன் பின்னணிகளும் புரியவரலாம்.
ஐரோப்பிய நவீனத்துவத்தைத் தமிழர்கள் உள்வாங்கியதில் ஒற்றைத்தன்மை மட்டுமே இல்லை. கதைசொல்லும் முறையில் அனைத்துத் தரப்பினரும் எல்லாவகையான சோதனைகளையும் உடன்பாட்டோடு முயற்சிசெய்தாலும் வாழ்க்கைபற்றிய பார்வையை வெளிப்படுத்தும் பாத்திரங்களைத் தெரிவுசெய்வதில் வேறுபாடுகள் இருக்கின்றன. தனிமனித வாழ்க்கையைப் பொதுவெளியின் வாழ்க்கையோடு இணைத்துப் பார்க்காமல், தனிமனிதர்களின் அகமாகப் பார்க்கவேண்டும்; உளவியல் சிக்கல்களாக அணுகவேண்டும் என வலியுறுத்தும் போக்கு ஒன்று உண்டு. அப்படிப்பார்க்கும்போது ஒவ்வொருவரின் வாழ்க்கைக்குள்ளும் இருக்கும் அறம் மீறும் கணங்களும் அதனால் உண்டாகும் குற்ற உணர்வுகளுமே மேன்மையான எழுத்திற்குரியன என்றொரு பார்வையை நவீனத்துவம் முன்வைக்கிறது. தனிமனிதர்களின் இயலாமை, கழிவிரக்கம், கடவுளின் கருணைக்கும், மற்ற மனிதர்களின் இரக்கத்திற்கும் ஏங்குதல், தற்கொலையைத் தரிசனமாகக் காணுதல் போன்ற துன்பியலின் பரிமாணங்களே உன்னதமான இலக்கியத்தின் பாடுபொருள்கள் என அது நம்பியது. இந்த நம்பிக்கையும் உள்ளார்ந்த விசாரணைகளும் இந்திய ஆன்மீகத்திற்கும் உடன்பாடானது. ஜீவாத்மா, பரமாத்மா இவற்றின் இணைவு அல்லது விலகல் பற்றிய விசாரணைகளைத் தொடர்ந்து இலக்கியத்தின் சொல்லாடலாக நடத்திவந்தவர்கள் அந்தப் போக்கை வரித்துக்கொண்டு வெளிப்படுத்தினார்கள். இந்த உள்ளடக்கத்திற்கேற்ற மொழியையும் சொல்முறைகளையும் உருவாக்கி நவீனத்துவம் என்பதே அதுதான் என நிறுவினார்கள்.
இந்திய ஆன்மீகத்தோடு இணையாத மேற்கத்திய நவீனத்துவ மரபும் உண்டு. தனிமனித வாழ்க்கையை முயற்சியின் பெருமிதமாகவும், சேர்ந்துவாழ்தலின் வழியாகத் துயரங்களை வென்றெடுத்தலாகவும் பார்க்கும் பார்வை அது. மனத்தின் விழிப்புணர்வு என்ற நவீனத்துவப்புரிதலுக்கு மாற்றானது. சமூகத்தின் விழிப்புணர்வின் பகுதியாகத் தனிமனித விழிப்புணர்வு நடக்கும் என்ற நம்பிக்கையை முன்வைக்கும் எழுத்துவகையே அதன் வெளிப்பாட்டு வடிவம். அத்தகைய பார்வையின் - இலக்கிய வெளிப்பாட்டின்- வகை மாதிரிகளைத் தமிழில் திராவிட இயக்க எழுத்துகளாகவும், இடதுசாரி எழுத்துகளாகவும் அடையாளம் காணலாம். கலைஞர் கருணாநிதியின் கதைகள் என்னும் இத்தொகுப்பில் அத்தகைய கதைகளே நிரம்பியுள்ளன. தேடிப்பிடித்துப் பாருங்கள்

7
1991 ஆம் ஆண்டில் வெளிவந்த காவ்யாவின் வெளியீடான "தமிழில் வட்டாரநாவல்கள்" என்னும் நூலைத் திரும்பவும் வாசிக்கவேண்டிய கட்டாயத்தை இந்தக் கல்வியாண்டில் (2016-17)  உருவாக்கிக்கொண்டேன். திருநெல்வேலியின் முக்கியமான நூலகங்களில் தேடிய மாணாக்கர்கள் கிடைக்கவில்லை என்றார்கள். கடைசியாக சண்முகசுந்தரமிடமே கேட்டுவிடலாமென்று தொலைபேசியில் அழைத்தபோது கைவசம் இல்லையென்றார். இருந்தால் நகல்போட்டு அனுப்புங்கள்; பணம் அனுப்புகிறேன் என்றார் . தொடர்ந்து பதிப்பக அரசியலெல்லாம் பேசிவிட்டு, அந்த நூலின் முக்கியத்துவத்தையும் திருத்திய பதிப்பாக அந்நூல் வரவேண்டிய அவசியத்தையும் சொன்னபோது கொஞ்சம் இறங்கிவந்தார். கைவசம் 3 பிரதிகள் இருக்கிறது; ஒன்றை அனுப்பிவைக்கிறேன் என்று சொல்லி அனுப்பிவைத்தார்.

தமிழில் நாவல் எழுத நினைப்பவர்களும்  ஆய்வுசெய்ய நினைப்பவர்களும்  படிக்கவேண்டிய பார்வை நூல்களாகப் பத்துநூல்களையாவது பட்டியலிடலாம். எழுத நினைப்பவர்கள் இதுபோன்ற நூல்களை வாசிப்பதில்லை என்பது தெரிந்த்துதான். ஆனால் ஆய்வாளர்கள் அப்படியொரு பட்டியலை உருவாக்கிக்கொள்ளவேண்டும். கட்டாயம் வாசிக்கவேண்டிய முதல் ஐந்துக்குள் இந்த வலியுறுத்துவேன்தமிழில் அதுவரை வந்துள்ள நாவல்களின் பட்டியலைப் பல்வேறு நோக்கில் பிரித்துத் தரலாம் என்றாலும் அந்தக் காலகட்டத்தில் தீவிரப்பட்ட
வட்டார எழுத்துஎன்ற கருத்தியல் தளத்தில் வைத்துச் சாத்தியமான விவாதங்களோடு கூடிய முதல் இயலைத் தொடர்ந்து நிலவியல் பின்னணியில் -நாஞ்சில், நெல்லை, முகவை,மதுரை, தஞ்சை,கொங்கு, புதுவை- எனப் பிரித்துக்காட்டியிருக்கிறார் சண்முகசுந்தரம். இறுதியியலில் இந்நாவல்களை நாட்டுப்புறவியல், மொழியியல், பண்பாட்டியல் நோக்கில் எவ்வாறெல்லாம் விவாதிக்கலாம் என்பதற்கான அடிப்படைகளையும் முன்வைத்துள்ளார். இந்த இயல் பிரிப்பும், பின்னிணைப்பாகத் தரப்பட்டுள்ள நாவல்களின் பெயர்ப்பட்டியலும் இன்றைய வாசகர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் பயன்படக்கூடிய ஒன்று.
முடிந்த கல்வியாண்டில் நான்கு ஆய்வியல் நிறைஞர் பட்ட மாணவ மாணவிகள்வெளியை எழுதும் பின்னணியில் என்ற பொதுத்தலைப்பில் - இரா.முருகவேள், வேல.ராமமூர்த்தி, தஞ்சை ப்ரகாஷ், விநாயகமுருகன் ஆகியோரின் இரண்டிரண்டு நாவல்களை ஆய்வுசெய்தார்கள்.  இப்படிச் செய்யப்படும் ஆய்வுகள் நூறுசதவீதம் சரியாகச் செய்யப்பட்டிருக்கும் என்பதில்லை. சிலர் தேர்ச்சிபெறும் அளவுக்கு எழுதுவார்கள்; சிலர் இரண்டாம் வகுப்பும், சிலர் முதல்வகுப்பும் வாங்குவார்கள். யாராவதொருவர் சிறந்த ஆய்வொன்றை உருவாக்கிவிடுவார். ஒருநெறியாளராகவும் இக்கால இலக்கியங்களை ஆய்வுசெய்யத்தூண்டும் ஆசிரியராகவும் நான் எதிர்பார்ப்பது ஒவ்வொரு வருடத்திலும் சிலருக்கு இலக்கிய வாசிப்பு ருசியையும் ஆய்வுமனோபாவத்தையும் உண்டாக்கவேண்டும் என்பது மட்டும்தான். கவிதைநாவல், நாடகம், சிறுகதை வாசிப்பவராக உருவாக்கப்படுபவர், ருசிகண்ட பூனையாக நல்ல வாசகராகவும்ஆய்வின்பக்கம் திரும்பி நல்ல ஆய்வாளராகவும் ஆவார்கள் என்ற நம்பிக்கையின் வெளிப்பாடு அது.  
முதல்பதிப்பு வந்தபோது வாங்கிவாசித்த பலநூல்கள் இப்போது கைவசம் இல்லை. தருவதாகச் சொல்லி வாங்கியவர்கள் திருப்பித்தராமல் போவதுண்டு. ஆய்வுக்காக வாசித்துப் பயன்படுத்துவார்கள் என்று நம்பிக்கைதரும் மாணாக்கர்களுக்குக் கொடுத்த நூல்களைத் திரும்பவும் வாங்காமல் வைத்துக்கொள்ளவும் சொல்லிவிடுவேன். அப்படி வைத்துக்கொள்ளும்படி சொன்ன நூல்களில் இதுவுமொன்று. இப்போது திரும்பவும் என் கைக்கு வந்துள்ளது. இந்நூலின் முதன்மை நோக்கத்தோடு இயைந்து இன்றுவரையிலான தகவல்களை இணைத்து இன்னொரு நூலை உருவாக்கினால் நல்லது என்று தோன்றுகிறது. நான் செய்யவில்லையென்றாலும் யாரையாவது செய்யத்தூண்டவேண்டும்.
 6
ஒருவரது செயல்பாடுகளும் சிந்தனைகளும் நம்மை நெருங்கிவந்துவிடும் நிலையில் அவரது வரலாற்றை அறியும் ஆசை வந்துவிடும். அறியப்பட்ட வரலாற்றின் பகுதிகள் போதாமையைத் தருகின்றபோது முழுமையான வரலாறு கிடைக்குமா? எனத் தேடத்தொடங்கும் மனம் எங்காவது ஒரு புத்தகத்தில் திருப்தி அடையக்கூடும். அம்பேத்கரின் சிந்தனைகள்,தேவைகள், செயல்பாடுகள், சாதனைகள் எனப்பலவற்றை அறிந்த நிலையில் 1990 - களின் தலித் இயக்கப்போக்கோடு இணையும் வாய்ப்புகள் நெருங்கிவந்தன. அப்போது அம்பேத்கரின் வரலாற்றை நிதானமாகவும் முழுமையாகவும் சொல்லும் ஒரு நூலைத் தேடியது மனம். தேடியதை நிறைவுசெய்யும்விதமாகக் கிடைத்தது இந்த நூல்
தேசிய வரலாற்று வரிசைஎன்னும் திட்டத்தின் பகுதியாக வசந்த் மூன் மராத்தியில் எழுதிய நூல் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்.அந்த நூல் அம்பேத்கரின் வரலாற்றை முழுமையாகத் தருவதோடு, மாமனிதர்களின் வரலாற்றை எழுதும் முறையியலையும் முன்வைக்கும் ஒன்று எனச் சொல்வேன். வரலாற்றை எழுதுவதற்கான ஆதாரங்களைத் திரட்டுவதில் தொடங்கி, எழுதப்போகும் மனிதரின் சிந்தனை, செயல்பாடுகள், நிலைப்பாடுகள் என்பன வாழ்க்கையின் போக்கோடு இணைந்து வளர்ந்ததை முன்வைக்கும் பாங்கையும் வசந்த்மூன் விவரித்துள்ள விதம் கவனிக்கத்தக்க ஒன்று. 1991 இல் மராத்திய மொழியில் வெளியான நூலின் தமிழாக்கத்தைத் தந்தவர் டாக்டர் என். ஸ்ரீதரன். 1995 இல் நேஷனல் புக் ட்ரஸ்டின் வெளியீடாக வந்தபோது அதன் விலை ரூ 43. திரும்பவும் அந்நிறுவனம் வெளியிட்டிருக்கக்கூடும். வாங்கிப் படித்துப் பார்க்கவேண்டிய நூலும் வரலாறும் என்பதில் இரண்டாவது கருத்தே இல்லை

5
==
1986
இல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட இந்நூலின் ஆங்கிலத் தலைப்பு .சங்கம் பாலிட்டி(Tamil Polity) கதை, கவிதை வாசிப்பதிலும் அரசியல் விவாதங்களை முன்வைக்கும் மொழிபெயர்ப்பு நூல்களை வாசித்து விவாதிப்பதிலும் ஆர்வத்தோடு இருந்த என்னைத் திசைதிருப்பியது எனது முனைவர் பட்ட ஆய்வு. தமிழ்நாட்டின் வரலாற்றை இலக்கியங்களின் துணை இல்லாமல் எழுதமுடியாது என்ற கருத்தில் பிடிமானம் கொண்டிருந்த எனது நெறியாளர் தி.சு. நடராசன் அத்தகையதொரு ஆய்வை நீ செய்யவேண்டும் என்றார். நாயக்கர்கால இலக்கியங்களிலிருந்து தமிழக வரலாற்றை எழுதுவதற்கான சான்றுகளைத் தேடி வரலாறெழுதியலுக்கு உதவவேண்டுமென்றார். முதலில் மறுத்தேன். மறுத்ததற்கு மறைமுகமான காரணங்களும் வெளிப்படையான காரணங்களும் இருந்தன. அத்தோடு எனது இயலாமையும் இருந்தது. இக்கால இலக்கியங்களை வாசித்துச் சுகம்கண்ட உங்களைப் போன்றவர்களுக்குத் தமிழ் இலக்கியப்பாரம்பரியம் புரியாது" எனக் கிண்டலடித்து உசுப்பேற்றினார். அதன் பின்னர் சவாலாக ஏற்றுக்கொண்டு ஆய்வைத் தொடங்கினேன்.

தொடங்கிய காலத்தில் அவர் சொன்னவை: பல்லவர் கால வரலாற்றை எழுதியுள்ள மா. ராசமாணிக்கனாரின் ஆய்வுக்கு மேலும் வலுச்சேர்க்க ஆதாரமான தமிழ் இலக்கியப்பரப்பு அதிகம் இல்லை. ஆனால் சோழர்காலப் பின்னணியில் ஏராளமான நூல்கள் இருக்கின்றன. பிற்காலச் சோழர்காலத்தை பற்றிய வரலாற்று நூல்களாக சதாசிவ பண்டாரத்தார், நீலகண்ட சாஸ்திரி போன்றவர்களின் நூல்கள் வந்துள்ளன. அவ்விரு நூல்களின் முன்வைப்புகளை ஏற்றும் மறுத்தும் மே.து.ராஜ்குமார், க.கைலாசபதி, போன்றவர்கள் கட்டுரைகளும் நூல்களும் எழுதுகின்றனர். அதன் தொடர்ச்சியாக நாயக்கர்கால இலக்கியங்களை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தினார். 
அந்த ஆய்வுக்கான முன்னோடியாக-முன்மாதிரிகளாக- சொன்ன நூல்களில் ஒன்று சங்கம் பாலிட்டி (Tamil Polity) சங்ககாலத்தின் அரசியல், பொருளியல், பண்பாட்டு முறைகளை இலக்கியம் மற்றும் வரலாற்றுச் சான்றுகளின் பின்னணியில் ஆய்வுசெய்த நூல் அது. ஆங்கிலத்தில் வாசித்த அந்த நூலின் தமிழாக்கம் எனது ஆய்வுக்கு உதவவில்லை.நான் முடித்த பின்பே வந்தது. தமிழில் வந்தபோது திரும்பவும் படித்தேன். 2010 இல் மறுபதிப்பாகவும் வந்துள்ளது. அனைவரும் தேடிப்படிக்கவேண்டிய நூல்களில் ஒன்று ந.சுப்பிரமணியனின் சங்ககால வாழ்வியல். நியூசெஞ்சுரி புத்தக நிலையம் வெளியிட்டுள்ளது.

No comments :