May 16, 2017

தேசிய அரங்கை உருவாக்குதல்: சில பிரச்சினைகள்

பல்வேறு மாநிலங்களின் பாரம்பரியக் கலைகளிலிருந்து உருவாக்கி, இந்திய நாடகம்  ( Indian theatre) ஒன்றைக் கட்டமைத்து விட முடியுமா..?


 இந்தியா பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட துணைக் கண்டம் என்பதை மறுதலித்து, ‘ இந்தியா ஒரு நாடு’ எனப் பேசுகிறவர்களும் நம்புகிறவர்களும், ‘இந்திய  நாடகத்தை’ உருவாக்கி விடலாம் என நம்புகின்றனர்.ஆனால் தேசிய இனங்களின் சுய நிர்ணயம், அவற்றின் பண்பாட்டுத் தனித் தன்மைகள் ஆகியவற்றில் நம்பிக்கையுடையவர்கள் மொழிவாரி நாடகத்தை (Language or Vernacular theatre) முன்னிறுத்துகின்றனர். அவர்கள் தங்கள் மாநில அடையாளங்கள் கொண்ட அரங்கைத் தேடுகின்றனர். தமிழ் அடையாளங்கள் கொண்ட ஒரு அரங்கை - தமிழ் நாடகத்தை ( Tamil theatre) கட்டமைக்க முயல்கின்றனர். இவ்விரு முயற்சியும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. இவ்விரண்டுமே சாத்தியமா என்றால் பதில் சாத்தியமில்லை என்பது தான்.

இந்திய நாடகம் ஒன்று உருவாக்கப்பட்டுவிட்டது என்று வைத்துக் கொண்டால், அதில் தமிழகத்தின் கூத்து, கேரளத்தின் கதகளி, கர்நாடகத்தின் யட்சகானம்,  உத்தரபிரதேசத்தின் நௌதங்கி , பீகாரின் தமாஸா, வங்காளத்தின் ஜாத்ரா, பஞ்சாபின் பங்காரா எனப் பலவற்றின் பாகங்கள் அல்லது கூறுகள் இணைக்கப்பட்டதாக இருக்கும். ஒருவிதத்தில் பலவண்ணத்துணிகளை இணைத்து ஒட்டுப் போட்ட சட்டை போல. அதே போல தமிழ் நாடகமும், வடமாவட்டங்களின் தெருக்கூத்து கொஞ்சம், தென்மாவட்டங்களின் கணியான் கூத்து, தேவராட்டம், கரகாட்டம், இன்னும் தஞ்சாவூர்ப் பகுதியின் கூத்து, பொய்க்கால் குதிரை, பொம்மலாட்டம் ஆகியனவற்றிலிருந்து கொஞ்சம், நீலகிரி, ஏற்காடு, பாபநாச மலைகளில் வாழும் பழங்குடிகளின் நடனங்களிலிருந்து கொஞ்சம் என எடுத்து தமிழ் நாடகத்தை உருவாக்கலாம். இதுவும் இன்னொரு ஒட்டுப் போட்ட சட்டை தான்.

இப்படி ஒட்டுப் போட்டாலும் அவற்றின் சாராம்சமாகப் பாட்டும், நடனமும் இருப்பதை நாம் அறிவோம். பாட்டும் நடனமும் தமிழகப் பாரம்பரியக் கலைகளிலும் மட்டுமல்ல, எல்¢லா மாநிலப் பாரம்பரியக் கலைகளிலும் இன்னும் சொல்லப் போனால் கீழ்த்திசை நாடுகளின் ( Oriental ) பாரம்பரியக் கலைகள் எல்லாவற்றிலும் சாராம்சமாக இருக்கின்றன.
மேற்கத்திய  அறிவுலகமும் கலையுலகமும் புத்தம் புதிய இயக்கங்களை ( isms)  நவீனம் என்ற பெயரில் முன்னிறுத்தி எல்லாவற்றையும் எதிர்கொள்வதும் விளக்குவதுமாக இருக்கும் பொழுது, நாம் ஏன் பாரம்பரியத்தில் நவீனத்தைத் தேடுகிறோம்.
 மேற்கத்திய அறிவுலகமும் கலையுலகமும் மிகையதார்த்தம் ( Surrealism), குறியீட்டியல் (Symbalism) , அபத்த நாடகங்கள் (Absurd theatre ) குரூர அரங்கு ( Theatre of cruelty) , காவியபாணி அரங்கு ( Epic theatre) சூழல் அரங்கு  ( Environmental theatre) போன்றவற்றை நவீன நாடகங்களை முன்னிறுத்தி யுள்ளது. பல்வேறு கலைப்படைப்புகளிலும் வெளிப்பட்ட இவ்வியக்கங்களின் சாராம்சம் ஒன்றுதான். அது யதார்த்தத்தை நிராகரித்து, யதார்த்தமல்லாததை ( Non-realistic) முன்னிறுத்துவதன் மூலம், யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளச் செய்வது என்கிற சாராம்சம் தான் அவ்வியக்கங்களின் அடிப்படை.
நமது  பாரம்பரியக் கலைகளும் கூட யதார்த்தத்தை முன்னிறுத்துவதில்லை. யதார்த்தமற்ற பாணியே ( Non realistic style) இவற்றின் தன்மையும். இந்தக் காரணத்திற்காக  மட்டுமே நாம் நம் நவீனத்தை நம் பாரம்பரியத்தில் தேடுகிறோம் என்பதில்லை. இதற்கு பின்னால் ஒரு அரசியல் பிரச்சினையும் இருக்கிறது. அந்த அரசியல் , பின் காலனிய அரசியல் ( Post Colonial Politics) என அழைக்கப்படும் அரசியல் ஆகும். இந்த அரசியலும் அதன் ஊடாகக் கலை இலக்கியங்களை விளங்கிக் கொள்ள முயலும் பார்வையும் விடுதலை அடைந்த  எல்லாக் காலனி நாடுகளிலும் வெளிப்படும் பார்வைகள் தான்.
காலனியாக இருந்து விடுதலை அடைந்த நாட்டு மக்களிடம் அவர்களின் தேச அடையாளத்தைத் தேடுதல், இன அடையாளத்தைத் தேடுதல், மொழி அடையாளத்தைத் தேடுதல் எனப் பலவகையான அடையாளங்களைத் தேடும் கருத்தோட்டங்கள் செல்வாக்குப் பெறுதல் என்பது இயல்பான ஒன்றுதான். அடையாளம் தேடும் அரசியல் தவிர்க்க முடியாதது. ஆனால் அதே நேரத்தில் மிகுந்த கவனமாகவும் தேர்வு செய்ய வேண்டிய அரசியலும் ஆகும். தேசம், இனம், மொழி , மதம் என்ற பெயரால் சுமத்தப்படும் அடையாளங்கள் நாளடைவில் பெரும் தடைகளாக மாறி, மாற்றுச் சிந்தனைகளைப் பற்றி யோசிக்க விடாமல் செய்துவிடும் ஆபத்துக்கள் கொண்டவை. தனிமனிதனாகவும் புதிய சிந்தனைகளை ஏற்பவனாகவும் வேறுபாடுகளற்ற புதிய உலகத்தைக் கனவு காண்பவனாகவும் விளங்க வேண்டிய மனித உயிரியைப் பாசிச மனோபாவத்தில் தள்ளிவிடும் ஆபத்துக் கொண்ட இவ்வடையாளங்களின் எல்லைகளையும் வீச்சுக்களையும் அறிந்தே நிராகரிப்பதில் தான் நவீன மனிதனின் சிந்தனையும் செயல்பாடுகளும் வெற்றி பெறும்.

 நீண்ட காலம் - ஏறத்தாழ முந்நூறு ஆண்டுகள் காலனிநாட்டுக் குடிமக்களாக  இருந்த இந்தியர்கள் தங்களின் நாடகவடிவமாக, காலனியாக ஆவதற்கு முன்பு இருந்த பாரம்பரியக் கலைகளிலிருந்து உருவாக்கப்பட்ட , நாடக வடிவத்தை  நவீன நாடகமாக அடையாளப்படுத்த முயல்கின்றனர். இந்த முயற்சியின் நோக்கமும் தத்துவமும் புரிந்து கொள்ளக்கூடியன தான். ஆனால் நடைமுறையில் நிகழ்காலத்தின் தேவைகளையும் சிந்தனைப் போக்குகளையும் புரிந்து கொண்டவை அல்ல என்று உறுதியாகச் சொல்லலாம்.

No comments :