May 28, 2017

தேடிப்படிக்கலாம்

தமிழ் இலக்கியத்தை ஆழமாகக் கற்றலை விரும்பும் ஒருவர் வாசிக்கவேண்டிய நூல்கள் சில உண்டு. அவற்றை எழுதிய/ தொகுத்தளித்த அறிஞர்களின் பணியைப் பாராட்டவேண்டும். அவர்களின் பணிமுறைமையையும் ஆய்வுநோக்கத்தையும் அடுத்த தலைமுறைக்குக் கையளிக்கவேண்டும். ஒவ்வொரு ஆசிரியருக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட தலைசிறந்த நூல்கள் இருக்கும் என்றாலும் ஏதாவது ஒருநூலையாவது வாசித்துப் பயிற்சிசெய்வது ஆய்வாளருக்குப் பயன்படும். அத்தகைய நூல்களை எழுதிய ஆசிரியர்களின் அனைத்து நூல்களும் முழுமையான ஆழத்தோடும் அகலத்தோடும் இருக்குமென்று நினைக்கவேண்டியதில்லை. சிலரின் கவனிக்கத்தக்க - தேடிப்படிக்கவேண்டிய நூல்களை இங்கே சுட்டிக்காட்டுகிறேன்.


4
சாகித்ய அகாதெமி தமிழுக்குச் செய்த பணிகளில் இந்தத் தொகுப்பைக் கொண்டு வந்ததை முதன்மைப் பணியெனச் சொல்வேன். தமிழ்ப் பக்தி இயக்கம்/இலக்கியம் இருபெரும் போக்குகள் கொண்டது. கடவுள், அதன் வடிவம்,மனிதனுக்குக் கடவுளின் தேவை,இதன் மறுதலையாகக் கடவுளுக்கு மனிதர்களின் தேவை, தேவையை நிறைவேற்றிக் கொள்ள இருமுனைகளில் இருக்கும் ஆத்மாக்களும் மேற்கொள்ளும் முயற்சிகளும் உத்திகளும் சொல்லாடலாக அலையும் தளம் பக்தியின் தளம்.

இத்தளத்தை வைணவமாகவும் சைவமாகவும் பிரிப்பது புரிந்து கொள்ள நினைப்பதின் எளிய வெளிப்பாடு மட்டும்தான். பொருள்தேடும் வாழ்க்கை தரும்நெருக்கடியிலிருந்து தப்பித்து விடமுடியும் ;தப்பிக்க வேண்டும் என்பதைக் கவனமாகக் கொள்ளும் மனிதர்கள் உருவாக்குவது பக்தி என்னும் அரூபம்.பொருள் நிராகரிப்பு பக்தி கவிதைகளில் வெளிப்பட்டாலும், காதலையும் காமத்தையும் கடவுளிடமிருந்து எளிதாகப் பெற நினைப்பதைத் தமிழ்ப் பக்திக்கவிதைகள் வெளிப்படுத்துகின்றன.
அகமரபின் நீட்சியாகத் தமிழ்ப் பக்திக் கவிதைகளை வாசித்து அதன் அழகியலைப் பேசும் தமிழாய்வு மரபு வளர்த்தெடுக்கப்படவேண்டிய ஒன்று. அதனை இந்நூலில் கோடிட்டுக் காட்டியுள்ளார் பேரா.அ.அ.மணவாளன்.அவர் எழுதியுள்ள முன்னுரையை ஆங்கிலத்தில் எழுதி, தொகுப்பிலுள்ள கவிதைகளில் பாதியை மொழிபெயர்த்து தந்தாலே தமிழ்க்கவிதை மரபின் குறிப்பிட்ட காலப்பகுதி உலக இலக்கியத்தின-மு பகுதியாகிவிடும். முக்கியமான காலப்பகுதி துலக்கும் பெறும். 
கல்விப்புலத்தினர்கூட அதிகம் கவனிக்காமல் கைவிட்ட பக்தி கவிதைகளை வாசிக்க இத்தொகுப்பு உதவும். தேடிப் படித்துப் பார்க்கலாம்.

3
ஒவ்வொரு துறையிலும் தீவிரமான செயல்பாடுகளைப் பற்றிப் பேசும்போது பயன்படுத்தப்படும் சொற்றொடர் ஆழம் அகலம். ஆழமும் அகலமும் இணைந்து வெளிப்படுதல் வரவேற்கத்தக்கது; தேவையானது. இரண்டையும் இணைத்துத் தங்களை வெளிப்படுத்தியவர்கள் அவ்வத் துறையின் முன்னோடிகளாக - முதன்மைச் சிந்தனையாளர்களாக - முன்மாதிரிகளாக ஆகிவிடுவார்கள். தமிழ் இலக்கியப்பரப்பில் - குறிப்பாகக் கல்விப்புலப்பரப்பில்

இத்தகைய முன்னோடிகளாகப் பலரைச் சுட்டிக்காட்டலாம். சுட்டிக்காட்டுவதற்கான காரணங்களையும் முன்வைக்க முடியும். ஆனால் படைப்பிலக்கியப் பரப்பில் முக்கியமானவர்; முதன்மையானவர் எனச் சுட்டிக்காட்டும்போது காரணங்கள் சொல்லப்படுவதில்லை. காரணங்கள் சொல்லாமல் முன்வைக்கப்படும் பெயர்களை - ஏற்பதில் எப்போதும் சிக்கலுண்டு. படைப்பிலக்கியவாதிகள் முன்வைக்கும் பெயர்களைக் கல்விப்புலத்தினர் கவனிக்காமல் கடந்துபோவதற்கு இதுவுமொரு காரணம்.

ஆழமான கருத்தியல் விவாதம் செய்யாமலேயே கூடப் பலர் முக்கியமான பங்களிப்பைச் செய்துவிட முடியும். முனைவர் தாயம்மாள் அறவாணன் அப்படியொரு பங்களிப்புச் செய்தவர். அவரது,
மகடூஉ முன்னிலை-பெண்புலவர் களஞ்சியம் / ஆதிமந்திமுதல் ஆண்டாள்வரை”

என்ற விரிவான தலைப்பிலுள்ள நூலைப் பிரித்துப் பார்த்தாலே அவரது விரிவான/ அகலமான பணிகள் புலப்படும்.700 பக்க நூலுக்கு 9 பக்கத்தில் உள்ளடக்க விவரங்களைத் தந்துள்ளார். அந்த உள்ளடக்கவிவரங்களே வாசிப்பவர்களுக்குப் பலவிதமான தூண்டுதல்களைத் தரவல்லது. மகடூஉ முன்னிலை எனும் உருவுக்குக் கரு அமைந்த வரலாறு என்ற முன்னுரையை வாசித்துவிட்டால் போதும்; நூலை முழுமையாகப் படிக்கும் ஆர்வம் தொற்றிக்கொள்ளும். ஆமாம்; வாசிப்பு ஒரு தொற்றுநோய்தான். அதனைப் பலருக்கும் தருவதில் எனக்கு விருப்பமுண்டு. அந்த விருப்பத்தின்பேரில்தான் இதைப் பரிந்துரைக்கிறேன்.
பெண்ணெழுத்து பற்றிய விழிப்புணர்வு துலங்கலாக இருப்பதாக நம்பும் காலம் இது. இந்தக் காலம் பயன்படுத்திக்கொள்ளும் என்ற நம்பிக்கையோடு 2011 இல் புதுக்கிய மூன்றாவது பதிப்பாக வெளியிட்டார். இந்நூலை ஆய்வாளர்கள் மட்டுமல்லாமல் பெண்ணெழுத்தில் ஈடுபடும் ஆர்வமுள்ள பெண்களும் படிக்கவேண்டும். அவர்களோடு உரையாடல் செய்யவிரும்பும் ஆண்களும் தேடிப் படித்துப்பார்க்கலாம்.
2
இப்போது உருவாக்கப்படும் பாடத்திட்டங்களில் இலக்கிய வரலாறுகளின்டுத்தலென சமாதானமடைவதைத தவிர வேறுவழியில்லை. அது போகட்டும்.
இடம் கேள்விக்குள்ளாகிவருகின்றது. “எளிமையிலிருந்து கடினத்திற்கு” என்றொரு கற்பித்தல் நிலையை முன்வைத்து வரலாற்றை ஆதியிலிருந்து தொடங்கி வரிசையாகப் படிக்காமல், தலைகீழாகப் படிப்பதை நியாயப்படுத்தும் ஆசிரியர்கள் நிரம்பியதாகப் பாடத்திட்டக்குழுக்கள் அமைந்துவிட்டன. பெரும்பான்மையோடு சண்டையிட்டுத் தோல்வியைத் தழுவியதுதான் மிச்சம். பெரும்பான்மையிடம் சிறுபான்மை அடைவது தோல்வியல்ல; விட்டுக்கொ
மொழி, இலக்கியக்கல்வியைப் பகுதி ஒன்று அல்லது பகுதி இரண்டில் கற்பவர்களுக்கான இலக்கியவரலாறும்,பட்டப்படிப்பிலும் முதுகலைப்படிப்பிலும் இலக்கியக்கல்வியைச் சிறப்புப்பாடங்களாகப் படிப்பவர்களுக்கான இலக்கியவரலாறும் ஒன்றுபோல் இருக்கமுடியாது; இருக்கக்கூடாது. நான் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு படித்த காலத்தில் இந்த வேறுபாட்டை உணர்ந்தநிலையில் இலக்கியவரலாறுகள் கற்றுத்தரப்பட்டன; அறிமுகப்படுத்தப்பட்டன். எம்.ஆர். அடைக்கலசாமி வழியாக அறிமுகமான தமிழ் இலக்கியவரலாறு மு.வரதராசனின் நூல் வழியாக அதிகம் விரிவடையவில்லை. ஆனால் கா.சு.பிள்ளையின் இரண்டு பகுதிகள் வழியாகவும், மு.அருணாசலத்தின் நூற்றாண்டு அடிப்படையிலான இலக்கிய வரலாறுகள் ( 9 முதல் 14 ஆம் நூற்றாண்டுவரை பல பாகங்களில் எழுதியுள்ளார்) தமிழ் இலக்கியப்பரப்பின் விரிவைக் கூட்டின. அதே நேரத்தில் ஆ.வேலுப்பிள்ளையின் தமிழ் இலக்கியத்தில் காலமும் கருத்தும் வேறுவகையாகத் தமிழ் இலக்கியப்பரப்பை - கருத்தியல் வளர்ச்சியை அறிமுகம் செய்தது.
மொத்த வரலாற்றை அறிந்த நிலையில் தனித்தனி இலக்கிய வகைகளின் வரலாறுகளைத் தேடும்போது நீண்டகாலம் என் பையிலும் கையிலும் இருந்த நூல் எஸ்.வையாபுரிப்பிள்ளையின் தமிழ் இலக்கிய சரிதத்தில் காவிய காலம் என்பது. பிள்ளையின் விவாதமும் விளக்கங்களும் விவரிப்பு முறையும் என்னை ஈர்த்தது. அவரது முடிவுகள் பலவும் அந்த நேரத்திலும் ஏற்கத்தக்கனவாக இருந்ததில்லை; இப்போதும்கூட ஏற்கமுடியாத முடிவுகள் பல உண்டு. தமிழின் சிலப்பதிகாரத்தையும் மணிமேகலையையும் காவியம் அல்லது காப்பியம் என வரையறை செய்வதில் எனக்கு ஏற்பில்லை. தொல்காப்பியம் கூறும் தொடர்நிலைச் செய்யுள் என்பதை விரிவாகப் பேசி நிறுவாமல் காவியம் எனக் காட்டுவதில் தீவிரம் காட்டியிருக்கிறாரோ என்ற ஐயம் உண்டு. அந்த ஐயங்களை மறுத்து விவாதிக்கும் நூல்கள் எதுவும் எழுதப்படாமலேயே நிராகரிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டன. என்றாலும் இலக்கியக்கல்வியில் ஆழம் தேடும் ஒருவர் தேடிக் கற்கவேண்டிய நூலாக இதைத் திரும்பவும் பரிந்துரை செய்வேன்.
1
ஒரு எழுத்தாளர் பல்வேறு வடிவங்களையும் முயன்றுபார்க்கப் பல சாந்தி இதழின் தேவைக்காக மட்டுமல்லாமல், தனது விருப்பம் காரணமாகவே
காரணங்கள் உண்டு. இதழொன்றைத் தொடங்கி நடத்தத்தொடங்கினால் அப்படியொரு நெருக்கடி தானாகவே உண்டாகிவிடும். நவீனத்தமிழ் இலக்கியத்திற்குப் புதிய எழுத்தாளர்களையும் புதிய எழுத்துவகைகளையும் அறிமுகம் செய்த இதழ்களில் ஒன்று தொ.மு.சி.யின் சாந்தி.
எழுத்துவடிவங்கள் பலவற்றையும் முயன்றுபார்த்து வெற்றிபெற்றவர் தொ.மு.சிதம்பரரகுநாதன் . ஒவ்வொரு வடிவத்திலும் முன்னோடியாக விளங்கவேண்டும் என்ற ஆசை அவருக்கு இருந்திருக்கவேண்டும். அதன் காரணமாகத் தான் முயன்ற ஒவ்வொரு வேலையிலும் முக்கியமான எழுத்துகளைத் தந்திருக்கிறார் அவர். நேரடித் தமிழ்நாவலை வாசிப்பதைப்போல அவர் மொழிபெயர்த்த மார்க்சிம் கார்க்கியின் தாய் நாவலை வாசித்திருக்கிறேன். அவரது பஞ்சும் பசியும் தமிழ் நாவல் வகைகளில் சோசலிச யதார்த்தவாதத்தை முன்வைத்து எழுதப்பெற்ற புனைகதைப் போக்கின் முன்னோடி எழுத்து. நாடகம், கவிதை, சிறுகதை. வரலாறு என ஒவ்வொன்றிலும் அவரது பங்களிப்புவிட்டு இலக்கியவரலாற்றை எழுதமுடியாது
பலவிதமான இலக்கிய முகங்கள் கொண்டவர் என்றாலும் ரகுநாதனின் முதன்மையான முகம் விமரிசகர் என்பதே ஆகும். அந்த அடையாளத்திற்காகவே அவருக்குச் சாகித்திய அகாடெமி விருது வழங்கப்பட்டது. 1983 இல் அவருக்கு அந்த விருதைப் பெற்றுத்தந்த பாரதி: காலமும் கருத்தும் என்ற நூலை வாசித்தால், இலக்கிய விமரிசனத்தை ஒரு கலையாகக் கருதி ஈடுபட்டுச் செய்தவர் அவர் என்பது புரியவரும். அடுத்தவந்த இளங்கோவடிகள் யார்? என்ற ஆய்வுநூல் கல்வித்துறை ஆய்வாளர்களுக்குச் சவாலாக அமைந்த நூல். அதனையடுத்து எழுதிய புதுமைப்பித்தன் கதைகள்: சில விமர்சனங்களும் விஷமத்தனங்களும் என்பது இலக்கியத்திறனாய்வின் பின்னால் செயல்படும் உள்ளடி வேலைகளை வெளிச்சம்போட்டுக்காட்டிய நூல். அவர்தான் தமிழில் இலக்கிய விமர்சனம் என்றால் என்ன? என்பதைச் சொல்லும் அடிப்படை நூலொன்றை முதன்முதலில் எழுதித்தந்தார். இவையெல்லாம் பலராலும் கவனிக்கப்பட்டு வாசிக்கப்பட்ட நூல்கள். ஆனால் அவரால் எழுதப்பட்டு அதிகம் கவனிக்கப்படாத நூலொன்று உண்டு என்றால் அது “ சமுதாய இலக்கியம்” என்ற நூலே. 1964 இல் அச்சான நூல் பின்னர் 1980 இல் மீனாட்சிபுத்தக நிலையத்தால் திரும்பவும் பதிப்பிக்கப்பெற்றது.
ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் இலக்கியத்தில் செயல்பட்ட புலவர்களும் கவிஞர்களும் தம் காலத்தின் பெரும்போக்குகளையும் நிகழ்வுகளையும் -தந்தியின் வரவு, பணத்தின் வரவு, ஆடம்பரவாழ்க்கை மோகம், பெரும்பஞ்சம் போன்றனவற்றைக் கவனிப்பவர்களாகவும் அவற்றைக் குறித்து அக்கறையோடு எழுதிக்காட்டுபவர்களாகவும் இருந்தார்கள் என்பதை விரிவாக விளக்கும் நூல் அது. தகவல்கள், விளக்கங்கள், விமரிசனங்கள், விவாதங்கள் என ரகுநாதனின் எழுத்துமுறையைக் காட்டும் சமுதாய இலக்கியம் பலரது கவனிப்பைத் தவறவிட்ட நூல். ரகுநாதனின் மொத்த எழுத்துகளையும் தொகுத்து ரகுநாதவியம் என்னும் இருபெருந்தொகுப்பாக்கியுள்ள காவ்யா பதிப்பகத்தின் அண்மை வெளியீட்டில் இந்நூல் இடம்பெற்றுள்ளது. வாசிப்புப் பசிகொண்டவர்கள் தேடிப்படித்துப் பார்க்கலாம்.

No comments :