May 04, 2017

வெள்ளெருக்குப் பூத்த நிலம்


இறப்பும் பிறப்பும் நம்கையில் இல்லை. பிறப்பைக் கட்டுப்படுத்தும் வேலையைச் செய்ய அறிவியல் முயன்று வெற்றியும் பெற்றுவருகிறது. குழந்தை பிறக்கவேண்டிய நேரத்தைக் கூடத் திட்டமிட்டுத்தருகிறது நவீன மருத்துவம். ஆனால் இறப்பு? மரணங்களைத் திட்டமிடவோ, தள்ளிப்போடவோ முயன்ற முயற்சிகளுக்கெல்லாம் கிடைப்பன தோல்விதான்.
இறப்பின் கணம் எதுவெனச் சொல்லுதல் யார்க்கும் எளிதன்று.மரணவாசல் எப்போதும் திறந்தே கிடக்கிறது. அழைத்துச் செல்லும் வாகனங்கள் சத்தமில்லாமல் வருகின்றன. ஏறிச்செல்பவர்களும் மௌனமாய் ஏறுகிறார்கள். இருப்பவர்கள் மட்டும் கதறிக் கழிக்கிறார்கள். ஓலத்தின் உச்சத்தில் உளறிக் கொட்டுகிறார்கள். இதற்கிடையில் வரப்போகும் மரணத்தைச்சொல்லும் தூதுவன் வந்தான் என்று சொல்லும் மனிதர்கள் இருந்துகொண்டே இருக்கிறார்கள். இறப்பை முன் அறிவிப்பு செய்யும் ஆற்றல் இயற்கைக்கும் மனித உடம்புக்கும் இருக்கிறது என்ற நம்பிக்கை இருக்கவே செய்கிறது.  மதுரையில் வந்து கோவலன் தலைவெட்டப்பட்டுச் சாவான்என்று சொல்லவில்லை என்றாலும்,  “இந்நகரத்திற்குள் நுழைவது நல்லதல்ல; சோகம் ஒன்று நிகழப்போகிறதென வைகை ஆற்றில் படர்ந்திருந்த செடிகொடிகள் கண்ணீர் விட்டன; அவைதான் மலர்களின் மேல் பரவியிருக்குமிந்த பனித்துளிகள் என்பது கவிஞனின் கற்பனை. பனித்துளிகளைக் கண்ணீர்த்துளிகளாகக் கசிந்தன என்றெழுதும் கவி இளங்கோ, நம்பியது இந்த முன்னறிவிப்புக்குள் இருக்கும் தர்க்கத்தைத்தான். 
இழவு வீட்டில் கட்டிப்புரண்டு ஒப்பாரி வைக்கும் பெண்கள் உடல் சக்தி இழந்து நிதானமடையும்போது, “இன்னக்கிக் காலையிலேயே பசுமாடு கையெக் காலைத் தூக்கிக் கத்தோ கத்துன்னு கத்திக் கூப்பாடு போட்டுச்சுன்னுசொல்லிப் பேச்சைத் தொடுங்கும்போது இன்னொருத்தர்  கறந்து வச்ச பால் கொட்டிடுச்சுஎன்பார்.  காக்கா கூப்பிட்டுச் சேதி சொன்னதாகஅந்தப் பேச்சின் அடுத்த வாக்கியத்தை எழுதிச் செல்வார்.
இதெல்லாம் கற்பனைகள் என்று பேசியும் எழுதியும் வரும் எனக்கும் அப்படியான நினைப்புகள் தோன்றுவதுண்டு. அன்று அதிகாலை அந்தக் கனவு வந்து தூக்கத்தைக் கலைத்துப் போட்டது. இது முன்னறிவிப்பல்ல; பின் நினைவு.  “அடுக்குமாடிக் குடியிருப்பின்  இரண்டாவது மாடிச் சாளரம்வரை வளர்ந்து தலையாட்டிய செடிகளெங்கும் இலைகள் இல்லை. முட்டைமுட்டையாய் பூக்கள். வளைந்து தொங்காமல் நிமிர்ந்து விரியும் அந்தப் பூக்களுக்குள் நீளும் கம்பிவரிசை. வண்டுகள் மொய்க்காத அந்த மலர்கள்.  அனைத்தும் எருக்கம்பூக்கள். இவ்வளவு பெரிய எருக்கந் தோட்டத்தைக் கனவில் தான் காணமுடியும் என விழித்துக்கொண்டபோது உறைத்தது.

இதைக் கனவு என்பதைவிட ஒருவருடத்திற்கு முந்திய நிகழ்வின் மறு ஓட்டம் என்று சொல்லவேண்டும். ஏப்ரல் 15 காலையில் வழக்கம்போல் ஆறுமணிக்குக் கிளம்பிய காலை நடையை முடித்துவரும்போது மணி 7.30 ஆகியிருந்தது. அவ்வப்போது காலை நடையில் கண் விரும்பும் காட்சிகளில் ஒன்றைப் பிடித்துவைக்கத் தோன்றினால் பிடித்து வைத்துக்கொள்வேன். பல நேரங்களில்  காலைச் சூரியனின் வண்ணக் கோலமாகவே அது இருக்கும். சில நேரங்களில்  சிட்டுக்குருவிகளின் காதல் பிணைப்போவிரிக்கும் மயிலின் தோகையோ, சூரியனை மறைத்து இருளில் அசையும் பனைமர வரிசைகளாகவோ இருக்கும். நீர்ப்பெருக்கின் சிற்றலைகளும்கூட படம் பிடிக்கச்சொல்லும். பாதிநகரமும் பாதிக்கிராமமுமாக இருக்கும்  நெல்லை போன்ற ஊரின் ஓரப்பகுதியில் வாழிடத்தை வைத்திருப்பதில் கிடைக்கும் வசதி இது. ஒவ்வொருநாளும் ஒவ்வொரு பாதியில் நடந்துபோவேன்.   அன்று நடந்து கொண்டிருக்கும்போதே, பூத்துக்கிடந்த எருக்கம்பூக்கள் படம் பிடிக்கச் சொல்லி வலியுறுத்தின.  ஆவரம்பூக்களுக்குப் பக்கத்தில் போட்டிபோட்டுக்கொண்டு புதர்புதராய் மண்டிய எருக்கம் பூக்களும் நிரம்பிப் பரந்து நின்றன.

கோடையில் காடாய் வளர்ந்து பூக்கும் தாவரம் எருக்கு. அதன் இலைகளைக் கிள்ளினால் கெட்டித்தயிராய் வெண்பால் சுரக்கும். அந்தப் பாலைக் கிண்ணத்தில் பிடித்துக் குடித்து உயிர்விட்ட பெண்கள் பேயாய் ஆடிக்கொண்டிருக்கும் ஆலமர விழுதுகளில் மத்தியான வெயிலில் தொங்கி விளையாடிக் கொண்டிருப்பார்கள். எருக்கம்பால் குடித்து இறந்த அக்காமார்களுக்கு எருமைப்பால் ஊற்றி ஆறுதல்படுத்தும் தங்கைமார்களின் காதலைக் கரைசேர்க்கும் ஆவிகள் அவர்கள். தமிழ்நாட்டுக் கிராமங்கள் பலவும் அப்படி ஆவி அலையும் கிராமங்கள்தான்.
கையிலிருந்த அலைபேசிக்காமிராவில் பதிந்த படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தபோது வந்த அந்த சேதிக்கு முதலில் வருத்தப்படவில்லை. அவ்வப்போது வரும் தகவல்தான்.   “நேற்றிரவு குடித்தவன் இன்னும் எவில்லை என்று பகல் 12 மணிக்கும் சொல்வாள் அவள் மனைவி. அவன் என் அண்ணன் மகன். அண்ணன் -தம்பிகளாய்ப் பாகம் பிரித்த பின்பும் என்னுடைய குடும்பத்தில் ஒருவனாய் இருந்தவன். பாண்டிச்சேரி நண்பர்கள் அனைவருக்கும் அவனைத் தெரியும். படிப்பு, வேலை போன்றவற்றில் கருத்தாய் இருப்பான். ஆனால் திருமணத்திற்குப் பிறகு எனது கவனத்திற்குள் இல்லை. அப்படி வைத்திருக்கவேண்டுமென நானும் நினைக்கவில்லை. ஒவ்வொரு நாளும்   வேலைக்குப் போய்விட்டு மாலையில் வீட்டுக்கு வருவதற்கு முன்னால்டாஸ்மாக் போய் குடித்துவிட்டு வரும் பழக்கம் எப்படி ஏற்பட்டது என்று தெரியவில்லை. 40 வயது  ஆகியிருந்தது. இரண்டு பிள்ளைகள். அவர்களின் எதிர்காலம் பற்றிய கேள்விகளையெல்லாம் முன்வைத்துப் பேசிய பேச்சுவார்த்தைகள் பகைநாடுகளுக்கிடையே நடந்த பேச்சுவார்த்தைகளாய் மாறிப் போய்விட்டன. கொஞ்சநாள் விடுவதும் பின்னர் ஆரம்பிப்பதுமாய்த் தொடர்வதுமாய் ஐந்தாண்டுகளைக் கடந்துவிட்டான்.
ஐந்தாண்டுகளுக்கு முன்பே அவன் குடிகாரனாக ஆகியிருக்கவேண்டும். நான் வழக்கமாகச் செல்லும் மருத்துவரிடமே அவன் வயிற்றுவலிக்காகச் சென்றபோது, அதனைச் சாதாரண வயிற்றுவலி இல்லை; கல்லீரல் பாதிக்கப்பட்டதால் ஏற்படும் வயிற்றுவலி. உடனடியாகக் குடியைவிட்டுவிட வேண்டுமென எச்சரித்து மருந்துகளைத் தந்திருக்கிறார். என்னிடமும் அதைச் சொல்லிவிட்டார். நானும் சொல்லிப் பார்த்தேன்.  ஆறுமாதம் நிறுத்தியவன் தொடங்கித் தொடர்ந்தான். அவனைத் தடுத்து நிறுத்த முடிந்ததே இல்லை.
 “ஏழரை மணிக்கு எந்திரிக்கவே இல்லை என்ற வந்த தகவல் எட்டுமணிக்கு எந்திரிக்கவே மாட்டான் என்ற தகவலாக மாறிவிட்டது. பால் கொப்பளிக்க நின்ற எருக்க இலைகள் அனைத்தும் காம்பொடித்துப் பாலைத் திரட்டிக் கொட்டின.  எருக்கம்பாலைத் திரட்டித்தான் நமது அரசாங்கம் டாஸ்மாக்கில் குடிக்கும் சரக்காக விற்கிறது என்பதை முன்னறிவிப்புச் செய்த அந்தப் படத்தைக் கைபேசியின் திரையிலிருந்து நீக்கிவிட்டேன். பின் நடக்கப்போவதை முன்னறிவிப்புச் செய்யும் முன் உணர்வுபோல, முன் நடந்தைப் பின் நினைவுகளாக்கும் கனவுத்திரை விரித்துக்காட்டித் தூக்கம் கலைத்தது.

 மொத்தத் தமிழ்நாடும்
வெள்ளெருக்கு பூத்ததுன்னு விளம்பியழுதிடலாம்; விஷக்காத்து அடிக்குதுன்னு சொல்வதெங்கே 
தெரியலையே....

No comments :