April 06, 2017

பொதுப்போக்கிலிருந்து விலகுதல்

முனைவர் பட்டத்தை ஒருவர் எப்படி நினைக்கிறார் என்பதிலிருந்தே அவர் செய்யப்போகும் ஆய்வும் அமையும். ஆய்வுப்பட்டத்தை இன்று பலரும் வேலைவாய்ப்புக்கான அடிப்படைத்தகுதியாகக் கருதுகின்றனர். அந்த அங்கீகாரம் கையிலிருந்தால், அதை வைத்து எப்படியாவது ஒரு கல்லூரியிலோ, பல்கலைக்கழகத்திலோ வேலை வாங்கிவிடலாம் என்பது அவர்களது கணிப்பு. அந்தக் கணிப்பு பிழையானதன்று. அப்படிச் செய்பவர்கள் பெரும்பாலும் போலச்செய்தல் முறையில் ஆய்வேடுகளைத் தருகிறார்கள். மதிப்பீட்டாளர்கள் குறைந்த அளவுத் தேர்ச்சி மதிப்பெண்ணை வழங்கும் மனநிலையில் ஆய்வேட்டை மதிப்பிட்டு முனைவர் பட்டம் வழங்கப் பரிந்துரை செய்கின்றனர்.
 அதைத் தாண்டி தனது முனைவர் பட்டத்தைத் தனது கூடுதல் தகுதியாக நினைக்கக் கூடும். மற்றவர்களின் அடிப்படைத் தகுதியையும் தாண்டி எனது ஆய்வேடு கூடுதலான தகுதியோடு இருக்கவேண்டும் எனக் கருதினால், அதற்கான வேலையை ஆய்வுசெய்யும் காலத்தில் வழங்கவேண்டும். ஆய்வு முறையியலைக் கற்பதிலும், ஆய்வுக்கான நூல்களைத் தேடுவதிலும் அதனை வாசித்து விளக்கம் சொல்வதிலும் ஆய்வுமுடிவாகப் புதிய முடிவுகளை முன்வைப்பதிலும் அந்தப் பணியின் வெளிப்பாடு அமையும். தனது ஆய்வேடே தனது திறமையின் அறிமுகம் என்ற மனநிலையின் வெளிப்பாடு. இப்படிப்பட்டவர்களுக்கு நல்ல வேலைகள் பெறுவதில் அவை உதவக்கூடும். அதுவும் ஓரளவுதான்.
மூன்றாவது நிலையொன்றும் ஓராய்வேட்டில் வெளிப்படும். தனது புலத்திற்கு அல்லது துறைக்குத் தனது ஆய்வேட்டின் மூலம் முக்கியமான கொடையொன்றைச் செய்யவேண்டுமென நினைக்கலாம். அவ்வகையான முனைவர் பட்ட ஆய்வேடுகள் ஒருவிதத்தில் படைப்பாக்கத்தன்மையோடு வெளிப்படும். அத்தகைய ஆய்வைச் செய்தவர்கள் அந்தப் புலத்தின் அல்லது துறையின் போக்கை மாற்றியவர்களாகக் கருதப்படுவார்கள். நான் எனது முனைவர்பட்ட   ஆய்வுக்கான தலைப்பையும் படிக்க வேண்டிய முதன்மை ஆதாரங்களையும் முடிவுசெய்தபோது எனக்கான முன்மாதிரி ஆய்வாளராகக் கலாநிதி கைலாசபதி நின்றார். சமுதாயவியல் அணுகுமுறையை உள்வாங்கி இலக்கியத்தின் தரவுகளைக் கண்டறிந்து சமுதாயவரலாற்றின் ஆவணமாக அவற்றை முன்வைக்கும் நோக்கம் கொண்டது என் ஆய்வு. எனது ஆய்வேடு, அவரது ஒரு நூலைப்போல இல்லையென்றாலும் அவரது ஒருகட்டுரையைப் போலவாவது அமைந்துவிட வேண்டும் என்று நினைத்தேன். அதற்காக அவரது பண்டைத்தமிழர் வாழ்வும் வழிபாடும் என்ற நூலின் கட்டுரைகளைத் திரும்பவும் நிறுத்தி, நிதானமாகப் படித்தேன். இதற்குக் கைலாசபதியின் இந் அந்நூலின் கட்டுரைகளே எனது முனைவர் பட்ட ஆய்வோடு முறையியல் அடிப்படையிலும் அணுகுமுறை அடிப்படையிலும் நெருங்கிவருவன. மற்ற நூல்களெல்லாம் வெவ்வேறு இலக்கிய வகை அல்லது ஆய்வுமுறையைக் கொண்டன. அவற்றையெல்லாம் நான் முன்பே படித்திருந்தபோதிலும் அவைகளைத் திரும்பவும் வாசிக்கவில்லை. எனது ஆய்வு எப்படிச் செய்யப்பட்டது? எப்படி முடிந்தது? வெளிப்பட்டது? என்பது தனிக்கதை. இப்போது ஜிதேந்திரனின் முனைவர் பட்டத்திற்கு - நூலாக்கப்படும் அவரது ஆய்வேட்டிற்கு வரலாம். அவர் என்னிடம் முனைவர் பட்ட ஆய்வாளராக ஆகவேண்டும் என்று விரும்பி வந்தவர். என்னிடம் வரும் பலரும் விரும்பி வந்தவர்கள் என்று சொல்லமுடியாது.  “பல்கலைக்கழகப் பேராசிரியர் அவர்; அவரிடம் ஆய்வுக்கான இடம் இருக்கிறது; கேட்டுப் பார்க்கலாம்என்றுதான் வருவார்கள். சேர்வார்கள். முடிப்பார்கள். பெரும்பாலோர் முதல் வகை ஆய்வேட்டை - அடிப்படைத்தகுதிக்கும் கூடுதலான தகுதியோடு முடிக்கவேண்டும் என்று ஆலோசனைகூறி வேலை வாங்குவேன். விருப்பத்தோடு வருகிறவர்களிடம் அவரது ஆய்வேடு அவரது பிந்திய வாழ்க்கைக்கு அறிமுகமாகவும் திறமையாகவும் ஆகவேண்டும் என்ற நோக்கத்தோடு நெறிப்படுத்துவேன். இதுவரை ஒருவரையும் மூன்றாவது நிலைக்கு உரியவராக நினைத்து நெறிப்படுத்தவில்லை. இதைக் குற்றவுணர்வோடு ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். ஜிதேந்திரனுடன் எனது உரையாடல்களும் நெறிப்படுத்தலும் வேலை வாங்கியதும் இரண்டாவது வகைப்பட்டதாகவே இருந்தது.
தமிழ் மாணவர்கள் ஆய்வுப்பொருளாக எடுக்கத்தயங்கும் நாடகவகையைத் தனது ஆய்வுக்கான மையமாக எடுக்கவிரும்பினார். குறிப்பாகக் கன்னட நாடகாசிரியர் கிரிஷ் கர்னாடின் நாடகங்களை வாசித்தவராகவும் அவை பற்றிய கருத்துக்களோடும் இருந்தார். அவரைத் தமிழுக்கு மொழிபெயர்த்து அறிமுகம் செய்யவேண்டும் என்ற ஆர்வமும் கொண்டிருந்தார். அதனால் அவருக்கிணையாகத் தமிழில் ஒரு நாடக ஆசிரியரை- இந்திரா பார்த்தசாரதி- கண்டறிந்து ஒப்பாய்வொன்றைச் செய்யலாமென முடிவுசெய்தோம். அந்த ஆய்வே இப்போது நூலாக ஆகிறது.
ஓப்பாய்வு செய்பவர்கள் காட்டவேண்டிய அக்கறைகளைக் குறைவின்றிச் செய்து இரு ஆசிரியர்களின் நாடகங்களையும், அவர்களின் பிரதிகளைப் பற்றிய முன் கருத்துகளையும் உள்வாங்கி எழுதியுள்ளார். வாசிப்புக்குப் பின் இருவரிடமும் உள்ளோடும் கருத்தியலாக - இலக்கிய அழகியலாக இருப்பதுஇருத்தலியல்என்னும் மேற்கத்தியக் கருத்தியல் தாக்கம் என்பது கண்டறியப்பட்டது.  ஆனால் அக்கருத்தியல் முழுமையாக அப்படியே உள்வாங்கப்படாமல் ஒருவித இந்தியத்தன்மை பெற்று நாடகங்களாக ஆகியிருக்கின்றன என்பதையும் விரிவாக விளக்கியுள்ளார். இந்தவகையில் இந்த ஆய்வு பின்னர் செய்யப்படும் ஆய்வுகளுக்கு முன்மாதிரி ஆய்வு எனச் சொல்வேன்.

பொதுப்போக்கிலிருந்து விலகித் தனது அடையாளத்தையும் தனது  திறமைகளையும் காட்டவேண்டுமென நினைக்கும் ஒருவரின் ஆய்வுக்கு நெறியாளராக இருந்தது மகிழ்ச்சி அளிக்கும் ஒன்று. ஜிதேந்திரனுக்கு நெறியாளராக இருந்ததும், அந்த ஆய்வேடு நூலாக ஆகும்போது முன்னுரையொன்றை எழுதுவதும் மகிழ்ச்சியளிக்கக் கூடியது. மிக்க மகிழ்ச்சி

No comments :