January 22, 2017

வரலாற்றைத் திரும்பிப்பார்க்கவேண்டும்

நாளை அலங்காநல்லூரின் வாடிவாசல் திறக்கப்படும் வாய்ப்பு அதிகமாகிக்கொண்டிருக்கிறது. உருவாக்கப்படும் புதிய அவசரச்சட்டப்படியே வாடிவாசல் திறக்கப்பட இருக்கிறது. வாடிவாசலின் வழியே முதல் காளையைத் தமிழக முதல்வர் திறந்துவிட்டுக் கையசைக்கக் கூடும். அந்தக் கையசைப்புக்குப்பின் அவர் ஆற்றும் உரையில் மத்திய அரசிற்கும், அதன் தலைமையமைச்சருக்கும் நன்றி சொல்லக்கூடும். அதன்பிறகும் திரண்டிருக்கும் கூட்டம் என்ன முடிவெடுக்கும் என்பதை இன்று சொல்ல முடியாது. ஏனென்றால், அத்திறப்பு நிரந்தரமானதா.. தற்காலிகமானதா... என்பதை யாரும் உடனடியாகச் சொல்லிவிட முடியாது. சொல்லமுடியும் என்றாலும் யாரும் சொல்லப்போவதில்லை. சொல்லாமல் தள்ளிப்போடுவதில் இருக்கிறது பின் அரசியல் அல்லது நுண் அரசியல்.

அந்த அரசியல் நிகழ்கால அரசியல் அல்ல. நீண்ட கால அரசியல். அதன் சாரம் இந்தியாவின் சமயவரலாற்றில் இருக்கிறது. அறுசமயங்களையும் ஒரு சமயமாகக் காட்டிய வரலாறு அது. ஆதிக்கச் சிறுபான்மையினரின் ஆதிக்கக் கருத்தியலையும் மறுத்து - எதிர்த்து உருவான சமயங்களையெல்லாம் தனது உட்பிரிவுகளில் ஒன்று எனக்காட்டும் பெருமத ஆக்கிரமிப்பில் இருக்கிறது. சமணத்தையும் பௌத்தத்தையும் புறச்சமயங்களாகச் சொன்ன வரலாற்றில் இருக்கிறது. எல்லாவற்றையும் கர்மம், மறுபிறப்பு, விதி எனக் கைகாட்டிய தத்துவப்பார்வையில் இருக்கிறது. ஆனால் தமிழ்ச் சிந்தனை மரபு என்பது நிலப்பிரிவுகளால் ஆனது. நிலங்களின் உரிப்பொருள் கருத்துக்களாலும், அவற்றை வெளிப்படுத்தும் கருப்பொருட்களாலும் ஆனது. அவற்றிற்குப் பின்புலமாக இருக்கும் காலம், வெளி என்னும் முதல்பொருட்களால் ஆனது. அதன் நோக்கு ஒற்றைத் தள நோக்கல்ல. பன்மைத்தள நோக்கு. தமிழ் மரபைப்போல இன்னும் பலப்பலச் சிந்தனை மரபுகளைக் கொண்ட நிலப்பரப்பே இன்று இந்தியப் பரப்பாக ஆகியிருக்கிறது. .
பன்மை அடையாளங்களும் பல்நிலை நிலப்பரப்புகளும் பலவிதமான மொழிகளும் வழக்கிலிருக்கும் ஒரு துணைக்கண்டத்தை ஒற்றை நாடாக ஆக்குவதில் பண்பாடு முக்கியப் பங்காற்றும் என்ற நம்பிக்கை இருப்பதில் தவறில்லை. ஆனால் உலகவரலாற்றில் பண்பாடும் மொழியும் நாடுகளை உருவாக்கி நிலைநிறுத்திவிடவில்லை என்பதும் உண்மையாக இருக்கிறது. இன்றைய சல்லிக்கட்டு நிகழ்கால அதிகார அரசியல் போல சாதிகளால் கட்டுப்படுத்துவனவாக இருக்கலாம். ஆனால் கடந்த காலத்தில் அப்படி இருந்ததில்லை. இந்திய கிராமசமுதாயத்தின் அனைத்துக்கூறுகளும் அதனதன் இருப்புக்கேற்ப அதில் பங்கேற்றன. அதில் மேல் - கீழ்ப் படிநிலைகள் இருந்தன என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அதனைச் சரிசெய்யமுடியும். அதற்குப் பன்மைத்துவத்தை ஏற்கும் ஜனநாயகம் வேண்டும்.
வரலாறு முழுவதும் உடல் உழைப்பில் ஈடுபடாமல், மூளையை மட்டும் நம்பி ஆதிக்கம் செலுத்தும் கூட்டம் ஒற்றை பண்பாட்டால் திரும்பவும் ஆதிக்கம் செலுத்தவிரும்புகிறது என்ற அச்சத்தை இந்தப் போராட்டம் மறைமுகமாக முன்வைக்கிறது. அந்த அச்சம் முழுமையும் தவறானதல்ல. ஏனென்றால் ஆதிக்கக் கருத்தியலும், அதன் ஆதரவாளர்களும் எந்தவிசயத்திலும் முழுமையான நம்பிக்கையை எதிர்பார்க்கிறார்கள். பொங்கல் திருவிழாவும் அதன் ஒருபகுதியான சல்லிக்கட்டும் அவர்கள் முன்வைக்கும் ஒற்றைப்பண்பாட்டை ஏற்றுக்கொள்ளும் துணைப்பண்பாடாக மாற்றிக்கொள்ளத் தயாராக வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவர்களுக்கு இருக்கிறது. அது உருவாகும்வரை எல்லாவற்றையும் தந்திரங்களால் கையாளும் திறமையுடையவர்கள் அவர்கள்.
சட்டமன்றம், நாடாளுமன்றம், நீதிமன்றம் போன்றன தந்திரங்களின் விளையாட்டுக் களங்கள் என்பதைக் கடந்த காலம் நிரூபித்திருக்கிறது. ஆனால் பெருந்திரளைக் கையாளும் ஊடகங்கள் முழுமையும் தந்திரமான விளையாட்டுக்களங்களாக இப்போது இல்லை. திரண்ட இளையோர்கள் இப்போது வெகுமக்கள் ஊடகங்களைக் கையாள்கிறார்கள். சமூக வலைத்தளங்களைக் கையாள்கிறார்கள். அது தொடரவேண்டும். சிறுபான்மை ஆதிக்கத்தை முன் நிறுத்தும் ஒற்றைப்பண்பாடு பொங்கலைச் சாப்பிடுவதைப் போல உருட்டிச் சாப்பிட அனுமதித்துவிடக்கூடாது என்ற கவலை அதிகமாகிக்கொண்டே இருக்கிறது.

No comments :