January 16, 2017

பொங்கல் : எனது நினைவுகள்

மதுரை மாவட்டக்கிராமம் ஒன்றில் பிறந்து வளர்ந்தவன் நான். சல்லிக்கட்டு தனியான விளையாட்டு அல்ல. போகி, தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல் என 3 நாட்கள் கொண்டாடப்படும் விழாவொன்றின் பகுதி அது. மாடுகளும் ஆடுகளும் கோழிகளும் வளர்க்கப்பட்ட வீடுகளில் - கிராமங்களில் சாதிகள் வேறுபாடுகளை நினைக்காமல் கொண்டாடிய விழா பொங்கல் திருவிழா. வெள்ளையடித்தல், வீடு மெழுகுதல், புது அடுப்புப்போடுதல் தொடங்கி ஆடுமாடுகளும் கன்று காலிகளும் உழவுகருவிகளும் வண்டிகளும் கழுவிச் சுத்தமாக்கப்படும்போது பழையன கழிக்கப்படும். அந்தநாள் போகி.
போகியன்று மாலை கண்ணுப்பிளைச்செடி, மாவிலை, ஆவரம்பூ, வேம்பு சேகரித்து வைத்துத் தை முதல்நால் ஒவ்வொரு பொருளிலும் கட்டித்தொங்கவிடப்படும். வீடுகளின் நிலைப்படிதொடங்கி வண்டியின் ஆரக்கால், ஏரின் மேழி, கிணற்றின் படி, கமலையின் குறுக்குவட்டம் என ஒவ்வொன்றிலும் கட்டிமுடித்து வரும்போது வீட்டில் பொங்கல் வைக்கத் தொடங்கிவிடுவார்கள். அன்று மாலை கபடி போன்ற விளையாட்டுப்போட்டிகள் நடக்கும்.
அடுத்த நாள் மாட்டுப்பொங்கலன்றுதான் - எங்கள் கிராமத்தில் பொங்கல் கலைகட்டும். ஆடு மாடுகளுக்கு கொம்பில் வண்ணம் தீட்டுதல், மேனியெங்கும் புள்ளிக்கோலம் வைத்தல், வண்டிக்கு வர்ணமடித்தல் நடக்கும். பிற்பகலில் கொட்டத்தில் பொங்கல் வைக்கப்படும். பொங்கலும் தேங்காய் பழமும் மாடுகளுக்கு ஊட்டப்படும்.
பொங்கலோ பொங்கல்;
பால்பானை பொங்கல்
பட்டி பலுக;
பாரதம் படிக்க
மூதேவி போக;
சீதேவி வர
என்ற வரிகள் சொல்லப்பட்டு நீர் தெளித்து கொட்டங்களைச் சுற்றிவருவோம். அதுமுடியும்போது ஒவ்வொரு வீட்டிலிருந்து ஒரு மாடென வாடிவாசலில் கூடும். சல்லிக்கட்டுக்காக வளர்க்கப்பட்ட மாடுகள் முதலில் அவிழ்த்துவிடப்படாது. உழவுமாடுகள் முதலில் வெளியேறும். அதை அடக்கும் முனைப்பில் யாரும் வீழ்த்தமாட்டார்கள். தொட்டு ஒரு தட்டுத்தட்டி அனுப்பிவிடுவார்கள். அடுத்துவருவன சல்லிக்கட்டுக்காளைகள். அப்போது சிறுவர்களும் பெண்களும் வீட்டுமெத்துகளில் ஏறிக்கொள்ள இளைஞர்கள் அவற்றை அடக்குவார்கள். கொம்பில் கட்டப்பட்ட பரிசுப்பொருட்களை எடுத்துத் தனது காதலிகளையும் மனைவிகளையும் பார்க்கும் ஆண்களின் வீரம் அங்கே விளையும். பொங்கல் விழாவின் பகுதியான சல்லிக்கட்டு எல்லா ஊர்களிலும் இப்படி தையின் இரண்டாம் நாள் தான் நடக்கும். திரும்பவும் முன்னிரவில் ஊரில் இருக்கும் அனைத்து விலங்குகளும் ஓரிடத்தில் நிறுத்தப்பட்டு முன்னர் சொல்லப்பட்ட வரிகளைச் சொல்ல ஒவ்வொருவரும் சொல்லும் அந்தக்குரல் ஒரு பாடலாக மாறி ஒலிக்கும் முடியும்போது எழும் கரவொலியும் குழவையொலியும் இப்போதும் காதுகளில் ரீங்காரமிடுகின்றன
எங்கள் கிராமத்திற்குப் பக்கத்திலிருக்கும் எழுமலையில், கிருஷ்ணாபுரத்தில் நடந்த சல்லிக்கட்டுகளுக்காக எங்கள் ஊரின் மாடுகளோடு எனது பள்ளிப்பருவக் காலத்தில் அண்ணனோடு சேர்ந்து போயிருக்கிறேன். அலங்காநல்லூரிலும் அவனியாபுரத்திலும் பாலமேட்டிலும் நடந்த சல்லிக்கட்டுகளை எனது கல்லூரிக்காலத்தில் சென்று பார்த்திருக்கிறேன். சிங்கம்புணரிக்கருகே நடக்கும் மஞ்சுவிரட்டுக்கு எனது வகுப்பு மாணவர்கள் அனைவரும் சேர்ந்து போயிருக்கிறேன். சின்னச்சின்னக் குன்றுகளுக்கிடையில் நடக்கும் மஞ்சிவிரட்டில் நூற்றுக்கணக்கான மாடுகள் ஒரே நேரத்தில் அவிழ்த்துவிடப்படும். அங்கு வாடிவாசல் எதுவும் கிடையாது.
அந்தக் கிராமத்திலிருந்து நான் வெளியேறிப்பல ஆண்டுகள் ஆகிவிட்டன. நான் வெளியேறும்போதே ஆடுகளும் மாடுகளும் குறைந்துவிட்டன. சேவல் கூவும் அதிகாலைகள்கூட இல்லாமல் போய்விட்டன. ஆனால் பொங்கல் கொண்டாடப்படுகிறது. 3 நாட்கள் விழா இன்னும் இருக்கிறது. சல்லிக்கட்டு இல்லை. அடையாளமாக ஒன்றிரண்டு மாடுகள் ஓடுகின்றன.
மனிதர்கள் இருக்கும் வரை விழாக்களும் அவற்றின் அடையாளங்களும் இருக்கும். தேவையற்றவை எனக் கருதப்படுபவை கைவிடப்படும். அதைச் செய்யவேண்டியவர்கள் அவர்கள்தான். இன்னொரு பண்பாட்டைச் சேர்ந்தவர்களோ, அல்லது இன்னொரு பண்பாட்டுக்குள் இருப்பவர்களோ, மற்றமைக்குள் நுழைந்துவிட்ட நானோகூட அதைத் தடைசெய்ய அனுமதிக்க மாட்டார்கள். அப்படி நினைத்தால் நானும் வேற்று ஆளாகத்தான் நினைக்கப்படுவேன். இது நபர்களுக்கு மட்டும் பொருந்துவதல்ல; அமைப்புகளுக்கும் அரசுக்கும்கூடப் பொருந்தும். கிராமம் அவர்களுடைய வெளி; அது வெறும் மண்ணாலான வெளியல்ல; பண்பாட்டு நடவடிக்கைகளால் ஆனவெளி. அதைப் புரியாதபோது ஏற்படும் கலவரங்களுக்குக் காரணம் இன்னதென்று விளக்கமுடியாதனவாக இருக்கும்.

No comments :