January 22, 2017

வரலாற்றைத் திரும்பிப்பார்க்கவேண்டும்

நாளை அலங்காநல்லூரின் வாடிவாசல் திறக்கப்படும் வாய்ப்பு அதிகமாகிக்கொண்டிருக்கிறது. உருவாக்கப்படும் புதிய அவசரச்சட்டப்படியே வாடிவாசல் திறக்கப்பட இருக்கிறது. வாடிவாசலின் வழியே முதல் காளையைத் தமிழக முதல்வர் திறந்துவிட்டுக் கையசைக்கக் கூடும். அந்தக் கையசைப்புக்குப்பின் அவர் ஆற்றும் உரையில் மத்திய அரசிற்கும், அதன் தலைமையமைச்சருக்கும் நன்றி சொல்லக்கூடும். அதன்பிறகும் திரண்டிருக்கும் கூட்டம் என்ன முடிவெடுக்கும் என்பதை இன்று சொல்ல முடியாது. ஏனென்றால், அத்திறப்பு நிரந்தரமானதா.. தற்காலிகமானதா... என்பதை யாரும் உடனடியாகச் சொல்லிவிட முடியாது. சொல்லமுடியும் என்றாலும் யாரும் சொல்லப்போவதில்லை. சொல்லாமல் தள்ளிப்போடுவதில் இருக்கிறது பின் அரசியல் அல்லது நுண் அரசியல்.

January 20, 2017

சல்லிக்கட்டு: சில குறிப்புகள்

ஒழிக ! வாழ்க!! குரல்களின் ஒலியளவு
========================================
ஒவ்வொருமொழியிலும் சொற்கள் இரண்டாகப் பிரிக்கப்படுகின்றன.அவை பெயர்(Noun ) வினை(Verb). இவ்விரண்டையும் கூடுதல் அர்த்தப்படுத்தப்படுவனவே இடைச்சொற்களும் உரிச்சொற்களும். தமிழில் மட்டுமே இடை, உரி என்பன தனிப்பட்ட வகையாக இருக்கின்றன. இவைகளைப் பெரும்பாலான மொழிகள் முன்னொட்டுகளாகவும் சில மொழிமொழிகளில் பின்னொட்டுகளாகச் சொல்லப்படுகின்றன.
வாழ்க!, ஒழிக! இவை வினைமுற்றுகள்.
வேண்டும்! வேண்டாம் ! இவையும் வினைமுற்றுகளே
 முன்னிரண்டும் வியங்கோள் வினைமுற்றுகள்
பின்னிரண்டும் ஏவல் வினைமுற்றுகள்

January 16, 2017

பொங்கல் : எனது நினைவுகள்

மதுரை மாவட்டக்கிராமம் ஒன்றில் பிறந்து வளர்ந்தவன் நான். சல்லிக்கட்டு தனியான விளையாட்டு அல்ல. போகி, தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல் என 3 நாட்கள் கொண்டாடப்படும் விழாவொன்றின் பகுதி அது. மாடுகளும் ஆடுகளும் கோழிகளும் வளர்க்கப்பட்ட வீடுகளில் - கிராமங்களில் சாதிகள் வேறுபாடுகளை நினைக்காமல் கொண்டாடிய விழா பொங்கல் திருவிழா. வெள்ளையடித்தல், வீடு மெழுகுதல், புது அடுப்புப்போடுதல் தொடங்கி ஆடுமாடுகளும் கன்று காலிகளும் உழவுகருவிகளும் வண்டிகளும் கழுவிச் சுத்தமாக்கப்படும்போது பழையன கழிக்கப்படும். அந்தநாள் போகி.

January 10, 2017

சல்லிக்கட்டு - பொங்கல் - புத்தாண்டு.


பண்பாட்டுத் தளத்தை முதன்மைப்படுத்தித் தமிழ் நாட்டின் ஆட்சியைத் திராவிட முன்னேற்றக் கழகம் பிடித்து அரைநூற்றாண்டு ஆண்டு ஆகப்போகிறது. ஆயிரத்தித் தொள்ளாயிரத்து அறுபத்தியேழில் சி.என். அண்ணாதுரை முதல்வராக ஆனவுடன் முதன்மை அளித்துச் செய்தவைகள் இரண்டு. ஒன்று சென்னை மாகாணம் என அழைக்கப் பட்ட பெயரைத் தமிழ்நாடு என மாற்றும் சட்டத்தைக் கொண்டு வந்தது. இரண்டாவது படியரிசித் திட்டத்தை நிறைவேற்றியது. இந்த இரண்டில் ஒன்று லட்சியம் சார்ந்தது; இன்னொன்று வாக்குறுதிகள் சார்ந்தது.

January 04, 2017

புதிய மாதவி: மாற்றுத் தொன்மங்களை அர்த்தமாக்குபவர்

ஆடுபாம்பே
அந்த நாகப்பாம்பு அடிக்கடி என் தோட்டத்திற்கு வருகிறது
பிச்சிப்பூவின் வாசனைக்கு வருகிறது என்கிறான்
தோட்டக்காரன்

பாம்பாட்டியை அழைத்து மகுடி வாசித்து
பெட்டிக்குள் அடைத்துவிடத் திட்டமிட்டேன்.
அவனுக்குப் புரியவில்லை இப்போதெல்லாம்
பாம்புகள் மகுடி இசைக்கு மயங்குவதில்லை என்பது
நேற்று அதே பாம்பு என் கழுத்தில் மாலையாகி
என்னை அலங்கரித்தது
அந்த மயக்கம் தெளிவதற்குள் என் அரைஞாண் கயிற்றில்
சுற்றிக்கொண்டு ஆட்டம் போட்டது.
விடிவதற்குள் பாம்பை அடக்கிவிட வேண்டும்.
வெறிகொண்டு எழுகின்றேன்.
கண்விழித்துப் பார்க்கும்போது பாம்பு காணவில்லை
என் உடலில் இருந்து சிதறிய
நீலநிற ஒளியில் அந்த அறை எங்கும்
ஆகாயத்தின் துண்டுகள் சிதறிக் கிடந்தன.

இது புதிய மாதவியின் ஒரு கவிதை. எழுத்து வெளியிட்ட மௌனத்தின் பிளிறல் என்னும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.