December 04, 2016

எல்லாம் தெரிந்த அம்மா


இப்போது மாத இதழ்களாக வந்துகொண்டிருக்கும் இலக்கியம் மற்றும் இடைநிலை இதழ்களைத் திரும்பவும் எடுத்துப் படிக்கவேண்டுமெனத் தூண்டுவன அந்த இதழ்களில் இடம்பெறும் கதைகள் மட்டுமே. முதல் புரட்டலில் ஈர்த்துவிடும் கவிதைகளையும் கட்டுரைகளையும் வாசித்துவிட்டுத் தான் கதைகளுக்கு வருவேன். அந்தக் கதைகளின் தொடக்கமோ, நகர்வோ, நிதானமாகப் படிக்கவேண்டியவை என்ற உணர்வைத்தூண்டிவிடும் நிலையில் கட்டாயம் படித்தே விடுவேன்
நவம்பர் மாதத்து மாத இதழ்கள் வந்த நிலையில் நவம்பர் மாத உயிர்மையில் ஒரு சிறுகதை கூடப்போடவில்லை என்ற வேதனைக் குறிப்பைச் சிறுகதை எழுத்தாளர் பீர்தவ்ஸ் ராஜகுமாரன் தனது முகநூல் குறிப்பாகப் போட்டிருந்தார். சொன்னபிறகுதான் நானே கவனித்தேன். உயிர்மையில் எப்போதும் கதைகளை எழுதும் இமையமும் விநாயக முருகனும் கதையெழுதுவதைக் கைவிட்டுக் கட்டுரைகள் வரைந்திருந்தார்கள். உயிர்மைக்கு அடுத்துத் தீராநதியைத் திறந்தால், அதிலும் சிறுகதை ஒன்றும் இல்லை. எஸ்.ராமகிருஷ்ணன், பா.செயப்பிரகாசம், வாசந்தி, பாவண்ணன் என அறியப்பட்ட சிறுகதைக்காரர்களெல்லாம் கட்டுரையாளர்களாக மாறியிருந்தார்கள். அதிலும் பாவண்ணன் இரண்டு கட்டுரைகளை எழுதியிருந்தார். காலச்சுவடு மட்டும் ஒரேயொரு கதையை அச்சிட்டிருந்தது.
மூன்று இதழ்களிலும் சிறுகதைகள் அச்சிடப்படாத்தை ஈடுசெய்வதுபோல அம்ருதாவில் 3 கதைகள் இருந்தன. ஒரே மூச்சில் வாசித்தால் மூன்றில் இரண்டுகதைகள் சுமார் ரகம். அதிலும் சாத்திரியின் க.பூ...க.போ., சுமாரான கதையாகக்கூட இல்லை. புலம்பெயர் தேசமொன்றில் -பிரான்சில்- வாழும் சாத்திரி எப்போதும் தன்னைக்குறித்தே எழுதி கொண்டிருக்கிறார். அவரது எழுத்துக்கள் ஒவ்வொன்றும் தன்வரலாறு அல்லது அனுபவக்கட்டுரைகள் போலவே வெளிப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
இந்தக் கதையிலும்/ கட்டுரையிலும் தன்னை முன்வைக்கவே கரப்பான் பூச்சியும் கடந்துபோகும்என்ற பகுதியை எழுதியிருக்கிறார். அதைக் கதையாக ஆக்க நினைத்திருந்தால், அவர் சிலவற்றை வெட்டிவிட்டு அனுப்பியிருக்க வேண்டும். அல்லது அதைக் கதையென வெளியிட்ட அம்ருதாவின் ஆசிரியராவது வெட்டித்தள்ளியிருக்க வேண்டும். முதலில் வெட்டப்பட வேண்டிய பகுதி இது:  ” இந்தத் தடவை தமிழ்நாட்டுப் பயணம்எனத்தொடங்கியிருக்கக்கூடாது. அப்படித் தொடங்கியபின் அந்தக் கதைசொல்லியை வேறொரு நபராகவாவது மாற்றியிருக்கவேண்டும். இரண்டையும் செய்யவில்லை. அதைத் தாண்டிப் புனைவுப்பகுதிபோலத் தோன்றும்கல்யாணம் செய்துபார்.வீட்டை கட்டிப்பார் என்றொரு பழமொழிஎனத்தொடங்கியபிறகு வெளிப்படும் ஒவ்வொரு சொல்லும் ஆண் மேலாதிக்கத்தின் சொற்களாகவெ வெளிப்படுகின்றன.  மரபான பெண்ணையும் விரும்பாமல், பெண்களுக்காக மேற்கத்திய உலகம் உருவாக்கித் தரும் சட்டப் பாதுகாப்புகளையும் விரும்பாமல் நக்கலடிக்கும் சாத்திரியிடம் சிக்கும் பெண் கதாபாத்திரங்கள்படாத பாடுபடுகிறார்கள். தன்னைத்தவிர மற்றவர்களையெல்லாம் கிண்டலடிக்கும் தனிநபர் மட்டுமல்லாமல், கதைசொல்லியும்கூட அதிகார விரும்பியாகவே இருப்பான். அத்தகைய கதைகளை எழுதும் சிறுகதைக்காரர்கள் நவீன வாழ்க்கையின் விரோதிகள். சாத்திரியின் விருப்பம் அதுதான் என்றால் யார் தடுக்கமுடியும்?
சாத்திரியின் கதையை வாசித்தபின் வாசித்த கதை வைத்தீஸ்வரனின்அசந்தர்ப்பம்”. சிலபேருக்குத்தான் கவிதை சுலபமாகக் கைவசமாகும் சாத்தியம்; கதையும் சாத்தியம். சிலர், இலக்கியத்தின் ஒரு வடிவம் கைவரப்பெற்றவர்களாக நம்பத்தொடங்கியபிறகு இன்னொருவடிவத்தை முயற்சி செய்துபார்ப்பதில்லை. கவிதைவடிவம் பின்தொடரும் ஞமலிபோல ஆகிவிட்டால் அதன் நிழலிலேயே கதைகளையும்கூடக் கவிதையாக ஆக்கிவிடுவதுண்டு. வைத்தீஸ்வரனுக்கு இரண்டுமே கைவரப்பெற்ற வடிவம்தான். அவரது கதைகள் பலவும் சிக்கலான விவாதங்களை முன்வைத்துள்ளனஆனால் இந்த இதழில் அவர் எழுதியிருக்கும் அசந்தர்ப்பம் அப்படியான கதையாக இல்லையென்று உறுதியாகச் சொல்வேன்.
அசந்தர்ப்பம் என்ற தலைப்பும்சரி, அதற்குள் விரியும் நிகழ்வும்சரி மிகச்சிறியது. ஒரேயொரு நிகழ்வு. பெரும்பாலும் ஒற்றை நிகழ்வில் உருவாகும் உணர்வுகளின் தொகுதியைக் கதையாக்குவதைவிட கவிதையாக்குவதே சரியாக அமையும். புதுமைப்புத்தன், மௌனி, .பிச்சமூர்த்தி போன்ற முன்னோடிகளின் தொகுப்பில்கூட இப்படிப்பட்ட ஒற்றை நிகழ்வுகள் கதைகள் எனத் தொகுக்கப்பட்டுள்ளன. அவர்கள் சென்ற அதே பாதையிலேயே வைத்தீஸ்வரனும் சென்றிருக்கிறார். இதை ஏன் கதையாக எழுதவேண்டுமென நினைத்தாரெனத் தெரியவில்லை. இரண்டே பக்கத்தில் ஜனனம் - மரணம் என்ற இரண்டையும் அருகே வைத்திருக்கிறார். அந்தச் சந்தர்ப்பத்தில் ஒரு பெண்ணின்-தாயின் மனதில் தான் இரண்டு பெண்பிள்ளைகளைப் பெற்றதால் தான்கணவன் தன்னைப் பார்க்கவரவில்லையோ என்ற நினைவு ஓடியது எனக்காட்டும்போது கதையம்சம் வருகிறது. ஆனால் அவர் இனி வரப்போவதில்லை - அவருக்கு மரணம் சம்பவித்துவிட்டது - என்பதை அந்தரத்தில் விடும்போது அந்த அம்சமும் சிதைந்துவிடுகிறது.
ஆக இந்த இரண்டு கதைகளும் ஏமாற்றமே தந்தன. ஆனால் அதை மூன்றாவது கதை முற்றிலும் மாற்றிவிட்டது. கதையை எழுதியிருப்பவர் வண்ணதாசன்; கதையின் தலைப்பு. ஒரு பிரப்பங்கூடையும் மூன்றாவது முட்டையும்பிரப்பங்கூடையில் இருக்கும் கோழிமுட்டைகளில் மூன்றாவதைக் கையிலெடுத்து,  அந்த முட்டை உருவாக்கும் நினைவுகளில் மூழ்கி, முழுமையும் நினைவோடையாகப் பின்னோக்கிப் பாய்கிறது. சுழன்றுசுழன்று ஒரு குடும்பத்தின் வாழ்க்கைச் சுழிப்புகளை முன்வைக்கும் வண்ணதாசன், ஒரு தாயின் மேன்மையான ஆளுமையைத் தீட்டியிருக்கிறார். தனது கணவனால் வணங்கத்தக்க மேன்மையான மனைவியாக இருந்த தனது தாயின் அந்த ஆளுமையை அருகிருந்து ரசித்துரசித்துக் கடக்கும் மகனின் நினைவுகளே கதை.
தனக்குப் பொருத்தமானவள் தானா எனச் சந்தேகமிருந்தபோதிலும் பாண்டியம்மாளைக் கல்யாணம் செய்துகொண்டவன் சுப்பையா. அதற்குக் காரணங்கள் சொன்னவள் அம்மாதான். அந்தப் பெண் சுப்பையாவை விட்டுவிட்டுப் போனபின்பு ஏற்பட்ட தவிப்பைப் போக்குபவளும் அதே அம்மாதான். திருமணத்திற்கு முன்பு, திட்டமிட்டுச் செய்யாத தவறுக்காகக் குற்றவுணர்வுக்குள்ளான மகனைத் தேற்றி, இதெல்லாம் இயல்பானது; இளமையில் ஒவ்வொரு ஆணுக்கும், பெண்ணுக்கும் உண்டாகக்கூடிய பாலியல் ஈர்ப்புதான் எனத் தன் மகனிடம் பேசும் தாயின் பக்குவத்தைக் காட்சிப்படுத்தும் கதையை/எழுத்தை நான் வாசிக்கவில்லை. அவனது இளமைக்காலப் பாலியல் தூண்டுதலால் ஏற்பட்ட நட்புப் பாத்திரமான வையம்மாளைப் பார்த்துவிட்டுவா என வழிநடத்தும் அம்மாவை மரபான வாழ்க்கைக்குள் தேடுவது கஷ்டமல்ல; நிறைய அம்மாக்கள் அப்படித்தான் இருக்கிறார்கள். மகனிடம் மட்டுமல்ல; மகளிடம்கூட இப்படியான ஆலோசனைகளைச் சொல்லும் அம்மாக்கள்கூட இந்தியமரபான குடும்பங்களில் இருப்பவர்கள்தான். ஆனால் நம் கதாசிரியர்கள்தான்  பாத்திரமாக எழுதக் காட்டியதில்லை. ஆனால் வண்ணதாசன் இந்தக்கதையில் எழுதிக்காட்டியிருக்கிறார். அதுதான் அவரது மேதைமை.  
நிறைவான இந்தக் கதையைப்போலப் பல கதைகளை எழுதிய கை அவருடையது. ஆனாலும் இந்தக் கதைக்கு இப்படியொரு தலைப்பு -ஒரு பிரப்பங்கூடையும் மூன்றாவது முட்டையும்- தேவையா? என்றகேள்வி எனக்குள் தோன்றிக்கொண்டே இருக்கிறது.


No comments :