October 31, 2016

விலகும் மையங்கள்: லட்சுமி சரவணக்குமாரின் படையலும், விநாயமுருகனின் ஞமலி போல் வாழேலும்.

இரண்டு கதைகளிலும் பின்னணிதான் கவனிக்கவைக்கின்றன.  என்றாலும் இரண்டு கதைகளிலும் பின்னணிகள் ஒன்றல்ல. ஒன்று இடப்பின்னணியால் கவனம் பெறுகின்றது.  இன்னொன்றோ காலப்பின்னணியால் கவனம் பெறுகின்றது.

குவாரிக்காரர்கள் கீழவளவு மெயின்ரோட்டில் இருந்து மலை வரைக்குமாக வண்டிவண்டியாக கிராவல் அடித்து, புதிதாக மண்சாலை அமைத்தனர்என்ற குறிப்பின் வழியாக் கதைக்கான இடத்தைக் குறிப்பான நிலப்பரப்பிற்குள் நகர்த்துகிறார் படையல் கதையை எழுதிய லக்க்ஷ்மி சரவணக்குமார். இந்தக் குறிப்போடு, “மதுரைக்கும் மேலூருக்கும் தூக்கிக்கிட்டுப்போக இது என்ன பிஸ்கெட்டா...கிரானைட்டுய்யா.. எல்லாம் கப்பல்ல வெளிநாட்டுக்குப் போகுதுஎன்ற உரையாடல் வழி கதை விவாதிக்க  விரும்பிய மையத்தையும் அறியத்தருகிறார்.  மதுரை மாவட்டத்தின் மேலூர் பகுதியிலும் சிவகங்கை மாவட்டத்திலும் பரவிக்கிடக்கும்  கிரானைட் குவாரிகளும் அவற்றில் நடந்த முறைகேடுகளும், அரசுக்குச் சேரவேண்டிய பணம் அரசியல்வாதிகளுக்கும், அவர்களை அண்டித் தங்களை வளர்த்துக்கொண்ட தனிநபர்களுக்கும் போய்ச்சேர்ந்த செய்திகள் பரபரப்பானவை என்பது அனைவரும் அறிந்தது.பரபரப்பான செய்திகளாக இருந்து, போராட்டங்களாக மாறி, நீதிமன்றம் தலையிட்டு, விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு அறிக்கை கிடப்பில் கிடக்கிறது என்பதும் அனைவரும் அறிந்தது.
விநாயகமுருகனின் கதை, தொடங்குவதிலிருந்தே மழை, மழையெனச் சொல்லிக்கொண்டே இருக்கிறது.  “எண்பது ஆண்டுகளுக்குப் பிறகு இப்படி ஒருபேய் மழை என்று நகரத்தில் பேசிக்கொண்டார்கள்.குளங்கள், ஏரிகள், நிரம்பி நகரம் எங்கும் வெள்ளக்காடாக நிரம்பியது. தெருவில் நின்றிருந்த வெள்ளமட்டம் உயர்ந்துகொண்டே போனது. மழை அதிகரிக்க வதந்தியும் ஏதேதோ செய்திகளும். நகரம் எங்கும் பரவிக்கொண்டே இருந்தனஎன்ற குறிப்பு கதைக்கான காலப்பின்னணியையும் நிகழ்வுப்பின்னணியையும் உருவாக்கித் தருகிறது. போனவருடம் (2015) சென்னையைத் தாக்கிய பெருமழைப் பொழிவும் மக்களின் தவிப்புகளும் அரசாங்கம் மக்களைக் கைவிட்ட நிலையில் பேரிடர் என்னும் பாதுகாப்பான சொல்லில் தப்பித்துக்கொண்டு மறக்கவைத்துவிட்டது.
இலக்கியத்தின் முக்கியமான வேலை பெருந்திரளின் மறதிகளை நினைவுக்குக் கொண்டுவருவதும், பெருந்துயரங்களை மறைக்கடிக்க வைப்பதின் பின்னணியில் இருக்கும் உள்நோக்கங்களை, சதிகளை, நபர்களை, அவர்களின் நேயமற்ற நடைமுறைகளை, குற்றவுணர்வற்ற ஆன்மாவோடு அலையும் நிலையைப் பேசுவது.  இவ்விரு கதைகளும் தமிழ்நாட்டின் அண்மைக்காலப் பெருந்துயரமான நிகழ்வுகளைக் குறிப்பாக  நினைவூட்டுகின்றன.
மறக்கடிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் “பெரும் நிகழ்வுகளைப் பேசிய கதைகள் என்ற அடையாளம் கதைகளுக்கு முக்கியத்துவத்தைத் தந்துள்ளன. ஆனால் கூடவே அந்த அடையாளம் முழுமையாக விவாதிக்கப்பட்டுள்ளதா? என்ற ஐயமும் எழுந்தது. முதல் வாசிப்பு ஐயத்தையும் சந்தேகத்தையும் உண்டாக்கிய நிலையில் இரண்டாவது வாசிப்பும் தேவைப்பட்டது. இந்தவாசிப்பில் இவ்விரு கதைகளின் மையப்பாத்திரமாக எதனைக் கருதுவது என்ற கேள்வியோடு வாசிப்பு தொடர்ந்தது.


லக்க்ஷ்மி சரவணக்குமாரின் கதை முன்பகுதியில் மையப்பாத்திரம் எது என்று தீர்மானிக்கமுடியாமல் நகரும் போக்கிலிருந்து பின்பகுதியில், கட்டையன் என அழைக்கப்பட்ட பாண்டித்துரையை மையமாக்குகிறது.. அவனது துன்பியல் முடிவே படையல் என்பதை நிறுவிவிடும் நோக்கில் கதை நகர்த்தப்படுகிறது. ஊர்க்காரர்கள் பக்கம் நிற்காமல் கிரானைட் முதலாளிகள் பக்கம் அவன் நகர்வதற்கான காரணங்களை அடுக்கும் கதை, அவனை அப்பாவியாகச் சித்திரிக்கிறது.  அந்தந்த வேலைக்குச் சாப்பாடு கிடைத்தால் போதுமென வாழும் கட்டையனின் வாழ்க்கை அறியாமையின் உறைவிடம். அய்யனாருக்கு மணியடித்துவிட்டு ஒவ்வொருத்தரிடம் ஒருகைச்சோறுவாங்கித் தின்னும் அப்பாவி அவன் என்கிறது. அந்த அறியாமையும், அப்பாவித்தனமும் முதலாளிகளின் நரபலியாக அவனை ஆக்கிவிட்டது எனக் கதையை நகர்த்தி முடிக்கிறார் லக்க்ஷ்மி சரவணக்குமார்.
மையப்பாத்திரமாக ஓர் அப்பாவியின் துன்பியல் முடிவை முன்வைத்து கதைநகரும்போது, துன்பியல் முடிவை உண்டாக்கிய கூட்டம் மறந்துபோகிறது. ஊர்க்காரர்கள் அவன்மீது கொண்ட விலகலும், அவனது ஒதுங்கலுமே அந்தத் துன்ப முடிவுக்குக்காரணம் என்பதாக மாறுகிறது.  ஒரு அப்பாவியைப் படையலாக ஆக்கும் முனைப்பிலும், ஊர்க்காரர்களை அவர்களது தெய்வமான அய்யனாரோடு இடம்பெயரச் செய்யும் திட்டத்தில் ஈடுபட்ட கிரானைட் கும்பலும் கதாசிரியரின் கவனத்திலிருந்தும் விலகிப்போய்விட்டார்கள். அந்த விலகல், ஆகப்பெரும் பொருளாதார நிகழ்வை முழுமையாக நினைவுபடுத்தாமல், ஒரு அப்பாவியின் துயரமரணத்தை முன்வைக்கும் கதையாக ஆகிவிடுகிறது.
இதனையொத்த விலகலை விநாயகமுருகனின் கதை முதலிலிருந்தே செய்கிறது.  ‘ஞமலிபோல் வாழேல்’ என்ற தலைப்பைத் தொட்டுத்தொட்டு நகரும் கதை, பெருமழையால் இடம்பெயர்ப்பை அடையும் நாயின் கதையாக நகர்கிறது. உயர்மத்திய தரவர்க்கத்தின் மேட்டிமைத்தனமும் மாற்றத்தை ஏற்காத குணத்தையும் குறியீடாக ஏற்றுக்கொள்ளும்  டால்மேஷனின் பின்னணியைச் சொல்லும் விதமாகக் கதைப் பல கிளைகளுக்குள் சென்று திரும்புகிறது. டால்மேஷன் நாயோடு கதாசிரியரின் அனுபவம் என்பதை விவரிப்பதற்கு முன்னால் விவரிக்கப்படும்  பாய்கடைக்கும் நாய்க்குமான உறவு,  நாயைத் துரத்தியது, சினிமா நடிகையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை உண்டாக்குவது, எதிர்வீட்டுக்காரருக்கு அந்த நாய்பற்றிய  முழுத்தகவலும் தெரிந்திருப்பது என விலகல்கள் அடுத்தடுத்து அடுக்கப்பட்டுள்ளன.
ஒற்றை மையத்தை முன்வைத்துக் கதையை நகர்த்துவது மரபான கதைசொல்லல்; தொடர்பற்ற நிகழ்வுகளால் - நான் லீனியர்- கதைகூறல் புதுமையான கதைசொல்லல் என விநாயமுருகன் நினைத்திருக்கலாம். தொடர்பற்ற கதைகூறலில் அடுக்கப்படும் நிகழ்வுகளை இணைக்கும் கருத்துநிலை அல்லது உணர்வு ஒன்று இருக்கும். அதுதான் எல்லா நிகழ்வுகளையும் இணைக்கும் கதைத் தொடர்ச்சி. விநாயகமுருகனின் கதையில் அமைந்துள்ள அந்தக் கதைத் தொடர்ச்சி ஞமலி - டால்மேஷன் என்னும் உயர்மத்தியவர்க்கத்தின் வளர்ப்பு நாய். இதற்குப்பதிலாக பெருவெள்ளம் உண்டாக்கிய பதற்றமும் இயலாமையின் தவிப்பும் கதைத்தொடர்ச்சியை உருவாக்கும் கூறாக இருந்தால், பெருநிகழ்வை முழுமையாகப் பேசிய கதையாக ஆகியிருக்கும். அந்த வாய்ப்பை முழுமையாகத் தவறவிட்டிருக்கிறார் விநாயகமுருகன். ஆனால், “ இந்தக் கதையில் ஒருவிஷய்த்தை மட்டும் நான் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். அன்று அந்தப் பெருவெள்ளத்தில் அவ்வளவு தெருநாய்கள் இறந்துபோனதைப் பற்றியும், மாநகராட்சியினர் பொக்லைன் வைத்து நாய்களை அள்ளிச் சென்றதைப் பற்றியும் ஒருவரிகூட மறுநாள் வெளியான எந்தச் செய்திப் பத்திரிகையிலும் இடம்பெறவில்லை. அவ்வளவு நாய்களையும் அள்ளி, எங்கு சென்று கொட்டினார்கள் என்றும் தெரியவில்லை. நடந்தது எல்லாம் கனவுபோல புகைமூட்டமாகத் தெரிகிறது. இந்தக் கதையை, நான் எங்கேயாவது சொன்னால் யாரும் நம்பக்கூட மாட்டார்கள்”
பெருவெள்ளம் உண்டாக்கிய பதற்றத்தையும் அச்ச உணர்வையும் மறக்கடிக்க நினைத்த அரசதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்கும்விதமாகத் தனது கதையை முன்வைக்க விரும்பியிருந்தால், இதைத்தான் கதைநிகழ்வாக ஆக்கியிருக்கவேண்டும். அதற்குப் பதிலாக டால்மேஷனின் துன்பியல் கதையைச் சொல்லி, வாசிப்பவர்களை உண்மையான நிகழ்விலிருந்து திசைதிருப்பிவிட்டார்.
 பல ஆயிரம்கோடி ரூபாய் அளவுக்கு மதிப்புடைய அரசின் வளம் தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்ட கிரானைட் கொள்ளையையும், இறந்தவர்களின் எண்ணிக்கையையும் இழந்த பொருட்களின் மதிப்பையும்கூடச் சொல்லாமல் திசைதிருப்பிய அரசின் நிலையையும் நினைவூட்டும் இவ்விருகதைகளும் அந்த நோக்கத்தை முழுமையாகச் செய்யவில்லை. இரண்டு கதைகளிலுமே அத்தகைய உணர்வையும் நினைவுகூறலையும் உருவாக்கித்தரும் வாய்ப்புகள் இருக்கின்றன; ஆனால் கதாசிரியர்களின் நோக்கம், ஒரு துன்பியல் முடிவைக் கதைக்கு உருவாக்க வேண்டும் என்பதாக அமைந்ததால், முக்கியத்துவத்திலிருந்து விலகிவிட்டன.   அதனாலேயே சமகால அரசியல் கதைகள் என்னும் வகைப்பாட்டிற்குள் நுழைந்து, அரசதிகாரம் பற்றிய சொல்லாடல்களைப் பேசும் வாய்ப்பைத் தவறவிட்டுள்ளன.  

சிறப்பிதழ் ஒன்றில் இடம்பெறும் சிறுகதைகள், சிறப்பான சிறுகதைகளெனக் கருதப்பட வாய்ப்புண்டு. லக்க்ஷ்மி சரவணக்குமாரின் படையல்கதையும், விநாயக முருகனின்ஞமலிபோல் வாழேல்கதையும் விகடன் 90 என்ற சிறப்பிதழில் அச்சிடப்பெற்றுள்ளன. அவை உருவாக்கிக்கொண்ட பின்னணிகளால் சிறப்பான அல்லது முக்கியமான கதைகளாக ஆகியிருக்கவேண்டியவை.  ஆனால் வர்கள் உருவாக்கிய விலகலினால் - நோக்கப்பிசகினால் - முக்கியத்துவத்தை இழந்துள்ளன.

No comments :