October 30, 2016

வாசிப்பின் மீதான குறிப்புகள்

வாசிப்பைக் காற்றில் கரைத்துவிடுவதற்குப் பதிலாக முகநூலில் பதிவுசெய்யலாம். முகநூலில் ஒருமாதத்திற்குப் பின் தேடுவது சிரமம். அதனால் இங்கேயும் போட்டுவைக்கிறேன்


மனுஷ்யபுத்திரனின் கிளிக்காவியம்:
====================================
புனைகதை வாசிப்பிலிருந்து கவிதை வாசிப்பு வேறுபட்டது என்ற நம்பிக்கை எனக்குண்டு.
நீண்ட கவிதை வரலாறு கொண்ட தமிழ்க் கவிதைகளை வாசிக்கும்போது அதற்கான முன்மாதிரிகளைத் தேடுவதில்லை. என்னளவில் தமிழ்க்கவிதை தனித்தனிப்போக்கைக் கொண்டவை. வெவ்வேறு காலகட்டத்தில் தோன்றிய கவிதைகள் வடிவத்திலும், முன்வைப்புகளிலும் தொடர்பற்றவைகளாக இருக்கின்றன. மரபுக்கவிதைகளில் ஒவ்வொரு வகையினமும் சில நூறாண்டுகளைத் தனக்கானதாகக் கொண்டிருந்தன, ஆனால் வடிவமாற்றத்தோடு அறிமுகமாகிப் புதுக்கவிதைகளென அழைக்கப்பட்ட நவீனக்கவிதைகள் அவ்வளவு நீண்ட காலத்தை எடுத்துக்கொள்ளவில்லை. அதிக அளவாகப் பத்தாண்டுகள்கூட ஒருவகை முன்வைப்புக்கில்லை. திட்டமிட்ட இயக்கமாகச் செயல்பட முனைந்த வானம்பாடிகளின் வாழ்நாளும்கூடப் பத்தாண்டுகள் இல்லை. எழுத்துப்பாணிக் கவிதைகளுக்கும் அதுதான் நிலை. நவீனக் கவிதைகளின் முன்மொழிவுகள் எப்போதும் தற்செயல் தன்மை அல்லது தற்காலிகத் தன்மைகளோடு நகர்ந்துவந்துள்ளன.
ஒரு புனைகதையை வாசித்தவுடன் அந்தப் புனைகதைக்கு ஒரு முன்மாதிரியை நினைத்துக்கொள்வேன். அந்த முன்மாதிரி எழுப்பிய முன்மொழிவை இந்தப் புனைகதைத் தாண்ட நினைக்கிறதா? நீட்டிக்க விரும்புகிறதா? முன்மாதிரியை உருவாக்கும் நோக்கம்கொண்டதா? என்று யோசிப்பேன். அப்படியொரு யோசனையை மனுஷ்யபுத்திரனின் கிளிக்காவியம் எனக்குள் உருவாக்கியது. ஆனந்த விகடனில் 14 பக்கங்களில் விரவிக்கிடக்கும் கிளிக்காவியத்தின் இரண்டு பக்கங்களை வாசித்தவுடன் அதற்கொரு முன்மாதிரி தமிழில் இருப்பதாகத் தோன்றியது. நினைவுக்கு வந்த அந்தக் கவிதை ந.பிச்சமூர்த்தியின் கிளிக்கூண்டு பெயராக மட்டுமல்லாமல் சொல்முறையும்கூட நினைவில் வரக்காரணம். தேடிப் பக்கத்தில் வைத்துக்கொண்டு இரண்டையும் வாசித்தேன்.
கிளிக்காவியத்திற்கும் கிளிக்கூண்டிற்குமிடையே அடிப்படையான வேறுபாடொன்று உண்டு. மனுஷ்யபுத்திரனின் கவிதை கிளிகளை மனிதனின் புறத்தே நிறுத்துகிறது. ந.பிச்சமூர்த்தியின் கிளிக்கூண்டு, கிளியை மனிதனின் அகத்தே அலையும் ஒன்றாக நிறுத்தியுள்ளது. கிளியின் இடம் இரண்டு கவிதைகளிலும் வேறுவேறு என்றாலும் கவிதைச்செயலை நகர்த்த உதவும் சொற்கள் வழி உருவாகும் தொனியும் மெய்ப்பாடுகளும் ஒத்தனவாக இருக்கின்றன.
கிளியாக அலையும் ஆன்மாவைக் கூண்டாகிய உடலில் சுமந்தலையும் மனிதனின் விடுதலையை ஆன்மீகத் தேடலின் பரிமாணங்களோடு முன்வைக்கும் ந.பிச்சமூர்த்தியின் தொனியைப் பற்றிக்கொண்ட மனுஷ்யபுத்திரன், தனது கவிதைகளின் இயக்கநிலைக்கேற்ப வேறு தளத்திற்கு நகர்த்திவிடுவதைச் சரியாகச் செய்துள்ளார். வளர்ப்புக்கிளிகள் கிளிகளாகவும் இருக்கின்றன; மனிதச் சாயல்களோடும் இருக்கின்றன. நடப்புச் சூழலோடும், வாழ்க்கையின் சிக்கலான கேள்விகளோடும் கிளிகள் அடைபட்டுக்கிடக்கின்றன கூண்டுக்குள்.
மனிதர்கள் ஏன் பறவைகளையோ, நாய், பூனை போன்ற பிராணிகளையோ வளர்க்கவேண்டும்? அவர்களின் இரக்கத்தைக் காட்ட வேறுமார்க்கங்கள் இல்லையா? அப்படி வளர்ப்பதென்பது வளர்க்கமுடியாத மனிதர்களைக் குற்றவுணர்வுக்குள் தள்ளும் நோக்கம் கொண்டதா? அல்லது தனக்குக் கிடைக்காத பற்றுக்கோடொன்றைத் தேடும் மனநிலையா? இப்படியான கேள்விகளை எழுப்பிக்கொண்டிருக்கும் கவிதைக்குள் அடைகாக்கப்படும் மூன்று கிளிகளின் ஆறு இறகுகளின் வழி தொடர்கிறது இன்னொருவகையான ஆன்மத்தேடல்.
தன்னையே இரண்டாகப் பாவிக்கும் கவிதைச்செயலின் தொடர்ச்சியாக இல்லாமல், தனக்கும் இயற்கைக்கும், தனக்கும் பிற உயிரினங்களுக்குமிடையேயான பாவனைகளை படிமத்தொடர்ச்சியாகவும் கதைநிகழ்வாகவும் ஆக்கியிருக்கும் மனுஷ்யபுத்திரனின் கிளிக்காவியம் தரும் அனுபவம் புத்தம் புதியதல்ல. தமிழின் நீள்கவிதைகளின் தொடர்ச்சியில் கிடைக்கும் புதுவகை முன்மொழிபு.

கதையாக்கப்பட்டுள்ள கட்டுரை
==================================
ஆதியிலே வார்த்தை இருந்தது என்றொரு வாக்கியம் வேதாகமத்தில் இருக்கிறது. அதனைக்கொஞ்சம் மாற்றி “ ஆதியிலே மாம்சம் இருந்தது” என்றொரு நாடகத்தை எழுதினார்கள் ப்ரேம்; பிரேதா என்ற பெயரில் எழுதிய இரட்டையர்கள். அதன் ஒலியொழுங்கோடு
இம்மாதக்காலச்சுவடில் வந்துள்ள அந்தக் கதையின் தலைப்பு - ஆதியிலே காட்டாறு ஓடியது- என்பது.
நமது சூழலைப் பாழ்படுத்தியது யார்?
இது அரசியல் விமரிசனக்கட்டுரைக்கான கேள்வி. இதற்குப் பதில்களை எழுதினால்,
அரசியல்வாதிகள், அவர்களுக்கு உதவும்வகையில் விதிகளை வளைத்து எழுதும் அரசு அதிகாரகள், தன் வேலையைச் செய்வதற்கான சம்பளத்தைப்பெற்றுக்கொண்டு வேலை செய்யாமல் தவிர்க்கும் கடைநிலை ஊழியரெனப் பதில்களை அடுக்கிவிட வாய்ப்புள்ளது. ஆனால் அந்தக் கேள்வியைத் தனது கதையின் உரிப்பொருளாக - கதையின் மைய வினாவாக ஆக்கிக்கொண்டு - நானும் தான் காரணம் எனத் தனியொரு மனிதன் நினைப்பதாகவும், அதனை மாற்றுவதற்குத் தானே முன்கையெடுப்பேன் என நினைக்கும் ஒரு மனிதனை எழுதிக்காட்டியிருக்கிறார்.
“அவரை வழியில் யாரும் கண்டுகொள்ளவில்லை. அப்படியே கவனித்திருந்தாலும் சீருடையற்ற துப்புரவுப் பணியாளர் ஒழுங்காக வேலை செய்கிறார் என்றுதான் எண்ணியிருப்பார்கள். எல்லாம் முடிந்ததும் மண்வெட்டியுடன் மேலே ஏறி வீட்டுக்குத் திரும்பினார். வெளியில் அங்கங்கே சிறிய குன்றுகளைப்போல் சேறு சகதியுடன் குப்பைகள் குவித்திருந்தன. வீட்டெதிரிலிருந்த நீர் முழுவதுமாக வடிந்துவிட்டிருந்தது. கால்வாயில் அடியிலிருந்த மண்ணும் மணலும் தெளிவாகத் தெரிய கழிவுநீர் ஓடிக்கொண்டிருந்தது. சுந்தரமூர்த்திக்குப் பழைய கானாறு தன்னால் மீண்டும் மீட்டெடுக்கப்பட்டுவிட்ட்தைப்போல் தோன்றியது” -கதையின் முடிவு இது.
அமைப்பின் மீதும், அமைப்பின் பகுதியாக இருக்கும் மனிதர்கள் மீதும் விமரிசனத்தை முன்வைக்கும் கதைகளையே அதிகம் வாசித்திருக்கிறோம். அந்த எழுத்துப்பாணிக்கு மாறாகத் தனிமனிதனின் தன்னிலை மாற்றத்திலிருந்து சமூக, சுற்றுச்சூழல் மாற்றத்தைத் தொடங்குவது சரியாக இருக்கும் என நினைக்கும் கதையாக இந்தக் கதை முன்வைக்கப்பட்டுள்ளது. கதை எழுதத் தெரிந்த கைகளுக்குப் புல்லும் அல்ல; தேங்கிநிற்கும் சாக்கடையும்கூடக் கதைப்பொருள்தான் எனக்காட்டியிருக்கிறார் மு.குலசேகரன்..
=======================================
ஆனந்த விகடனில் வந்திருக்கிற போகன் சங்கரின் " முக்திபவனம்" கதையாக மாற மறுத்துக்கொண்டே இருக்கும் ஒரு பிரதி. 'நான்' என்னும் தன்மைக்கூற்று எங்காவது ஒரு பெயரடையாளத்தை ஏற்றுவிடும் என்ற எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படவில்லை. அதனால் நாடோடியாக ஊர்சுற்றும் அல்லது அத்வைதத்தின் அர்த்தத்தைத் தேடும் கவியின் தேடல் பற்றிய கட்டுரையாக நிற்கிறது.
மலநாற்றம் தொடரும் பிராமணருக்கேனும் பெயர் தருவார் என எதிர்பார்த்ததும் நடக்கவில்லை. அவர்கள் போகும் உடுப்பி ஓட்டல்காரருக்கும் அவரது மனைவிக்கும்கூடப் பெயரில்லை என்பதால், பிராமண - அபிராமணக் குரோதத்தைச் சொல்லும் வெளிப்பாடு எனத் தோற்றம் தருகிறது.
மனித உடலில் வீசும் நாற்றங்களைக் கண்டறியும் வித்தைகூடிய மூக்குத்தி அணிந்த பெண்ணிடம் தனது உடலிலிருந்து ஏதாவது நாற்றம் வருகிறதா? எனக்கேட்கும்போது போகன் சங்கரின் கவிதையை வாசிப்பதாகவே நிற்கிறது. கவிகள் எழுதும் கதைகள் இப்படியாகத் தான் இருக்குமோ?
==================================================
இந்தமாதம் உயிர்மையில் வந்த எஸ்.ராமகிருஷ்ணனின் “சைக்கிள் கமலத்தின் தங்கை” யைப் பற்றி எழுதலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கும்போதே விகடன் தடத்தில் வந்துள்ள தெய்வீகனின் “ அடுத்த கட்டப் போராட்டம்” கதை கூடுதல் அழுத்தமான கதையாகத் தோன்றியது. அதனோடு சோபா சக்தியின் ”மிக உள்ளக விசாரணை” கதையும் சேர்ந்துகொண்டது. சிறந்த கதைகள் படிக்கக் கிடைத்த இந்த மாதத்தின் முதல் பாதி மகிழ்ச்சியாகக் கழிந்துவிட்டது. இல்லையென்றால் ” ரெமோ, றெக்கை” கச்சடாக்களைச் சினிமா என்று நம்பிப் பார்க்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கும். பார்த்திருந்தால் அவைகளைப் பற்றி எதையாவது உளறவேண்டிய நெருக்கடியும் ஏற்பட்டிருக்கும். கட்டாயங்களும் நெருக்கடிகளும் தவிர்க்கப்படுதல் மனதுக்கும் நல்லது; உடம்புக்கும் நல்லது.
துன்பியலின் இன்பியல்
==========================
'உரையாடல்களால் கதையை நகர்த்துவது'
இதைப் பலவீனமாகப் பலர் நினைக்கும் கூடும். முழுவதும் உரையாடல்களாக இல்லாமல், நிகழ்வு விவரிப்புக்குப்பின் இடம்பெறும் உரையாடல்கள் கதைக்கு வலுச்சேர்க்கும் தன்மைகொண்டன எனச் சொல்வதை வாசித்திருக்கிறேன். இந்தக் கூற்று எல்லாவகைக் கதைகளுக்கும் பொருந்தும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. தனது நிலைபாட்டை, வலியைச் சொல்வதற்காக எழுதப்படும் கதைகளில் உரையாடல்தான் பலமான கூற்றுமுறை. ஒவ்வொருகதையிலும் ஒருபெண்ணின் இருப்பை -நிலையைச் சொல்லிவிடவேண்டுமென நினைக்கும் கதாசிரியர் தமயந்திக்கு அதுதான் பாணி.
தமயந்தி முன்வைக்கும் பெண்கள் பேசிக்கொண்டே இருப்பவர்கள். ஆணிடம் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள வலிமையான உரையாடல்களைச் செய்பவர்கள். நாடக உரையாடல்களைப் போலல்லாமல், அசைவும் உணர்வும் கலந்த உரையாடல்களால் மெல்லமெல்ல நகர்ந்து துன்பியலுக்குள் இருக்கும் இன்பியல் காட்சியைக் காட்டி அங்கேயே நின்று நிதானமாக நகரச்செய்யும் சித்திரமாக அவரது கதைகள் உருக்கொள்ளும்.. துன்பியலின் வலியை இன்பியலாக்குவதில் ஓரிடம் முகிழ்த்து நிற்பதில் வாசகர் மனம் லயிக்கவேண்டும். அதற்குக் கதைக்குள் இருக்கும் அந்த உரையாடலைக் கண்டடைய வேண்டும்.
இந்தவார ஆனந்தவிகடனில் தமயந்தி எழுதியிருக்கும் “ தடயம்” கதையில் நான் கண்டுபிடித்த இடம்::
"உன் புருஷன் நலமா..உன் பொண்டாட்டி எப்பிடின்னு நீயும் நானும்"
"அதுக்கென்ன செய்ய... எல்லாத்தையும் மறக்கத்தான் செய்யணும்"

"மறந்துட்டியா?"
நீண்ட இடைவெளிக்குப்பின் காதலித்தவர்கள் சந்தித்துக்கேட்டுக்கொள்ளும் இந்த உரையாடலின் காட்சி உருவாக்கும் வலி, இன்பியலின் துன்பியலா? துன்பியலா?
கதையை வாசிக்கும்போது இரண்டும் மாறிமாறித் தோன்றுவதுதான் தடயம், கதையை நினைவில் வைக்கச்சொல்கிறது.
ஒதுக்குதல் அல்ல; உள்வாங்குதல்
====================================
இந்த மாத விகடன் தடம் இதழில் மனுஷ்ய புத்திரன் எழுதியுள்ள கட்டுரை - எமக்குத் தொழில் கவிதை- ஏற்கத்தக்க முறையியலைப் பின்பற்றியிருக்கிறது. சிறுபத்திரிகை மரபின் முறையியல் எப்போதும் புறந்தள்ளி முன்னே பார்க்கும் முறையியல். தன்னையொத்த ஆளுமைகளை - தங்கள் குழுவை - தான் நம்பும் இலக்கியப்பார்வையை முன்மொழிந்துவிடும் நோக்கத்தோடு மற்றவற்றை ஒதுக்கிவிட்டு முன்மொழியும் கட்டுரைகளையே சிற்றிதழ் மரபு உருவாக்கியிருக்கிறது. அதன் வழியாகவே வளர்ந்த கவி மனுஷ்யபுத்திரன், அதிலிருந்து விலகித் தமிழின் கவிதைப் பெரும்பரப்பில் மிதக்கும் ரசிக்கத்தக்க வண்ணங்களை -குமிழிகளை அடையாளப்படுத்திக் காட்டியிருக்கிறார்.
இந்தக் கட்டுரையில் மனுஷ்யபுத்திரன் பயன்படுத்தும் சில முன்னொட்டுகள் குழப்பங்களையும் பொருத்தமின்மையையும் கொண்டிருக்கின்றன என்ற நிலைப்பாடு எனக்குண்டு. என்றாலும் அவர் பின்பற்றியிருக்கும் உள்வாங்கும் முறையியலுக்காகவே பாராட்டுகிறேன்; பரிந்துரைக்கிறேன்.

No comments :