பண்பாட்டு நிலவியலும் திணைக்கோட்பாடும்

முன்னுரை:

தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்களைப் பண்பாட்டு நிலவியல் என்னும் புதுவகைக் கோட்பாட்டோடு தொடர்புபடுத்திப் பேசும் இக்கட்டுரையின் முதல்பகுதி பண்பாட்டு நிலவியல் என்னும் மேற்கத்தியப் புதுவகைக் கோட்பாட்டை விளக்குகிறது. தொடர்ந்து தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்களைப் புரிந்துகொள்வதற்குப் பயன்படும் அகப்பொருள், புறப்பொருள் இலக்கணங்களை இணைத்து உருவாக்கும் பாவியல் அல்லது கவிதைக் கோட்பாடு விளக்கப்படுகிறது. அதன் வழியாக தமிழின் கவிதையியல் கோட்பாடான திணைக்கோட்பாடும் பண்பாட்டு நிலவியல் என்னும் சிந்தனைமுறையும் எந்தெந்த விதங்களில் ஒத்துப்போகின்றன என்பதை இணைத்துக்காட்டுகிறது; விலகல்களையும் சுட்டிக்காட்டுகிறது. தொடர்ந்து இக்கோட்பாட்டைப் பயன்படுத்தித் தமிழியல் ஆய்வு எந்தெந்தப் பரப்பிற்குள் நுழையமுடியும் என்பதைக் கோடிட்டுக் காட்டுகிறது.
பிறதுறை அறிவும் இலக்கியமும்:


மனிதர்களின் வாழ்க்கையோடு தொடர்புடைய சமூக அறிவியல் மற்றும் அறிவியல் புலங்களைப் பயன்படுத்திக் கலை இலக்கியத் திறனாய்வுகளைச் செய்ய முடியும் என வளர்ச்சியடைந்துள்ள திறனாய்வு வழிகாட்டியுள்ளது. இலக்கியத்திற்கே உரிய விதிகளோடு பிறதுறை அறிவைப் பயன்படுத்திச் செய்யும் திறனாய்வு முறையை திறனாய்வுமுறை (Critical Method), என்பதாக விளக்காமல் திறனாய்வு அணுகுமுறை (Critical Approach) என்பதாக விளக்குகின்றனர் மேற்கத்தியத் திறனாய்வாளர்கள் (Barry Peter, Beginning Theory). சமூகஅறிவியல் துறைகளான மானுடவியல், சமூகவியல், பொருளியல், மொழியியல், உளவியல், வரலாற்றியல் போன்றன இலக்கியத் திறனாய்வுக்குப் பயன்பட்டதன் தொடர்ச்சியாகவே மானுடவியல் அணுகுமுறை, சமூகவியல் அணுகுமுறை, பொருளியல் அணுகுமுறை (மார்க்சிய அணுகுமுறை), மொழியியல் அணுகுமுறை, உளவியல் அணுகுமுறை, வரலாற்றியல் அணுகுமுறை, போன்றன இலக்கியத் திறனாய்வின் பகுதிகளாக மாறியுள்ளன. இதைப்போலவே அறிவியல் துறைகளான அமைப்பியல், சூழலியல் ஆகியவற்றைப் பயன்படுத்திக்கொண்ட திறனாய்வு அமைப்பியல் அணுகுமுறை, சூழலியலில் அணுகுமுறை எனப் பெயரிட்டுக் கொண்டுள்ளன. இந்த வரிசையில் அண்மையில் பயன்பாட்டுக்கு வந்துள்ள திறனாய்வு அணுகுமுறையாகப் பண்பாட்டு நிலவியல் அணுகுமுறையைச் சுட்டலாம்.

உள்ளடக்கமும் அணுகுமுறைகளும்:

இலக்கிய உருவாக்கம் என்பது மனிதர்களின் ஆதாரப்பிரச்சினையின் வெளிப்பாடு என்பதில் வெவ்வேறு கருத்தியல் நிலைபாட்டாளர்களும் ஒன்றுபடுகின்றனர். அதனைக் கண்டறிவதற்கு இலக்கியப்பிரதி மட்டுமே போதுமானவையல்ல; அவை உருவாகக் காரணமான கருத்தியலைக் கணக்கில் கொள்ளவேண்டும் என்ற நிலைபாடே திறனாய்வு அணுகுமுறைகளை முன்மொழிந்தன.

மரணத்தைக் கண்டு பயப்படுதலே மனிதர்களின் ஆதாரப் பிரச்சினை என்பது ஒருவகைக் கருத்தியல். இக்கருத்தியலின் தோற்றுவாய்களாகவும் காரணிகளாகவும் இருப்பன சமயங்களும், அவற்றின் பரப்புரைகளும், அவை முன்மொழியும் தீர்வுகளும் ஆகும். இமானுவேல் காண்ட் என்ற நவீன அறிஞர் இதனை விரிவாகப் பேசியுள்ளார். மனித அனுபவங்களுக்குப் பின் இருக்கும் காரணிகள் பற்றிப் பேசும்போது மரணபயம், மரணத்திற்குப் பின்னான வாழ்க்கையைத் தேடுதல் என்பதே மனிதனை இயக்குகிறது என விவரிப்பார். இதிலிருந்து உருவான இலக்கிய அணுகுமுறை அறவியல் அணுகுமுறையாக அறியப்படுகிறது.

இரண்டாவதாக இருக்கும் இன்னொரு கருத்தியல் மனிதர்களின் எதிர்பால் கவர்ச்சியும் இச்சையுமே வாழ்க்கையின் காரணிகளாக இருக்கின்றன என்பது. அதைத்தான் இலக்கியம் எழுதிக் காட்டியிருக்கிறது என்பது ப்ராய்டியத்தை இலக்கியப்பார்வையாக முன்மொழிபவர்களின் நிலைப்பாடு. அதிலிருந்தே உளவியல் அணுகுமுறையும் அதன் கிளைகளான தொல்படிமவியல் அணுகுமுறை போன்றன உருவாகி இருக்கின்றன. மூன்றாவதாகவும் முக்கியமானதாகவும் கருதப்படும் கருத்தியல் மனிதர்களின் உணவுத்தேவை அல்லது பொருட்தேவை உருவாக்கும் நெருக்கடிகளை மையப்படுத்துவது. பொருளாதார உடைமை காரணமாக மனிதர்கள் வர்க்கமாகப் பிளவுபட்டிருக்கிறார்கள் எனவும், ஆளும்வர்க்கம், ஆளப்படும் வர்க்கம் என்ற இருபெரும் பிளவுக்குள்ளான முரணே மனிதவாழ்க்கையை நகர்த்திவந்துள்ளது; அவற்றையே இலக்கியங்கள் எழுதிக்காட்டின என்பது அந்தக் கருத்தியலின் அடிப்படை. கார்ல் மார்க்சின் அடிப்படை விளக்கங்களிலிருந்து உருவான இந்தக் கருத்தியலின் கொடையே சமூகவியல் அணுகுமுறையும், மார்க்சிய அணுகுமுறையும். அதன் கிளைகளே பெண்ணியம், தலித்தியம், விளிம்புநிலைப்பார்வை போன்றனவாக வளர்ந்துள்ளன.

மொழியைக் கண்டுபிடித்ததே மனித ஆற்றலின் முதல் சாதனை. அதுவே எல்லாவற்றையும் தீர்மானிக்கும் கருவியாக இருக்கிறது என்ற கருத்தியல் வழி உருவான அணுகுமுறைகள் பல. மொழியியல் அணுகுமுறையாகவும், அமைப்பியல், பின்-அமைப்பியல் அணுகுமுறையாகவும் வளர்ந்த வளர்ச்சிக்குப் பின்னணியாக இருப்பன மொழி பற்றிய பார்வைகளே. இந்த வரிசையில் உலகப் பல்கலைக்கழகங்களில் சொல்லாடலாக மாறியிருக்கும் அண்மைப்படிப்பு அல்லது அணுகுமுறை, பண்பாட்டு நிலவியல் (Cultural Geography ) என்பது. அதனைக் கொஞ்சம் அதிகமாக விளங்கிக் கொள்ளலாம்.


நிலவியலும் நிலவியல் பண்பாடும்:

நிலவியல் (Geography) என்பது தொடக்க நிலையில் சமூக அறிவியலின் ஒரு பிரிவாக அறியப்பட்டது. பூமிப்பரப்பின் இருப்பு, அவற்றை உருவாக்கும் தட்ப வெப்பநிலை, அதன் விளைவுகளால் ஏற்படும் சூழல் மாற்றங்கள், தாவரங்கள் குறித்த அறிவு, உயிரினங்களின் வாழ்க்கை முறை, அவற்றை மனிதர்கள் தங்களுக்கானதாக மாற்றும் முறைகள். அதனால் ஏற்படும் பாதிப்புகள் என நிலவியல் புதிய பரிமாணங்களை அடைந்துவருகிறது. இதன்மூலம் சமூக அறிவியல் துறை என்பதிலிருந்து விலகி இயற்பியல் துறையோடும் சூழலியல் துறையோடும் உறவுகொண்டு விரிவடைவதை மேற்கத்திய பல்கலைக் கழகங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன

புவிபரப்பின் பல்வேறு நிலவெளிகளின் (Landscape) இயல்புநிலையை விளக்கும் நிலவியல், புவியை வாழும் இடமாகவும், வாழிடங்களைச் சார்ந்த இடமாகவும் விளக்குகிறது. மனிதர்கள் குறிப்பிட்ட நிலவெளிகளில் தொடர்ச்சியாக வாழத் தொடங்கும்போது அந்த வெளி சார்ந்து பழக்க வழக்கங்களும் நடைமுறைகளும் உருவாகின்றன. அவையே தொடர்ச்சியாகப் பின்பற்றப்படும் போது பண்பாட்டுக் கூறுகளாக மாறுகின்றன. இந்த வகையில் பண்பாட்டுக் கூறுகள் குறிப்பிட்ட நிலவெளிகளோடு பின்னிப்பிணைந்து அந்நிலவெளிகளுக்குக் குறிப்பான அடையாளங்களைத் தருகின்றன. நிலவெளியின் குறிப்பான அடையாளங்களை மனிதர்கள் தங்களின் வாழ்க்கையோடு தொடர்புடைய அடையாளமாகக் கட்டமைக்கின்றனர்.

மனித வாழ்க்கைக்குப் பயன்படும் வெளிகள் பல்வேறு விதமானவை. அவற்றை நிரந்தர வெளிகள் (Permanent Space) எனவும் தற்காலிக வெளிகள் (Temporary Space) எனப் பிரிவுகளாக பிரிக்கலாம். ஒரு மனித உயிரியின் நிரந்தர வெளியின் மிகச் சிறிய கூறு குடியிருப்பு. தமிழில் வீடு, மனை, இல்லம் போன்ற சொற்களால் குறிப்பிடப்படும் குடியிருப்பு ஒவ்வொரு பண்பாட்டுக் கூறுகளாலும் அர்த்தப்படுத்தப்படுகிறது. குடும்பம் என்கிற சமூக நிறுவனத்தின் நிரந்தர வெளியே இல்லம். இல்லம் தனிநபருடைய இருப்பிடமன்று;குடும்பமாக வாழ்தலின் அடையாளம். ஆணும் பெண்ணும் இணைந்து தங்களுடைய வாரிசுகளை உற்பத்தி செய்வதற்காகத் தங்கியிருக்கும் விதமாக இல்லம் என்னும் வெளி அடையாளப் படுத்தப்படுகிறது. இல்லம் என்னும் ஒரு புவிப் பரப்பு, குடும்பம் என்னும் சமூகநிறுவனத்தோடு இணைகிறபோது பண்பாட்டு வெளியாக மாறுகிறது. இந்த எடுத்துக்காட்டின் வழியாக நிலவியல், பண்பாட்டு நிலவியலாக மாறுவதை விளங்கிக் கொள்ளலாம். இல்லம் என்னும் நிரந்தர அடிப்படைப் பண்பாட்டு வெளியைப் போலவே, இல்லங்களால் உருவாக்கப்படும் தெருக்கள், தெருக்களால் உருவாக்கப்படும் ஊர் அல்லது நகரம், ஊர் மற்றும் நகரங்களைக் கொண்ட மாநிலம், மாநிலங்களின் தொகுதியான நாடு என ஒவ்வொன்றும் பண்பாட்டு வெளிகளாக விரிகின்றன;மாறுகின்றன. மாறும் நிரந்தரமான நிலவெளிகளைத் தனிமனிதனும் கூட்டமும் உரிமையாகவும் உடைமையாகவும் கருதுகின்றன. அவையே நிரந்தரமான பண்பாட்டு வெளிகளை உருவாக்கும் என்பதை இதனோடு இணைத்துப் புரிந்து கொள்ள வேண்டும்.

நிரந்தரமான நிலவெளிகளைப் போல மனிதர்களின் வாழ்க்கைக்கு தேவையான தற்காலிக நிலவெளிகளும் உள்ளன. நமது சமகாலத்தில் மனிதர்கள் ஒவ்வொரு நாளும் நிரந்தர வெளிகளோடும், தற்காலிக வெளிகளோடும் உறவு கொள்ளவேண்டியவர்களாக இருக்கிறார்கள் என்பதைப் பண்பாட்டு நிலவியல் மையப்படுத்துகிறது. நிரந்தர வெளியான இல்லத்திலிருந்து அன்றாட வாழ்க்கைத் தேவைகளுக்காக தற்காலிக நிலவெளிகளுக்குச் சென்று வரவேண்டியவர்களாகச் சமகால மனிதர்கள் கட்டாயப் படுத்தப்படுகின்றனர். கல்வியின் பொருட்டுப் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள் போன்ற தற்காலிக வெளிகளுக்கு போய்வர வேண்டியுள்ளது. வாழ்க்கைக்குத் தேவையான பணத்தைப் பெறும்பொருட்டு, பணியிடங்களான அலுவலகங்கள், தொழிற்சாலைகளுக்கும் சென்று வரவேண்டிள்ளது. உடல் நலத்தை பாதுகாப்பதற்காக மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டியுள்ளது. இவை போலச் சிறியதும் பெரியதுமான தற்காலிக வெளிகளுக்குள் மனிதர்கள் நுழைவதும் வெளியேறுவதுமாக இருக்கின்றனர். இவ்வாறு நுழைந்து வெளியேறுவதன் மூலமாகக் குடும்பம் என்னும் சமூக நிறுவனத்தின் உறுப்பினர்களாக இருக்கும் மனிதர்கள் தற்காலிக வெளியில் இயங்கும் தற்காலிக உறுப்பினர்களாக மாறி, திரும்பவும் குடும்ப உறுப்பினர்களாக மாறுகிறார்கள். இதன்மூலம் நிரந்தர நிலவெளி உருவாக்கும் பண்பாட்டுக் கூறுகளோடு, தற்காலிக நிலவெளி உருவாக்கும் பண்பாட்டுக் கூறுகளும் தாக்கம் கொள்கின்றன என்பதைப் பண்பாட்டு நிலவியல் விரிவாக விளக்குகிறது.

மனிதர்களே விரும்பி நுழைந்து திரும்பும் தற்காலிக நிலவெளிகளான கல்வி நிறுவனங்கள், பணியிடங்கள் போன்றவை மட்டுமல்லாமல் சுற்றுலாத் தலங்கள், கோயில்கள், ஓய்வுக்கான பூங்காக்கள்,கடற்கரைகள், கலைகளின் இயங்கு வெளிகளான அரங்குகள் போன்றனவும் தற்காலிக வெளிக்குள்ளேயே அடங்கும். மனிதர்களின் விருப்பமின்றிச் சில நேரங்களில் காவல் நிலையங்கள், சிறைகள் போன்ற நிலவெளிகளுக்கும் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுவதுண்டு. குடும்பம் என்னும் சிறு சமூக அமைப்பின் மறுதலையாக அரசு என்னும் அமைப்பைப் பெரும் நிறுவனமாகச் சொல்லலாம். மொத்த சமூகத்தின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் பொறுப்பு அதற்கு உண்டு. அதற்குக் கட்டுப்பட்டு நடப்பவர்களுக்காகக் கல்வி நிறுவனங்கள், பணியிடங்கள், மருத்துவமனைகள் போன்றவற்றை உருவாக்கித் தரும் அரசு, கட்டுப்படாத மனிதர்களுக்காகச் சில தற்காலிக நிலவெளிகளை உருவாக்கி வைத்துள்ளன. காவல்நிலையங்கள், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் போன்றவற்றை அத்தகைய நிலவெளிகளாகக் குறிப்பிடலாம். இத்தகைய நிலவெளிகளுக்குள் சென்று வர வேண்டிய மனிதர்களோடும், சில வகையான பண்பாட்டு அடையாளம் ஒட்டிக் கொள்ளும். அடையாளமாகிவிடும்.


இலக்கியமும் பண்பாட்டு நிலவியலும்:


மனிதர்களை, மனிதர்களின் வாழ்வெளியால் உருவாக்கப்படும் பண்பாட்டுக் கூறுகளோடு இணைத்து ஆய்வு செய்யவேண்டும் என வலியுறுத்தும் பண்பாட்டு நிலவியல் அதனளவில் இலக்கியத்தோடு நேரடித் தொடர்பு கொண்டது அல்ல. ஆனால் மனிதர்களின் வாழ்க்கை மற்றும் மன அமைப்புகளே இலக்கிய உருவாக்கத்திற்கு காரணம் என்னும் பொது அடிப்படையில் பண்பாட்டு நிலவியல் இலக்கியத்தோடு உறவுடையதாக மாறுகிறது. எனவே பண்பாட்டு நிலவியல் எவற்றையெல்லாம் தன்னுடைய ஆய்வுக்கருவியாகவும் வெளியாகவும் கருதுகின்றதோ, அவற்றையெல்லாம் இலக்கியத் திறனாய்வு தனக்கான கருவியாகக்கொள்ளமுடியும். நிலப்பரப்பிற்குப் பதிலாக இலக்கியப் பிரதி/பனுவல் என்னும் பரப்பிற்குள் தேடி தொகுத்துக்கொண்டு பண்பாட்டு நிலவியல் இலக்கிய அணுகுமுறையாக - புதுவகை அணுகுமுறையாக மாற்றம் பெற்றுள்ளது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

துறையின் பகுதிகளாக அறியப்பட்ட மானுடவியல், உடல்கூறு மானுடவியல் (Physical Anthrapology), பண்பாட்டு மானுடவியல் என தொடக்கநிலையில் வகைப்படுத்தப்பட்டன. தற்போது அவையிரண்டையும் இணைத்துப் பண்பாட்டு மானுடவியல் என்னும் துறையாக மாற்றிப்பயில்கின்றனர். அதுவே திறனாய்வின் பகுதியாக மாறும்போது மானுடவியல் அணுகுமுறை என்று வடிவம் கொண்டது. இதைப்போலவே நிலவியலும் இயற்பியல் நிலவியல் (Physical Geography), எனவும், பண்பாட்டு நிலவியல் எனவும் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு இலக்கிய திறனாய்வின் பகுதியாக மாறியுள்ளது. அம்மாற்றமே பண்பாட்டு நிலவியல் அணுகுமுறை என வடிவம் கொண்டுள்ளது.

பண்பாட்டு நிலவியல் என்பது நிலவியல் என்னும் புலத்திற்குள் இடம்பெறும் உட்பிரிவுத்துறை ஆகும். அது பண்பாட்டு உற்பத்தி, அதற்கான விதிகள் ஆகியவற்றைப் பற்றிக் கவனம் செலுத்துவதோடு, அவற்றின் வெளியைக் குறுக்கும்நெடுக்குமாக நிறுத்திக்காட்டுவதோடு அவற்றிற்கு இடையேயுள்ள உறவுகளையும் விளக்க முனைகிறது. பொருளாதார உற்பத்தி முறைகள், அரசின் கட்டமைப்புகள், கலை, இசை, கல்வி, மொழி, சமயம் போன்றனவற்றை முக்கியமான பண்பாட்டு நடவடிக்கைக் கூறுகளாகக் கருதுகிறது. இவை எவ்வாறு? அல்லது ஏன்? மக்களுக்குத் தேவையாக இருக்கின்றன. அந்தத் தேவை குறிப்பிட்ட வெளி சார்ந்த தேவையாக இருக்கின்றனவா? நிரந்தரத் தேவைகளாக இருக்கின்றனவா? எனப் பேசுகிறது. இந்தப் பின்னணியில் உலகமயமும் இதன் கவனத்திற்குரிய பொருளாக ஆகியிருக்கிறது. ஏனென்றால் இவ்வம்சங்கள் அனைத்தும் உலகமயத்தின் பின்னணியில் ஓரிடம் விட்டு இன்னோர் இடத்திற்குப் பயணம் செய்யும் நெருக்கடிகளைச் சந்திக்கின்றன.

பண்பாட்டு நிலவெளிகளும் பண்பாட்டு நிலவியலின் முக்கியக் கூறுதான். ஏனென்றால் மனிதர்கள் வாழ்வதற்கான இயல்பியல் சூழலை அந்நிலவெளிகள் தான் தருகின்றன. இக்கூறு முக்கியத்துவம் உடையது என்றும் சொல்லலாம். ஏனென்றால் பண்பாட்டுக் கூறுகளுக்கான எல்லை அல்லது விரிவாக்கத்தை உண்டாக்குவதில் நிலவெளிக்கு முக்கியமான பங்குண்டு. எடுத்துக்காட்டாகக் கிராமப்புறத்தில் வாழ்பவர்கள் நகரப்புற மனிதர்களை விடவும் இயற்கையான சூழலோடும், அச்சூழலில் உள்ள பண்பாட்டு நடவடிக்கைகளோடும் அதிகப்படியான பிணைப்புக் கொண்டவர்கள் என்பதை நாம் அறிவோம். இந்த உறவை மனித- நில உறவு எனப் பண்பாட்டு நிலவியல் குவிமையப்படுத்துகிறது. மனிதர்கள் இயற்கை மீது ஏற்படுத்தும் தாக்கம், இயற்கை மனிதர்கள் மீது ஏற்படுத்தும் தாக்கம், சூழல் பற்றி மனிதர்கள் உருவாக்கிக் கொள்ளும் புரிதல் என்பனவும் இங்கே முக்கியமாகின்றன.

பண்பாட்டு நிலவியலின் தோற்றம்

பண்பாட்டு நிலவியல் புலம், அமெரிக்காவிலுள்ள பெர்க்லி நகரத்துக் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் கார்ல் சாசரின் பொறுப்பில் முக்கியத் துறையாக வளர்த்தெடுக்கப்பட்டது. அவர் நிலவெளிகளைப் பண்பாட்டின் அலகுகளாகப் பார்க்கும் பார்வையை அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக வளர்த்தெடுத்தார். “பண்பாடு, நிலவெளிகளால் வளர்த்தெடுக்கப்படுகிறது என்பது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு தூரம் உண்மையானது நிலவெளிகள் பண்பாடுகளால் உருவாக்கப்படுகிறது என்பதும்” என்பது அவரது முக்கியமான கூற்று. இயல்பியல் நிலவியலில் முக்கிய நபராகக் கருதப்படும் அவரது கூற்றும், பணிகளும் பண்பாட்டு நிலவியலை எண்ணிக்கை அளவில் முக்கியத்துவம் வாய்ந்த படிப்புத் துறையாகக் கருதாமல் தரம்சார்ந்த படிப்புத் துறையாக ஆக்கி இருக்கிறது. அவரது நூலில் இடம்பெற்றுள்ள இயல்களின் தலைப்புகளை இங்கே தருகிறேன். அவற்றை வாசிக்கும்போது அவர் நிலவியலைப் பண்பாடு, கலை இலக்கியப் பிரதிகளோடு இணைத்துப் பேசுபவர் என்பது புரிய வரலாம்.
1. பண்பாடு : வரையறைகளை உருவாக்குதலின் பிரச்சினைப்பாடுகள்
2. பூமியின் முகத்தை மாற்றுதல் பற்றி
3. குறியீட்டு நிலவெளி
4. இலக்கிய நிலவெளி
5. தன்னிலையும் பிறவும்
6. உருவாக்கப்படும் பன்முகச் சூழல்கள் - (திரைப்படம், தொலைக்காட்சி, இசை)
7. இடமா?அல்லது வெளியா?
8. நுகர்பொருள் மற்றும் நுகருதலின் நிலவியல்கள்
9. உற்பத்திகளின் பண்பாடு
10. கலந்துகட்டிய இந்த உலகத்தில் தாய் நாடுகளும் அன்னை பூமிகளும்
11. அறிவியலின் பண்பாடுகள் - மொழியாக்கமும் அறிவும்

இணைநிலைகளும் விலகலும்


கார்ல் சாசரின் தலைப்புகள் அனைத்தும் நிகழ்காலத்தில் உரைநடையில் எழுதப்படும் புனைகதைகளின் பிரதிகளுக்குள் பதிவாகிக்கிடப்பவை. இன்னும் குறிப்பாகச் சொல்வதானால் நாவல் இலக்கியம் உருவாக்கித்தரும் வெளியின் பரப்பைப் பதிவாக்கித் தருபவை. ஆகவே தமிழின் நிகழ்கால இலக்கியங்களை ஆய்வு செய்ய முன்னுரிமை கொடுத்துப் பயன்படுத்தலாம். புனைகதைகள் மட்டுமல்லாமல் திரைப்படம், நாடகம், காப்பியம், தொடர்நிலைச்செய்யுள் முதலான கதை தழுவிய பனுவல்களுக்கும் இவ்வணுகுமுறையைப் பயன்படுத்த முடியும். ஆனால் தமிழின் தொல்காப்பியர் உருவாக்கித்தந்துள்ள பாவியல் கோட்பாட்டை அறிந்தவர்கள் கவிதைமரபைத் திறனாய்வு செய்யவும் அதனைப் பயன்படுத்த முடியும் என்பதை நான் முன்வைக்க விரும்புகிறேன்.

தொல்காப்பியரின் கவிதையியலும் சொல்முறை விளக்கமும் :

தொல்காப்பியம் உருவாக்கித் தந்துள்ள பாவியல் அல்லது கவிதையியல் அடிப்படையில் நிலத்தையும் பொழுதையும் முதல்பொருளாகக் கொண்ட திணைக்கோட்பாடை அடிப்படையாகக் கொண்டது. தமிழின் செவ்வியல் கவிதைகளின் வரையறைகளை உருவாக்கித்தந்த தொல்காப்பியம் இலக்கிய உருவாக்கத்தைப் பேசுகிறது. இலக்கிய உருவாக்கத்தின் முதன்மையான மூன்று பொருள்களில் முதலாவதாகக் கருதப்படுவது நிலமும் பொழுதும். அவ்விரண்டும் தான் முதல் பொருள் எனச் சுட்டப்படுகிறது. இதனைக் கூடுதலாக விளங்கிக்கொள்ளத் தொல்காப்பியத்திற்குள் நுழையலாம்.

தமிழின் தொல்லிலக்கணமான தொல்காப்பியம் மூன்று அதிகாரங்களில் ஐவகை இலக்கணங்களைக் கூறுகிறது. எழுத்ததிகாரத்தில் எழுத்துக்களின் ஒலி மற்றும் வரிவடிவங்களின் தோற்றம், வகை, நிரல்நிரை, அளவு, சொல்லாக மாறுதல், சொற்கள் புணர்தல் போன்றவை விளக்கப்படுகின்றன. சொல்லதிகாரத்தில் சொற்களின் வகை, உறுப்புக்கள், சொற்கள் இணைந்து தொடராக மாறுதல் போன்றன விளக்கப்படுகின்றன. இவை பெரும்பாலும் நேர்பொருளை தரக்கூடிய பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் உரியவைகள் மட்டுமே. இதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட இலக்கியமொழிபு குறித்தோ, அம்மொழிபின்பொருள் குறித்து சொல்லதிகாரத்தில் கூறப்படவில்லை.

மூன்றாவது அதிகாரமான பொருளதிகாரம் நேர்பொருள் தரும் சொற்றொடர் பற்றி பேசாமல் புனைவாக உருவாக்கப்படும் சொற்றொடர்களின் மொழியை அதின் பொருளையும் பேசுகின்றன. தொல்காப்பியர் காலத்தில் புனைவாக உருவாக்கப்படும் மொழி, பா-வாகவும், பாடல்- ஆகவும், பாட்டு- ஆகவும் அறியப்பட்டன. பா, பாடல், பாட்டு ஆகியவை எவ்வாறு உருவாக்கப்பட வேண்டும் அதற்குள்ளே இடம்பெற வேண்டிய கூறுகள் எவை, அக்கூறுகளின் வழியாக கிடைக்கும் நுட்பங்கள் எவை என்பதையெல்லாம் பொருளதிகாரம் விரிவாக விளக்குகிறது. இத்தகைய பேச்சுக்களைப் பின்னர் வந்த திறனாய்வு பாவியல் எனவும், கவிதையியல் எனவும் விளக்குகிறது. தொல்காப்பிய பொருளதிகாரத்தில் இடம்பெற்ற அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல் போன்றன பாவின் உட்கூறுகளை விளக்கும் இயல்கள். செய்யுளியல் அதன் புறவடிவத்தை விளக்கும் இயல். மெய்ப்பாட்டியலும், உவமையியலும் பாக்களின் உட்நுட்பங்களை விளக்கும் இயல்கள். மரபியல் இவை எல்லாவற்றிலும் பின்பற்றப்பட வேண்டிய மரபுகளையும், விதிவிலக்குகளையும் கூறும் இயல் எனப் பல அறிஞர்கள் விளக்கியுள்ளனர். பேரா கா.சிவத்தம்பி, பேரா. அகஸ்தியலிங்கம், பேரா.செ.வை. சண்முகம் போன்றவர்கள் பல இடங்களில் பேசியுள்ளனர். அத்தகைய விளக்கங்களிலிருந்து தொல்காப்பியரின் பாவியல் கோட்பாடு அல்லது கவிதையியல் கோட்பாடு என்பதை உருவாக்கிக் கொள்ள முடியும்.

செய்யுளியலில் ஒரு பாவின் உறுப்புக்கள் 32 எனக் கூறியுள்ள தொல்காப்பியம். அடிகளின் அளவு, அடிவரையறை, உண்டாக்கப்படும் ஒலியளவு போன்றவற்றை விரிவாக விளக்குகிறது. அவற்றைப் பாக்களின் புறவடிவம் எனக் கொள்ளலாம். புற வடிவத்திற்குள் உள்ள வேறுபாடுகளின் அடிப்படையில் பாக்கள் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா என வகைப்படுத்தப்படுவதையும் வேறுபடுத்தப்படுவதையும் செய்யுளியல் வழியாகவே அறிகிறோம். இப்புற வடிவங்களின் வழியாக உருவாக்கப்படும் இலக்கிய வகைகளின் வடிவங்களையும், செய்யுளியலின் நிறைவுப் பகுதியில் இடம்பெற்ற,
“பாட்டு, உரை, நூலே, வாய்மொழி, பிசியே,
அங்கதம், முது சொல்லொடு, அவ்வேழ் நிலத்தும்
வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின்
நாற்பேர் எல்லை அகத்தவர் வழங்கும்
யாப்பின் வழியது என்மனார் புலவர்” (தொல்.செய்யுளியல் 1336)

என்ற சூத்திரத்தின் வழியாகச் சொல்கிறார். பாக்களின் புறவடிவத்தை கூறும் தொல்காப்பியர் அதன் உள்ளடக்கத்தை விளக்குவதற்காக பொருளதிகாரத்தின் முதல் ஐந்து இயல்களை அமைத்துக்கொண்டுள்ளார்.
தொல்காப்பியத்தில் அவரது சொல்முறையில் காணப்படும் பொதுக்கூறு ஒன்றை இங்கே இடையீடாக விளங்கிக் கொள்ளலாம். எழுத்து, சொல், பொருள் என்ற மூன்று அதிகாரங்களிலும் அந்த பொதுத்தன்மை காணப்படுகிறது. நிகழ்காலத்தில் கல்விப்புலங்களிலும் திறனாய்வுப் புலங்களிலும் பின்பற்றப்படும் ”வரையறை, வகைகள், உறுப்புக்கள், சாரம், முடிவு” என்ற சொல்முறையை தொல்காப்பியர் பின்பற்றவில்லை. தொல்காப்பியத்தில் எந்த ஒரு கலைச் சொல்லுக்குமான வரையறையையும் நேரடியாக நாம் காணமுடியாது. அதற்கு மாறாக ஒரு கலைச் சொல்லை வகைப்படுத்துவது, உறுப்புக்களை விளக்குவது. எடுத்துக்காட்டுக்களை தருவது, வேறுபாடுகளைச் சுட்டுவது, விதிவிலக்குகளை கூறுவது போன்ற சொல்முறைகளின் வழியாக வரையறைகளை உருவாக்கிக்கொள்ளும் தன்மையையே காணமுடியும். இதற்குச் சரியானஎடுத்துக்காட்டும் செய்யுளியலையே.

எழுத்ததிகாரத்தில் எழுத்து என்பதை விளக்காமலேயே அதன் வகைகள், இயல்புகள், ஒலிப்புகள், நிரல்முறை, புணர்ச்சிமுறை ஆகியவற்றை விளக்குவதன் வழியாக எழுத்து என்றால் என்ன என்பதை நாம் விளங்கிக் கொள்ள முடியும். அதைப்போலவே சொல் என்றால் என்ன என்ற வரையறையை தரவில்லை. கிளவியாக்கம் என்றால் என்ன என்பதைப் பற்றி விளக்காமல் சொற்களின் வகைகளைப் பற்றி விளக்கிவிட்டு, அதன் சேர்க்கைகளை, தொடராக மாறுவதை விளக்குகிறார். இந்த தன்மையை நாம் பொருளதிகாரத்தில் காண்கிறோம். பொருளதிகாரம் என்றால் என்ன என்ற வரையறையைத் தரவில்லை. ஆனால் அவர் எழுதியுள்ள நூற்பாக்களின் வழியாக பாவின் பொருள் என்பதாகவும், கவிதைக்குள் இடம்பெறும் மனிதர்களின் வாழ்க்கைப்பொருள் என்பதாகவும் விளக்கமுடியும். அதாவது, தொல்காப்பியர் விளக்கும் விதத்திலிருந்து தொல்காப்பியரின் பாவியல் கோட்பாட்டை புரிந்துகொள்ள முடியும்.

பாவியல் கோட்பாடு

உலக இலக்கிய வரலாற்றின் ஆதியிலக்கிய வடிவம் எது? எனக் கேட்டால் ஐரோப்பியச் செம்மொழிகளான கிரீக், லத்தீன் மொழிகளிலிருந்து தொடங்கும் ஐரோப்பிய இலக்கியங்களைக் கற்றவர்கள் நாடகங்கள் தான் ஆதி இலக்கியங்கள் எனச் சொல்லக் கூடும். ஆனால் அவை கவிதைகளால் ஆன நாடகங்கள் எனத் தடுமாறவும் கூடும். அதேபோல் இந்தியச் செம்மொழிகளில் ஒன்றான சமஸ்கிருதத்திலிருந்து இலக்கிய வடிவங்களை உருவாக்கிக் கொண்டவர்கள்கூட நாடகங்களே ஆதியிலக்கிய வடிவங்கள் என நினைக்கவே செய்வார்கள். ஆனால் வேதங்களையும் ஸ்மிருதிகளையும் கணக்கில் கொண்டு கவிதைகளே ஆதியிலக்கிய வடிவம் என்று மயக்கங்கொள்ளவும் செய்வர். ஆனால் இன்னொரு செம்மொழியாகிய தமிழ்ச் செம்மொழியிலிருந்து உருவாக்கப்பெற்ற இலக்கிய மரபை அறிந்தவர்கள் கவிதையே ஆதியிலக்கிய வடிவம் என்று தயங்காமல் சொல்வர்.

 நாடகத்தன்மையைக் கொண்ட தொடர்நிலைச் செய்யுளாகிய சிலப்பதிகாரம் கூட உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் தான். ஆக உலக இலக்கியத்தின் ஆதி வடிவங்கள் கவிதையும் நாடகமும் என்பதில் சிக்கல் இல்லை. யாப்பின் வழியாகச் சொல்லப்படுவது இலக்கியம் என வரையறை செய்யும் தொல்காப்பியம் அவை பாட்டு, உரை, நூல், வாய்மொழி, பிசி, அங்கதம், முது சொல் என ஏழு என்கிறது. தமிழ்மொழி வழக்கிலிருக்கும் நிலப்பரப்பில் கிடைக்கக் கூடிய இலக்கியவகைகள் இவை என்பது அச்சூத்திரம் சொல்லும் செய்தி (தொல்.செய்யுளியல் 1336). ஏழுவகைகள் பற்றிப் பேசினாலும் அது சொல்லும் இலக்கிய உருவாக்கக் கோட்பாடு பெருமளவு பாவியல் அல்லது கவிதைக் கோட்பாடு என்றே நாம் புரிந்து கொண்டுள்ளோம். தொல்காப்பியத்திணைக் கோட்பாட்டை அறிந்த நாம் அதனைக் கொண்டு தமிழின் கவிதை மரபை வாசிப்பது எப்படி? என்ற கேள்விக்கான பதிலைத் தேடலாம்.
கவிதையை எப்படி வாசிப்பது அல்லது கவிதை எவ்வாறு உருவாகும்? என்பதற்கான விரிவான பதில் தொல்காப்பியத்தில் கிடைக்கிறது. அதேபோல் அரிஸ்டாடிலிடம் கிடைக்கக்கூடிய பதில் நாடகத்தை எவ்வாறு வாசிக்கலாம் அல்லது நாடக உருவாக்கம் எவ்வாறு இருக்கிறது என்பதற்கான பதில் மட்டும் தான். இருவரையும் ஆழமாக வாசிக்கும் ஒருவருக்குக் கவிதை எதை எழுதிக் காட்ட முயல்கிறது என்பது புரிந்திருக்கவே செய்யும்.

கவிதைகள் எவற்றை எழுதிக்காட்டுகின்றன? இந்தக் கேள்விக்குத் தவிப்பை - தேடலை - தேடலின் வலியை- தடையை - தடைகள் ஏற்படுத்தும் அச்சத்தை- பின் வாங்கியதின் காரணத்தை, தோல்வி தந்த துயரத்தை என ஒரு பயணமாக அதைச் சொல்லலாம். இதன் மறுதலையாகத் தேடிக் கண்டடைந்ததின் கொண்டாட்டத்தை - கொண்டாட்ட மனநிலையை அடுத்தவர்க்கும் அளித்து விட நினைக்கும் பரவசத்தை - பரவசமாய்ப் பரவிக் கிளர்த்தும் முடிவாக நிற்கும் இன்மையை என இன்னொரு பயணமாக அமையலாம். கவிதை எழுதும் பயணம் எத்தகையதாக இருந்தாலும் கவிதை எழுதப்படுவதற்கு ஓர் உணர்வு வேண்டும். அவ்வுணர்வைத் தன்னிலை (self) சார்ந்தும், பிறநிலை (other) சார்ந்தும் இரண்டாகப் பிரிக்கலாம். தன்னிலை தன்னிலையோடு கொள்ளும் உறவும் முரணும் எழுப்பும் உணர்வுகள் என்பன ஒரு பாதை. தன்னிலை பிறநிலையோடு கொள்ளும் உறவும் முரணும் என்பது இன்னொரு பாதை. பிறநிலையும் பிறநிலையும் கொள்ளும் உறவையும் முரணையும் கண்டு நிற்கும் தன்னிலையின் பாடுகள் என்பன மற்றொரு பாதை.இப்படிச் சில பாதைகளில் தான் கலை இலக்கியப் பயணங்கள் நடக்கின்றன என்பதை நிகழ்காலத்திறனாய்வுகள் விளக்குகின்றன. இவற்றையே அகவுணர்வு, புறவுணர்வு, புறப்புற உணர்வு எனத் தமிழின் தொடக்கநிலைக் கோட்பாட்டு நூலான தொல்காப்பியம் விரிவாகப் பேசுகிறது.

தன்னிலையின் விருப்பத்தால் குடும்ப அமைப்பு உருவாகிறது. பிறநிலையின் மீது கொள்ளும் அக்கறையால் குடும்பம் தவிர்ந்த அரசு போன்ற அமைப்புகளும், அதன் கட்டுப்பாட்டை ஏற்றுக் கொண்ட பிற அமைப்புகளும் உருவாகின்றன. தொல்காப்பியம் இவ்வுணர்வுகளை உரிப்பொருட்கள் எனவும், மெய்ப்பாடுகள் எனவும் பேசியுள்ளது. புணர்தல், இருத்தல், இரங்கல், ஊடல், பிரிதல், ஒருதலைக்கோடல், பொருந்தா நோக்கு என்பன அகநிலை உணர்வுகள். அதன் புறனான வெட்சி, உழிஞை, வஞ்சி, தும்பை, வாகை, பாடாண், காஞ்சி என்பன புறநிலை உணர்வுகள். இவைகளை ஏற்றுக் கவிதையாக்கும்போது உருவாகும் உணர்வு வெளிப்பாட்டு நிலையை மெய்ப்பாடுகள் எனச் சொல்லி அவை முதன்மையாக நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்ற எட்டாகும் எனவும், இவ்வெட்டே எட்டு எட்டாய் விரியும் எனவும் அது விரித்துள்ளது.

ஒரு பாவில் அல்லது கவிதையில் மூன்று கூறுகள் இடம் பெறுதல் அவசியம். அவை முதல்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்பன. இந்த மூன்றும் ஒரே கவிதையில் அமைவது கட்டாயமில்லை. முதல்பொருள் கருப்பொருள் உரிப்பொருள் என்ற மூன்றில் எது முக்கியம் என்றால், உரிப்பொருள்தான் முக்கியமானது என்பதை வலியுறுத்த.

“முதல் கரு உரிப்பொருள் என்ற மூன்றே
நுவலுங்காலை முறைசிறந்தனவே
பாடலுள் பயின்றவை நாடும் காலை” ( அகத்திணையியல்.3)

எனவும் தொல்காப்பியம் எழுதியிருப்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உரிப்பொருள் இல்லாமல் கவிதை அல்லது இலக்கியம் இல்லை. ஆனால் அவ்வுரிப்பொருள் தெய்வம், உணவு விலங்கு, மாமரம் புல்பறை, செய்தி, யாழ் முதலான கருப்பொருள்களால் விளக்கம் பெறுகிறது.

தெய்வம் உணாவே மா மரம் புள் பறை
செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ
அவ்வகை பிறவும் கரு என மொழிப. (அகத்திணையியல். 20 )

என்பது அந்தச் சூத்திரம். உரிப்பொருளும் கருப்பொருட்களும் முதல்பொருளால் அர்த்தம் பெறுகின்றன. முதல் பொருள் என்பன நிலம் பொழுதும் (Time and Space). இலக்கிய உருவாக்கத்தை நாடகத்தினூடாக விளக்கும் அரிஸ்டாடில் இவ்விரண்டையும் மையப்படுத்தியதோடு பாத்திரங்களையும், அவற்றின் வினைகளையும் மையப்படுத்தியே விளக்கங்கள் அளித்துள்ளார். மூவோர்மைகள்(three unities) - காலம், இடம், பாத்திரங்கள் ஆகிய மூன்றிற்கும் இடையேயுள்ள வினையோர்மைகள்- பற்றிய அரிஸ்டாடிலின் கோட்பாடே உலக இலக்கியத்தின் அடிப்படை என்பதை நினைவில் கொள்வோம். அவர் சொன்ன பாத்திர முரண் சார்ந்த தொடக்கம் , சிக்கல், வளர்ச்சி, உச்சநிலை, வீழ்ச்சி, முடிவு என அமையும் நாடகவடிவம் நல்திற நாடகவடிவமாக உலகம் முழுவதும் இலக்கியம் கற்பிக்கும் துறைகளில் இன்றும் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. ஆனால் கவிதையின் வடிவம் பற்றிப் பேசும் தொல்காப்பியரின் கோட்பாடு தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் விளங்கிக் கொள்ளப்படவில்லை என்பதை வருத்தத்தோடு சொல்லவேண்டியுள்ளது. இலக்கியத் திறனாய்வு செய்பவர்களும் உணரவில்லை என்பதையும் சேர்த்துக் கொள்ளவேண்டும்.
வடிவம் பற்றிய விரிவான கருத்துகளைச் சொல்லும் தொல்காப்பியரும் அரிஸ்டாடிலும் உள்ளடக்கத்தைப் பற்றி விரிவாக பேசவில்லை. காரணம் அவை பேசி முடிக்கக் கூடியன அல்ல. ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது இயங்குதலுக்கும் காரணங்கள் வேறாக இருக்கும் என்பதால் உள்ளடக்கத்தை வரையறை செய்யும் முயற்சியை இருவருமே செய்யவில்லை. என்றாலும் நமது மரபைத் தீர்மானித்தது தொல்காப்பியக் கவிதையியல் என்பதை உலகத்திற்குச் சொல்லிப் பெருமைகொள்ளத் தயக்கம் காட்ட வேண்டியதில்லை.

முடிவுரை:

அகமாகவும் புறமாகவும் வகைப்படுத்தப்பட்டு அதற்குள்ளும் புணர்தல் கவிதைகளையும் ஊடல் கவிதைகளையும் பிரிதல் கவிதைகளையும் இருத்தல் கவிதைகளையும், இரங்கல் கவிதைகளையும் கைக்கிளைக் கவிதைகளையும் பெருந்திணைக் கவிதைகளையும் எழுதிக்குவித்த தன்னிலைகளால் நிரம்பியது தமிழ்க் கவிதையின் தொடக்கப் பெருமிதம். அந்தப் பெருமிதத்தின் மறுதலையே நிரைகவர நடத்திய வெட்சிப் போர்க் கவிதைகளும், மண்ணாசை காரணமாக நடத்திய வஞ்சிப் போர் பற்றிய கவிதைகளும், கோட்டைகளைக் கைப்பற்றுவதற்கும் காப்பதற்கும் நடத்தப்பெற்ற உழைஞைப் போர்க் கவிதைகளும், பேரரசுக் கனவுகளோடு நடத்தப்பெற்ற தும்பைப் போர்க் கவிதைகளும், ஒருமுறை கிடைத்த வெற்றியினைச் சுவைத்தபின் தொடர்ச்சியாக ஏறும் வெற்றியின் வெறியால் தூண்டப்பட்டு நிகழ்த்தப்பெறும் வாகைப்போர்க் கவிதைகளும், வெற்றியே வாழ்க்கை; வெற்றி பெற்றவனே கொண்டாடப் படக்கூடியவன் என நம்பிப் பாடப்பெற்ற பாடாண் திணைக்கவிதைகளும், பலப்பல விதமான விருப்பங்களாலும் ஆசைகளாலும் நடக்கும் போட்டி மற்றும் போர்களால் கிடைக்கும் வாழ்க்கையின் நிலையாமை பற்றியக் காஞ்சிக் கவிதைகளாலும் நிரம்பியது அந்த மறுதலை. செவ்வியல் பெருமிதங்களின் நீட்சியே நீதிக்கவிதைகளாக ஒரு கோட்டையும் பக்திக் கவிதைகளாக இன்னொரு கோட்டையும் நீட்டித்தன. அந்தக் கோடுகளின் கிளைகளைத் தொண்ணூற்றாறு வகைப் பிரபந்தங்களில் தேட முடியும்; தனிப்பாடல் திரட்டில் தேடிக் காட்ட முடியும். 

பாரதி, பாரதிதாசன் வழியாக ஆத்மாநாமிடம், தேவதேவனிடம், கலாப்ரியாவிடம், மனுஷ்யபுத்திரனிடம், சல்மாவிடம், குட்டிரேவதியிடம், சக்திஜோதியிடம், யவனிகா ஸ்ரீராமிடம், யோகியிடம், அனாரிடம் என்று மரபின் தொடர்ச்சியைக் கண்டு ரசிக்கமுடியும். ஆனால் உள்ளொலியின் கவித்துவ மனத்தையும், வெற்று நிலத்தில் தனித்தன்மையைத் தேடியலைந்த மில்டனின் கவித்துவமும் கைவரப்பெற்றவர்கள் என்ற திமிரில் திளைக்கிறது விமரிசனப் பார்வைகள். மேற்கத்திய திறனாய்வு முறையையும் அறியாமல் தமிழின் வாசிப்பு மரபையும் அறியாமல் பார்வையற்ற அந்தக நிலையில் தவிக்கிறது தமிழ்க் கல்விப்புலம். இந்நிலை மாற்றப்பட வேண்டும். தமிழின் திறனாய்வு மரபொன்றை உருவாக்கி உலகத் திறனாய்வு மரபில் அதற்குள்ள தொடர்பைப் பேசுவதன் மூலமே அதனைச் செய்ய முடியும். இக்கட்டுரை அதன் முதல்படி.
===============================================================
Carl Sauer's Legacy
During his 30 years at U.C. Berkeley, Carl Sauer oversaw the work of many graduate students who became leaders in the field and worked to spread his ideas throughout the discipline. More importantly, Sauer was able to make geography prominent on the West Coast and initiate new ways of studying it. The Berkeley School's approach differed significantly from the traditional physical and spatially oriented approaches and though it is not actively studied today, it provided the foundation for cultural geography , cementing Sauer's name in geographic history.
[http://geography.about.com/od/historyofgeography/a/carlsauer.htm]
Carl Ortwin Sauer (December 24, 1889 – July 18, 1975) was an American geographer. Sauer was a professor of geography at the University of California at Berkeley from 1923 until becoming professor emeritus in 1957 and was instrumental in the early development of the geography graduate school at Berkeley. One of his best known works was Agricultural Origins and Dispersals (1952). In 1927, Carl Sauer wrote the article "Recent Developments in Cultural Geography," which considered how cultural landscapes are made up of "the forms superimposed on the physical landscape."
உதவிய நூல்கள்
· சிவத்தம்பி, கார்த்திகேசு. தமிழின் கவிதையியல், 2008, குமரன் பதிப்பகம், சென்னை
· தமிழண்ணல், தொல்காப்பியர், மூன்றாம் பதிப்பு 2012, சாகித்திய அகாடெமி, புதுதில்லி.
· மணவாளன், அ.அ. , இலக்கிய ஒப்பாய்வு: சங்க இலக்கியம், 2009 , நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை -98
· மாதையன். பெ., தமிழ்ச் செவ்வியல் படைப்புகள், 2009, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை
· Barry Peter, Beginning Theory-An Introduction to Literary and Cultural theory, First Indian edition, 1999,Manchester University Press, Manchester and Newyork (1995)
· DON MITCHEL , CULTURAL GEOGRAPHY – A CRITICAL INTRODUCTION, Blackwell Publishing,350 Main Street,Malden,MA 48-5020,USA.021, 2000 I.B.TAURIS&C
· CULTURAL GEOGRAPHY – A CRITICAL DICTIONARY OF KEY CONCEPTS, Edited by DAVID ATKINSON, PETER JACKSON, DAVID SIBLEY & NEIL WASHBOURNE
=================================================================

மலேசியாவில் - கோலாலம்பூர் பல்கலைக்கழகத்தில் 2015,ஜனவரி 31 முதல் பிப்ரவரி 3 வரை நடந்த உலகத்தமிழ் மாநாட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரை.

கருத்துகள்

KaniBlog இவ்வாறு கூறியுள்ளார்…
எவ்வளவு தகவல்கள் அய்யா அருமை
KaniBlog இவ்வாறு கூறியுள்ளார்…
வணக்கம் அய்யா தங்களின் பண்பாட்டு நிலவியலும் திணைக்கோட்பாடும் கட்டுரை வாசித்தேன் இலக்கியங்கள் நமக்குத் தரும் அனுபவங்கள் நம்மை செப்பனிடுகின்றன உங்களின் கட்டுரை படித்தவுடன் அரிஸ்டாடலின் நாடகம் பற்றிய செய்திகளையும் தொல்காப்பியத்தையும் ஆழ்ந்து படிக்க வேண்டும் என்ற தேடல் உருவாகியிருக்கிறது மிக்க நன்றி
வன்பாக்கம் விஜயராகவன் இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் கட்டுரையில் பல சிக்கல்கள் உள்ளன. ஒரு சிறியதை எடுத்துப் பார்ப்போம்.

இருமுறை "ஆதாரப் பிரச்சினை" என்ற வார்த்தை உள்ள‌து; அது அங்கு கச்சிதமாக பொருந்தாது என நினைக்கிறேன் . நீங்கள் basic problem என்ற ஆங்கில வார்த்தைக்கு நிகராக இருக்கும் படி இதை எழுதியுள்ளீர்கள். ஆனால் தமிழில் அது பொருந்தவில்லை. தமிழில் ஆதாரம் என்பது "உங்கள் சந்தேகத்தின் ஆதாரம் என்ன" அல்லது 'அவன் வாழ்வாதாரம் இல்லாமல் வெளியூர் சென்றான்' என்றல் சரியாக இருக்கும். ஆனால் இங்கு ஆதாரம் பொருந்தாது. "அடிப்படை பிரச்சினை' என்றல் சரியாக இருக்கும்.

"மரணத்தைக் கண்டு பயப்படுதலே மனிதர்களின் ஆதாரப் பிரச்சினை என்பது ஒருவகைக் கருத்தியல். இக்கருத்தியலின் தோற்றுவாய்களாகவும் காரணிகளாகவும் இருப்பன சமயங்களும், ....." இதுவும் சரியாக அர்த்தம் கொடுக்காது.

"மரண அச்சமே சமயங்கள் போன்ற கருத்தியல்களுக்கு காரண‌மாய் உள்ளது............... " மரண அச்சம் கருத்தியல் அல்ல.

தற்கால பூகோள, சமூக வெளி நிலவெளி தொல்காப்பியர் காலத்திலுருந்து மிகவும் மாறுபட்டது. அவர் காலத்தில் பல தமிழ்நாட்டில் பரவலாக காடுகளும் நீரோடைகளும் ஏரிகளும் இருந்தன. தொல்காப்பியர் காலம் தமிழ்நாட்டு வேளாண்மை காலத்தை முந்தியது. வேளான்மை காலத்தில் காடுகள் வெட்டப்பட்டு கழனிகளாகவும், விளைநிலங்களாகவும், நீர்ப்பாசன வசஇகளாகவும் மாறின. ஜனசங்கியையும் கணிசமாக அதிகரித்தது. கடந்த 100 ஆன்டுகளாக பல நீர்பாசன வசதிகள் கைவிடப்பட்டுள்ளன, நம் கண் எதிரிலேயே ஏரிகள் மறைகின்றன. நகரமயம் அசுரகதியில் செல்கிறது; கிராமங்கள் கைவிடப்படுகின்ரன. எங்கு பார்த்தாலும் மக்கள் சமூகமும், வீடுகளும் தொழிற்சாலைகளும் கார்களும் லாரிகளும் , அவை வெளியேற்றும் புகைகளும் தெரிகின்றன. தற்காலத்தை தொல்காப்பியர் காலத்தால் நோக்குவது அடிப்படை தவறு.


வ.கொ.விஜயராகவன்
(பி.கு. மணிப்பிரவாளத்தை சாடிவிட்டு ஏன் இவ்வளவு ஆங்கிலம் கலக்கின்றது)
அ.ராமசாமி இவ்வாறு கூறியுள்ளார்…
ஆதாரம்- அடிப்படை என்பதில் நீங்கள் சொல்வது சிந்திக்கவேண்டிய ஒன்றே. என்றாலும் ஒவ்வொரு சொல்லுக்கும் பயன்பாட்டுப் பொருள் என்று ஒன்று. அச்சொல் முன்னொட்டாகவும் பின்னொட்டாகவும் எதனோடு சேர்ந்துவரும்படி எழுதப்படுகிறது என்பதையும் கவனிக்கவேண்டும். குத்துநிலைப் பார்வையில் அடிப்படை என்பது ஆரம்பப்புள்ளி. ஆதாரமென்பது கொஞ்சம் மேலே உயர்ந்து கிளைபரப்பும் நிலையில் தனதாக்கிக்கொள்ளும் ஒன்று. இன்னும் மேலேமேலே நகரும்போது பல ஆதாரங்களும் இணையும்; சேதாரங்களும் நிகழும்.
அ.ராமசாமி இவ்வாறு கூறியுள்ளார்…
தொல்காப்பியம் கவிதைக்கு முன்வைக்கும் நிலவெளிகளைத் தமிழ் நிலப்பரப்பில் இருந்த நிலப்பரப்புகளின் பாகுபாடுகள் என அவரும் சொல்லவில்லை. நானும் நம்பவில்லை. கவிதையெப்படி உலகப்பொதுநிலைப்பட்டதோ அப்படியே நிலவெளிகளும் உலகப்பொதுநிலைப்பட்டன.

ஆங்கிலக்கலப்பா? எதைச் சொல்கிறீர்கள்? நான் ஆங்கிலச் சொற்களுக்கிணையான தமிழ்ச் சொற்களையே பயன்படுத்துகிறேன். சம்ஸ்க்ருதமும், அதிலுள்ள இலக்கியத் தத்துவங்களோ தேவையற்றவை என்பது என் கருத்தல்ல. அதனை ஏற்கவும் சொல்லவும் தமிழுக்கு இயலாத ஒன்று; அதனால் மணிப்ரவாளமாக எழுதுவோம் என்று அடம்பிடித்ததுதான் எதிர்க்கப்படவேண்டியது என்று நினைக்கிறேன்.
மணிப்பிரவாளத்தைப் பயன்படுத்தியவர்கள் தமிழாக்குவதைத் தேவையற்றது நினைத்தார்கள்.
வன்பாக்கம் விஜயராகவன் இவ்வாறு கூறியுள்ளார்…
ஆதாரம் ஒன்று மற்றொன்றுக்கு தோள் கொடுப்பது என்ற அர்த்தத்தில் வருவது (support, basis)
அடிப்படை ஒன்றின் மூலம், மூல‌ காரனம் போன்ற அர்த்தங்களில் வருவது. (fundemental)
நீங்கள் கூகில் போட்டு 20 /200/2000 பயன்பாடுகளை படியுங்கள் , அதன் தொனி விளங்கும்.
தமிழில் ஒரு வேர்ட்நெட் (https://wordnet.princeton.edu/wordnet/) இருந்தால் நன்றாக இருக்கும்.

"மரணபயம் சமயங்களின் தோற்றுவாயும், காரணுமும் ஆகும் என்ற இம்மனுவேல் காண்ட் , மரணபயம், மரணத்திற்குப் பின்னான வாழ்க்கையைத் தேடுதல் என்பதே மனிதனை இயக்குகிறது என விவரித்தார்" என்றால் சுருங்கக்கூரி குழப்பம் தவிர்க்கலாம்.

எப்படியோ, நீங்கள் எழுதியதியதை இப்படித்தான் புரிந்துகொள்கிறேன்.

வன்பாக்கம் விஜயராகவன் இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் கட்டுரையில் தோராயமாக 250 ஆங்கில வார்த்தைகள் உள்ளன. இது ஆங்கில மணிப்ரவாளம் இல்லாமல் வேறென்ன?


தமிழ் எழுத்துகளை மீறி , வேறெந்த மொழி எழுத்து இட்டாலும் அது மணிப்ரவாளம்.

யூனிகோட் தமிழ்

http://unicode.org/charts/PDF/U0B80.pdf

TACE16

http://www.tamilvu.org/coresite/download/TACE16_Report_English.pdf,


யூனிகோட்/டேசுக்கு வெளியில் இருந்து எதைப் போட்டாலும், அது மணிப்ரவாளம்.

எழுதுபவர்கள் உள்நோக்கு கணக்கில் வராது, எழுதுவதுதான் கணக்கில் வ‌ரும் மணிப்ரவாளமா இல்லையா என சொல்ல.


விஜயராகவன்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்