September 05, 2016

நம்பிக்கைகளைத் தகர்த்து நம்பிக்கை தரும் சினிமா

வெகுமக்கள் ரசனைக்கான ஒரு சினிமாவில் இருக்கவேண்டியன
  • ·        பலவிதத்தொனியில் பேச வாய்ப்பளிக்கும் உச்சநிலை (Climax)
  • ·         பாடல்களும் ஆட்டங்களும் (Songs and dances)
  • ·         சண்டைக்காட்சிகள் (Fights)
  • ·         நகைச்சுவைக் கோர்வைகள் (Comedy Sequences)
  • ·         அறிமுகமான நடிக முகங்கள் (Popular Artists)

இவ்வைந்து தேவைகளைத் தாண்டி இன்னும் சில தேவைகளையும் தமிழில் சினிமா எடுக்கும் நபர்கள் சொல்லக்கூடும். இவையெல்லாம் தேவைதான். ஆனால் இவற்றை உருவாக்குவது எப்படி என்பதில் தான் அர்த்தமுள்ள சினிமாவின் நோக்கமும் , பொறுப்பற்ற வணிக நோக்கு சினிமாவும் மாறுபடுகின்றன.
நேற்றிரவு பார்த்த அந்த சினிமாவில் இவையெல்லாம் இருக்கிறதென்று சொல்ல முடியாது. நாயகப்பாத்திரமும் எதிர்நிலைப் பாத்திரமும் சந்தித்துக்கொள்வதற்கும் அதன் காரணமாக மோதிக்கொள்வதற்குமான காரணமெதுவும் வெளிப்படையாக இல்லை. அதனால் ஒருவரோடொருவர் மோதிக்கொள்ளும் சண்டைக்காட்சிகள் படத்தில் இல்லை. அதனால் அடியாள் கூட்டம் இல்லை; ரத்தங்கொப்பளிக்கும் மனித உடலைக் கூறுகூறாகப் பார்த்துத் திகைக்கமுடியவில்லை. ஆனால் முரண்படும் பாத்திரங்களும் மோதிக்கொள்ளும் மனநிலையும், தாக்கிக் கொலை செய்யக்கூடும் என்று நினைக்கக் கூடிய தருணங்களும் இருக்கின்றன. இன்னும் சொல்வதானால் ஒருகொலை இருக்கிறது. அது கொலையா? தற்கொலையா? என்று ரகசியமும் இருக்கிறது. 
 
ஒரு வெகுமக்கள் சினிமாவில் நாயகனின் நிகழ்வுகளுக்கும் ஆசைகளுக்கும் துணைசெய்யக்கூடிய பாத்திரமொன்றை உருவாக்கவேண்டும்; அதன்வழியாகப் பார்வையாளர்களுக்குச் சிறுசிறு விடுவிப்பு தரும் நிலையை உருவாக்கவேண்டும்; அதற்காக அந்தப்பாத்திரத்தை ஏற்க ஒரு நகைச்சுவை நடிகரைத் தேர்வுகொள்ளவேண்டுமென்பது மூன்றாவது நம்பிக்கை. இந்தப் படத்தில் இப்படியொரு பாத்திரமொன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. அந்தப் பாத்திரத்திற்குப் பெயர்கூட இல்லை. கண்ணாடிக்குச்சிகளை வேகவைத்துக் கலைப்பொருட்களாக - பயன்படுபொருள்களாக ஆக்கும் சுயதொழில் செய்யும் அந்தப் பாத்திரத்தின்  ஒவ்வொரு பேச்சும் மெலிதான நகைச்சுவையை உருவாக்கும் தொனி கொண்டது. அதே நேரத்தில் வாழ்க்கையில் அர்த்தம் உண்டாக்குவதாக நம்பிக்கொண்டு அபத்தத்தை உருவாக்குகிறாய் என்பதைச் சுட்டிக்காட்டிக்கொண்டே இருக்கும் நண்பர் அவர். இளைஞனொருவனுக்கு, அவனது வயதைப்போல இருமடங்கு வயதுகொண்ட மனிதரிடம் நட்பு இருக்கமுடியும்; அவரிடம் எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்ளமுடியும் என்ற உண்மையைச் சொன்னதின் மூலம் அங்கதத்தின் பின்னே அபத்தத்தின் உச்சம் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது படம். இனியும் இவனிடம் நட்பைத் தொடரமுடியாது என்றபோது, நாகரிகமாக விலக்கிவைக்கும் துணிவுகொண்ட அந்தப்பாத்தித்தைத் தமிழின்  தேர்ந்த நடிகரான நாசர் ஏற்றிருக்கிறார். அவர் மையக்கதாபாத்திரத்தைச் சந்திக்கும் காட்சிகளில் நமக்குச் சிரிப்பும் நகைச்சுவையுணர்வும் உண்டாகவில்லையென்றால் சிக்கல் படத்தில் இல்லை; பார்க்கும் நம்மிடம்தான் இருக்கிறது.
மனிதர்கள் தங்கள் வாழ்வில் அடுத்தடுத்த கட்டங்கள் என்ன? என்று யோசிக்கும்போது இறுக்கமான மனநிலையிலேயே இருப்பதில்லை. அதிலிருந்து விலகிக் கொஞ்சம் கனவிலும் புனைவிலும் தங்களை ஈடுபடுத்திக்கொள்கிறார்கள்.உண்மை வாழ்க்கையில் அப்படியில்லை என்றாலும், கலையில் அந்த நிலையைக்  காட்டத் தேவை பாடல்காட்சிகளும் அதற்கியைந்து உடலை அசைத்துக் கோர்வையாக்கும் ஆடல்காட்சிகளும் என்ற நம்பிக்கை இந்தியச் சினிமாவின் அசைக்க முடியாத நம்பிக்கை.  அதற்காகக் கதைவெளியைத் தாண்டி - கடல்கள், மலைகள், காவுகள், தாவுகளெல்லாம் தேடப்படுகின்றன; மாநிலங்கடந்து, தேசங்கடந்து, கண்டங்கடந்தெல்லாம் போகிறார்கள். சொந்த ஊரைத் தாண்டிச் சிந்திக்கும் வாய்ப்பற்ற ஒரு கிராமத்துக்காரரின் ஆட்டமும் பாட்டமும் எல்லைகளைக் கடக்கின்றன.  இப்படிக் கடக்கும் யோசனை/ மனநிலை அந்தப் பாத்திரத்திற்கு உண்டா? என்றெல்லாம் யோசனையெல்லாம் இல்லாமலே படமாக்கப்பட்டுப் பார்வையாளர்களுக்குத் தரப்படுகின்றன.
நேற்றுப்பார்த்த  இந்தப் படத்தில் பாடல்களும் இல்லை; ஆடல்களும் இல்லை. ஆனால் கனவுக்கும் புனைவுக்கும் காரணமான காதல் இருக்கிறது. ஒன்றல்ல இரண்டு காதலிகள். காதலின் முதல்படியான களவுநிலையைக் கற்புவாழ்க்கையாக - குடும்பவாழ்க்கையாக மாற்றவேண்டுமென்ற ஆசையுமிருக்கிறது.  காதலின்மேல் தான் திரைக்கதையே கட்டப்பட்டிருக்கிறது. காதலும் உண்டு; காதலியின் நிராகரிப்பும் உண்டு. நிராகரிப்பின் தொடர்ச்சியான வன்மும் பழிவாங்குதலுமே மொத்தப்படமும். அதுவே குற்றம்; அந்தக் குற்றமே தண்டனை.  படத்தைப் பார்ப்பதன் மூலம் ரசித்துப் பழகிக்கொள்ளலாம்.
இந்தப் படத்தில் கடைசிவரை நாயகப்பாத்திரமெது? எதிர்நிலைப்பாத்திரமெது என்கிற கேள்வியும் ரகசியம் போலவே தொடர்கிறது. அதனால் யாரை நாயக நடிகரென்று சொல்லவும் முடியவில்லை. ஆனால் அனைவரும் நடிப்புக்கலையில் பயிற்சியும் அனுபவமும் பெற்றவர்களே. நடிப்புக்கலையின் சாத்தியங்களை  அறிந்தவரும் தேர்ச்சிபெற்றவருமான நடிகர் நாசர் இருக்கிறார்; அவருக்கிணையான அனுபவம் கொண்ட பசி சத்யா இருக்கிறார். ஆனால் இருவரும்  ஏற்றிருப்பது துணைக்கதாபாத்திரங்கள். பசி சத்யா ஏற்றிருப்பது படத்திற்கொரு திருப்பத்தைத் தந்துவிடும் என்ற எதிர்பார்ப்பைக் கொண்டிருக்கும் ஒரு சிறிய பாத்திரம். இருவரும் இயக்குநர்களின் கலைஞர்கள்; தப்புச்செய்யத் தெரியாத நடிகர்கள். ஒரு காலத்தில் ஆடிப்பாடிக் களிப்பூட்டிய நாயகப்பாத்திரத்தில் நடித்த ரகுமானும் படத்தில் இருக்கிறார். அவரும் இயக்குநரின் நடிகராக ஆகிக்கொண்டு வருகிறார் என்பதை அவர் ஏற்கும் பாத்திரங்களின் உறுதிசெய்துகொண்டுவருகிறது. இன்னும் இரண்டு பாத்திரங்கள் இருக்கின்றன. துணை வழக்குரைஞர் பாத்திரமும் வங்கி மேலாளர் பாத்திரமும். இந்த இந்த இரண்டையும் ஏற்றிருப்பவர்கள்  அரங்க நடிப்பின்வழித் தங்களை நிறுவிகொண்ட கூத்துப்பட்டறைக்காரர்கள். ஒவ்வொரு படத்திலும் வேறுவேறு பாத்திரங்கள் கிடைப்பதோடல்லாமல், வேறுவேறு தோற்றத்துடன் வரும் வாய்ப்பு குரு சந்திரசேகருக்குக் கிடைத்து வருகிறது. இவர்களைத் தமிழ்ச்சினிமாவில் பங்கேற்கச் செய்கிறார்கள்; பயன்படுத்துகிறார்கள் என்பதே முக்கியமான மாற்றம்.  அதே போல் இந்த இயக்குநரின் முதல் படமான காக்காமுட்டையில் நடித்துத் திறமான அறிமுகத்தைப் பெற்றிருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் .  அவரது உடலும் உடலின் மொழியும் தான் படத்தின் மையம்.


நேற்றிரவு நள்ளிரவுக் காட்சியைக் காணவந்து, வரிசையில் நின்று டிக்கெட் வாங்கிக் கொண்டிருந்தபோது ஒன்றைக் கவனித்தேன். எனக்கு முன்னால் நின்ற எட்டுபேரில் நான்குபேர் குற்றமே தண்டனை என்ற அந்தப் பெயரைக் கூடச் சொல்லவில்லை. சொல்லத்தெரியவில்லை.  சொல்ல முயன்றவர்கள் சொன்ன தலைப்பு குற்றமும்தண்டனையும். ப்யோதர் தஸ்தியோவொஸ்கியின் செவ்வியல் நாவலின் பெயரைச் சொல்லியே டிக்கெட் வாங்கினார்கள். அப்படியொரு நாவலிருப்பதை அவர்கள் அறிந்திருப்பார்களா? என்று தெரியவில்லை.  அந்த நாவலின் பெயராக மட்டுமல்ல; அது எழுப்பிய உணர்வுகளாகவும் கேள்விகளாகவும் படம் இருக்கிறது. இதற்கு இன்னும் கூடுதல் வலுச்சேர்த்திருக்கவேண்டிய வகையில் பின்னணி ஒலியமைப்புகள் அமையவில்லை. பலநேரங்களில் விலகிச் சென்று திரும்புகிறது.
 காக்கா முட்டை என்ற பொறுப்பான - அர்த்தமுள்ள சினிமாவை எடுத்த மணிகண்டன், தனது இரண்டாவது சினிமாவை, அதைவிடவும் கூடுதலான பொறுப்புடன் அர்த்தமுள்ளதாக உருவாக்கித் தந்திருக்கிறார். தமிழில் அர்த்தமுள்ள சினிமாக்கள் வரவேண்டுமென நினைக்கிறேன். அந்த நினைப்போடு இருக்கும் பார்வையாளர்களுக்கு இந்தப் படத்தைப் பரிந்துரை செய்கிறேன்.

No comments :