August 26, 2016

தாய்மையென்னும் புனிதம்

'ஆர்வமூட்டும் தொடக்கமொன்றைக் கதைகொண்டிருக்கவேண்டும்' என்ற இலக்கணப்படியான மரபான தொடக்கம்தான். 'கதவு தட்டப்படுவதான உணர்வு. ஆனால் யார் தட்டியது என்று தெரியவில்லை' என்பதுபோன்ற திகில் தன்மையைக் கொண்ட தொடக்கம். சிக்கலான மனிதர்களை முன்னிறுத்தும் கதை என்பதான குறிப்புகள்கூட இல்லை. காலச்சுவடு 200 ஆம் இதழில் வந்துள்ள  உமா மகேஸ்வரியின் குளவி என்ற தலைப்பிட்ட அந்தக் கதையை வாசிப்பதை நிறுத்திவிடலாம் என்று தோன்றியது. ஆனால் இடையிடையே ஓவியங்களோடு மூன்று பக்கத்தில் முடியும் கதைதான்  என்ற நிலையில் தொடர்ந்து வாசிக்கலாம் என்று தோன்றியது.  

கதைக்குள் இருக்கும் நடுத்தர வயதுப் பெண்ணின் செயல்பாடுகளை மட்டுமே விவரிப்பதாக இருந்த கதைக்குள் வேலைக்காரப் பெண்ணொருத்தியோடு நடத்தும் அந்த  ஒரேயொரு கூற்று அவளைப்பற்றிய இன்னொரு பரிமாணத்தை உருவாக்குகிறது.

குளவி கூடுகட்டினால் நல்லதாச்சேஎன்று சிரித்தவளிடம், “ அதிலெல்லாம் நம்பிக்கையில்லை, சுத்தம் பண்ணிடுங்கஎன்று உள்ளே போனாள்.

இந்த ஒற்றை உரையாடலுக்குப்பின்  கதைசொல்லும் முறை முழுமையாக மாறுகிறது. நினைவுக்குமிழிக்குள் ஆழ்ந்துவிடும் அந்தப் பெண், “ அதிலெல்லாம் நம்பிக்கையில்லை” என்று சொன்ன அந்தப் பெண், ’அந்தக்குளவிக்கூடு’ பற்றிய நினைவுக்குள்ளேயே மூழ்கிப்போய்விடுகிறாள்.

இந்தக்கூற்று கர்ப்பம் தரித்தல், குழந்தைப்பேறு, தாய்மை என்னும் பெண்மையின் சாத்தியங்களோடு தொடர்புடைய நம்பிக்கையின்மேல் எழும் கூற்று. அதைச் சொல்லும் வேலைக்காரப்பெண் வீட்டு எஜமானியம்மாவின் இப்போதைய நிலையை அறிந்தே சொன்னாளா? என்ற கேள்விகளுக்குள் எல்லாம் நுழையவில்லை. குளவி கூடுகட்டுவதைத் தாய்மையோடு இணைத்துப் பேசும் நம்பிக்கை அவளுக்கு இல்லை என்பதற்குக் காரணம் அறிவுசார்ந்த தெளிவு அல்ல என்பது அந்த நினைவலைகளில் வெளிப்படுகிறது. ஒரு குழந்தைக்குத் தாயான பின்னும்கூட தன் உடல் ஆணின் - கணவனின் பாலியல் விருப்ப விளையாட்டுக்களமாக இருக்கமுடியாமல் போய்விட்டதே என்ற வருத்தத்தின் மேல் எழும் நினைவுகளாக அலைகின்றன.தனது உடல் தாய்மையடையும் வாய்ப்பை இழந்துவிட்டது என்பதால் ஏற்பட்ட விரக்தி என்பதைவிடத் தனது உடல் ஒரு பெண்ணின் முழுமையை இழந்துவிட்டது என்பதால் ஏற்பட்ட விரக்தி அது.

 ‘ஒரு பெண்ணுடல் எதில் முழுமையடைகிறது என்ற கேள்விக்கு ஆணின் உடலியல் தேவையைப் பூர்த்திசெய்யும் களமாக இருப்பதில்என்ற நம்பிக்கை பெண்களுக்கு எப்போதும் இருக்கிறது; அதற்கான சாத்தியங்களைத் தனது உடல் இழந்துவிட்டது என்பதாகத் தோன்றும்போது தன் மீதே ஒரு கழிவிரக்கமும், விரக்தியும் உருவாகி அலைக்கழிப்பதாகப் பெண்கள் நினைக்கிறார்கள். பாலியல் இச்சையைத் தூண்டும் உறுப்புகளில் ஏற்படும் குறைபாடு இந்தக் கதையில் ஒரு காரணமாக உணர்த்தப்படுகிறது. அவளது ஜாக்கெட்டுக்குள் திரட்சியாக இருக்கவேண்டிய முலைகளினிடத்தில் இருப்பன இரண்டு கரும்புள்ளிகள் என்ற குறிப்பு உண்டாக்கும் எண்ணங்களின் விரிவாகக் குளவி கதை நிகழ்த்தப்படுகிறது.
கதையில் பாத்திரத்தின் மனச்சிக்கலுக்கு நோயும் அதனால் இல்லாமல் போய்விட்ட முலைகளும் காரணம் என்பது வெளிப்படையாகச் சொல்லப்படவில்லையென்றாலும், அவளது நினைவுகளின் வழியாக உணர்த்தப்படுகிறது. ஆண்கள் எழுதும் கதைகளில் வெளிப்படும் பெண்ணுடல் பற்றிய சித்திரங்களிலிருந்து பெரிதும் மாறுபடாத நுட்பமான சித்திரத்தை உமா மகேஸ்வரியின் குளவி கதை எழுதிக்காட்டுகிறது. இந்த எழுத்து பெண்ணுடலை எழுதவேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்பெற்ற கதையல்ல.  
‘தாய்மை’ என்னும் புனிதக் கருத்துரு உருவாக்கப்பெற்று பெண்ணுடல் மீது கவிழ்க்கப்பெற்ற சுமை என்பதை உள்ளார்ந்து எழுதிக்காட்டும் கதை. இப்படியான எழுத்தை பெண்ணியச் சிந்தனையின்  ஆணெதிர்ப்பு என்னும் ஒற்றைப்பரிமாணத்தைக் கொண்டு வாசித்துவிடமுடியாது. குடும்ப அமைப்பு நபர்களின் உருவுகளால் உருவாவது என்ற பொதுவரையறையை இந்தியச் சமூகம் நிராகரிக்கிறது. இந்தியச் சமூகங்கள், குடும்ப அமைப்பை அகமணமுறை என்னும் சமூக உறவால் தீர்மானமாகும் ஓர் அமைப்பு என மறுவரையறை செய்கின்றன. இதிலிருந்து விலகி, குடும்பம் என்பது  சடங்குகள், நம்பிக்கைகள், மரபுகள் வழி உருவாக்கப்படும் கருத்தியலால் கட்டப்படும் அமைப்பு எனக்காட்டுவது நவீன எழுத்தின் பணியாக இருக்கிறது.  இந்தக் கதையின் வழியாக உமாமகேஸ்வரி தன்னை நவீன எழுத்தின் தொடர்ச்சியாக நிறுவிக்கொண்டிருக்கிறார். இந்தக் கதையைப் பெண்ணிய வாசிப்புச் செய்ய விரும்பினால் ஆண் - பெண் என்ற இருமையெதிர்வைத் தாண்டிப் பன்முக விசாரணைகளை முன்வைக்கும், சீமாந்த போவா போன்றோரின் சொல்லாடல்களைக் கற்று விவாதிக்க வேண்டும்.


http://www.kalachuvadu.com/current/issue-200/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF

No comments :