August 16, 2016

வெடிக்கும் துப்பாக்கிகளிலிருந்து கிளம்பும் இனவாதம்

எனது அமெரிக்கப் பயணம் ஜூலை 21 இல் நிறைவடைந்தது. ஒருவாரத்திற்கு முன் அதற்கான ஏற்பாடுகள் தொடங்கின. பாஸ்டனில் பார்க்கவேண்டிய இடங்கள் எனக் குறித்து வைத்திருந்த பட்டியலில் எம்.ஐ.டி(MIT) எனச் சுருக்கமாக அழைக்கப்படும் உலகப் புகழ்பெற்ற மாசுசெசட்ஸ் தொழில்நுட்பக் கல்விநிறுவனம் விடுபட்டுப் போயிருந்தது. ஜூலை,19 இல் அதன் வளாகத்தில் இறங்கியபோது தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறந்தது. அங்குமட்டுமல்ல, கடைசிச் சுற்றாகப் பாஸ்டன் நகரை ஒருமுறை வலம் வரலாம் என்று சுற்றிவந்தபோது, எல்லா இடங்களிலும் தேசியக்கொடிகள் அரைக்கம்பத்தில் பறந்துகொண்டிருந்தன. காரணம் அந்தப் படுகொலை நிகழ்வு.

இரண்டு நாட்களுக்கு முன் ஜூலை 17 இல் லூசியானா மாநிலத்தில் பேட்டன் ரூஜ் என்னும் இடத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 6 போலீஸ்காரர்கள் சுடப்பட்டார்கள். 3 பேர் அங்கேயே மரணம். மூன்றுபேர் மருத்துவமனையில் அனுமதி எனச் செய்திகள் வந்தன. அத்தோடு சுட்டவன் பெயர் கேவின் யூஜின் லாங் என்ற முன்னாள் ராணுவவீரன் என்றும். அவனைக் காவல்துறை சுட்டுக்கொன்றது என்றும், அவனோடு இருந்த இருவர் கைது செய்யப்பட்டனர் என்பதும் செய்தியின் தொடர்ச்சி. சுட்டுக்கொல்லப்பட்ட அவன், கறுப்பினப் பிரிவினைவாதக் கருத்துடையவன் என்றும், தன்னடையாளங்களோடு வாழவிரும்பும் குடிமக்கள் இயக்கத்தோடு (sovereign citizen movement)தொடர்பு இருந்தது என்பதையும் காவல்துறையினர் உறுதிசெய்தார்கள் என்பதும் செய்திதான். லாங்குக்கு மட்டுமே அமெரிக்க வெள்ளைக் காவலர்களைச் சுட்டுக்கொல்லும் வெறி இருந்தது என்பதை ஒத்துக்கொண்டதாகவும், அவன் மட்டுமே குற்றவாளி என்றும், தங்களுக்கு அதில் எந்தத் தொடர்புமில்லையென மற்ற இருவரும் தெரிவித்ததாகவும் பதிவுசெய்யப்பட்டுள்ளது என்று செய்திகள் பரவின.
நல்லவைகளும்சரி கெட்டவைகளும்சரி அமெரிக்கர்களால் தேசியக்கொடியோடு இணைக்கப்படுகின்றன. தங்கள் கொண்டாட்டத்தை ஏராளமான கொடிகளைப் பறக்கவிட்டுக் காட்டுகிறார்கள். வருத்தங்களைக் காட்ட தேசியக்கொடியை நீண்டகாலத்திற்கு அரைக்கம்பத்தில் பறக்க விடுகிறார்கள். ஜூன்,17 இல் நடந்த துப்பாக்கிப் படுகொலைக்கு அமெரிக்கா முழுவதும் மூன்றுநாட்கள் கொடிகள் அரைக்கம்பத்தில் பறந்தன. நானிருந்த இந்த மூன்று மாதத்தில் மூன்று துப்பாக்கிச்சூடுகள் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கக் காரணமாக இருந்தன.
ஜூலை 7 இல் டெக்சாஸ் மாநிலம், டல்லாஸ் நகரில் மிகா சேவியர் ஜான்சன், கூட்டமாக இருந்த காவல் அதிகாரிகளைப் பார்த்துச் சுட்டார். 5 பேர் அங்கேயே மரணம்; 9 பேர் காயம். பக்கத்திலிருந்த சாதாரணப் பொதுமக்கள் 2 பேருக்கும் காயம். ஜான்சன், அமெரிக்காவிற்காக ஆப்கானிஸ்தான் போரில் ஈடுபட்ட முன்னால் ராணுவ வீரர். கறுப்பர்கள் மீது வஞ்சகம் காட்டும் வெள்ளைக் காவல் அதிகாரிகளைக் கொல்வேன்என்று சத்தமிட்டபடியே சுட்டதாக அறிவிக்கப்பட்டது. கறுப்பினத்தவர்களை அமைதியாக வாழவிடுங்கள் என்பதே அவரின் கோரிக்கை. அந்த நிகழ்வுக்குப் பின்னும் கொடிகள் சில நாட்கள் அரைக்கம்பத்தில் தொங்கின.
இந்தியாவில் தேசியத்தலைவர்களின் மரணம்பெறும் கவனத்தை அமெரிக்காவில் ஒவ்வொரு துப்பாக்கி சூடு நிகழ்வுகளும் பெற்றுவிடுகின்றன. மூன்றாம் பாலினத்தவரின் கொண்டாட்டத்தின்போது கண்ணை மூடிக்கொண்டு ஒருவன் சுட்டுத்தள்ளிய வன்முறையைத் தேசிய துக்கமாகக் கருதிக் கொடிகள் இரண்டுநாட்கள் நடுக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டதையும் நான் இருந்தபோது கவனித்தேன். ஜூன், ஜூன், 12 இல் ஓர்லண்டோ மாநிலத்தின் புளோரிடா நகரில் நடந்த அந்தத் துப்பாக்கி சூடு அமெரிக்காவில் பெருந்தாக்கத்தை உண்டாக்கியது. மூன்றாம் பாலினத்தவரின் கொண்டாட்டத்தின்போது கண்ணை மூடிக்கொண்டு ஒமர் மட்டீன் என்ற 29 வயது இளைஞன், சுட்டுத்தள்ளிவிட்டான். சுடப்பட்டவர்களில் பெரும்பாலோர் மூன்றாம் பாலினர். தங்களின் உரிமையை நிலைநிறுத்தும் கொண்டாட்டம் ஒன்றிற்காக அவர்கள் சந்திப்புக்காக இருக்கும் சிறப்பு இரவு விடுதியில் கூடிக் கொண்டாடிக்கொண்டிருந்தபோது அவன் சுடத்தொடங்கிவிட்டான். 53 பேர் அங்கேயே மரணம்; 49 பேருக்குப் பெருங்காயம். சுட்டவன் அமெரிக்காவின் பாதுகாப்புப் படையில் பணியாற்றுபவன். பழைமைவாதமும் வெறுப்பும் கொண்ட அவனை, மூன்றுமணிநேரத்திற்குப் பின் சுட்டுப்பிடித்தது காவல்துறை. 2001, செப்தம்பர்,11 இல் நடந்த இரட்டைக்கோபுரத் தாக்குதலுக்குப் பின்னான பெருந்துயர் நிகழ்வு என இப்படுகொலையை வருணித்தன ஊடகங்கள்.

தனிநபர் கொலைகளைப் பிரிவினைவாதத்தோடு இணைத்து, அமைப்பின் குற்றங்களாகவும், பிரிவினைவாத அமைப்புகள் பொதுமக்களின் அமைதியான வாழ்க்கைக்குப் பங்கம் விளைவிக்கின்றன எனவும் செய்திகளை முன்வைப்பது ஒவ்வொரு நாட்டு அரசுகளும் செய்யும் ஒன்று. அதன் பின்னே இருக்கும் உளவியல் கவனிக்கவேண்டிய ஒன்று. தேசியவாத உணர்வைக் கட்டமைப்பது அதன் முதன்மை நோக்கம். அதனைப் பெருந்திரளின் மனத்திற்குள் செலுத்தவே தேசியக்கொடியென்னும் அடையாளம் அரைக்கம்பத்தில் பறப்பனவாக மாறுகின்றன.கெட்டவை நடந்துவிட்டது என்று நினைக்கிறபோது பொதுவெளியில் தங்கள் துயரத்தைப் பகிர்ந்துகொள்ளத் தேசியக்கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடும் உரிமையை அமெரிக்க அரசாங்கம் அனுமதிக்கிறது. இந்தியா போன்ற நாடுகளில் மிகக்குறைவான எண்ணிக்கையில்தான் கொடியேற்றங்களும் இறக்கங்களும் நடக்கின்றன. அரசு அலுவலகங்களில்கூட ஒவ்வொருநாளும் கொடியை ஏற்றி இறக்குவதில்லை. பறக்கவிடுவதுமில்லை. குடியரசுதினமும், சுதந்திர தினமும் முக்கியமான கொடியேற்ற நாட்கள். அவரவர் இல்லங்களிலும் அன்று கொடியேற்றிக் கொள்வது அனுமதிக்கப்படுகிறது. அதேபோல் எல்லா இடங்களிலும் துக்கத்தைத் தெரிவிக்க அரைக்கம்பத்தில் கொடிகளை இறக்கிப் பறக்கவிடுவதுமில்லை.

அமெரிக்க விதிவிலக்கான தேசம். தேசியக்கொடி- அமெரிக்கர்கள் தங்கள் தேசப்பற்றை வெளிப்படுத்த ஆகக்கூடிய அடையாளமாக இருக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடி 45 டிகிரி சாய்மானத்தில் வாசலிலோ, ஒரு மூலையிலோ அசைந்துகொண்டிருக்கிறது. கடைகள், அங்காடிகள், பேரங்காடிகள் போன்ற வணிகக் கூடங்கள் அவற்றின் அளவுக்கும் ஆசைக்கும் ஏற்பக் கொடியின் அளவைப் பெரிதாக ஏற்றிவிடுகின்றன. விளையாட்டரங்குகள், கொண்டாட்டக்கூடங்கள், களியாட்டக் களங்களிலெல்லாம் எண்ணிக்கையிலடங்காத அளவில் கொடிகள் அசைக்கப்படுகின்றன. சிலர் தங்கள் உடலையே கொடியாக்கி நடக்கிறார்கள்; நடனமிடுகிறார்கள். கல்லறைத் திருநாளில் கூட முன்னோர்களின் விருப்பப்பொருட்களோடு தேசியக்கொடியையும் நட்டுவைக்கிறார்கள்.

எல்லா வாகனங்களிலும் தேசியக்கொடியோ, கொடியின் அடையாளமோ இருக்கின்றன.

தேசிய விடுமுறைகள் ஒவ்வொன்றையும் தேசப்பற்றோடு இணைத்தேவிடுகின்றனர். அத்தோடு அவை கொண்டாட்டத்திற்கும் உரியவையாக இருக்கின்றன. அமெரிக்காவின் பெரும்பாலான விடுமுறைகள் வாரக்கடைசியில் வரும்படி விடப்படுகின்றன. தேதிகளை மையப்படுத்தப்படாமல், கிழமைகள் மையமாக்கப்பட்டுள்ளன. சில விடுமுறைகள் வெள்ளிக் கிழமை; பல திங்கட்கிழமை. அதனால் அவை நீண்ட வார இறுதிகளாக ஆகிவிடுகின்றன. அதன்வழி கொண்டாட்டத்திற்கு உரியனவாகவும் மாறிவிடுகின்றன. அந்த நாட்களில் கடைகளில் அதிகத்தள்ளுபடி கிடைக்கின்றது. காட்சிக்கூடங்களில் கட்டணத் தொகை கூடிவிடுகின்றது. சில இடங்கள் இலவசமாக்கப்படுகின்றன.தேசப்பற்றைக் கொண்டாட்டமாகக் கருதும் அமெரிக்கக் குடிமைச்சமூகம், போர்ப்பற்றோடும் நினைவில் வைக்கவேண்டும் என்ற மனநிலையும் உருவாக்கப்படுகிறது. அமெரிகாவின் சுதந்திரதினம், நன்றிசொல்லும் நாள், தியாகிகள் தினம் என்பன வணிகக்கூடங்களில் கூட்டம் நிரம்பிவழியும் நாட்கள்.
வியாபாரத்தோடு இணைக்கப்படாமல் கொண்டாடப்பட்ட துக்கநிகழ்வொன்றையும் எனது பயணத்தில் பார்க்கமுடிந்தது. ஜூன் 2 ஆம் தேதி அரிசோனா மாநிலப் பெரும்பள்ளத்தாக்குப் பயணத்தைத் தொடங்கியிருந்தோம். அரிசோனாவின் தலைநகர் ப்யூனிக் விமான நிலையத்திலிருந்து வாடகைக்கு காரொன்றை அமர்த்திக் கொண்டு முதல் நாளில் பெரும்பள்ளத்தாக்கின் உயர்ந்த கல்சிகரத்தை பார்த்து முடித்துவிட்டு தங்கிய இடம் ப்ளாக்ஸ்டாப் நகரம். அங்கிருந்து கிளம்பிப் போன பாதிதூரத்தில் பயணத்தின் மதிய நேரத்தில் தேசியக்கொடி, பாதிக்கு இறங்கின. அமெரிக்கக் கறுப்பினத்தவர் ஆகப்பெரும் அடையாளமாகத் திகழ்ந்த காசியஸ் மெர்சிலெஸ் கிலெ (Cassius Marcellus Clay) என்ற முகம்மது அலி (ஜூன் 3) இறந்துவிட்டார் என்று அறிவிக்கப்பட்டது. இறந்த இடம் ஸ்காட்ஸ்டேப். அமெரிக்காவின் கொண்டாட்ட நகரமான லாஸ் வேகாஸுக்குப் பக்கத்திலிருக்கிறது. இரண்டு நாட்களுக்குப் பிறகு ஜூன் 5 அங்கு போவதாக எங்கள் பயணத் திட்டத்தில் இருந்தது. மூன்று நாட்களுக்குப் பிறகும் முகம்மது அலியின் மரணத்தை லாவோஸ் நகரம் நினைவுபடுத்தியது.
பெரும்பெருங்கட்டடங்களின் தோன்றிமறையும் அறிவிப்புப் பலகைகளில் முகம்மது அலியின் படங்களும், அவரைப்பற்றிய விவரங்களும் தோன்றித்தோன்றி மறைந்தன. அமெரிக்காவின் குத்துச்சண்டை வீரராகக் கலந்துகொண்டு ஒலிம்பிக்கில் பட்டங்களை வென்றவர் அவர். கெண்டகி மாநிலத்தில் லூசிவில்லெயில் பிறந்த காசியஸ் கிலே (1942, ஜனவர், 17 ) 20 ஆம் நூற்றாண்டு அமெரிக்க ஆளுமைகளில் ஒருவர். குத்துச்சண்டை வீரராக மட்டுமல்லாமல், கறுப்பின மக்களின் குரலாகவும், அமெரிக்காவின் போர் விருப்பத்தைத் தட்டிக்கேட்ட முதன்மையான மனிதராகவும் அறியப்பட்டார். அமெரிக்கா, வியட்நாம் மீது போர் தொடுத்ததைக் கண்டித்ததோடு, அமெரிக்கவீரர்கள் அந்தப் போரில் ஒத்துழையாமையைக் கடைப்பிடிக்க வேண்டுமெனக் கூறினார். அதற்காகக் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். அமெரிக்காவின் உச்சநீதிமன்றத்தில் வாதாடித் தன்னை நிலைநிறுத்தினார்; தன்னுடைய பெயரை இசுலாமிய அடையாளம் கொண்டதாக மாற்றிக்கொண்டார்; குடும்பத்தோடு மதம் மாறினார்; குத்துச்சண்டை குறித்தும் கறுப்பினத்தவர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் விதமாக நூல்கள் எழுதியவர் என அனைத்தும் வந்துபோய்க்கொண்டே இருந்தன.
முகம்மது அலியின் மரணத்தைக் கொண்டாடியதைத் தாண்டி மற்றனவெல்லாம் சந்தேகத்திற்குரிய கொலைகளாகவும் படுகொலைகளாகவும் ஊடகங்களில் விவாதிக்கப்பட்டன. அமெரிக்காவில் மட்டுமல்லாமல் இதே நாட்களில் பிரான்சு, ஜெர்மனி என உலகின் வல்லாதிக்க நாடுகளெங்கும் துப்பாக்கிச் சூடுகளும், வெடிகுண்டுப் படுகொலைகளும் கலவரங்களும் நடந்தவண்ணம் இருக்கின்றன. பிரிட்டானியா, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிந்துபோகும் வாக்கெடுப்பை நடத்தி முடித்துவிட்டுப் பிரியப்போகிறோம் என்றது. இவற்றின் பின்னால் ஓங்கி ஒலிக்கும் குரல்களில் ஒற்றுமைகள் இருக்கின்றன. அமெரிக்கத் தேர்தலில் போட்டியிடும் குடியரசுக்கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம் அந்நியர்கள் அமெரிக்காவின் ஆபத்து எனப்பேசுகிறார். குறிப்பாகப் பக்கத்து நாடான மெக்ஸிகோவிலிருந்து வருபவர்களைச் சுவர்கட்டித் தடுக்கவேண்டுமென வெளிப்படையாகப் பேசும் அவரின் ஆதரவுத்தளத்தைப் பெருக்கும் நோக்கம், இந்தப் படுகொலைகளின் பின்னால் இருக்குமோ என்ற ஐயங்கள் எழுப்பப்படுகின்றன.

நாகரிகத்தின் தொட்டில் எனவும் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற உயரிய கருத்தை உலகிற்கு வழங்கிய பிரான்சு தேசம் அந்நியர்களென இசுலாமியர்களைக் குறிவைக்கும் நோக்கத்தில் செயல்படுகின்றது எனக்கூறுகிறார்கள் உலகத்தை அனைவருக்குமானதாகக் கருதும் மனம் படைத்தவர்கள். ஒவ்வொரு நாடும் தான், தனது, தனது பூர்வகுடிகள் என்ற வாதத்தை இனவாதத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றன. யூதர்களை வெறுக்கும் ஆரியக் கோட்பாட்டை உலகிற்கு வழங்கிய நாடு ஜெர்மனி. அவர்களின் வழித்தோன்றல்கள் உலக நாடுகள் ஒவ்வொன்றிலும் ஆட்சிக்கு வந்தவண்ணம் இருக்கிறார்கள். இந்தியாவில் ஏற்கெனவே நடந்து முடிந்துவிட்டது. இலங்கையில் அடக்கிமுடித்துவிட்டார்கள் இனவாதிகள். இன்னொரு உலகப்போரை முன்மொழியும் இனவாதத்தின் உச்சக்காட்சி எந்தத் தேசத்திலிருந்து கிளம்பும் எனச் சரியாகக் கணக்கிட முடியாத சூழல் உருவாகிவருகிறது.

அதேநேரத்தில் நம்பிக்கைகள் தொலைக்கவேண்டியதில்லை என்பதற்கான நிகழ்வுகளும் நடக்கின்றன. நகரம் குலுங்கியது” – இப்படித் தலைப்புப் போட்டு வருணிக்கத்தக்க பேரணி ஒன்றைத் தற்செயலாகப் பார்க்க நேர்ந்தது. ஜூன் மாதத்தின் கடைசி வாரக்கடைசி நாட்களான 25, 26- களில் மாசுசாசெட்ஸ் மாநிலத்தின் சேலம் நகரத்திற்குப் போனோம். ஆம் சேலம் நகரம் தான். தமிழ்நாட்டுச் சேலம் முந்தியதா? அமெரிக்கச் சேலம் முந்தியதா? என்று தெரியவில்லை. பாஸ்டனிலிருந்து ஒருமணிநேரப் பயணதூரத்தில் இருக்கிறது. பேய்கள், ஆவிகள், மந்திரவாதம் போன்றவற்றிற்குப் பெயர் பெற்ற அந்நகரைப் பார்க்கப் போனபோது கிடைத்த இன்னொரு வாய்ப்பு. பிரைடு கொண்டாட்ட நிகழ்வு.
சேலம் நகரில் ஜூன் கடைசி சனிக்கிழமை கொண்டாடப்படும் பிரைடு என்னும் கொண்டாட்டம் பாலியல் விருப்பங்களை உரிமையாகப் பெற்றுத்தந்த பெருநிகழ்வாம். அந்நிகழ்வை இந்த ஆண்டு பேரணியோடு பெருநிகழ்வாக அன்று நடத்தினார்கள். ஒருபால் புணர்ச்சி, இருபால் புணர்ச்சி, திருநங்கைகளின் பாலியல் விருப்பம் என அனைத்தையும் மனிதர்களின் விருப்பம் சார்ந்ததாகவும், அதனைத் தேர்வுசெய்து கொள்வது அவர்களின் உரிமை எனவும் நம்பும் கூட்டம் நடத்திய இந்தக் கொண்டாட்டம் பேரணிக்குப் பிறகு ஆடல், பாடல், சேர்ந்திசை, நாடக நிகழ்வு, என 11 மணி முதல் கோலாகலமாக நடந்தது. ஒருமணிநேர ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள் குறைந்தது 3000 பேராவது இருப்பார்கள். கூட்டம் கூட்டமாகக் கலந்துகொண்டவர்களில் குடும்பத்தோடு கலந்துகொண்டவர்களும் இருந்தார்கள், எழுத்துகள், படங்கள் நிரம்பிய பதாதைகளோடு ஊர்வலமும் ஒன்றுகூடலும் நடந்தது. ஊர்வலம் வந்த பாதையில் இருந்த தேவாலயத்தின் முன்னால் ஒருவர் பைபிளை உயர்த்திப் பிடித்து இதற்கெதிரான பிரசங்கத்தையும் செய்துகொண்டிருந்தார். அவரை ஒருவரும் கண்டுகொள்ளவில்லை. 12 ஆம் தேதி ஓர்லண்டாவில் பாலியல் தேர்வை உரிமையாகக் கருதிய மதுக் கொண்டாட்டத்தின்போது சுட்டுக்கொல்லப்பட்ட பின் இந்தக் கொண்டாட்டம் கூடுதல் விழிப்போடு நடப்பதாக அங்கு வந்தவர்கள் சொன்னார்கள்.
துப்பாக்கிக் கலாசாரத்திற்கெதிரான குரல்கள் ஓங்கி ஒலித்தன. மாநிலம் முழுவதும் இருக்கும் பாலியல் விருப்பத்தேர்வு உரிமைக்குழுக்களும், பெரிய, சிறிய நகரங்களிலிருந்து செயல்படும் நுண்கலை, நிகழ்த்துகலைப்பள்ளி மாணவர்கள் தங்கள் அடையாளங்களோடு கலந்துகொண்டதைப் பார்க்கமுடிந்தது. பெற்ற உரிமையைப் பேணிக்காப்பதும், எக்காரணம் கொண்டும் உரிமைகளைக் காவு கொடுத்துவிடக்கூடாது என்பதிலும் அமெரிக்கக் குடிமைச் சமூகம் காட்டும் அக்கறை கவனிக்கவேண்டிய ஒன்று. இவைதான் நம்பிக்கைகள் உண்டாகும் தருணங்கள்.

அமெரிக்காவில் கிடைத்த தோழியொருத்தியோடு விடைபெறும்பொருட்டுத் தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்தபோது இதுகுறித்தும் பேச்சு திரும்பியது. தாமரைச்செல்வியென்ற அந்தத் தோழி அரிசோனாவின் தலைநகர் ப்யூனிக்ஸில் மருத்துவத்துறையில் இருக்கிறார். சென்னை மறைமலைநகரிலிருந்து 8 ஆண்டுகளுக்கு முன்பு போனத் தமிழ்ப்பெண். அமெரிக்கக் கணவரோடு வாழும் அவரது சொந்தக் குடும்பத்தில் செயல்படும் இனவாதச் சிந்தனையைச் சொன்னதோடு, தன் பணியின் காரணமாகக் கண்டறிந்ததையும் வர்ணித்தார். உடல் உறுப்புக்களின் பகுதிகளைக் குறிப்பிட்ட நேரத்தில் கவனத்தில் வைத்துக் கவனிப்பதுண்டு. அவரது பணி மூளையைக் கவனித்துக் கொண்டிருப்பது. மூளையின் சிந்தனைப்போக்கு எப்படி மாறிக்கொண்டிருக்கிறது என்பதைக் கவனிக்கத் தொடங்கும் முன்பு, நோயாளியின் சமூகவியல், அரசியல் கருத்துகளைத் தெரிந்துகொள்ளும்விதமாக உரையாடல் செய்வதுண்டாம். அந்த உரையாடலில் நிச்சயமாக அமெரிக்காவின் மையக் கேள்வியான நிறவேறுபாடு குறித்தும் கேட்கப்படுமாம். அந்தக் கேள்விக்கு இப்போதெல்லாம் எதிர்மறை மனோபாவம் அதிகமாகிவிட்ட விடைகளே அதிகம் வருகின்றன என்ற தகவலைச் சொன்னார். குறிப்பாக வெள்ளையர்கள் அதிபர் ஒபாமாவை ஏற்றுக்கொள்ளவே இல்லை என்றுகூடத் தெரிகிறது என்றார். ஏதோ நிறையப்பேர் வாக்களித்ததால் வந்துவிட்டார்; பதவியில் அமர்ந்துவிட்டார்; அதற்காக அவருக்கு மற்ற அதிபர்களுக்குத் தந்த மரியாதையைத் தரமுடியாது என்றே சொல்கிறார்கள் என்றும் சொன்னார்.
நிறவாதமும் இனவாதமும் வன்முறையைத் தூண்டுவதில் ஒற்றுமை உடையன. தங்களின் சார்பாகப் பேசும் தலைமைகள் அதிகாரத்திற்கு வரவேண்டுமென்பதற்காக எதையும் செய்வார்கள். வன்முறையைத் தூண்டிவிட்டு, அதை அடக்கவேண்டுமெனப் புதிய சட்டங்களை உருவாக்குவார்கள். உலகமெங்கும் வன்முறை தூண்டப்படுகிறது. அதன் பின்னணியில் இனவாதமும் நிறவாதமும் சமயவாதமும் இருக்கின்றன. இவையெல்லாம் தேசியவாதமென்னும் புனிதச்சொல்லோடு வெளிப்படுகின்றன.


No comments :